எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, May 2, 2019

வீடு


வீடு
புதியவன்
என் உதடு
வீடு என்ற சொல்லை
விட்டுவிட்டு
கூடு என்றே உச்சரிக்கின்றது…
வீடு என்றால் விடுவதல்லவா
எவற்றை கைவிட்டது நம் கூடு!

ஒட்டடை அடித்தாலும்
ஒரு ஓரத்தை விட்டு வைக்கிறேன்
எட்டு கால் நண்பர்கள்
குடும்பமாக வாழ்கிறார்கள்…

என் பேத்தி எதை உண்டாலும்
சுவற்றில் படரும் எறும்பின் வரிசைக்கு
பங்கிடாமல் உண்பதில்லை…
உண்ணும்போது உதிர்ந்த உணவும்
உதிரம் உறிந்த கொசுவின் உடலும்
வரிசை கட்டி எடுத்துச் செல்வர்
எறும்பு நண்பர்கள்…

பொழுது சாய்ந்ததும்
பறக்கும் பூச்சிகளை வேட்டையாடும்
மூன்று பல்லிகளுக்கும்
டியூப்லைட் முதுகில்தான் வீடு இருக்கின்றது…

வாசலில் விளையாடும் சிறுவர்களுக்கு அஞ்சாமல்
வழிபோக்காக வந்த பசுமாடு ஒன்று
என் வீட்டு நிழலில்தான் அசைபோட்டு அமர்கின்றது…

கருங்குளவி கட்டிச்சென்ற செம்மண் வீடொன்று
பழைய சாளரத்தில் பக்குவமாக இருக்கின்றது
குளவி வருமென்ற நம்பிக்கையில் இருக்கின்றது…

தொட்டியில் வளரும் மிளகாய் செடியில்
தேன் தேடி பறக்கும் பட்டாம் பூச்சிபோல்
பறந்து ஆடும் செல்லப் பேரன்
கொட்டாச்சி மண்ணிலும் விதைபோட்டு
தொட்டிக்கு அருகிலே வளரவைக்கிறான்…

வீடு என்றால் விடுவதல்லவா
எவற்றை கைவிட்டது நம் கூடு!

பலகோடி மக்கள் வீடின்றி திரிந்தால்
பாட்டாளி மக்கள் தெருக்கோடி வாழ்ந்தால்
கட்டிக் காப்பதா மனிதநேயம்?
கைவிடப்பட்டது ஆன்மநேயம்!

கூடு என்பது கூடு மட்டுமா
புதுயுகம் படைக்க கை கூடு
விடுதலை படைக்க போராடு
மக்கள் அதிகாரம் நம் வீடு!

No comments:

அதிகம் படித்தவை