எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, March 29, 2019

மாணவியர்களுக்கு நினைவு மடல் 2018-19


மூன்றாம் ஆண்டு தமிழ் மாணவியர்களுக்கு நினைவு மடல்
தெய்வானை அம்மாள் கல்லூரி 2018-19

அறிவார்ந்த நட்புடன் ஆசிரியர்
KS (கே.சிவக்குமார் / புதியவன்)

வணக்கம் நண்பர்களே…
இளங்கலை பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை முடித்துவிட்டு நமது வகுப்பிலிருந்து விடைபெறவிருக்கும் தங்கள் அனைவருக்கும் விடைகொடுக்கும் நினைவு மடலைப் பிரிவு கருதிய கனத்த இதயத்துடனும் அறிவார்ந்த பாசத்துடனும் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் நினைவிலிருந்து நீங்கள் யாரும் என்றும் அகல முடியாதவர்கள் என்பதை எப்போதும் சொல்லி மகிழ்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் நல்லாசிரியர் விருதை பணிக்கு சேர்ந்த ஆரம்ப காலத்திலேயே வழங்கியவர்கள் என்ற நன்றி எப்போதும் எனக்கு இருக்கின்றது. பெண்ணியம் பாடத்திலிருந்து என்னை திடீரென்று இதழியலுக்கு மாற்றியபோது  நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் அறைக்கு திரண்டு வந்து பெண்ணியம் பாடத்தை எனக்கே ஒப்படைக்கச் செய்த அந்த மாலை நேரத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது. எனது முன்மாதிரிகளில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு தன்மைகளில் இடம்பெற்றுள்ளீர்கள் என்பதை மரியாதை ததும்ப கூறி மகிழ்கிறேன். உங்கள் கலந்துரையாடல்களின் வலிமையை வகுப்பில்  கண்டு வியந்திருக்கிறேன். உங்கள் தனித்துவங்களும் இத்தகைய வியப்பை பல நேரங்களில் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் என்னால் நிச்சயம் மறுக்க முடியாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நினைவு மடலை பக்கம்பக்கமாக எழுத முடியும் என்றாலும் காலமும் பணியும் அதற்கான வாய்ப்பை என்னிடமிருந்து பறிக்கின்றன என்ற உண்மையைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நம் அறிவார்ந்த நட்பு என்றும் தொடரும் என்ற நம்பிக்கை இருப்பதனால் துல்லியமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாகச் சொல்ல வேண்டிய வார்த்தைகளைப் பேசி முடிக்க விரைகிறேன். நமக்கு குறைந்தது 100 மணிநேரமாவது வகுப்புகள் நிகழ்ந்திருக்கும். 40 மாணவர்களுக்கும் 100 மணிநேரமெனில் குறைந்தது 400 மணிநேரம் உங்களுடன் உழைத்திருக்கிறேன். எனது வகுப்புக்களின் வடிவம் உங்களுக்கு சமூகவிஞ்ஞானமாகவும், அறிவியல் தத்துவமாகவும், அறிவியல் கலை இலக்கியமாகவும் விரிவு பெற்றிருக்கும். சமூக அறிவிலிருந்து விலகாமல் உங்களை சிந்திக்க வைப்பதற்காக முயன்றிருக்கிறேன். எனது நினைவு மடலும் இந்த உணர்விலிருந்து விலகாது அமையும் என்பதை சொல்லித்தெரிய அவசியமில்லை.

வணக்கம் அஜிதா
          தொடர்ந்து எழுதும் முயற்சிகளில் ஈடுபடவும். சிறு சிறு சம்பவங்களை கதையாக எழுதவும். வாரம் ஒரு கதை வாசிக்கவும். நீங்கள் அதிகம் கேள்விகள் கேட்பதும் உரையாடுவதுமாக பயிற்சி பெற வேண்டும். சத்தத்தை உயர்த்தி பேச முயலவும். புதிய பெண்ணியத்தின் முன்மாதிரியாக உருவாகவும் சமூக விஞ்ஞான படைப்புகளில் பங்கேற்கவும் முயல்க. எழுத்துப்பிழைகளை நீக்கி எழுத ஆர்வம் காட்டவும். நாள்தோறும் 5 வாக்கியங்களை படைக்கவும். நன்றி.

வணக்கம் அகிலா
        உங்கள் ஆர்வம் நன்று. தயக்கம் ஆபத்து. நீங்கள் நம்ப வேண்டிய உண்மை எதுவெனில் ஆர்வம் நிறைந்த முயற்சி எத்தனை பெரிய பலவீனங்களையும் ஒரு தருணத்தில் உடைத்தெறிந்துவிடும். உங்கள் பலவீனங்களை உடைத்து நொறுக்கவும். உங்கள் எழுத்துக்களை அறிவுலகின் சிறந்த படைப்புகளாக படித்தறியும் காலத்தை விரைவில் உருவாக்க முயலவும். அறிவை விரிவு செய்க. ஒற்றுமையாக முயற்சி செய்க. நிச்சயம் உங்கள் படைப்பார்வம் வெற்றி பெறும். எனக்கு ஏதேனும் மரியாதை செலுத்த விரும்பினால் அந்த வெற்றியை சாதித்துக் காட்டுங்கள் அகிலா. நன்றி.

வணக்கம் அனிதா
          உங்கள் தனித்துவங்கள் வெளிப்படச் செய்வதில் நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் அனிதா. என்றாவது உங்கள் ஆளுமை வெளிப்படுமெனில் அதற்கு எனது முயற்சிகள் ஏதேனும் ஒரு வகையில் பங்காற்றியிருக்குமெனில் நமது வகுப்பை நினைத்துப் பாருங்கள். என்னை நினைத்து மகிழ்ச்சியடைக. சமூக மேன்மைக்கு பங்காற்றுங்கள் அனிதா. நன்றி.

வணக்கம் அஞ்சுகம்
என்னை குற்ற உணர்வில் பெரிதும் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டீர்கள் அஞ்சுகம். வாழ்க்கை குறித்தும் அதன் சவால்களைக் குறித்தும் உனக்கு கற்றுக்கொடுக்காத எனது வகுப்பை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன். சகமனிதர்களின் இன்பச் சூழல்களில் பங்கேற்கிறோமோ இல்லையோ துன்பங்களில் பங்கேற்று நிதானப்படுத்த உதவுவதே மனிதப் பண்பாட்டின் தலையாய அறமாகும். அந்த அறத்தை செய்யாது நாங்கள் துரோகம் செய்துவிட்டோம். உங்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் குறைந்தபட்ச கடமையைக்கூடச் செய்யாத குற்றவாளி நாங்கள். அஞ்சுகம், நீ தப்பிச் சென்ற உன் உலகின் அழுத்தம் நிறைந்த வாழ்வைக் கண்டும், உனது தோழிகள் எப்படி சமாளிக்கப்போகிறார்களோ என்ற சவால்களைக் கண்டும் அஞ்சுகிறேன்.. நன்றி

வணக்கம் பானுமதி
        பானுமதி நமது வகுப்பில் நீங்கள் ஒரு கவிஞர். ஆனால் கவிதைகளை படிக்கும் வாய்ப்பை தவிர்த்துக்கொண்டீர்கள். நல்ல குரலும் பேச்சில் ஆளுமையும் உங்களுக்கு உண்டு. உங்கள் தனித்துவமாக கதை சொல்லும் ஆளுமையை வகுப்பில் நான் கண்டிருக்கிறேன். ஆர்வமின்மை மட்டுமே உங்கள் பிரச்சனை. சவால்களுக்கு தயாரின்மை மற்றொரு பிரச்சனை. இந்த இரண்டையும் மாற்றிவிட்டால் சமூக மேன்மையில் உங்கள் செறிவான அறிவும் உணர்வும் துரிதமாக பங்காற்ற முடியும். புதிய பெண்ணியத்திற்கும் சமூக மேன்மைக்கும் உரிய பெண் அறிஞர்களில் உங்களை நியமித்துக்கொள்ள முயலவும். நன்றி.

வணக்கம் புவனேஷ்வரி
        நீங்கள் நல்ல கதைசொல்லி. பேச்சில் நல்ல ஆளுமை உண்டு. புதிய பெண்ணியத்திற்கும் சமூக மேன்மைக்கும் உரிய பெண் அறிஞர்களில் உங்களை நியமித்துக்கொள்ள முயலவும். வகுப்பில் உங்களது கதை சொல்லும் திறனை உங்கள் நண்பர்கள் உட்பட அனைவரும் வியந்தோம். சொல்லின் வலிமையை வைத்திருந்தும் திறனை வீணாக்கிவிடாதீர்கள் புவனேஸ்வரி. நன்றி.

வணக்கம் தேவி
        உங்களுக்கு தலைமைப்பண்பும் ஆளுமையான பேச்சும் வியக்கும்படி இருக்கின்றன. ஆனால் அவற்றை உங்கள் தனித்துவமாக உயர்த்திக்கொள்வதில் இதுவரை நீங்கள் கவனம் செலுத்தவில்லை தேவி. கல்லூரியின் ஊடகக் கருவியாக உங்கள் திறமை எவ்வளவு தேவைப்பட்டதோ அவ்வளவுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளீர்கள். ஆனால், உங்கள் தனித்துவமாக இன்னும் உருவெடுக்கவில்லை. உங்கள் சுய விருப்பமும் அக்கறையும் ஊக்கப்படுத்த முயன்றால், சமூக மேன்மையின் தேவையையும் புதிய பெண்ணியத்தின் வழிமுறைகளையும் உணர்ந்து வெளிப்படத் தொடங்கினால், உங்கள் தோழிகளின் குழுவில் பக்குவப்படுவதில் முயன்றால் உங்கள் தலைமைப் பண்பிற்கு நிகர் நீங்கள் மட்டுமே திகழ்வீர்கள் என்பது என் புரிதல். நன்றி.

வணக்கம் திவ்யா
        உங்கள் அமைதியையும், விவரித்துப் பேசுவதில் உங்கள் ஆளுமையையும், வழிநடத்துவதில் தேர்ந்த தலைமைப் பண்பையும் கண்டு வியக்கிறேன். கவிதைகளில் சந்தமும் சிந்தையும் சிறப்பு. படைப்பாளுமையில் சிறந்திருக்கிறீர்கள் திவ்யா. இந்த சமூகம் தனது மேன்மைக்கான முயற்சிகளில் உங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டால் சமூக அவலங்களின் தேக்கம் விட்டொழிவது விரைவடையும். அறிவெதிர் தத்துவத்தில் தேங்கியிருப்பதுதான் உங்கள் பலவீனம். அறிவியல் தத்துவ முயற்சிகளில் உந்தி வளர்வது நீங்கள் அடைய வேண்டிய மாற்றம். அந்த மாற்றத்தை அடைந்தால் உங்கள் குடும்பமும் சுற்றமும் அடைய வேண்டிய மேன்மையை உங்களிலிருந்து காணத் தொடங்கும் என்பது உறுதி. நன்றி.

வணக்கம் காயத்திரி
        நம் வகுப்பின் பாடகி நீங்கள். நிதானம் உங்கள் பார்வையில் தெரியும். சிந்தனையில் ஆளுமை இருக்கின்றது. பெண்ணியம் வகுப்பில் நீங்கள் கேட்ட கேள்வியை நினைத்துப்பார்க்கிறேன். 16 வயதை கடந்த பெண்களை சட்டம் பெண்களாகக் கருதாதா! அவர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு சட்டத்தின் பதில் என்ன என்பதாக உங்கள் கேள்வி அமைந்திருந்தது. வாழ்த்துக்கள் காயத்திரி. சட்டத்திற்காக மக்கள் இல்லை. மக்களுக்காகதான் சட்டங்கள். இதனை உணர்த்த வேண்டிய பொறுப்பு சமூக மேன்மைக்கே இருக்கின்றது. அந்த மேன்மையை அடைவதில் உங்கள் உணர்வும் உழைப்பும் பக்குவப்படட்டும். சமூக அக்கறையுடைய பாடல்களை இலக்கியங்களை உருவாக்குங்கள். பெண் படைப்பாளர்களுக்கு சமூக மேன்மையை உணர்த்தும் முன்மாதிரியாக உருவாக முயலவும் காயத்திரி். வருகை பதிவு குறிப்பதற்கு எனக்கு பல நேரம் உதவிய தருணங்களை நினைத்து மகிழ்கிறேன். உங்கள் டப்பிங் பாடல்களை கேட்க என்றும் காத்திருக்கிறோம். கவிதை, பேச்சு, ஓவியத்திலும் ஆர்வத்தை உயர்த்துக. நன்றி.

வணக்கம் ஹரிஷா
        பலருக்கும் முன்மாதிரியாக திகழ்வதற்கான பல ஆற்றல்கள் உங்களிடம் இருக்கிறது என்பதை உறுதியாக உணர்கிறேன். ஆனால் நீங்கள்தான் உணர்ந்தபாடில்லை. அதுதான் எனது வருத்தம். என் வகுப்பில் நீங்கள் நல்ல பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அங்கீகாரம் பெறப்போகிறீர்கள் என்று காத்திருந்தேன். ஆனால் ஒரு கருத்தாளராக மட்டுமே உங்கள் வட்டத்தை அமைத்துக்கொண்டீர்கள் ஹரிஷா. அந்த வட்டத்தில் ஆளுமை பெறுவதும் இன்றியமையாத சமூகத்தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உங்களது அனாவசியமான தன்னடக்கத்தினால் உரிய ஆளுமைப்பண்பை நிலைப்படுத்திக்கொள்வதில் தவறுகிறீர்கள். தயவு செய்து உங்கள் தன்னடக்கத்தை தவிர்க்க முயலவும். சமூகத்தேவை உணர்ந்தும் புதிய பெண்ணியத்தின் அவசியத்தை உணர்ந்தும் உங்கள் ஆற்றலை சமூக ஆற்றலாக வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற முயலவும். வரலாறு உங்களைப் போன்ற  பெண்களை வேண்டி அழைக்கின்றது. உங்கள் வாழ்வின் எல்லா சூழல்களிலும் வரலாற்றின் முன்மாதிரிகளாக உருவெடுப்பதில் கவனம் செலுத்தவும். ஆர்.பாலகிருஷ்ணனின் தொல்லியல் ஆய்வுகளை படிக்கவும். தலைசிறந்த கருத்தாளரின் அறிவியல் இலக்கியக் கட்டுரைகளாக ஹரிஷாவின் எழுத்துக்கள் வெளிவருவதை நான் படிக்கும் காலம் விரைவில் உருவாக வேண்டும். வாழ்த்துக்கள் ஹரிஷா. கவிதை, பேச்சு, ஓவியத்திலும் ஆர்வத்தை உயர்த்துக. நன்றி.

வணக்கம் ஜோதிபிரியா
        உங்களுக்கு நல்ல எழுத்து, சிந்தனை, படைப்பு. கவிதை பாடல் இயற்றுவதில் நல்ல தனித்துவம் மிளிர்கின்றது. தொடர்ந்து முயன்றால் சிறிது காலத்தில் பேச்சில் சிறப்படைவது உறுதி ஜோதி. என்னை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்ட மாணவர்களில் நீ்ங்கள் முதன்மையானவர் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சிதான். எனக்கு உங்கள் மீது அளவிடமுடியாத நம்பிக்கை இருக்கின்றது. இந்தியப் பெண்ணியத்தின் சமூக விஞ்ஞான முன்மாதிரியாக பெண் சமூகத்திற்கு நீங்கள் விளங்கப்போகிறீர்கள் என்பது எனது உறுதியான எண்ணம். உங்கள் வளர்ச்சியில் எப்போதும் ஒரு வேகத்தைப் பார்க்கிறேன். அந்த வேகத்தில் முதிர்ச்சிக்கான தருணங்கள் நெருங்கி வருவதையும் உணர்கிறேன். எனது தயக்கம் ஒன்றுதான். நிதானமற்ற வேகத்தில் விவேகம் விடுபட்டுவிட வாய்ப்பு உண்டு. சமூக மேன்மை என்ற இலக்கை கலங்கரை விளக்காக அமைத்துக்கொண்டால் விவேகம் தப்பாமல் முதிர்ச்சியடைய முடியும். விவேகத்துடன் செயலாற்றுவதில் ஆர்வத்தை குவிக்கவும். அதிகம் வாசியுங்கள். அதிகம் உரையாடுங்கள். உங்களைப்போன்ற ஆளுமைகள் உருவாகுவதற்கு நீங்கள் முன்மாதிரியாக அமைவீர்கள் என்பது உறுதி. உங்களை நேசிக்கும் குடும்பமும் சுற்றமும் உங்களின் போற்றுதலுக்குரிய சிறப்பை உணரும் காலம் விரைவில் அமையும் என்றும் உறுதியாக நம்புகிறேன். இன்னும் ஓராண்டு கழித்து நீங்கள் கடந்து வந்த தடங்களைத் திரும்பி பாருங்கள், உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். புதிய பெண்ணியம் குழுவின் சமூகவிஞ்ஞான படைப்புகள் உங்களாலும் நீங்கள் உருவாக்கும் புதிய தலைமுறைகளாலும் முதிர்ச்சி அடையட்டும். ஆர்வத்தில் உயிரோட்டமாக இயங்குவதில் எனக்கும் நீங்கள்தான் முன்மாதிரி என்று சொல்லி மகிழ்கிறேன் ஜோதிபிரியா. நன்றி.

வணக்கம் லாவண்யா
        நம் வகுப்பில் நீங்கள் ஆற்றிய இறுதி உரையில் உங்கள் தனித்துவத்தில் நீங்கள் அடைந்த வெற்றியை அனைவரும் கண்டு வியந்தோம். உங்கள் ஒவ்வொருவரின் தனித்துவங்களை உயிர் பெறச் செய்வதில் நான் மேற்கொண்ட முயற்சிகளில் உங்கள் வெற்றியை எனது வெற்றியாகவே எண்ணிக் கொண்டாடினேன். வகுப்புத் தோழிகள் எழுந்து நின்று கைதட்டிய மகிழ்ச்சியில் ஒலித்துக்கொண்டிருந்தது எனது மகிழ்ச்சி. ஓவியம் உங்கள் தனித்துவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள், அதைவிட பேச்சே உங்களுக்கு தனித்துவம் லாவண்யா. அதிகம் பேசுங்கள். அதைவிட அதிகம் வாசியுங்கள். தலைசிறந்த பேச்சாளராக சிறக்க வாழ்த்துக்கள். எனது கருத்தியலான சமூக அறிவு பற்றிய ஐந்து மாடி வீட்டை தேர்வு செய்து,  காட்சிப்படுத்துவதற்காக கட்டியமைத்ததில் உங்கள் உழைப்பை என்றும் நினைத்துப்பார்த்து மகிழ்வுறுவேன் லாவண்யா. நன்றி.

வணக்கம் நிஷா
உங்கள் தனித்துவங்கள் வெளிப்படச் செய்வதில் நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் நிஷா. என்றாவது உங்கள் ஆளுமை வெளிப்படுமெனில் அதற்கு எனது முயற்சிகள் ஏதேனும் ஒரு வகையில் பங்காற்றியிருக்குமெனில் நமது வகுப்பை நினைத்துப் பாருங்கள். என்னை நினைத்து மகிழ்ச்சியடைக. சமூக மேன்மைக்கு பங்காற்றுங்கள் நிஷா. நன்றி.

வணக்கம் பிரீதா
        உங்கள் தனித்துவத்தை மிக தாமதமாகவே உணர முடிந்தது. உங்களுக்கு எழுதும் ஆற்றல் அழகாக இருக்கின்றது. அதிகம் பாடல் எழுதுங்கள். உங்கள் டப்பிங் பாடல் எங்களை வியக்க வைத்தது. சமூக அக்கறையுள்ள பாடல்களாக உங்கள் டப்பிங் பாடல்களை கேட்கும் வாய்ப்பை பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் பிரீதா. நன்றி.

வணக்கம் பிரியதர்ஷினி
        உங்களுக்கு நல்ல அறிவு. உயிரோட்டமாக கேள்விகளை எழுப்புவீர்கள். உற்சாகத்துடன் படிக்கிறீர்கள். பேச்சிலும் குரல் வளத்திலும் நல்ல ஆளுமை இருக்கின்றது. பெண் அறிஞர்களுக்கான இடத்தில் பங்கேற்க முயலவும். புதிய பெண்ணியத்திற்கான சமூக விஞ்ஞான முயற்சிகளில் நல்ல முன்மாதிரியாக உங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் பிரியதர்ஷினி. நன்றி.

வணக்கம் புனிதா
        பேச்சில் உங்களுக்கு ஆளுமை இருக்கின்றது புனிதா. ஆனால் உங்கள் தனித்துவத்தை சமூக ஆற்றலாக மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக நான் அறியவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் புனிதா.

வணக்கம் ரஞ்சினி
        வகுப்பில் நீங்கள் நல்ல மாணவி. உங்கள் அறிவு உயிரோட்டமாக இருக்கின்றது. ஆனால் மதிப்பெண்ணுக்கான கல்வி முறை என்ற வட்டத்திலிருந்து நீங்கள் இன்னும் விடுபடவில்லை. உங்கள் ஆளுமையை இதுவரை உங்களது தனித்துவ வெளிப்பாட்டிற்காக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. இது உங்கள் ஆற்றலை வீணடித்துவிடும். என் மாணவியர்கள் ஆற்றலிருந்தும் வீணர்களாக முடிவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ரஞ்சினி. இனியாவது உங்கள் தனித்துவங்களை கண்டறிந்து சமூக ஆற்றலாக முன்னேறுவதற்கு நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

வணக்கம் ரோஜா
பேச்சில் உங்களுக்க ஆளுமை இருக்கின்றது ரோஜா. ஆனால் உங்கள் தனித்துவத்தை சமூக ஆற்றலாக மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக நான் அறியவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ரோஜா. நன்றி.

வணக்கம் ரோஸி
        உங்களுக்கு நல்ல பேச்சு, சிந்தனை, பாடல், படிப்பு என பல ஆற்றல்கள் இருக்கின்றன. ஆனால் விளையாட்டுத்தனங்களில் உங்கள் தனித்துவங்களை இழந்துவிடுகிறீர்கள். உங்கள் திறன்கள் சமூக மேன்மைக்கான ஆற்றல்களாக சிறப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம், சமூக மேன்மையின் தேவை. நீங்களும் மதித்தால் உணரும் அறிவு சற்றேனும் இருந்தால் முயற்சி செய்யவும். நன்றி.

வணக்கம் ரூபஸ்ரீ
        உங்களுக்கு நல்ல சிந்தனை, எழுத்து, படைப்பாளுமை இருக்கின்றது. தொடர்ந்து கதை எழுதுங்கள். அதிகம் கதை படியுங்கள். பேசுவதில் ஆர்வம் இருக்கின்றது. ஆனால் தொடர் பயிற்சி வேண்டும். உங்கள் வாழ்வின் சூழல்களைக் கண்ணீருடன் விவரித்தபோது வகுப்பே இதயம் கனத்து நின்றது. இந்த கனமான வாழ்வில் சிறைபட்டோர் அனைவருக்கும் நம் சமூகத்தில் விடை சொல்ல வேண்டிய தலைமை பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் படைப்பாளுமையிலும் வழிகாட்ட முயலுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ரூபஸ்ரீ. நன்றி.

வணக்கம் சங்கீதா
        உங்களுக்கு நல்ல திறமைகள் இருக்கின்றது சங்கீதா. ஆனால் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த முன்வருவதில் ஆர்வம் போதாது. ஓவியம், பாடல், பேச்சு போன்ற திறன்களில் நீங்கள் சிறப்படைய முடியும். ஆர்வத்தை உயர்த்துக சங்கீதா. பேச்சில் அக்கறையுடன் பயிற்சியை மேற்கொள்ளவும். நன்றி.


வணக்கம் சத்யவதி
        பேச்சில் உங்களுக்க ஆளுமை இருக்கின்றது சத்யவதி. ஆனால் உங்கள் தனித்துவத்தை சமூக ஆற்றலாக மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக நான் அறியவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சத்யவதி. நன்றி.

வணக்கம் சௌமியா
உங்களுக்கு நல்ல சிந்தனை, எழுத்து, படைப்பாளுமை இருக்கின்றது. தொடர்ந்து கதை எழுதுங்கள். அதிகம் கதை படியுங்கள். பேசுவதில் ஆர்வம்காட்டவும். ஆனால் தொடர் பயிற்சி வேண்டும். உங்கள் பேருந்து பயணத்தை விவரித்தபோது வகுப்பே உங்கள் வீரத்தை எண்ணி மகிழ்ந்தது. இந்த ஆணாதிக்க வெறிபிடித்த வாழ்வில் சிறைபட்டோர் அனைவருக்கும் நம் சமூகத்தில் விடை சொல்ல வேண்டிய தலைமை பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் படைப்பாளுமையிலும் வழிகாட்ட முயலுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சௌமியா. நன்றி.

வணக்கம் ப.சூர்யா
        உங்களுக்கு நல்ல சிந்தனை, பேச்சு, ஆர்வம், தேடல் இருக்கின்றன. ஒரு சமூக மேன்மைக்குத் தலைமைதாங்கும் முன்மாதிரிக்கு தேவையான அடிப்படைத் தகுதிகளை உங்களிடம் பார்க்கிறேன். சமூகவிஞ்ஞானம், பெண்ணியம், அறிவியல் தத்துவம் பற்றிய தொடர்ந்த உரையாடலை உங்களிடம் கண்டுவருகிறேன் சூர்யா. உங்கள் தனித்துவங்களை உயர்த்திக்கொள்வதில் தொடர் பயிற்சியும் முதிர்ச்சியும் தேவைப்படுகின்றது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் இந்த சமூகத்தில்  நல்ல முன்மாதிரியான நீங்கள் உருவெடுப்பீர்கள் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. எனக்கும் முன்மாதிரியாக உருவெடுக்க வாழ்த்துகிறேன் சூர்யா. நன்றி.

வணக்கம் s.சூர்யா
        உங்களுக்கு நல்ல நிதானம் இருக்கின்றது. நல்ல திறன்கள் இருக்கின்றன. நடிப்பு, பேச்சு, சிந்தனை, தேடல், கேள்வி ஆகியன இருக்கின்றன. ஆனால் அவற்றை உங்கள் தனித்துவங்களாகவும் சமூக ஆற்றலாகவும் உருமாற்ற வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு வேண்டும். நீங்கள் சார்ந்துள்ள தோழியரின் விளையாட்டுத்தனங்களில் பொறுப்புகளை கரைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஆளுமைகள் சமூக மேன்மையில் அக்கறை காட்டினால் நல்லுலகை உருவாக்க முடியும் என்பது சமூகவிஞ்ஞானம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் என் மீது மரியாதை இருந்தால் சற்று முயன்று பாருங்கள் சூர்யா. நன்றி.

வணக்கம் தெய்வசத்யா
        உங்களுக்கு நல்ல குரல். அழகாக பாடுவீர்கள். சமூக அக்கறையுள்ள டப்பிங் பாடல்களை எழுதி பாட வேண்டும் என்று விருப்பத்துடன் வாழ்த்துகிறேன் தெய்வா. உங்கள் திறன்களை விளையாட்டுத்தனங்களில் மூழ்கடித்துவிடுகிறீர்கள். சிந்தனையை கூர்மைப்படுத்துங்கள். உரையாடலை விரிவுபடுத்துங்கள். தன்னம்பிக்கையின்மையிலிருந்து நீங்கள் இன்னும் முழுமையாக விடுபட வேண்டும். உங்கள் குறும்புத்தனங்களில் இருக்கும் அழகு அறிவு முதிர்ச்சியிலும் எட்டட்டும் தெய்வா. நன்றி.

வணக்கம் திலகவதி
        நீங்கள் பொறுப்பானவர். பேச்சிலும் சிந்தனையிலும் ஆளுமை இருக்கின்றது. உங்கள் படைப்பாற்றலிலும் கவனம் செலுத்த வேண்டும். தனித்துவங்களில் முதிர்ச்சியடைய விருப்பம் கொள்ள வேண்டும். இந்தியப் பெண்ணியத்திற்கான முன்மாதிரியாக உருவெடுப்பதில் ஆர்வப்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் திலகவதி. நன்றி.

வணக்கம் வைஷ்ணவி
        நமது வகுப்பின் சிறந்த ஓவியர். ஓவியத்தில் மட்டுமல்ல. உங்களுக்கு நல்ல குரல், பேச்சு, சிந்தனை, கேள்வி, தேடல் அனைத்தும் இருக்கின்றன. நமது வகுப்பின் இன்றைய தகவல்கள் உங்கள் குரலில்தான் உயிர் பெற்றிருக்கின்றன. உங்கள் வாழ்வின் சூழல்களைக் கண்ணீருடன் விவரித்தபோது வகுப்பே இதயம் கனத்து நின்றது. இந்த கனமான வாழ்வில் சிறைபட்டோர் அனைவருக்கும் நம் சமூகத்தில் விடை சொல்ல வேண்டிய தலைமை பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் படைப்பாளுமையிலும் பேச்சாற்றலிலும் ஓவியப்புனைவுகளிலும் வழிகாட்ட முயலுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வைஸ்ணவி. வகுப்பில் பல நேரம் உடல்நலமின்றி காணப்படுவீர்கள். தேவையான ஊட்டச்சத்து உரிமையைப் பெறுவதற்கு உரிய முயற்சியில் ஈடுபடவும். அறிவியல் தத்துவத்தில் பயிற்சி பெறுக. சமூகவிஞ்ஞானப் பார்வையின் இந்தியப் பெண்ணியத்தின் ஓவிய ஆளுமையாக உருவெடுக்க முயலவும் வைஷ்ணவி. நன்றி.

வணக்கம் வாசுகி
        உங்களுக்கு நல்ல பேச்சு. தன்னம்பிக்கை. உங்கள் தனித்துவத்தை அடையாளம் கண்டு சமூக ஆற்றலாக சிறப்படைவதற்கு ஆர்வம் காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  அதிகம் உரையாடுங்கள். அன்றாட செய்திகளை விவாதியுங்கள். நல்ல முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட விரும்புங்கள் வாசுகி. வாழ்த்துக்கள். நன்றி.

வணக்கம் வீரசத்யா
        உங்கள் தனித்துவங்கள் வெளிப்படச் செய்வதில் நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் வீரசத்யா. என்றாவது உங்கள் ஆளுமை வெளிப்படுமெனில் அதற்கு எனது முயற்சிகள் ஏதேனும் ஒரு வகையில் பங்காற்றியிருக்குமெனில் நமது வகுப்பை நினைத்துப் பாருங்கள். என்னை நினைத்து மகிழ்ச்சியடைக. சமூக மேன்மைக்கு பங்காற்றுங்கள் வீரசத்யா. நன்றி.

வணக்கம் வித்யா
        உங்களுக்கு நல்ல குரல், பேச்சு இருக்கின்றன. ஆனால் தயக்கமும் தன்னம்பிக்கையின்மையும்தான் பெரிய பலவீனமாக இருக்கின்றது. இந்த பலவீனங்களில் உங்களது பல தனித்துவமான திறன்கள் சிறைபட்டுக்கிடக்கின்றன. சிறைகளை உடைத்து விடுதலையுற ஆசைப்படுங்கள் வித்யா. தனித்துவங்களை கண்டறிந்து சமூக ஆற்றலாக உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வித்யா. நன்றி.

வணக்கம் விஜயலட்சுமி
        உங்களுக்கு நிறைய நிதானப் பண்பு இருக்கின்றது. தனித்துவங்களை கண்டறிய முடியாமல் தடுமாறினேன். ஆனால் நல்ல பேச்சும் சிந்தனையும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதிகம் பேசுவதற்கு ஆசைப்படுங்கள். அன்றாட செய்திகளை ஆர்வத்துடன் உரையாடுங்கள். அதிகம் வாசியுங்கள். நல்ல முன்மாதிரியான சமூக ஆற்றலுள்ள பெண்ணாக திகழ விரும்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் விஜயலட்சுமி. நன்றி.

வணக்கம் விஜி
உங்கள் தனித்துவங்கள் வெளிப்படச் செய்வதில் நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் விஜி. என்றாவது உங்கள் ஆளுமை வெளிப்படுமெனில் அதற்கு எனது முயற்சிகள் ஏதேனும் ஒரு வகையில் பங்காற்றியிருக்குமெனில் நமது வகுப்பை நினைத்துப் பாருங்கள். என்னை நினைத்து மகிழ்ச்சியடைக. சமூக மேன்மைக்கு பங்காற்றுங்கள் விஜி. நன்றி.

வணக்கம் விஷ்ணுபிரியா
        உங்களுக்கு நல்ல குரல், பேச்சு, சிந்தனை. உங்களது அக்கறையின்மையால் பல் தனித்துவங்கள் வெளிப்படாமல் மறைந்திருக்கின்றன. படைப்பாற்றல் இருக்கின்றது. ஆனால் நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் தனித்துவத்தை உணர்ந்து சமூக ஆற்றலாக சிறப்படைய ஆசைப்படுங்கள் விஷ்ணுப்பிரியா. அன்றாட செய்திகளை உரையாடுங்கள். ஆர்வமிருந்தால் நீங்கள் இந்தச் சமூகத்தின் மேன்மைக்கு ஆற்றலுள்ள முன்மாதிரியாகத் திகழ முடியும். உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் என் மீது மரியாதை இருந்தால் முயற்சி செய்யுங்கள். நன்றி.

வணக்கம் அன்னலட்சுமி
        உங்களுக்கு தலைமைப்பண்பில் ஆளுமை இருக்கின்றது. பேச்சு, எழுத்து, நடிப்பு, பாடல் என பன்முக ஆற்றல் நிறைந்திருக்கின்றது. அனுபவங்கள் செறிவாக இருக்கின்றது. ஆனால் அவற்றை சமூக அறிவாக உருமாற்றுகின்ற முயற்சி குறைவாக இருக்கின்றது. வாசிப்பை விரிவுபடுத்துங்கள். படைப்பதில் ஆர்வத்தை உயர்த்துங்கள். அன்றாட செய்திகளை ஆர்வத்துடன் உரையாடுங்கள். சமூகமேன்மைக்கான பெண் ஆற்றலாக சிறப்படைவதில் ஆசைப்படுங்கள் அன்னலட்சுமி. உங்கள் குறும்புத்தனங்களில் ஆற்றல் மிக்க தனித்துவங்கள் மூழ்கி மறைந்துவிடுவதை சில நேரம் உணர்கிறேன். ஒருபோதும் இந்த நிலைமைக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் சமூகவிஞ்ஞானப் பெண்ணியவாதியாகவும் இந்தியப் பெண்ணியத்திற்கு நல்ல முன்மாதிரியாகவும் சிறப்பு பெற வேண்டும். உங்களுக்கும் தன்னம்பிக்கை இருந்தால் என் மீது மரியாதை இருந்தால் முயற்சி செய்க அன்னலட்சுமி. நன்றி.

வணக்கம் சாருமதி
        உங்களுக்கு நல்ல குரல். பேச்சாளுமை இருக்கின்றது. இசையில் ஆர்வமும் திறனும் இருக்கின்றது. தயக்கங்களாலும் அக்கறையின்மையாலும் தனித்துவங்களை மேன்மைபடுத்தாமல் இருக்கிறீர்கள். உங்கள் தனித்துவங்களை சமூக ஆற்றலாக உருமாற்ற முயற்சி செய்யுங்கள். அதிகம் வாசியுங்கள். அன்றாட செய்திகளை அக்கறையுடன் உரையாற்றுங்கள். நல்ல பேச்சாளராக உருவெடுக்க ஆசைப்படுங்கள் சாருமதி. உங்கள் திறனால் சமூக மேன்மையை சாதிக்க முடியும். உங்களுக்கும் தன்னம்பிக்கை இருந்தால் என் மீது மரியாதை இருந்தால் முயற்சி செய்க சாருமதி. நன்றி.

வணக்கம் கவிதா
        உங்களுக்கு நல்ல குரல். பேச்சாளுமை இருக்கின்றது. கவிதை, பாடல் எழுதுவதில் திறன் இருக்கின்றது. ஆனால் நீங்கள் உங்களை மேன்மைபடுத்துவதில் அக்கறை காட்டாமல் உள்ளீர்கள். உங்கள் தனித்துவத்தை உணர்ந்து சமூக ஆற்றலாக சிறப்படைய ஆசைப்படுங்கள் கவிதா. நன்றி.


வணக்கம் பிரேமா

உங்களுக்கு நல்ல குரல். பேச்சாளுமை, எழுத்தாளுமை இருக்கின்றது. சிந்திக்கும் திறன் இருக்கின்றது. இதையெல்லாம்விட குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கின்றது. அழகு. ஆனால், இந்தக் குறும்புத்தனங்களில் உங்கள் தனித்திறன்கள் மூழ்கிவிடக் கூடாது. உங்கள் தனித்துவங்களை சமூக ஆற்றலாக உருமாற்ற முயற்சி செய்யுங்கள். அதிகம் வாசியுங்கள். அன்றாட செய்திகளை அக்கறையுடன் உரையாற்றுங்கள். நல்ல பேச்சாளராக உருவெடுக்க ஆசைப்படுங்கள் பிரேமா. உங்கள் திறனால் சமூக மேன்மையை சாதிக்க முடியும். உங்களுக்கும் தன்னம்பிக்கை இருந்தால் என் மீது மரியாதை இருந்தால் முயற்சி செய்க சாருமதி. நன்றி.

வணக்கம் பேபிராணி
        உங்களுக்கு நல்ல குரல், பேச்சு, நடிப்பு போன்ற திறன்கள் இருக்கின்றன. ஆனால் தயக்கமும் தன்னம்பிக்கையின்மையும்தான் பெரிய பலவீனமாக இருக்கின்றது. நாடகத்தில் பங்கேற்றபோது இத்தகைய பலவீனங்கள் உடையத்தொடங்கியதை மகிழ்ச்சியுடன் உணர்ந்தேன். உங்கள் தனித்துவங்கள் வளர்ந்து சமூக ஆற்றலாக உருவாக்க வேண்டும் என்பதாக ஆசைப்படுங்கள். அதிகம் வாசியுங்கள். அன்றாட செய்திகளை அக்கறையுடன் உரையாற்றுங்கள். நல்ல நடிகராக சிறப்படைய தொடர்ந்து முயலுங்கள் பேபிராணி. நன்றி.

வணக்கம் தேவிகா
        உங்கள் தனித்துவத்தின் வீரியத்தை முதன்முதலில் உங்கள் கவிதைகளின் வீரியத்திலிருந்து கண்டுணர்ந்தேன். இரண்டாவதாக சமூக அறிவை வீடு கட்டுவதாக முடிவெடுத்தபோது வியந்தேன்.  உங்களுக்கு நல்ல அறிவு, சிந்தனை, பேச்சு, எழுத்து, படைப்பாற்றல், செறிவான கவித்துவம் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கின்றன. ஆனால் விளையாட்டுத்தனங்களில் மூழ்கடித்துவிடுவீர்களோ என்ற பயமும் இருக்கின்றது. சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். இத்தனை ஆற்றல்களையும் சமூக ஆற்றலாக வெளிப்படுத்தி சிறப்படைவதில் ஆர்வத்தை அதிகப்படுத்திக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தேவிகா. சமூகத்தேவை உணர்ந்தும் புதிய பெண்ணியத்தின் அவசியத்தை உணர்ந்தும் உங்கள் ஆற்றலை சமூக ஆற்றலாக வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற முயலவும். வரலாறு உங்களைப் போன்ற  பெண்களை வேண்டி அழைக்கின்றது. உங்கள் வாழ்வின் எல்லா சூழல்களிலும் வரலாற்றின் முன்மாதிரிகளாக உருவெடுப்பதில் கவனம் செலுத்தவும்.  சமூக அறிவின் ஐந்து மாடி வீட்டை தேர்வு செய்து,  காட்சிப்படுத்துவதற்காக கட்டியமைத்ததில் உங்கள் உழைப்பை என்றும் நினைத்துப்பார்த்து மகிழ்வுறுவேன் தேவிகா. எனக்கும் நல்ல முன்மாதிரியாக உருவெடுக்குமாறு வாழ்த்துகிறேன் தேவிகா. நன்றி.

   இறுதியாக உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். மூச்சடங்கும்வரை தனித்துவங்களை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். தாய் தலைமை சமூகத்தின் தலைமைப் பண்பை சமத்துவச் சமூகத்தை அடைவதற்காக பொறுப்பேற்று வழிநடத்த முன்வாருங்கள். சமூக மேன்மையின் இலக்கு நோக்கியும் புதிய பெண்ணியத்தின் அவசியம் நோக்கியும் உங்கள் தனித்துவத்தை தொடர்ந்து முன்னேற்றுங்கள். அன்றாட செய்திகளை நாள்தோறும் கவனியுங்கள். அதிகம் உரையாடுங்கள். சமூக மேன்மைக்கான உங்கள் முன்னேற்றங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடையும் பெருமை எனக்கு இருப்பதாகவே உணர்கிறேன். எனது நட்பார்ந்த மாணவிகளே, உங்களது சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் தலைசிறந்த சமூகவிஞ்ஞானிகளாகவும் இந்தியப் பெண்ணியத்தின் முன்மாதிரிகளாகவும் சிறப்படைவீர்கள் என்ற பேராசையுடன் விடைபெறுகிறேன்…
 என்றும் உங்கள் வகுப்பு ஆசிரியன்
அறிவன்புடன் KS
(எனக்கும் சேர்த்து சாப்பிடுங்கம்மா!)

No comments:

அதிகம் படித்தவை