நாடகம்
- நெகிழி உலகம் -
முனைவர் புதியவன்
காட்சி 1
மேடையின் மையத்தில் நெகிழியால் மூச்சு திணறுகிறாள் பூமித்தாய்
மேடையின் எல்லை வட்டத்தில் பிற நடிகர்கள்
( டப்பிங் பாடல்_ கண்கள் ஒன்றாக கலந்ததா-
ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)
நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா
மலைப்பாம்பென உலகை விழுங்குதா
லாபம் இசை... சிலுசிலுத்தே...
தாய் நிலமோ... பதைபதைத்தே....
மண்ணை மலடாக்கி
கடலை விஷமாக்கி
உயிரை முடிக்கும் அழிவே
நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா
மலைப்பாம்பென உலகை விழுங்குதா
காட்சி_2
தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது
மக்கள் _ பிளாஸ்டிக்ன்னு சொல்றோமே இந்த நெகிழி
அடடடடா
நெகிழி உற்பத்தி நமக்கு ரொம்ப வசதியா இருக்கு
தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது
மக்கள்_ நெகிழி உற்பத்தி பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது
மக்கள் 1_ கலர் கலரா பொருளை விக்க.. சாப்பாடு மடிக்க.. காபி குடிக்க எல்லாத்துக்கும் நெகிழ்வா இருக்குதப்பா நெகிழி
மக்கள் 2_ அட சாப்பாடுக்கு மட்டுமா, பஸ்ல வாந்தி வந்துட்டாலும் நெகிழிதான் A1
தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது
அரசியல்வாதி- நெகிழி வசதியாகதான் இருக்கு, ஆனால்
(தாயைக்காட்டி அழுகிறார் )
தொழிலதிபர்- நெகிழி பணமா கொட்டுதுதான், ஆனால்
( தாயைக்காட்டி அழுகிறார் )
மக்கள் _ நெகிழி எல்லாத்துக்கும் A1தான், ஆனால்
( தாயைக்காட்டி அழுகிறார் )
காட்சி_3
மேடையில் நடிகர்கள் பின்னணி இசையுடன் மீன், ஆமை, குரங்கு, பறவையாக மாறித் திரிகிறார்கள்
தாய் _ கடல் முழுதும் நெகிழி குப்பைகள்
லாபவெறி மனிதர்கள் கடலை களவாடுகிறார்கள்
உயிரினங்கள் _ இந்தக் கடல் எங்களுக்கு உரிமை இல்லையா!
தாய்_ மலைகள் முழுதும் நெகிழி குப்பைகள்
லாபவெறி மனிதர்கள் மலையை களவாடுகிறார்கள்
உயிரினங்கள்_ இந்த மலை எங்களுக்கு உரிமை இல்லையா !
தாய்_ மண் முழுதும் நெகிழி குப்பைகள்
லாபவெறி மனிதர்கள் மண்ணை களவாடுகிறார்கள்
உயிரினங்கள்_ இந்த மண் எங்களுக்கு உரிமை இல்லையா!
காட்சி _4
நெகிழியால் வாடும் தாயைச் சுற்றிலும் பின்னணி இசை உடன் நடிகர்கள் வேகமாக நடக்கிறார்கள். ஒவ்வொரு இசையின் முடிவிலும் திட்டமிடப்பட்ட ஒருவர் வசனம் பேசுகிறார்
வசனம் 1_ நேத்து வரைக்கும் நெகிழி இல்லாமல் நிம்மதியாத்தான வாழ்ந்தோம்
இன்னைக்கு என்னவாம் நெகிழி நெகிழின்னு நீட்டுறீங்க
குழு_ அதானே நெகிழி நெகிழின்னு நீட்டுறீங்க
வசனம் 2_ பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து சுடச்சுட இலையில சாப்பிட்டதுல யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா!
குழு_ யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா !
வசனம் 3_ நெகிழி பொருள்களில் சுடச்சுட டீ காபி சாப்பாடுன்னு இப்ப கணக்கில்லாமல் தின்னுறார்களே..
புற்றுநோயிலிருந்து புதுசு புதுசா நோய் வருதே..
மக்கள் எல்லாரும் சாகணுமா
குழு_ மக்கள் எல்லாரும் சாகணுமா
வசனம்_4_ நெகிழித்தாள்கள் நிறைந்து விவசாய பூமி மலடாகி போச்சு
பூமி விளையுமா?
எப்படி தின்னுவ சோத்த!
குழு_ எப்படி தின்னுவ சோத்த!
வசனம் 5_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி வெப்பமயமாகி உருகி சாகுது
குழு_ ஆமாம், வெப்பமயமாகி உருகி சாகுது
வசனம் 6_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது
குழு_ ஆமாம், பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது
வசனம் 7_ நெகிழி வசதியா இருந்தா, கோடி கோடியா பணம் தந்தா
பூமிக்கு கட்டிடலாமா பாடைய!
குழு_பூமிக்கு கட்டிடலாமா பாடைய!
வசனம் 8 _ பாலூட்டும் ஆத்தாவ சதையை அறுத்துத் திம்பிகளா !
குழு _ சதையை அறுத்து திம்பிகளா!
வசனம் 9_ நீரும் காத்தும் நிலமும் கடலும் எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து
குழு _ ஆமாம். எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து
வசனம் 10 _ வசதிக்கும் பணத்துக்கும் பூமியை சுருட்டினால்
தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !
குழு _ தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !
காட்சி 5
(விடுதலை இசையுடன் மென்மையான நடனத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)
(டப்பிங் பாடல் _ கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்...சிஸ்யா சிஸ்யா மெட்டு)
மனிதா மனிதா
உலகை ரசிடா ரசிடா
இயற்கை பணிந்தது
செயற்கையின் வலிமை எண்ணு...
சுழலும் உலகில்
உயிர்கள் சமம்தான் நம்பு !
விட்டுத் தொலைச்சோம் நாம்
விட்டுதொலைச்சோம்
நெகிழி நோயை
விட்டுத் தொலைச்சோம்
விட்டுதொலைச்சோம்
நெகிழி நோயை
விட்டுத் தொலைச்சோம் டோய்!
( பாடல் இறுதியில் நெகிழி விரலில் இருந்து விடுபட்டு பறக்க வேண்டும் )
No comments:
Post a Comment