எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, February 24, 2024

மூதாதையராக சிரித்த மகள்

 

மூதாதையராக சிரித்த மகள்

 

கண்ணாடி

எம்மை பிம்பம் செய்தது

கதை பேசியபடி கண்டிருந்தோம்

செல்ல மகளும் நானும்

 

என் எழுத்து பற்றிய கதையிலும்

பாட்டி பாட்டன் பற்றிய கதையிலும்

சிலாகித்துப் போனாள் செல்ல மகள்

 

அறம் செய்வதையே விரும்பிய

அவ்வையின் நரைத்த முடிகள்

இருட்டில் வெள்ளி மழையாக பொழிந்திருக்கும்

அத்தகு நரைமுடி உன் பாட்டிக்கும் உண்டு

 

மனமே மனிதரின் ஆறறிவென்ற

தொல்காப்பியரின் கண்கள்

முல்லை நில கொடிகளின் முல்லைப்பூ ஒத்தன

உன் பாட்டனின் கண்களும் முல்லைப்பூ கண்களே

 

தெய்வங்களுக்கெல்லாம் முதல் தெய்வம்

அகர முதல எழுத்துக்களே என்றுரைத்த

வள்ளுவரின் நெற்றியொளி அரை நிலவின் ஒளி ஒத்தன

உன் பாட்டனின் நெற்றியும் அரைநிலவு கவர்ந்தனவே

 

கடவுளை மற மனிதனை நினையென்ற

பகுத்தறிவு பெரியாரின் உரையாடும் உதடுகள்

மின்னலின் அசைவுகளை ஒத்திருப்பவை

உன் பாட்டனின் உதடுகளும் அத்திறம் வாய்ந்தவை

 

வர்ண சாதி இந்து மடமைக்கு சாவு மணியடித்த

அம்பேத்கர் தாத்தனின் உள்ளங்கைகள்

சூரியனின் முழு வெப்பம் சுமந்தவை

உன் பாட்டனின் கரங்களும் அநீதிகளை எரித்தவை

 

பொதுவுடைமை சமூகத்தின் திசைகாட்டிய

காரல் மார்க்ஸ் தாத்தனின் முகத்தோற்றம்

வெண்பஞ்சு மேகமாய் திரண்டிருக்கும்

உன் பாட்டனுக்கும் நெடுந்தாடி

வெண்பஞ்சாய் நிறைந்திருக்கும்

 

மனிதகுலத்தின் தத்துவ மேதை காரல் மார்க்ஸை

தன் கலையறிவில் பெற்றுத்தந்த ஜென்னி மார்க்ஸ் உள்ளத்திலும் பேரழகி

தங்க நிற கொன்றை மலரின் அடுக்கான பண்பழகி

உன் பாட்டிக்கும் பண்புகள் ஜென்னி மலர் ஒத்திசைக்கும்

மனிதகுலம் முழுமைக்கும் பேரன்பு மிளிர்ந்திருக்கும்

 

கண்ணாடி முன் உடனமர்ந்து

வியந்தபடி சிலிர்த்திருந்தாள்

இல்லாத பாட்டி பாட்டனை

இட்டு கட்டி நான் இசைக்க

வியக்க வியக்க கண்டிருந்தாள்

 

பாட்டியும் பாட்டனுமாக நான் வருவேன்

உறுதியும் மகிழ்வுமாய் சொல்லிச் சிரித்தாள்

 

அய்யோ மகளே!

உனக்கு தாடியும் முதுமையும் முளைப்பதா?

 

அய்யோ அப்பனே!

என் செயல்களில் வெளிவரும் பாட்டி பாட்டனுக்கு

தாடியும் வயதும் தேவையில்லையே

 

கண்ணாடி பார்த்து வியந்தேன்

இட்டுகட்டிய பாட்டி பாட்டன்கள்

மகள் உருவில் சிரிக்கின்றார்கள்

நாங்கள் கண்ணாடி பார்த்தபடி

கனவெல்லாம் சிரித்திருந்தோம்

No comments:

அதிகம் படித்தவை