எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, February 11, 2024

தமிழுக்கு அறிவென்று பேர்

 

தமிழுக்கு அறிவென்று பேர்

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

 

தமிழை தாய் மொழியாகக் கொண்ட நண்பர்களே. தாய் மொழியில் ஆழமாகவும் அடர்த்தியாகவும் நடைமுறை அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே பழுதின்றி சிந்திக்கும் சுயத்திறம் உள்ளவர்களாக திகழ்வோம். அதனால்தான் மனிதவளம் மேன்மையடைவதற்கு அடித்தளமாக குழந்தைகளுக்கு தாய்மொழி வழியில் கல்வி வழங்கும் அறிவியல் பூர்வமான நடைமுறையை உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், நாம் கடைபிடிக்கின்றோமா?

                தமிழ் வழியில் கல்வி பயில்வதை இழிவாகவும் சாத்தியமற்றதாகவும் கருதும் நிலையும் இருக்கின்றது. ஐந்து மாத குழந்தையிலிருந்து தமிழ் மொழியில் பழக்கப்பட்டு வளரும் குழந்தைகளுக்கு அவர்களது மொழியை எழுதவும் படிக்கவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கும் கடமையைச் செய்யாமல் தவறுகிறோம். தாய்மொழியில் ஆளுமைத்திறன் உடையவர்களால் மட்டுமே விருப்பமொழியாக எத்தனை மொழியையும் உரிய குறுகிய கால பயிற்சிகள் மூலமாக பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றோம். இதனால் விளைவுகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுக்காமல் குற்றம் புரிகின்றோம்.

                குழந்தைகள் அவர்களது வாழ்வியல் வரலாற்றுச் சூழலில் இயல்பாகப் புரிந்துகொண்டு பேசுகின்ற தாய்மொழி வழியாக எழுதவும் படிக்கவும் பயில்வது அவர்களது அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழியில் பயில்வது அவர்களது அடிப்படை உரிமையாகும். அவர்களது கல்வி உரிமைகளை பாதுகாத்து வழங்குவது மனிதகுல சமூகத்தின் தவிர்க்கக்கூடாத கடமையாகும்.

நாம் கடமை தவறி தாய்மொழி அல்லாத அந்நிய மொழியில் கல்வி பெறும் நிலைக்கு குழந்தைகளை ஆளாக்கினால் அது அவர்கள் மீது சமூகம் தொடுக்கின்ற வன்முறை குற்றமாகக் கருதப்பட வேண்டும்.  ஏனெனில், தனக்கு அறிவுத் தொடர்ச்சி அல்லாத அயல் மொழியில் கற்கும் நிர்பந்தம் நிகழும்போது உள்ளத்தின் இயல்பான சுதந்திரநிலை உடைந்து செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்பட நேர்கின்றது. உள்ளத்தியல்பில் சுதந்திரமான இயல்பு நிலையிலுள்ள கற்கும் திறனானது செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்படும்போது பலமடங்கு குறைபாடுடையதாக வினையாற்றுகின்றது. இதனால் இயல்பு நிலை தாய்மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் நிகழ வேண்டிய கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் மேம்பட்டநிலையில் மேலும் கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் என்ற சுழல்வட்ட ஏற்ற நிகழ்வானது முற்றிலும் சிதைவடைகின்றது. மாறாக, அயல் மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் கற்றலாவது நினைவில் மறவாதிருத்தல் ஒப்புவித்தல் எழுதிமுடித்தல் என்ற தேக்கநிலைக்கு குழந்தைகளை ஆட்படுத்தி மனித நிலைக்கு உயரவிடாமல் மந்தைநிலைக்கு ஆளாக்குகின்றது.

சுழல்வட்ட ஏற்ற வடிவிலான தாய்மொழி வழிக் கல்வியில் உரிய முறையில் படித்தல், புதுமைகளைப் படைத்தல், உண்மைகளைக் கண்டுபிடித்தல் என்பதாக சிந்தனைப்பூர்வமான கற்றல் நடவடிக்கை நிகழ்கின்றது. அதனால்தான் தாய்மொழிக் கல்வி நடைமுறையிலிருந்த காலம்வரை தமிழ்நாட்டில் தலைசிறந்த அறிஞர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் கண்டுபிடிப்பாளர்களும் உலகம் அறியும்படி உயர்ந்துள்ளார்கள். ஆனால் தேக்கநிலைக்கு ஆட்படுத்தும் தாய்மொழிவழியற்ற கல்வியானது சிந்திக்க இயலாத மந்த புத்தியுடைய தலைமுறைகளை உருவாக்குகின்றது. அதனால்தான் தாய்மொழிவழிக் கல்வி அற்றுப்போன காலத்தில் அயல்மொழி வழிக்கல்வி வழியாக ஆளுமையுள்ள மனிதர்களை நம்நாடு பெற்றெடுக்க இயலவில்லை. எனவே, மனிதர்களாக உயர்த்தப்பட வேண்டிய நம் குழந்தைகளை வெறும் மந்தைகளாக உருமாற்றிய குற்றவாளிகள் நாம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அறிவியல் தமிழைப் பாரம்பரியமாகப் பெற்றுள்ள நாம்…

கணினி தமிழிலும் சிகரம் தொட்டுள்ள நாம்..

இளமைக்கு இளமையாகவும் முதுமைக்கு முதுமையாகவும்

பேரழகின் பேரறிவாகவும் திகழும் தமிழ்மொழியின் குழந்தைகளாகிய நாம்…

 தாழ்ந்து இழிந்தமைக்கு யார் காரணம்?

 ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி, ஆங்கிலேயர்களின் காலணிய அடிமைநிலை, சுயராஜ்யத்தில் பார்ப்பனிய சூழ்ச்சி, கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் சூழல் என்று எத்தனை அரசியல் பின்னணிகளைக் கைகாட்டினாலும் நாம்தான் அரசியல் தெளிவற்று நம் குழந்தைகளின் அறிவை பலி கொடுத்தவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாதல்லவா. எனவே, நாம் குற்றவாளிகள்தான்.

நமது குற்றத்தின் விளைவு என்ன தெரியுமா? நம் குழந்தைகள் கண்ணிருந்தும் குருடர்களாக வகுப்பறைகளில் மேய்க்கப்படுகிறார்கள். காதுகளிருந்தும் செவிடர்களாக நாடெங்கும் திரிகின்றார்கள். வாயிருந்து ஊமைகளாக பிதற்றிக்கொண்டு ஓடுகிறார்கள். தாய்மொழியில் நன்கு படிக்கும் வாய்ப்பை கொடுக்காததாலும் அயல்மொழி வழியில் படித்தாக வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியதாலும் கற்றல் திறனில் குறைபாடுடையவர்களாக பெருந்திரளான மாணவர்கள் மந்தையாக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் படித்து முடித்தப் பாடங்களைப் பற்றி அவர்களிடம் பேசினாலோ ஆராய்ந்தாலோ இவற்றை அறிய முடிகின்றது. அவர்களது பாட நூல்களில் சில வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி வாசிக்கச்சொன்னால் வாசிக்கத் தெரியவில்லை. தவறாக வாசிக்கிறார்கள். சரியாக வாசித்தாலும் சரியான பொருள் புரிதலுடன் விளக்கத் தெரியவில்லை. மொழியைச் சரியாக கையாண்டு அவர்களால் எழுத முடிவதில்லை.

ஆங்கிலம் விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம் எண்களைத் தமிழில்  சொல்லுகையில் ஒன்று இரண்டு… பத்து. பத்துக்கு பிறகு வரும் எண்களை பதினொன்று, பன்னிரண்டு என்றுதான் சொல்கின்றோம். அதாவது பிரித்தால் பத்து ஒன்று, பத்து இரண்டு என்று பொருள்படும். ஆனால் ஆங்கிலத்தில் One … Ten. பிறகு தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக Ten one, Ten two என்று சொல்லாமல் Eleven, Twelve என்று சொல்கிறீர்கள். பிறகு உடனடி திருப்புமுனையாக Thirteen முதல் Nineteen வரையிலும் teen பாட்டு பாடுகிறீர்கள். பிறகு Twentyல் நின்று தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக Twenty one, Twenty two… என்று நீட்டிச்செல்கிறீர்களே என்ன காரணம் என்று விளக்க முடியுமா? என் கேள்விக்கு ஒருவர்கூட விடையளிக்கவில்லை. ஒரு மாணவி வகுப்பறையில் ஆசிரியரிடம் கேட்டாராம். இதுமாதிரியான மொக்கை கேள்விக்கெல்லாம் விடை கிடையாதென்று சொல்லிவிட்டாராம். ஒரு மொக்கை கேள்விக்குக்கூட பதில் சொல்லத் தெரியாத யோக்கியதையில்தான் வகுப்பறை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்படி சொல்லிவைத்தேன்.

தமிழை விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம்  எண்களைத் தமிழில் வரிசைபட சொல்லுகையில் பத்துக்கு முன்பாகவே ஒன்பது என்று பத்து குறிப்பிடப்படுகின்றதே ஏன்? நூறுக்கு முன்பாகவே தொண்ணூறு என்று நூறுவும் ஆயிரத்திற்கு முன்பாகவே தொள்ளாயிரம் என்று ஆயிரமும் குறிப்பிடப்படுகின்றதே ஏன்? என்று வினவியதற்கு தெரியவில்லை என்று முடித்துக்கொண்டார்களே அல்லாமல் தவறான பதிலைகூட முன்வைக்க யாரும் இல்லை. பிறகு என்னை விளக்கச் சொன்னவர்களிடம் முன்பு சொல்லப்பட்டவை அனைத்தும் தொடு என்பதாக விளக்கம் பெறுகின்றது என்ற கருதுகோளை முன்வைத்தேன். அதாவது, பத்துக்கு முன்பாகவே பத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு பத்து என்றாகி ஒன்பது என்று திரிந்துள்ளது.  நூறுக்கு முன்பாகவே நூறைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு நூறு என்றாகி தொண்ணூறு என்று திரிந்துள்ளது. ஆயிரத்திற்கு முன்பாகவே ஆயிரத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு ஆயிரம் என்றாகி தொள்ளாயிரம் என்று திரிந்துள்ளது. எனது விடை சரியோ தவறோ மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதற்கான சிந்தனைத்திறன்கள் முற்றிலும் தவறியுள்ளது என்பது மட்டும் உறுதியாகின்றது.

பயிற்றுமொழியும் புரியவில்லை. தாய்மொழியிலும் அறிவில்லை. மனனம் செய்து வாந்தி எடுப்பதில் என்ன திறன் என்றும் தெரியவில்லை. எப்படி மதிப்பெண் பெற்றோம், எப்படி மதிப்பெண் இழந்தோம், நாம் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு என்னதான் மதிப்பு, எதுவும் புரியவில்லை. படிப்பால் நம் அறிவு வளர்ந்திருக்கிறதா இல்லையா தெரியவில்லை. தனக்கு எதைப்பற்றி தெரியும், எதைப்பற்றி தெரியாது, எவற்றை தெரிந்துகொள்ள வேண்டும், ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், எத்தகைய சூழலில் நம் வாழ்க்கை இருக்கின்றது, இதன் கடந்தகாலம் எத்தகையது, வருங்காலம் எத்தகையதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது எதுவும் தெரியாது. தன் அறிவின் மீதும் தன்னம்பிக்கை இல்லை. அறியாமையை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் இல்லை. தெரியாதவற்றையும் தெரிந்ததுபோலவே நடித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் ஓடிக்கொண்டு வெற்றியடைந்ததாக நம்பும் யாவற்றிலும் தோல்வி பற்றிய அச்சத்துடனே புதைந்துகொண்டிருக்கிறார்கள். தாம் புதைந்து போதலை பெற்றோரின் விருப்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் தாங்கள் ஆற்ற வேண்டிய தியாக நடவடிக்கைகளாகவும் கருதிக்கொள்கிறார்கள். தமது இயலாமையை பலவீனப்படுதலை வெளிப்படையாக பெற்றோர்களிடம் வெளிப்படுத்தவும் தெரியவில்லை. மேலும், தங்களை பெரும் சொத்துக்களாகக் கருதும் பெற்றோர்களிடம் தெரியப்படுத்துவதால் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்பது அவர்களது சித்தமாகவும் இருக்கலாம்.

தெளிந்த அறிவு, உறுதியானப் பேச்சு, தன்னம்பிக்கை மிக்க செயல் இவற்றை இழந்து, இந்தத் தலைமுறை குழந்தைகள் பலவீனப்பட்டு முடங்கியுள்ளார்கள் என்பதே கல்விச்சூழல் கண்டுள்ள காலத்தின் நிதர்சனம். குழந்தைகளுக்குத் தெரியாத மொழியில் எந்த அறிவைக் கொடுத்தாலும் சுவைக்க முடியாத கனியாகவோ, செறிக்க முடியாத உணவாகவோ, தொண்டையில் சிக்கிய முள்ளாகவோ, அறியாமையின் மீப்பெரும் நோயாகவோ வினையாற்றும் என்ற சாதாரண உண்மையை உணராமல் நாமாற்றிய அயல்மொழிக் கல்வியின் விளைவுகளை மேலும் விளக்குவதற்கு அவசியம் இல்லையென்று கருதுகின்றேன். இந்தத் தருணத்திலிருந்தாவது குழந்தைகளின் தாய்மொழி வழி கல்வி உரிமைக்கு வழியமைப்போம். தமிழ் பேசும் நம் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்போம்.

தமிழ் எழுத்தறிவாகிய கல்வியறிவே இந்த உலகிற்கு முதல் கடவுள் ஆகும் என்கிறார் வள்ளுவர். தாத்தன் வள்ளுவன் வழியில் வந்தவர்கள் நாம். நம் குழந்தைகளுக்குப் பேசத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் இருந்தே அடிப்படை எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் கற்றுக் கொடுப்போம். ஆய்த எழுத்து ஃ (அக்) என்பது உயிரெழுத்துக்களாகிய அகர வரிசை முடிந்து க் என்ற மெய் வரிசையின் தொடக்கம் என்று காரணம் விளக்குவோம். உயிர் மெய் எழுத்துக்களை மெய்யும் உயிரும் உயிர்மெய் ஆகின்ற வழியில் (க்அக.. களி, அகம்) சொற்களோடு இணைத்தறியும் வழியில் பயிற்சி வழங்குவோம். சொற்களற்று ஒலிக்கும் எழுத்துக்களை எளிதாக புரிந்துகொள்ள வழியமைப்போம். கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களை படிப்பவர்களாகவும் படைப்பவர்களாகவும் உருமாற்றுவோம். எந்தத் துறையிலும் இலக்குடைய மனிதர்களாக வெற்றியடைய வாழ்த்துரைப்போம்.

 

1 comment:

Puthiyavan said...


வாட்சப் பகிர்வு தகவல்

ஏன்? எதற்கு?என்று சிந்தித்ததுண்டா?
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?

நல்ல வேலைக்குப் போகவா?

ஆங்கிலம் சரளமாகப் பேசவா?

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?

ஏன்?
எதற்கு?

....என்று சிந்தித்ததுண்டா?

Pre kg 25,000 இல் தொடங்குகிறது

Lkg 40,000
Ukg 50,000
1st 60,000
2nd 70,000
3rd 80,000
4th 90,000
5th 1,00,000
6to8 1,20,000
9to10. 1,50,000
11to12 2,00,000 இலட்சம்....

ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்.

இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புத்தான்.

நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40இலட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?

ஒன்றை நினைவில் வையுங்கள்..... உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து?

தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா?
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் , இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா ?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

உங்கள் பிள்ளை சாதனையாளனா?

இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்குத் தெரியுமா.....

TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?

வாருங்கள் குரல் கொடுப்போம்..... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் ( உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை ) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றக் குரல் கொடுப்போம்.

அப்படிச் சட்டம் இயற்றுவார்களா?

இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், ஆட்சியர் (கலெக்டர்) மகனுடனும் நம் பிள்ளைகளும் படிப்பார்கள்.

கட்டட வசதிகள் அதிகமாகும்.

சத்துணவு சத்தான உணவாகும்.

புதிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகப் பணம் சேமிக்கப்படும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
சிந்திப்போம்!
மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
👏👏👏👍🤝👍

அதிகம் படித்தவை