எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, September 29, 2021

கைக்கிளையும் பெருந்திணையும் போர்த்திணை ஆவதேன்?

 

 

        கைக்கிளையும் பெருந்திணையும்

போர்த்திணை ஆவதேன்?

புதியவன்

 

கைக்கிளையும் பெருந்திணையும் போர்த்திணை ஆவதேன்  என்ற வினாவானது இவ்விரு திணைகளும் புறத்திணை இலக்கணத்தில் இடம் பெருவதற்கான காரணத்தை வினவுவதாக அமைகின்றது.

       

தொல்காப்பியர் அன்பின் ஐந்திணையுடன் இணைத்து அகத்திணைகள் ஏழு என்கின்றார்.

 

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல்.947)

 

1.கைக்கிளை, 2.குறிஞ்சி 3.முல்லை 4.மருதம்  5.நெய்தல்  6.பாலை 7.பெருந்திணை

        இவற்றில் கைக்கிளையும் பெருந்திணையும் நிலம் சார்ந்த ஒழுக்கமல்ல. மாறாக நடத்தை சார்ந்த ஒழுக்கங்களாகும். ஏனைய ஐந்து திணைகளும் நிலம் சார்ந்த ஒழுக்கங்களாகும்.

1.கைக்கிளை – கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஒருதலைக் காமம் காரணமாக மடலேறுவேன் என்று கூறுதல், இளமை போய்விடும் என்று கூறுதல், தேற்ற முடியாத காம உணர்வுக்கு ஆட்படுதல், காம வெறி குறும்புகளில் ஈடுபடுதல் என்பதாக அமைகின்றது.

 

காமஞ்சாலா இளமையோள் வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே (தொல்.996)

 

2.குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த வாழ்வின் ஒழுக்கங்களைக் குறிக்கின்றது. மனித வரலாற்றுப் படிநிலையில் முதல் இரண்டு கட்டமாகும். காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகமும், வேட்டை நாகரிகமும் முதன்மையானது. ஆணும் பெண்ணும் புணர்தல் வாழ்க்கையில் ஈடுபடுதல் இயல்பாக இருக்கின்றது. குறிஞ்சித் திணையின் இறுதிக்கட்டம் ஆணாதிக்கத்தின் சொத்தாதிக்க நடவடிக்கைகளில் பெண்ணை சொத்தாக்குகின்ற கற்பு கோட்பாடு இறுக்கம் பெறாமல் நெகிழ்வுடன்  தொடங்கி இருக்கின்றது. எனவே, புணர்தல் புணர்தல் நிமித்தம் உரிப்பொருள் ஆகின்றது.

 

3.முல்லை – காடும் காடு சார்ந்த வாழ்வின் ஒழுக்கங்களைக் குறிக்கின்றது. மனித வரலாற்றுப் படிநிலையில் மூன்றாம் கட்டமாகும். கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் முதன்மையானது. கால்நடைகளை காடோடியாக மேய்த்து வளம் பெருக்கியதன் விளைவாக சொத்தாதிக்கத்தின் குறியீடாக நாடு உருப்பெற்றுவிட்டது. நாட்டில் இருக்கும் சொத்தாதிக்க மனிதர்கள் கால்நடை சொத்துக்களைப் பெருக்க காடு சார்ந்து உழைப்பதால் காடு சார்ந்த வாழ்வாக அர்த்தம் பெறுகின்றது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில்தான் தாய் தலைமை சமூகம் முற்றிலும் அழிக்கப்பட்டு தந்தையதிகார சமூகம் நிலைபெற்றது. தந்தையதிகார சமூகத்தில் பெண் என்பவள் சகமனிதர் அல்ல. அவள் எப்பொழுதும் ஆணின் சொத்து என்பதால் ஒவ்வொரு பெண்ணும் தன்னை உடைமையாக உரிய ஆணின் வருகைக்காக காத்திருப்பது முதன்மை ஒழுக்கம் ஆகின்றது. எனவே, காத்திருத்தல் என்ற பொருளில் இருத்தல் இருத்தல் நிமித்தம் உரிப்பொருள் ஆகின்றது.

 

4.மருதம் – வயலும் வயல் சார்ந்த வாழ்வின் ஒழுக்கங்களைக் குறிக்கின்றது. விவசாய நாகரிகம் முதன்மையானது. மனித வரலாற்றுப் படிநிலையில் நான்காம் கட்டமாகும். இயற்கையான நிலத்தில் மனித உழைப்பை செலுத்தி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கையான வளமாக வயல் அமைகின்றது. காடோடியாக அலையாமல் ஓரிடத்தில் நிலைபெற்று வாழும் நாகரிமாக அமைகின்றது. முல்லை திணையின் கால்நடை மேய்ச்சலைவிட அதிக செல்வங்களை சொத்தாக அடைவது சாத்தியமானதால் சொத்தாதிக்க ஆண்கள் சிற்றின்பங்களுக்காக பெரிதும் செல்வங்களை செலவிட்டார்கள். சிற்றின்ப பொருள்களில் இன்றியமையாதப் பொருட்களாக பரத்தையர் பெண்கள் திகழ்ந்தார்கள். ஒரு ஆணுக்கு உண்மையாக இருக்க கடமைபட்ட இல்லத்துப் பெண்கள் ஆண்களின் உண்மையற்ற பண்பை வெறுத்தார்கள். பரத்தையரை நாடும் ஆண்களுடன் தொடர்ந்து சண்டை செய்வது முதன்மை ஒழுக்கம் ஆகின்றது. எனவே, பரத்தை பெண்களிடம் சென்று வந்த தலைவனிடம் ஊடல் செய்தல் என்ற பொருளில் ஊடல் ஊடல் நிமித்தம் உரிப்பொருள் ஆகின்றது.

 

5.நெய்தல் – கடலும் கடல் சார்ந்த வாழ்வின் ஒழுக்கங்களைக் குறிக்கின்றது. வேட்டை நாகரிகமும் கடல் சார் பொருள் சேகரிப்பு நாகரிகமும் முதன்மையாகும். மனித வரலாற்றுப் படிநிலையில் இரண்டாம் கட்டமாகும். பொருள் தேடி கடலுக்கு சென்ற ஆடவர்கள் திரும்பி வருவார்கள் என்பது உறுதியல்ல. போனவர் உயிருடன் திரும்புவாரோ இல்லையோ என்ற இரங்கத்தக்க நிலையில் பெண்கள் காத்திருப்பார்கள். எனவே, பெண்கள் இரங்கத் தக்க நிலையில் காத்திருக்கிறார்கள் என்ற பொருளில் இரங்கல் இரங்கல் நிமித்தம் உரிப்பொருள் ஆகின்றது.

 

6.பாலை – குறிஞ்சி, முல்லை, மருதத் திணைகளின் வறட்சி நிலை சார்ந்த வாழ்வின் ஒழுக்கங்களைக் குறிக்கின்றது. வறட்சியிலிருந்து பிழைப்பதற்காக பெண்களைப் பிரிந்து ஆண்கள் பொருள் தேடச் செல்வது பெரிதும் நிகழ்கின்றது. எனவே, ஆண்களின் பிரிவைப் பெண்கள் தாங்கியிருக்கிறார்கள் என்ற பொருளில் பிரிதல் பிரிதல் நிமித்தம் உரிப்பொருள் ஆகின்றது.

 

7.பெருந்திணை 

ஒருதலைக் காமம் காரணமாக ஒரு பெண்ணை தன்னுடன் தொடர்புபடுத்தும் விதமாக மடலேறுதல், இளமை மாறிய பருவத்தில் காமத்தை செய்தல், காமவெறி உரசல்களில் ஈடுபடுதல், காமவெறியுடன் வன்புணர்வில் ஈடுபடுதல் என்பதாக அமைகின்றது.

 

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (தொல்.997)

 

மேற்கண்ட ஏழு திணைகளையும் அகத்திணையாகவே தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு அகத்திணைக்கும் ஒவ்வொரு புறத்திணையைக் குறிப்பிடுகின்றார்.

 

வ.எண்.

அகத்திணை

புறத்திணை

பொருள்

1

குறிஞ்சி

வெட்சி

ஆநிரைகளைக் கவர்தல்

2

முல்லை

வஞ்சி

மண் மீது விருப்பம் கொண்டு எல்லை வகுத்த பகைவரின் மீது படையெடுத்தல்

3

மருதம்

உழிஞை

பகைவரின் கோட்டையை முற்றுகை இடுதல்

4

நெய்தல்

தும்பை

நேருக்கு நேராக எதிர்த்து நின்று சண்டையிடுதல்

5

பாலை

வாகை

வெற்றி பெறுதல்

6

கைக்கிளை

பாடாண்

வென்ற ஆடவனின் பெருமை பாடுதல்

7

பெருந்திணை

காஞ்சி

உலக வாழ்வு நிலையற்றது என்பதை உணரச் செய்தல்

 

வெட்சி தானே குறிஞ்சியது புறனே (தொல்.1002)

வஞ்சி தானே முல்லையது புறனே(தொல்.1007)

உழிஞை தானே மருதத்துப் புறனே(தொல்.1010)

தும்பைதானே நெய்தலது புறனே(தொல்.1015)

வாகைதானே பாலையது புறனே(தொல்.1019)

காஞ்சிதானே பெருந்திணைப் புறனே(தொல்.1023)

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே(தொல்.1026)

 

கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் சொத்தாதிக்கம் தொடங்கிய சமூகத்தின் பிரதிநிதியாகவும் திகழ்கின்ற தொல்காப்பியரின் கண்ணோட்டத்திலிருந்து அகப்புறத் திணைகளின் பொருத்தப்பாட்டினை விளக்க முயல்கிறோம்.

 

குறிஞ்சிக்கு புறம் வெட்சி

 

வேந்து விடுமுனைஞர் வேற்றுப்புலக்களவின்

ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்(தொல்.1003)

 

        காடுசார்ந்த பொருள்களை சேகரிப்பதும், வேட்டையாடுவதுமே குறிஞ்சி நில மக்களின் உற்பத்தி முறையாகும். எனவே, இச்சமூக அமைப்பில் சொத்தாதிக்கம் தோன்றியிருக்கவில்லை. எனவே, இயல்பாகவே குறிஞ்சி திணை மக்களின் சமூகப் பொருளுற்பத்தி நடவடிக்கையில் சொத்தாதிக்க கண்ணோட்டம் சாத்தியமில்லை. பொருள் சேகரிப்பு முயற்சியில் ஈடுபடும்போது சேகரிப்பிற்கு உள்ளாகும் பொருட்கள் யாருடைய சொத்து என்ற கண்ணோட்டம் இல்லாதவர்களாவர். தொடக்க நிலை கால்நடை மேய்ச்சலுக்கும் தொடக்கநிலை விவசாயமும் முதன்மையற்றதாயினும் அத்தகைய உழைப்பில் ஈடுபடும் அறிவு உடையவர்களாவர். இத்தகையவர்கள் பூர்வகுடிகளின் பிறப்புரிமைகளோடு முல்லை திணை மக்களால் பராமரிக்கப்படுகின்ற ஆநிரைகளை சேகரிக்கின்றார்கள். அதற்குத் தடையாக இருக்கின்ற எதிரிகளைத் தாக்கி அழிக்கின்றார்கள்.

        முல்லை திணை மக்கள் சொத்தாதிக்க பண்பாட்டிற்கு உரியவர்கள். இவர்கள் பராமரிக்கின்ற கால்நடைகள் மீது சொத்துரிமை உடையவர்கள். எனவே, குறிஞ்சித் திணை மக்கள் தங்களது பிறப்புரிமைக்கு உரியதான முல்லை திணை மக்களின் சொத்துக்களைத் தற்காப்பு உணர்ச்சியுடன்  போரிட்டு சேகரிக்கின்றார்கள்.

முல்லைத் திணையின் சொத்தாதிக்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் குறிஞ்சித் திணை மக்கள் ஆநிரைகளைத் திருடுகிறார்கள் என்பதாக அர்த்தப்படுகின்றது.

முல்லைத் திணை மக்கள் தங்கள் சொத்துக்களாகிய ஆநிரைகளைத் திருடியவர்கள் மீது போர் நிகழ்த்தி ஆநிரைகளை மீட்க முயல்கிறார்கள்.

குறிஞ்சி திணை மக்கள் தங்கள் பிறப்புரிமையாகிய பொருட் சேகரிப்பிற்கு எதிராக ஆநிரைகளைச் சொத்துக்களாகக் கொண்டுள்ள முல்லைத்திணை மக்களுக்கு எதிராக தொடர்ந்து போரிடுகிறார்கள். எனவேதான் தொல்காப்பியர் ஆநிரைகளை கவர்தலாகிய வெட்சி திணையை குறிஞ்சியின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

முல்லைக்கு புறம் வஞ்சி

எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே (தொல்.1009)

கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமே முல்லை திணை மக்களின் அடிப்படையாகும். எனவே, தனிச்சொத்தின் ஆதிக்கப் பண்பாடு முல்லைத்திணை மக்களின் எதார்த்தம் ஆகின்றது. இந்த எதார்த்தத்தை நிலைப்படுத்துவதற்கு அத்தியாவசியமாக அரசு என்றொரு சமூக நிறுவனம் உருப்பெற்று நிலைக்கின்றது.

தேவைக்கும் அதிகமான கால்நடைகளைப் பராமரிப்பதற்கு மேய்ச்சல் நிலங்கள் இன்றியமையாதவையாகும். கால்நடைகள் பெருந்திரளாக மேய்வதற்கு மேய்ச்சல் நிலங்களும், மேய்ச்சலுக்குத் தேவையான பயிர்களை விவசாயம் செய்தலும் முல்லை திணை மக்களின் முதன்மையான சமூகப் பொருளுற்பத்தி நடவடிக்கைகள் ஆகும்.

முல்லைத் திணை மக்களின் சொத்தாதிக்கப் பண்பாடு அவர்களது சமூகப் பொருளுற்பத்தி நடவடிக்கைகளுக்கு பகை முரணாக உருவாகின்றது. அதாவது, கால்நடை மேய்ச்சலுக்காகவோ அல்லது விவசாயத்திற்காகவோ நிலத்தில் எல்லை வகுத்து சொத்துரிமை கொண்டாடினால் என்னவாகும்? நிலத்தில் சொத்துரிமை உடையோரது கால்நடைகளைத் தவிர பிறரது கால்நடைகள் மேய்வது தடுக்கப்படும்.

நிலத்தின் மீதான தனிச்சொத்துரிமையானது கால்நடை வளர்ப்பிற்கு தடையாக அமைகின்றது. எனவே, கால்நடைகள் மீது சொத்துரிமை உடைய முல்லைத்திணை மக்களுக்கான அரசு மண்ணைச் சொத்தாக்கும் எதிரிகளை எதிர்த்து போரிடுகின்றது. எனவேதான் தொல்காப்பியர் மண் மீது விருப்பம் கொண்டு எல்லை வகுத்த பகைவரின் மீது படையெடுத்தலாகிய வஞ்சித் திணையை முல்லையின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

மருதத்திற்கு புறம் உழிஞை

 

முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைநெறி மரபிற்றாகும் என்ப(தொல்.1011)

விவசாய நாகரிகமே மருதத் திணை மக்களின் அடிப்படையாகும். எனவே, நிலத்தின் மீதான சொத்தாதிக்கப் பண்பாடு மருதத்திணை மக்களின் எதார்த்தம் ஆகின்றது. சொத்தாதிக்கத்தின் அடிப்படையில் நில எல்லைகளை விரிவுபடுத்துவது மருதத்திணையின் அரசுக்கு   இன்றியமையாதவையாகும். மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்  தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், செல்வங்களை எல்லை கடந்து சொத்தாகக் குவிப்பதற்கும் நில உரிமைகளை எல்லை கடந்து விரிவுபடுத்துவது மருதத் திணை அரசின் இன்றியமையாதத் தேவையாகும்.

சொத்தாதிக்கத்தின் அடையாளமாக கோட்டைகளை நிறுவி, பெரும் மதில்களை அரணாகக் கட்டமைத்து, அகழி வெட்டி, நிலமெங்கும் எல்லைக் கொடிகளை பறக்கவிட்டு, நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு போர்களை நிகழ்த்த உறுதிமிக்க படையமைத்து ஆட்சி செய்வது மருதத் திணை அரசின் எதார்த்தமாகும். இந்த எதார்த்தமே மருதத் திணையின் நடைமுறையில் பகை முரண்களாகக் கட்டமைகின்றது.

நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான  போட்டியில் மருதநில அரசுகள் ஒன்றோடொன்று போரிடுவது தவிர்க்க முடியாத நிகழ்வாகின்றது. எனவேதான் தொல்காப்பியர் கோட்டையின் மதில் சுவர்களைப் படை கொண்டு முற்றுகை இடுவதான உழிஞை திணையை மருதத்தின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

நெய்தலுக்கு புறம் தும்பை

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலையழிக்கும் சிறப்பிற்றென்ப (தொல்.1016)

கடல்சார்ந்த பொருள்களை சேகரிப்பதும், கடல் வேட்டையில் ஈடுபடுவதுமே நெய்தல் திணை மக்களின் உற்பத்தி முறையாகும். எனவே, இச்சமூக அமைப்பிலும் சொத்தாதிக்கம் தோன்றியிருக்கவில்லை. எனவே, இயல்பாகவே நெய்தல் திணை மக்களின் சமூகப் பொருளுற்பத்தி நடவடிக்கையில் சொத்தாதிக்க கண்ணோட்டம் சாத்தியமில்லை. 

உயிருக்கு பெரிதும் சவாலான உழைப்பில் முதன்மையாகக் கருதப்படுகின்ற கடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதனாலும் இயல்பாகவே போர்க்குணம் மிகுந்தவர்களாகத் திகழ்கிறார்கள். எனவே, மண்ணுக்காகவும் பெண்ணக்காவும் பொன்னுக்காகவும் அல்லது எதற்காகவும்  சொத்தாதிக்கம் உடையோரிடம் போரை எதிர்கொள்ள நேர்ந்தால் நேரெதிராக முன்வந்து போரிடுவதே நெய்தல் திணையின் பண்பாடாகும்.

கடலே வாழ்வின் பின்னணி என்பதால் பின்வாங்கி போரிட சாத்தியமில்லை என்பதாலும் நேரெதிராக முன்வந்து போரிடுவதே நெய்தல் திணையின் சாத்தியமான பண்பாடாக அமைகின்றது. எனவேதான், தொல்காப்பியர் நேரெதிராக சண்டையிடுதலாகிய தும்பை திணையை நெய்தலின் புறத்திணையாக குறிப்பிடுகின்றார்.

 

பாலைக்கு புறம் வாகை

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப(தொல்.1020)

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் திணைகளில் உயிர் வாழ்வதற்கான வளம் இன்றி வறட்சியால் சூழப்பட்டால் வாழ்க்கை பாழாகும். அப்படி பாழாய்ப்போகும் வாழ்க்கைதான் பாலைத்திணை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். அறம், அன்பு, நியாயம், உறவு, ஒழுக்கம், இல்லறம், காதல், கொடை, அறிவு, பணிவு என்பதாக பட்டியலை நீட்டிச் செல்லலாம். இந்நிலையில் பிழைப்பதற்குத் தேவையான பொருட்களை எப்படியேனும் பெற்றாக வேண்டும். அதற்காக எத்தகைய போரிலும் ஈடுபட்டு வெற்றியடைவது அவசியம். வெற்றி இல்லாவிட்டால் வாழ்வது சாத்தியமில்லை.  எனவேதான், தொல்காப்பியர் வெற்றி அடைவதாகிய வாகைத்திணையை பாலையின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

கைக்கிளைக்கு புறம் பாடாண்

அமரர் கண்முடியும் அறுவகை யானும்

புரைதீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப (தொல்.1026)

ஒருதலைக் காமமாகிய கைக்கிளையின் காரணமாக மடலேறுவேன் என்று கூறுதல், இளமை போய்விடும் என்று கூறுதல், தேற்ற முடியாத காம உணர்வுக்கு ஆட்படுதல், காம வெறி குறும்புகளில் ஈடுபடுதல் என்பதான செயல்கள் அனைத்தும் ஆணின் நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படும் செயல்களாகும். அதாவது பெண்ணின் காமச் செயல் அல்ல.

கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தோன்றிய தந்தையதிகாரச் சமூகத்தில் பெண் என்பவள் சகமனிதப் பண்பை இழந்து ஓர் ஆணின் சொத்தாக மதிக்கப்படுகிறாள். ஆணின் சொத்தாதிக்கப் பண்பாட்டில் பெண் எப்பொழுதும் ஒடுக்கப்படும் உயிரினமாவாள்.

பெண்ணின் கருத்துக்கும் முடிவுகளுக்கும் சமூக மதிப்பு சாத்தியமற்றதாகும். மேலும், ஒரு பெண் எந்த ஆணுக்கு சொத்தாக வேண்டும் என்ற திருமணப் பண்பாடு தந்தையதிகாரத்தின் பண்பாடாகும். எனவே, எந்த ஒரு பெண்ணுக்கும் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்திருக்கவில்லை.

பெண் மீதான ஆண்களின் சமூக அணுகுமுறையும் பெரும்பாலும் சகமனிதரை அணுகுவதற்கான பண்பாட்டுடன் அமையவில்லை. மாறாக, பெண்ணை பொருளாதார அடிமையாகவும் பாலுறவு அடிமையாகவும் அணுகுவுதாகவே அமைகின்றது. அதனால், இயல்பாகவே பெரும்பாலான திருமணங்களில் பெண்களின் பாலுறவு உரிமை விரும்பத் தகாததாகவே அமைகின்றது. எனினும் தந்தையதிகாரச் சமூகத்தில் பாலுறவு உரிமை ஆணுக்கானது. பெண் ஒத்துப்போக வேண்டிய கருவி மட்டுமே.

தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தன்னிடம் உரிமையுள்ள ஆணின் ஒரு தலை காமத்திற்கு உடன்பட்டு அவனை போற்றி நெறிபட வேண்டும் என்பதே கைக்கிளையின் நோக்கம். எனவேதான் தொல்காப்பியர் வெற்றி பெற்ற ஆணை போற்றி பாடுதலாகிய பாடாண் திணையை கைக்கிளையின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

பெருந்திணைக்கு புறம் காஞ்சி

பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.1024)

 

ஒருதலைக் காமம் காரணமாக ஒரு பெண்ணை தன்னுடன் தொடர்புபடுத்தும் விதமாக மடலேறுதல், இளமை முடிந்த பருவத்தில் காமத்தை செய்தல், காமவெறி உரசல்களில் ஈடுபடுதல், காமவெறியுடன் வன்புணர்வில் ஈடுபடுதல் என்பதாக அமைகின்ற செயல்கள் அனைத்தும் பெண்கள் மீதான ஆண்களின் செயல்பாடுகள் ஆகும்.

இந்த வாழ்க்கை நிலையில்லாமையால் அழியக்கூடியது. எனவே, அழிவதற்குள் இன்பங்களை அனுபவிப்பது குற்றமல்ல. இன்பங்களை அனுபவிப்பதற்கான முயற்சிகளில் பெண்கள் அழிவார்கள் என்றாலும் குற்றமல்ல. ஏனெனில் அழிவு என்பது நிலையாமையின் இயல்புதான். அதனால்தான் “மிக்க காமத்து மிடலொடு தொகைஇ” என்று தொல்காப்பியர் வன்புணர்வையும் சேர்த்தே குறிப்பிடுகின்றார். எனவேதான் தொல்காப்பியர் நிலையாமையாகிய காஞ்சியைப் பெருந்திணையின் புறத்திணையாகக் குறிப்பிடுகின்றார்.

 

தொல்காப்பியர் ஏழு அகத்திணைகளுக்கும் தொடர்புடைய புறத்திணைகளைக் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர்  கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் அகத்திணைகளாக மட்டுமே வரையறுக்கின்றார். எனினும், இவ்விரு திணைகளும் பெண்கள் மீது ஆண்களால் நிகழ்த்தப்படுகின்ற ஒரு போர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் கைக்கிளைக்கு பாடாணையும், பெருந்திணைக்கு காஞ்சியையும் தொடர்புபடுத்தி வரையறுத்துள்ளார். ஆனால், கைக்கிளையும் பெருந்திணையும் புறத்திணைகளே என்று வெளிப்படையாக முதன்முதலில் அறிவித்தவர் ஐயனாரிதனார் ஆவார்.

 

புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலில் ஐயனாரிதனார்தான் கைக்கிளை, பெருந்திணை உட்பட பன்னிரு புறத்திணைகளை குறிப்பிடுகின்றார்.

1.வெட்சி,  2.கரந்தை,  3.வஞ்சி,  4.காஞ்சி

5.உழிஞை, 6.நொச்சி,  7.தும்பை,  8.வாகை

9.பாடாண்  10.பொதுவியல்  11.கைக்கிளை  12.பெருந்திணை

இந்த பன்னிரு திணைகளையும் புறம், புறப்புறம், அகப்புறம் என்று மூன்றாகப் பிரித்துள்ளார்.

 

 

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி

உட்குடை உழிஞை நொச்சி தும்பையென்று

இத்திறம் ஏழும் புறமென மொழிய

வாகை பாடாண் பொதுவியல் திணையெனப்

போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்

கைக்கிளை பெருந்திணை ஆயிவ் விரண்டும்

அகப்புறம் ஆமென அறைந்தனர் புலவர்

(ஐயனாரிதனார். புறப்பொருள் வெண்பாமாலை. சூத்திரம் 19.)

 

தொல்காப்பியர் அகத்திணையில் மட்டும் கூறிய கைக்கிளையையும் பெருந்திணையையும் இவர் புறத்திணையில் சேர்த்தற்கான காரணங்கள் என்ன?

புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண் படலத்தில் துறை 41ல் கைக்கிளையும் 42ல் பெருந்திணையும் விளக்கப்படுகின்றது.

கைக்கிளை –

தண்டாக் காதல் தளரியல் தலைவன்

வண்தார் விரும்பிய வகைஉரைத் தன்று

நீங்காத அன்பினையும் அசையும் இயல்பினையும் உடைய ஒரு பெண் தலைவனது வளமையான மாலையைப் பெற விரும்புவதை விளக்குவது கைக்கிளை ஆகும். அதாவது, ஒரு பெண் ஆணின் மீது கொண்டுள்ள ஒருதலைகாமம் என்கிறார்.

பெருந்திணை

பெய்கழல் பெருந்தகை பேணா முயக்குஇவர்ந்து

மல்குஇருள் செல்வோள் வகைஉரைத் தன்று

தன்னை விரும்பாத ஒரு வீரனை தழுவும் விருப்பத்துடன் நடு இரவில் சென்று புணர முயல்கிறாள் ஒரு பெண். அதாவது, ஒரு பெண் ஆணின் மீது கொண்டுள்ள பொருந்தாக் காமம் என்கிறார்.

 

புறப்பொருளுக்கு இலக்கண நூல் இயற்ற முனைந்த ஐயனாரிதனார் தொல்காப்பியரின் கருத்துக்கு நேர்முரணாக இந்நூற்பாவை படைக்க முயன்றுள்ளார். தொல்காப்பியர் கண்ணோட்டத்தில் கைக்கிளையும் பெருந்திணையும் பெண் மீதான ஆணின் இச்சைகளாக விளக்கம் பெறுகின்றன. ஆனால், ஐயனாரிதனாரோ நேர்மாறாக ஆண் மீதான பெண்ணின் இச்சைகளாக விளக்கியிருக்கிறார்.

 

தந்தையதிகார சமூகத்தில் ஆண் மீதான பெண்ணின் விருப்ப வெளிப்பாடு எத்தகையது? ஆணின் சொத்தாக வாழக் கடமைப்பட்டுள்ள பெண்களின் நடத்தையாக கைக்கிளை பெருந்திணையைக் கருதுவது வரலாற்றுச் சாத்தியமாகுமா? சமூகப் பொதுநிலையில் பெண்கள் பாலுறவு உரிமை குறித்த சுதந்திரமான நடைமுறையில் வெளிப்படுவது எதார்த்தமாகாது. விதிவிலக்கையே இலக்கணமாக கூறுவதும் சரியாகாது.

 

ஐயனாரிதனார் அவர் காலத்தில் நிகழ்ந்த போர்களை ஆராய்ந்திருக்கவில்லை என்பது விளக்கம் பெறுகின்றது. போர்களின் நடைமுறையை ஆராய்ந்திருந்தால் கைக்கிளை பெருந்திணைக்கான கூறுகளைக் ஆண்களின் வெளிப்பாடாகவே விளக்கியிருக்கக்கூடும். தொல்காப்பியரின் கருத்தில் முரண்படாமல் ஆக்கப்படுத்தியிருக்க முடியும். அத்தகைய விளக்கங்கள் வரலாற்று பொருத்தப்பாடாகவும் அமைந்திருக்கக்கூடும். ஆனால், தனது ஆணாதிக்கப் பண்பாட்டின் கண்ணோட்டத்திலிருந்து பெண்ணின் பாலுரிமை வெளிப்பாட்டை கற்பனையாகப் புனைந்து இலக்கணம் கூறியிருப்பது பொருத்தமற்றதாகவே விளக்கம் பெறுகின்றது. எனினும் புறத்திணை கூறுகளாக கைக்கிளையையும் பெருந்திணையையும் குறிப்பிடுவது சரியான முடிவாகவே அறிய முடிகின்றது.

 

போர்களின் நடைமுறைகளை ஆராயும் நிலையில் கைக்கிளையும் பெருந்திணையும் புறத்திணையில் இடம்பெறுதல் பொருத்தமான உண்மையாகின்றது. ஏனெனில், சொத்தாதிக்கத்திற்காக காலந்தோறும் நிகழும் போர்கள் அனைத்தும் ஆண்களின் அதிகாரப் பண்பாட்டிலிருந்து நிகழ்கின்றன. போர்கள் உச்ச நிலையை அடைகின்றபோது பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பெரிதும் நிகழ்த்தப்படுகின்றன.

 

ஆண்களே போரை நிகழ்த்துகிறார்கள். தந்தையதிகாரத்தின் சொத்ததிகாரக் கண்ணோட்டமே போரை வழிநடத்துகின்றது. சொத்துக்களை சூறையாடுதல், கைப்பற்றுதல் என்பதெல்லாம் பெண்களைச் சூறையாடுதல், கைப்பற்றுதல் என்பதோடு பிரிக்க முடியாததாகின்றது.

 

தந்தையதிகாரப் பண்பாட்டில் பெண்கள் சகமனிதர்கள் அல்ல, ஆணின் சொத்துக்களே. எனவே, இத்தகைய சொத்தாதிக்கப் போரின் உச்சத்தில் பெண்களையும் குழந்தைகளையும் சூரையாடுவது, பாலியல் வன்முறை செய்வது, கூட்டு பலாத்காரம் செய்வது, பெண்ணாகப் பிறந்தார்கள் என்பதனாலேயே கூடுதல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவது என்பதெல்லாம் போர்களின் நடைமுறைகளாக அமைகின்றன.

 

இத்தகைய நடைமுறைகளில் காமம் சார்ந்த வெளிப்பாடுகள் இருப்பதனால் ஒருதலை காமமாகிய கைக்கிளையையும், பொருந்தா காமமாகிய பெருந்திணையையும் புறத்திணையாகக் கருதுவது சாத்தியமாகின்றது.

 

இத்தகைய துயரமிக்க நடைமுறைகளை இன்றும் அறிய முடிகின்றதல்லவா. உதாரணமாக, தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வில் வெளியான  பெண்கள் வாழத் தகுதியற்ற முதல் பத்து நாடுகளின் பட்டியலை அறிந்தால் இத்தகைய துயரமிக்க நடைமுறை ஆதாரப்படும்.

 

பத்தாவது இடம்பிடித்துள்ள அமெரிக்காதான் பாலியல் வன்புணர்ச்சி நடத்தைகளில் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும், அமெரிக்க இராணுவம் ஈரான், ஈராக் மீதான போர்களில் பெண்கள் மீது நிகழ்த்திய வன்முறைகளை உலகம் கண்டுள்ளது.

 

ஒன்பதாம் இடத்திலுள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிகளுக்கு எதிரான ஒன்பது ஆண்டுகால போராட்டத்தின்போது நாட்டின் இராணுவம் சித்திரவதை, பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

 

எட்டாம் இடத்திலுள்ள ஏமன் ஆயுத மோதல் காரணமாக மனிதாபிமானமற்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பெண்களும் குழந்தைகளும் உடல் உளவியல் துஷ்பிரயோகம், சுரண்டல் உட்பட மனிதாபிமானமற்ற வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

 

        ஏழாம் இடத்திலுள்ள காங்கோவில் போரிடும் கட்சிகளாளும் ஆயுதமேந்திய போராளிகளாலும் நேரடி தாக்குதல்களுக்கும் வன்முறைகளுக்கும் மக்கள் ஆளாகிறார்கள். நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு நாளுக்கு 1,100 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். 1996 முதல் கிட்டத்தட்ட 2,00,000 பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்படாதவை எத்தனை என்பது கணக்கில் இல்லை.

 

        ஆறாம் இடத்திலுள்ள நாடு பாகிஸ்தான். சில பழங்குடிப் பகுதிகளில் ஆண்களின் குற்றங்களுக்கு தண்டனையாக அவர்களது பெண்களை  கூட்டு பலாத்காரம் செய்யும் அவலநிலை இருக்கின்றது.

 

        ஐந்தாம் இடத்திலுள்ள சவூதி அரேபியாவில் சட்டப்படியே ஒவ்வொரு பெண்ணும் ஆண் பாதுகாவலருக்கு உட்பட வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. மேலும் பெண்கள் மீதான வீட்டு வன்முறைகளும் அதிகம்.

 

        நான்காம் இடத்தில் இருக்கும் நாடு சோமாலியா. இங்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் யுத்தம் வன்முறை பண்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. 95 சதவிகிதப் பெண்கள் பிறப்புறுப்பு சிதைவை எதிர்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் 4 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்களே.

 

        மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சிரியா. பெண்கள் அரசு படைகளால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதாக மகளிர் பாதுகாப்பு நிர்வாக இயக்குனர் மரியா அல்அப்தே கூறியுள்ளார்.

 

         இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான். முப்பதாண்டு கால யுத்தம் மற்றும் அடக்குமுறைக்குப் பின்னர் ஏராளமான பெண்கள் கல்வியறிவற்றவர்களாகவே உள்ளனர். இங்கிருக்கும் நடைமுறைகள்படி பாலியல் வன்புணர்வு செய்தவனையே பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படலாம். திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான பெண்களின் வயது 16 ஆகும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பெண் பிரசவத்தின்போது இறக்கிறார். 85 சதவிகித பெண்கள்வரை பெரும்பான்மையானவர்கள் மருத்துவ சிகிச்சை இல்லாமல் பிரசவிக்கிறார்கள். உலகில் தாய்மை இறப்பு விகிதத்தைக் அதிகம் கொண்ட நாடகத் திகழ்கின்றது.

 

        முதலிடத்தால் மானம் தொலைந்திருப்பது இந்தியா. பாலியல் வன்முறை, பெண் கொத்தடிமை, நீதி நிராகரிப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.

ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கும் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது. மேலும் கணவர் அல்லது அவர்களது உறவினர்களால் ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். பெண் சிசுக்கொலை மற்றும் கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற செயல்களால் கடந்த நூற்றாண்டில் மட்டும் கொல்லப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை, 50 மில்லியன்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலில் இந்தியா முக்கிய நாடாக இருக்கின்றது. 44 சதவிகிதப் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணம் நடைபெறுகின்றது. இந்தியாவின் முதலிடத்திற்கு முக்கிய மூன்று காரணங்களைச் சொல்வதெனில் பாலியல் வன்முறைகள், பண்பாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பெண்களைக் கடத்துதல் ஆகியனவாகும். 70 சதவிகித பெண்கள் பாலியல் வன்முறை, கட்டாயத் திருமணம், திருமணப் பாலியல் வன்முறை, பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைகள், கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைகளை பாலின அடிப்படையிலும், சாதிய அடிப்படையிலும், மதம் அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் என பட்டியலிட்டு ஏராளமான ஆதாரங்களை அடைய முடியும். ஆனால் ஒட்டுமொத்தத்திற்கும் தலைமையாக அரச வன்முறையை சொல்வதெனில் ஏராளம் உண்டு. உதாரணமாக ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். INDIAN ARMY RAPE US என்ற மணிப்பூர் பெண்களின் நிர்வான போராட்டத்தை உலகறியும்.

 

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் போரின் நடைமுறையிலும் விளைவுகளிலும் பெண்கள் கைக்கிளை பெருந்திணை துயரங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நிரூபிக்கின்றன. இத்தகைய எதார்த்தத்திலிருந்தே கைக்கிளையும் பெருந்திணையும் அகத்திணை மட்டுமல்ல போர்த்திணையும்தான் என்பது விளக்கம் பெறுகின்றது.

 

காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும் வேட்டை நாகரிகத்திலும் நடைமுறையிலிருந்த தாய்தலைமை சமூகம் தந்தையதிகாரத் தோற்றத்தால் அழிவுபெற்றது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தோன்றிய தந்தையதிகாரமானது தாய்தலைமையின் மீது தொடுத்த போரின் நடைமுறை விளைவே சமகாலத்திலும் நிலவுகின்ற பெண்கள் வாழத் தகுதியற்ற உலகு. கைக்கிளையும் பெருந்திணையும் வெறும் புறத்திணை இலக்கணமல்ல. மாறாக போரில் நடைமுறைப்படுகின்ற வன்முறை.

 

கைக்கிளை, பெருந்திணை நிகழாத போர்கள் சாத்தியமா எனில் சொத்தாதிக்கப் போர்களில் சாத்தியமில்லை. ஆனால் இரண்டு போர்களில் சாத்தியப்படும்.

 

1.இலாப வெறி நிறுவனங்களின் அரசுகளால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற உயிரி யுத்தங்கள் சொத்தாதிக்கப் போர்களாயினும் பெண்களும் நோய்களுக்கு இலக்காவதால் கைக்கிளை பெருந்திணை நடைமுறைப்படுவது சாத்தியமில்லை.

 

2.சொத்தாதிக்கத்திற்கு எதிரான, சமூக விடுதலையை அடைவதற்கான, போர்களற்ற நல்லுலகை படைப்பதற்கான, மனித குல முன்னேற்றத்திற்கான சமூக விஞ்ஞானப் போர்களில் கைக்கிளை பெருந்திணை தவிர்க்கப்பட பெரிதும் வாய்ப்பிருக்கின்றது. உறுதியாகச் சொல்வதெனில் தவிர்த்தே ஆக வேண்டும்.

 

கைக்கிளை பெருந்திணை போன்ற வன்முறைகளிலிருந்து உலகம் திருத்தப்பட வேண்டியது சமூக மேன்மையின் தேவையாகும்.  ஏனெனில் பெண்களின் விடுதலையின்றி சமூக விடுதலை சாத்தியமில்லை என்பதே சமூக விஞ்ஞானம் உணர்த்தும் இலக்கணம்.

 

துணை செய்தவை

·       தொல்காப்பியம் தெளிவுரை – முனைவர் ச.வே.சுப்பிரமணியன்

·       தொல்காப்பியர் யார்? - புதியவன்

·       2020ல் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகள் இவைதான். இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? 

https://tamil.boldsky.com/insync/pulse/worst-countries-for-women-in-the-world-2020/articlecontent-pf203010-027362.html

·       உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா; ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

https://www.bbc.com/tamil/india-44611857

·       புறப்பொருள் வெண்பாமாலை

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/288

 

 

No comments:

அதிகம் படித்தவை