எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, September 29, 2021

திக் திக் நொடிகள்- புதியவன்

 

திக் திக் நொடிகள்

புதியவன்

 

நாளை காலை 8.30 மணிக்குத் தேர்வு கட்டிடம் திறக்கப்பட வேண்டும். நாங்கள் வரும்வரை யாரும் திறக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் சாவியை ஒப்படைத்தனர். என் உள்ளங்கையில் சாவியை அணைத்தபோது சரியாக நேரம் மாலை 5 மணி.

 

சாவியாளி செல்வதற்கு வசதியாக ஒள்ளிக்கதவு திறந்திருந்தது. தட்டச்சுக் கருவிகளைப் பிரசவித்த வண்டிகள் திரும்புவதற்குத் தயாராகின. வண்டிகள் ஒள்ளிக் கதவிற்குள் புக முடியாதல்லவா! அதற்காகத்தான் குண்டுக் கதவுகளும் திறந்துவைக்கப்பட்டன.

 

வண்டிகள் மறைவதற்கு முன்பே கல்லூரியின் மேலாண்மை பாதுகாவலருக்குத் தெரியாமல் மறைந்து வெளியேறினேன். பணித் தோழன் சேகருக்கு மட்டுமே நான் மறைந்துபோன ரகசியம் தெரியும். பாதுகாப்பு மேலாளர் வீட்டிற்கு கிளம்பும் நேரம் நெருங்கியது. அதற்கு முன்பே எனது திட்டப்படி தாயாரை அழைத்துக்கொண்டு நண்பரின் வீட்டைச் சேர்ந்திருந்தேன்.

 

        நண்பர் சிவகாமியை அக்கா என்றுதான் அழைப்பேன். அக்கா என்று கூவியபடி நீண்டக் கம்பிக் கதவை இழுத்தேன். அக்காவின் ஜிம்மி பாய்ந்து வந்தது. பழுதாகிய மோட்டார் சத்தத்தில் நாய் குரைத்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு சத்தம். நான் பயமறியாதவன். ஆனால், என் தாயார் பயப்படுவாரல்லவா. அதனால் கம்பிக் கதவைப் பாதுகாப்பாக நிறுத்திக்கொண்டேன்.

 

கதவில் கால் பரப்பி பல்லைக் காட்டி நின்றது ஜிம்மி. ஜிம்மிக்கும் எனக்கும் எட்டா பொருத்தம். எங்களை எட்டச் செய்வது அக்காவின் பிள்ளைதான். பையனுக்கு ஜிம்மியின் முடிபோல் அழகான தலைமுடி. எங்களைப் புன்னகையுடன் அழைத்தபடி ஜிம்மியைப் பற்றிக்கொண்டான். வாயாற வரவேற்ற அக்காவோ அம்மாவை அணைத்துக் கொண்டார். ஒரு தொலைபேசி தோழிகள் முதல் முதலில் நேரில் சந்தித்த தருணம். நல்ல ஆரவாரம்.

 

        எனது பேச்சு அவர்களின் பேச்சைக் கோர்த்து வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அக்கா ஆவி பறக்க காபி தந்தார். அவர்கள் பருகிக்கொண்டு இருந்தனர். நான் ஆறுவதற்குக் காத்திருந்தேன். காபி குவளையில் ஆவி பறந்துகொண்டிருந்தது.

 

அம்மாவிடம் அக்கா சொன்னார். சிவாவிற்கு ஆவி பேயென்றால் பயமே இல்லை. ஆனால், ஆவி பறக்க காபி குடிக்க மாட்டான். அவரின் பேச்சு ஆவியைத் தொட்டு ஆவியாகத் திரியும் மாணவியைப் பற்றியதாக மாறியது.

 

        அந்த மாணவி இன்றும் ஆவியாகத் திரிகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் அவஸ்தையால் தற்கொலை செய்துகொண்டாள். அக்கா விவரித்துக் கொண்டிருந்தாள்.

 

அந்த மாணவி தற்கொலை செய்ய வேறு இடமில்லையா! நான் பாதுகாவலர் பணி செய்யும் கல்லூரியிலா தற்கொலை செய்திருக்க வேண்டும். பாவம். அவளுக்கு வேறு போக்கிடம் இருந்திருக்காது.

 

வணிகவியல் பெருங்கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து இறந்தாளாம். ஜல் ஜல் என்ற கொலுசொலியில் கல்லூரியெங்கும் திரிகிறாளாம். அங்கும் இங்குமாக நடப்பதும், கேண்டியனில் டீ காபி சாப்பிட்டு திரிவதுமாக அலைந்தபடி இருக்கிறது அந்த ஆவி.

 

நானும் அந்த ஆவியின் சலங்கை ஒலியை பலமுறை கேட்டதுண்டுதான். ஆனால், நான் அறிவியல் தத்துவம், சமூகவிஞ்ஞானம் என்று பேசித்திரிபவன் அல்லவா! அதனால் ஒருபோதும் அந்த ஆவியைப் பொருட்படுத்தியதே இல்லை.

 

அந்தக் கல்லூரி, காட்டிற்குள் முளைத்த கட்டிடம் போன்றது. எனவே பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் எச்சரிக்கையாக இருப்பது வழக்கம். அந்த எச்சரிக்கையில் பாதிகூட ஆவியிடம் ஏற்பட்டதில்லை.

 

        இரவுப் பணியில் ஆவியுடன் திரிவதால் பலரும் என்னை எச்சரித்ததுண்டு. அதிலும் சாய்பாபா என்னை பயமேற்றுவதற்காக எச்சரிப்பார். அதெல்லாம் வெறும் நம்பிக்கைதான் என சிரிப்பேன்.

 

என் சிரிப்பு ஆவியை மட்டுமல்ல, கடவுளையும் பொய்யாக்குவதை உணர்ந்து பொங்குவார். மாணவியின் ஆவி உன்னை அடிக்கத்தான் போகிறது. பெண் குரலில் நீ பிதற்றிக்கொண்டு ஆடுவதை நானும் பார்க்கத்தான் போகிறேன். அவர் சபித்துச் செல்வது வழக்கமான விளையாட்டாகிவிட்டது.

 

அவர் வார்த்தைகளில் விளையாடிய ஆவி என் வாழ்க்கையில் விளையாடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அன்று விளையாட்டைத் தொடங்கிவிட்டது ஆவி.

 

        அக்காவின் பேச்சும் அம்மாவின் சிரிப்பும் அறையை நிறைத்துக் கொண்டிருந்தபோது மணி ஏழரை இருக்கும். எனக்கும் ஏழரை பிறக்கும்.

 

எனது கைபேசி அலறத் தொடங்கியது. பணித்தோழன் சேகரின் அழைப்பு.

 

சொல்லுடா மாப்ள. எம்.டி. போயிட்டாரா? யாரும் என்னைப்பற்றி கேட்கலயே…

 

என் பேச்சை பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக எதையோ எனக்குத் தெரியப்படுத்துகிறான்.

 

அவன் தெரியப்படுத்திய ஓசை ஓர் அதிர்ச்சியடைந்த மனநோயாளியின் குரல் போல இருந்தது.

 

என் முகத்தில் அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் பேசுகிறேன்.

தெளிவா சொல்லுடா மாப்ள?

 

“டேய், டேய் தம்பி, வேகமா வாடா…

வணிகவியல் கட்டிடத்துல அந்த ஆவி டைப்ரேட்டிங் அடிச்சிட்டிருக்குதுடா!

பயங்கரமா சத்தம் கேக்குது. தனியா இருக்க பயமா இருக்கு. வேகமா வாடா.”

 

டேய் லூசு மாதிரி ஔராதடா. நான் வருவது கடினம். நாளைக்கு ஆவிக்கிட்ட பேசிக்கிறேன். இன்று மட்டும் சமாளிச்சுக்கோடான்னு தொடர்பை நிறுத்திட்டேன்.

 

அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் அம்மா நான் பேசிக்கொண்டிருப்பதை வழக்கம்போல ஜாடையாகப் பார்த்தார்.

 

சேகர்தான்னு சொல்லி முடிப்பதற்குள்ள மீண்டும் அழைப்பு.

 

எனக்கு ஆவி டைப் அடிப்பதோ, டான்ஸ் ஆடுவதோ, பாட்டு பாடுவதோ எது செய்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், நாளை தட்டச்சு தேர்வு நடப்பதற்கு தயார் செய்து பூட்டப்பட்ட அறையில் வித்தை காட்டுகிறதல்லவா, அதுதான் பிரச்சனை. நாளைய தேர்வு வணிகவியல் கட்டிடத்தில்தான்.

 

சிந்தனையைக் கடந்து அவனது அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

 

அவன் அழைக்க அழைக்க துண்டித்துக் கொண்டிருந்தேன்…

நான் துண்டிக்கத் துண்டிக்க அழைத்துக் கொண்டிருந்தான்…

இதை கவனித்த அம்மா என்னை திட்டத் தொடங்கினார்!

 

அம்மாவிடம்  திட்டு வாங்க வைத்தாயடா சேகரு என்ற கோபத்துடன் அடுத்த அழைப்பில் பேசத் தொடங்கினேன்.

 

நான் பேசுவதற்குள் அவன் பேசிய வசை சொற்களால் காது கொர்ர்ர் என்றது.

 

ஆவி தட்டச்சு அடிப்பதை எம்.டி.க்கும் பிரின்ஸ்பாலுக்கும் சொல்லப்போறேன். அவங்க வருவதற்குள்ள நீ வந்துரு என்று துண்டித்துவிட்டான். பிறகுதான் நான் உசாரானேன்.

 

இப்பொழுது நான் அழைத்தேன். எனது அழைப்பின் இரண்டாவது ஒலியிலேயே பேசினான். அவனது வேலையைப் போலவே பேச்சிலும் வேகம் இருந்தது. அவன் வேகத்தை முந்திக்கொண்டு நான் பேசினேன்.

 

வந்துருறேன்…ஐந்து நிமிடம் மாப்ள… அவசரப்படாத… யாரிடமும் ஆவி பேய்ன்னு உளறிடாத… வந்துருறேன்… அப்புறம் பேசிக்கலாம்.

 

“வேகமா வாடா” என்று துண்டித்தான்.

 

அம்மாவை அக்கா வீட்டில் தங்கச்சொல்லிவிட்டு விரைந்தேன். எனது சைக்கிள் கல்லூரி வாசலை நெருங்கியது. பயல் ஆவி பயத்தில் வாசலிலேயே  சுற்றிக்கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் குண்டு கதவை திறந்து ஆயத்தமானான். வளைந்து நிறுத்தியதும் நிதானமானேன்.

 

அவன் நிதானமின்றி படபடப்பதை அவதானிக்க முடிந்தது. ஆவி தட்டச்சு அடித்துக்கொண்டிருக்கும் அபாயத்தை வாயால் மீண்டும் தட்டச்சு செய்துகொண்டிருந்தான். தட்டச்சு முடிவதற்குள் குண்டு ஒள்ளிக் கதவுகளை பூட்டிவிட்டு, கையில் பேட்டரி விளக்கும் கம்புமாக நிற்கிறான் என்றால் அவன் வேகத்தை புரிந்துகொள்ள வேண்டும். 

 

ஆவி என்ற கதையெல்லாம் வெறும் கற்பனை. எனது சமூகவிஞ்ஞான அறிவியல் பார்வையை அவனுக்கு உணர்த்துவதற்கான தருணம் என்ற மெத்தனத்துடன் கிளம்பினேன்.

 

கையில் பேட்டரி விளக்கும் கம்புமாக ஆவியைச் சந்திப்பதற்கு நானும் ஆயத்தமானேன். நான் ஆவியிடமிருந்து தற்காப்பதற்காக கருவிகளை எடுத்திருப்பதாகத் தப்புக் கணக்கு போட வேண்டாம். நான் அறிவியல் தத்துவம், சமூக விஞ்ஞானம் என்று பேசுபவனாக்கும்.

 

இரவு ஆறு மணிக்கு மேல் கல்லூரியின் நிறம் கருப்பு. முழுதும் இருட்டாகிவிடும். காட்டில் விஷ ஜந்துக்கள் ஏராளம். கண்ணாடி வீரியன், கட்டு வீரியன், நல்லது, கெட்டது எல்லாம் திரிந்துகொண்டிருக்கும். சில நேரம் இரையை விழுங்கிவிட்டு நடு பாதையில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும். சாதரணமாக நம் வாசம் தெரிந்ததும் ஒதுங்கிவிடும். தேவைபட்டால் ஸ்ஸ்ஸ்… என்று சத்தம் சீறி எச்சரிக்கும். ஆனால், இரையை விழுங்கிவிட்டு நகரமுடியாது கிடந்தால் என்ன செய்வது? நாம் கடிபடுவதையோ அது அடிபடுவதையோ யாராலும் தடுக்க முடியாது. அதற்காகத்தான் கம்பு.

 

ஒன்று நம்மை பார்த்து அது ஒதுங்கனும் அல்லது அதனைப் பார்த்து நாம் ஒதுங்கனும். எப்படியோ ஒதுங்க வேண்டுமென்றால் பார்க்க வேண்டுமல்லவா. இருட்டில் எப்படி பார்ப்பது. பாதைகளில் மின் விளக்கு கிடையாது. சூரிய ஒளி விளக்குகள் இருக்கின்றன. அவைகளும் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து எரிவன. அரை மணிநேரம் ஓய்வெடுக்கும். ஐந்து நிமிடம் எரியும். அதை நம்பி நடந்தால் சீக்கரம் நம் கட்டை எரியும். அதற்காகத்தான் கையில் பேட்டரி விளக்கு.

 

நானும் கருவிகளை ஏந்திக்கொண்டு அவனைத் தொடர்ந்தேன். அவனும் ஆவி தட்டச்சு அடிக்கின்ற கதையை அதிர்ச்சி நிறைந்த குரலில் விவரித்துக் கொண்டிருந்தான்.  ஆனால்,எனக்கு ஆவி குறித்து எந்த படபடப்பும் இல்லை. உண்மையைச் சொன்னால் எனக்கு மனதில் சிரிப்புதான் பெருக்கெடுத்தது. அவனை பின்தொடர்ந்து சென்றேன். என்னை ஆவியிடம் அழைத்து செல்லாமல் வேறு பாதையில் சென்றான். அது தொலைபேசியில் பேசுவதற்கான அறை.

 

டேய் இங்க எங்கடா போற?

 

அவன் சிறிய முகத்தைத் திருப்பி, அரண்டுபோன கண்களைப் பெரிதாகக் காட்டி, எச்சரிக்கை தளும்பும் குரலில் அறிவுறுத்தினான்.

“செத்துப்போன மாணவி ஆவியாக வந்து டைப் அடிக்கிறாள்னு சொல்லிருவோம்டா.

நேரம் ஆக ஆக ஆபத்தாகிடும்டா.

எம்.டி.க்கும் பிரின்ஸ்பாலுக்கும் போன் அடிச்சு பேசிடலாம்!”

 

சமூகவிஞ்ஞானமே அறிவியல் தத்துவமே என்று அலட்டிக்கொள்ளும் என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது. ஆனால், எப்படியோ சமாளித்து பணிய வைத்தேன்.

 

ஆவி தட்டச்சு அடிப்பதாக போன் செய்தால், நீ லூசா! நான் லூசா! என்று ஏசுவார்கள். பைத்தியமே! நீ வா. எந்த ஆவி டைப் அடிக்கிறது என்று நானும் பார்த்துவிடுகிறேன்…

 

என் வீராப்பு பேச்சுக்குதான் பணிந்துவிட்டான். நாங்கள் சிமெண்ட் பாதையில் செல்லாமல் குறுக்கு பாதையில் சென்றோம். செடிகளும் புற்களும் நிறைந்த அந்த ஒத்தையடி பாதையிலே வேகமாக நடந்தோம்.

 

தவளைகளும் சில பூச்சிகளும் இடைவிடாமல் ஒலித்தன. தூரத்து முந்திரிக் காடுகளிலிருந்து வரும் நரிகள் ஊளையிட்டபடி இருந்தன. அவற்றினும் சிறிதாக சேகரின் கெஞ்சல் சத்தமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

வேண்டாம்டா சிவா… பயமா இருக்குடா… தனியாக சென்று மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று எச்சரித்துக்கொண்டே வந்தான்.

 

அவனால் உடன்படவும் முடியவில்லை. தனியாக நிற்கவும் மனம் இல்லை. மனதில் பயத்தை நிறைத்துக்கொண்டு தவித்தான். அவன் பயம் வாயில் பிதற்றலாக வெளிப்பட்டுக்கொண்டே வந்தது.

 

நாங்கள் அலுவலகக் கட்டிடத்தை திறந்து கொண்டு அடுத்த வாயிலை அடைந்தோம். இதுபோல் இரண்டு கட்டிடங்களைக் கடக்க வேண்டும். மூன்றாவது கட்டிடம்தான் வணிகவியல் பிரிவு. எங்கள் வேகம் இரண்டாம் கட்டிடத்தைக் கடக்கும்போது மிரளத் தொடங்கியது. அந்த சத்தம் என் ஆழ்மனதின் உறுதியைச் சுக்கு நூறாகப் பிளந்தது.

 

ஆம். மிக மெலிதாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

பூட்டப்பட்ட அறையிலுள்ள தட்டச்சு இயந்திரத்தை யாரும் இல்லாத இரவில் ஓர் இளம் பெண்ணின் ஆவி தட்டிக்கொண்டு இருப்பதை முதன்முதலாக கேட்டு சிலிர்ப்படைந்தேன்.

 

அமைதியற்ற அந்த ஆன்மாவின் ஓலத்தை படபடத்துக் கொண்டிருந்தது தட்டச்சு. நிதானிப்பதற்குள் நாங்கள் மூன்றாம் கட்டிடத்தை நெருங்கிவிட்டோம். நெருங்க நெருங்க தட்டச்சின் ஓசை உயர்ந்துகொண்டே வந்தது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி பூட்டப்பட்டிருக்கும் கட்டிட அறையில் இருந்து தட்டச்சு சத்தம் கேட்க முடியும்? அச்சம் கலந்த சிந்தனையில் உறைந்திருந்தபோது எனது விரல்கள் வணிகவியல் கட்டிடக் கதவைத் திறப்பதற்காகப் பற்றிக்கொண்டன.

 

தட்டச்சின் பேரொலி கட்டிடம் முழுதும் அதிர்ந்துகொண்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூக விஞ்ஞானமே, அறிவியல் தத்துவமே என்ற பிதற்றல் எல்லாம் புயலில் சிக்கிய தோப்புபோல் சிதறிப்போனது.   

 

தட்டச்சு ஓசையின் அதீத சத்தத்தைக் கேட்ட சேகரால் தாக்குபிடிக்க முடியவில்லை. தனியாக தப்பித்து ஓடவும் தைரியமில்லை. தப்பித்து நேர் பாதையில் ஓடிவிடலாம் என்று எச்சரித்தான்.

 

எனக்கோ அறிவின் மீதான சுயமரியாதை விடுவதாக இல்லை. பேயாவது பயமாவது என்பதுபோல பொய்யான பாவனையை வரவழைத்துக்கொள்ள முயன்றேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட பயத்தின் அளவை என் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தால்தான் புரியும். மனதிற்குள் சொல்லிப் பிதற்றினேன்.

 

டேய் சேகரு காப்பாத்துடா.. நான்பாட்டுக்கு கதவ திறந்துறப்போறேன்டா..

அப்புறம் பேயிடம் அடிபட்டு சாவதை யாராலும் தடுக்க முடியாதுடா..

ஆனால், பயபிள்ள என்னை தடுக்காமல் கதவு திறக்கப்படுவதை பார்த்து பதறிகொண்டிருந்தது.

 

அந்த இருட்டில் பற்றியிருந்த கம்பின் மீதான கரங்களை மேலும் இருக்கிக் கொண்டேன். பேட்டரி விளக்கின் வெளிச்சமே எங்களை மேலும் பயமூட்டியது. இடைவிடாது ஒலித்த அந்த தட்டச்சால் எங்கள் இதயம் துடிப்பதை மறந்து வெடிக்கத் தொடங்கியது.

 

மாடியில் கால் வைக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். 16 படிகள் ஏறியதும் ஆவியின் அறையைத் திறந்தாக வேண்டும். தட்டச்சு அடிக்கும் ஆவியை எப்படி சமாளிப்பது?

 

நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆவியை மிரட்டத் தொடங்கினேன். படிகளில் ஏறும்போதே கைக் கம்பினால் சுவர்களை அறைந்து சத்தமிட்டேன்.

ஏய்….

யார் நீ?..

என்ன செய்ற?…

ஓய்…

நில்லு…

இங்கே வா…

என் மிரட்டல் சத்தங்களை கொஞ்சமாவது மதித்து தட்டச்சு அடிப்பதை நிறுத்தியதா என்று கவனித்தேன். அது என்னை மதிக்கவே இல்லை. அடித்துக் கொண்டே இருக்கின்றது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

 

இயலாமையின் மொத்தத்தில் நான் இருந்தேன். ஆனால், என் சுய மரியாதை என்னை இயக்கிக்கொண்டிருந்தது. எதுவானாலும் சந்தித்து விடுவோம் என்பதாக ஆழ்மனம் என்னைக் கேட்காமலேயே முடிவெடுத்துவிட்டது.

       

எங்கள் முன்னால் ஓலமிடும் அந்த அறை முறைத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று வெளியில் எரிந்த சூரிய விளக்கின் ஒளி சன்னலின் வழியே அறையின் கதவைத் தீண்டியது.

கதவில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளி நிற பூட்டு மென்மையாகப் பிரகாசித்தது.

பேட்டரி விளக்கின் ஒளியில் சேகரை பார்த்தேன். அழுகாத குறையாய் அரண்டிருந்தான். இந்தக் கோலத்தில் சேகரை தரிசிப்பது இதுதான் முதல்முறை.

என் மனது பயத்தால் கவ்வப்பட்டிருந்தது. அறிவோ சமூகவிஞ்ஞானமே அறிவியல் தத்துவமே என்று தொடர்ந்து பிதற்றிக்கொண்டிருந்தது. என் கரமோ அறிவின் உணர்ச்சிக்கு கட்டுப்படத் தொடங்கியது.

        கம்பை இடுக்கிக்கொண்டு அறையின் சாவியை இருக்கப் பற்றினேன்.

தட்டச்சை அறைந்து கொண்டிருந்த ஆவியின் அறை கதவை நெருங்கினேன்.

பிரகாசித்துக்கொண்டிருந்த வெள்ளிப் பூட்டை பற்றி சாவியை நுழைத்தேன்.

எனது கால்களும் கரங்களும் நடுநடுங்கிய தருணத்தை உணர்ந்தேன்.

பயத்தால் செத்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் தலை சுற்றியது. திறந்துவிட்டேன்.

வேகமாக நுழைவதற்காக கதவை ஓங்கி அறைந்தேன்.

அந்த அறை ஆவிக்கே வலித்திருக்கும்போல் சத்தம் எழும்பியது. கதவு திறக்கப்பட்டது….

நுழைந்த வேகத்தில் உள் விளக்கின் பித்தானை அழுத்தினேன்.

கண்ணிமை பொழுதில் இருளை விழுங்கிச் செரித்தது வெளிச்சம்.

எங்கள் கழுத்து மேல் நோக்கி நெளிந்திருந்தது.

நாங்கள் அன்னாந்தபடி சிரித்துக்கொண்டிருந்தோம்.

காற்றாடி எங்கள் உணர்ச்சிகளைப் பொருட்படு்த்தவே இல்லை.

தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தது…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

 


அனைத்திந்திய வானொலி (AR Madurai PC) 05.07.2021 நேரம் இரவு 09 மணி 15 நிமிடங்கள் படைப்பரங்க நிகழ்வில் 
திக் திக் திக் நொடிகள் என்ற தலைப்பில் வெளிவந்த சிறுகதை.

 

 



No comments:

அதிகம் படித்தவை