எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, August 4, 2019

சோளகர் தொட்டி : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்


சோளகர் தொட்டி : 
திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்
(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான அணுகுமுறை)
புதியவன்

சோளகர் தொட்டி புதினத்தில் இடம்பெற்றுள்ள சோளகர் பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற ஒருத்திக்கு ஒருவன் குடும்ப அமைப்பின் நிலை குறித்து  விளக்குவதாக இக்கட்டுரை அமையும். இத்தகைய விளக்கங்களின் இறுதியாக தாய்தலைமை சமூகத்தின் பண்பாட்டு எச்சம் யாதென உணர்த்தப்படும்.
தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இந்தப் புதினத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து புதினத்தில் வெளிப்படுகின்ற குடும்ப முறைகள் விவரிக்கப்படும். இறுதியாக பாலுறவு உரிமை வரலாற்றிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப வடிவம் சோளகர் பழங்குடிகளிடம் பெற்றுள்ள அங்கீகாரத்தின் நிலை பற்றி விளக்கப்பெறும்.
        சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது.
கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான்.
பேதன் இறந்துவிடுகிறான். பிறகு, மணிராசன் திருவிழாவில் ஆவியாக வெளிப்படுகிறான். சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது   மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள்.
ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.  நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன.
எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள்.
சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட  மாதி மகிழ்ச்சி அடைகிறாள் என்பதாக புதினத்தின் இறுதிப்பகுதி நிறைவடைகின்றது. (பாலமுருகன்,ச.2013)
        சோளகர் தொட்டி புதினத்தில் கெம்பம்மாள், கெஞ்சி, மாதி ஆகியவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப அமைப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
        கெம்பம்மாளின் கணவன் சிக்குமாதா மண்ணில் உழைத்து விவசாயம் செய்வதில் அக்கறையின்றி வேட்டையில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுகின்றான். சிக்குமாதாவின் வேட்டை தொழிலை கெம்பம்மாள் தொடர்ந்து கண்டிக்கிறாள். என்றாவது ஒரு நாள் வேட்டையில் பலியாகி நீ என்னை பிரியப்போகிறாய் என்று எச்சரிக்கிறாள். அவளது எச்சரிக்கையையும் கண்டிப்பையும் சிக்குமாதா ஒருபோதும் பொருட்படுத்துபவனாக நடந்துகொள்ளவில்லை.
அவள் பயந்தபடியே அவன் யானையால் தாக்கப்பட்டு உயிரிழக்கிறான். சோளகர் தொட்டியில் புகழ் மிக்க வேட்டைக்காரனாக வாழ்ந்து முடிந்தான். சிக்குமாதாவின் தந்தை கோல்காரன் தனது மருமகள் அவளது குழுந்தையுடன் தாய்வீடு சென்றுவிடுவாள் என்று எதிர்பார்த்தான். கெம்பம்மாள் கணவனின் இறப்பிற்கு பிறகும் சோளகர் தொட்டியைவிட்டுச் செல்லவில்லை. அவள் சிக்குமாதாவின் தம்பி கரியனுடன் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறாள்.
சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லியும் பிறரும் கரியனுக்கு கெம்பம்மாளை மணம் முடித்து வைக்க கருதியிருந்தார்கள். கரியனின் தந்தை இவர்களது விருப்பத்தை வெறுத்து வேறு ஊரில் பெண் பார்க்க முயல்கிறான். ஆலார், பெள்ளர், சூரியர், ஓங்களூர், சௌக்கியர் ஆகிய ஐந்து குலத்தவர்களையும் அழைத்துக்கொண்டு பெண் பார்க்கச் செல்லவிருப்பதை அறிந்துகொண்ட கெம்பம்மாள் மிகவும் வேதனையடைகிறாள். கொத்தல்லியிடம் ஒரு படி இராகியைக் கொடுத்து நீதி வேண்டுகிறாள். ஊரார் முன்பு பஞ்சாயத்து நடைபெறுகிறது.
கொத்தல்லி கெம்பம்மாளை ஊரார் முன்பு பிரச்சனையை முறையிடுமாறு சொல்கிறார். அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள். தான் விதவை நிலையில் வாடுவதாகவும் தனக்கு வாழ வழிசெய்யவேண்டிய கோல்காரன் நீதி தவறுவதாகவும் முறையிடுகிறாள். தனக்கு இன்னும் உடலில் குழந்தை பெற்றுக்கொள்ள வலிமை இருப்பதாகவும் அத்தகைய வாழ்க்கை தனக்கு தேவைப்படுவதாகவும் முறையிடுகிறாள்.
அவள் விதவையாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழட்டும் என்று கோல்காரன் கூறுகிறான்.  நான் எதற்காக யாருடனாவது வாழ வேண்டும் என்று கெம்பம்மாள் கோபப்படுகிறாள். கொத்தல்லி கெம்பம்மாளை வெளிப்படையாக மனதில் நினைப்பதைப் பேசுமாறு வழியுறுத்துகிறார். அவள் கரியன் மீதான தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுகிறாள். கோல்காரன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவள் மீது குற்றம் சுமத்துகிறான். அவள் தன் மகன் கரியனை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவன் பயந்துகொண்டு என்னிடம் முறையிட்டதாகவும் குற்றம் சுமத்துகிறான்.  
கெம்பம்மாள் கோபம் மேலிட பேசுகிறாள். நான் கரியனை படுக்கைக்கு அழைத்ததை மறுக்க வில்லை.  ஆனால் நான் விரும்பியிருந்தால் வேறு குலத்துக்காரனோடு படுத்திருக்க முடியும். ஆனால் குலத்திற்கு நேர்மையானவளாக வாழ்வதால்தான் கரியனை அழைத்தேன். கரியன் எனக்கு கணவனாக வேண்டும் என்றாள். மேலும் அவன் தன் மகன் தம்மையாவை தந்தையைப்போல அரவணைத்துக்கொள்வான் என்பதாக நம்பிக்கையைத் தெரிவிக்கிறாள். கோல்காரன் இடையிட்டு இவளைவிட தன் மகன் ஏழு வயது இளையவன் என்று மறுக்கிறான். ஊரினர் சிரிக்கின்றார்கள். வயது பார்த்து திருமணம் செய்கின்ற வழக்கம் நமக்கு கிடையாதே என்பதாக அவர்களது சிரிப்பு அமைந்திருந்தது.
கொத்தல்லி கரியனைநோக்கி உனக்கு உன் அண்ணியின் மீது விருப்பம் இருக்கின்றதா, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாயா என்று கேட்கிறான். அவனும் அண்ணியின் மீது தனக்குள்ள விருப்பத்தை உறுதிசெய்கிறான். கொத்தல்லி இருவரது விருப்பத்தையும் அங்கீகரித்து திருமணம் செய்துகொள்ள உறுதியளித்தான். தீர்ப்பு வழங்கிய மூன்றாம் நாளில் இருவருக்கும் திருமணம் நிகழ்த்தப்பட்டு குடும்பமாக வாழத்தொடங்குகிறார்கள்.(பாலமுருகன்,ச.2013: 49-56)
        கெஞ்சி என்பவள் குட்டையூரில் பிறந்தவள். பெஜ்ஜிபாளையத்தில் வாழும் சித்தனுக்கு மனைவியாகிறாள். இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும் நாலு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றார்கள். சோளகணை ஊருக்கு முன்புள்ள விவசாய நிலத்தில் சித்தன் விவசாயம் செய்து வருகிறான்.  சோளகனையிலுள்ள நஞ்சன் என்பவன் சித்தனுக்கு விவசாயத்தில் உதவி செய்யும் நண்பனாக வருகிறான். நஞ்சனுக்கு கெஞ்சியிடம் பழக்கம் ஏற்பட்டுவிடுகின்றது.  இருவரும் இணைந்து வாழ விரும்புகிறார்கள். கெஞ்சி ஊர் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறாள். சித்தனுடன் வாழ விருப்பமில்லை என்பதையும் நஞ்சனுடன் வாழ விரும்புகிறேன் என்பதையும் அறிவிக்கிறாள். பஞ்சாயத்தார் நீதி சொல்கிறார்கள். சித்தன் கொடுத்த பரிசப் பணம் ஆயிரத்தை கொடுத்துவிட்டு நஞ்சனுடன் வாழுமாறு வழியுறுத்துகிறார்கள். சித்தன் நஞ்சனிடம் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இரு பிள்ளைகளையும் அழைத்துச் செல்கிறான்.  கெஞ்சி நஞ்சனுக்கு மனைவியாகி நான்கு மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறாள். (பாலமுருகன்,ச.2013: 82-83)
        சிவண்ணாவிற்கு சின்னதாயி என்ற மனைவி இருக்கிறாள். இவர்களுக்கு ரேசன் என்ற ஒரு ஆண்பிள்ளை இருக்கின்றான். சிவண்ணாவிற்கு நூறு ரூபாய் சம்பளத்திற்கு வனத்தின் தீக்கங்காணியாக வேலை கிடைக்கின்றது. சோளகர் தொட்டியிலிருந்து பாலப்படுகை வரையிலான வனத்திற்கு அவன் பொறுப்பேற்றிருந்தான். பாலப்படுகையில் அவனது தாய்வழி உறவுக்காரி மாதி என்பவள் வாழ்கிறாள். அவள் ஜவணன் என்பவனுக்கு மனைவியாகி பத்து வயது பெண் பிள்ளைக்குத் தாயாகியிருக்கிறாள். அவளது மகளுக்கு சித்தி என்பது பெயர்.
ஜவணன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லாதவனாக இருக்கின்றான். எந்த நேரமானாலும் வீட்டிற்கு வராமல் மரத்தடியில் கஞ்சா புகைத்துக்கொண்டு உலகம் மறந்தவனாக வாழ்கிறான். மாதி அவனைப் பொருட்படுத்தாமல் வனத்திலிருந்து விறகு சேகரித்து விற்று குடும்பத்தை நடத்துகிறாள். வனத்தின் தீக்கங்காணியாகிய சிவண்ணாவிற்கும் மாதிக்கும் நட்பு ஏற்படுகின்றது.
மாதியின் விறகு சேகரிப்பிற்கு அவன் உதவுகிறான். சித்தியின் மீது அதிக பாசமுடையவனாக நடந்துகொள்கிறான். மாதி அவனது நேர்மையான அன்பிற்கு பணிந்து அவனோடு இணைந்து வாழ விரும்புகிறாள். சிவண்ணாவும் மாதியுடன் இணைந்து வாழ விரும்புகிறான். மாதி தனது குடிசையில் உரிமையோடு வாழ சிவண்ணாவை அனுமதிக்கிறாள்.
சோளகர் தொட்டியினர் பாலப்படுகையிலிருந்து வந்திருந்த ஈரம்மாவின் மூலமாக சிவண்ணா மாதியுடன் இணைந்து வாழ்ந்த செய்திகளை   அறிந்துகொள்கிறார்கள். சின்னத்தாயி கோபத்துடன் மாமியார் ஜோகம்மாளுடன் சண்டையிட்டுக்கொண்டு மகன் ரேசனுடன் தாய்வீடு சென்றுவிடுகிறாள். 
மாதியின் கணவன் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறான். மாதி வேறொரு ஆணுடன் வாழ்கிறாள். அவளது நடத்தை பிடிக்கவில்லை. எனக்கு தாலியையும் பரிசப்பணத்தையும் திருப்பிக்கொடுக்கும்படி கேட்கிறான். மாதி தனது தாலியை வெற்றிலையில் வைத்து பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்கிறாள். குடும்பத்தில் அக்கறையின்றி இருந்த ஜவனனை இத்தனைக் காலமாகப் பராமரித்ததற்காக பரிசப்பணம் ஈடாகிவிட்டது என்று பரிசபணத்தைக் கொடுக்க மறுக்கிறாள்.  அவளது பேச்சிலிருந்த நியாயத்தை பஞ்சாயத்தார் ஏற்கின்றனர். சிவண்ணாவை அழைத்து மாதியையும் அவளது மகளையும் காப்பாற்றுவேன் என்பதாக மண்ணில் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். சிவண்ணாவும் முறையாகச் சத்தியம் செய்து இருவரையும் அழைத்துக்கொண்டு சோளகர் தொட்டிக்கு வருகிறான்.
கொத்தல்லியிடம் ஒரு படி இராகியைக் கொடுத்து மாதியும் சித்தியும் தன்னுடன் குடும்பமாக வாழ அனுமதி கேட்கிறான். இவர்கள் என்னை நம்பி வந்து விட்டார்கள். எனக்கும் இவர்களைவிட்டு வாழ முடியாது என்று முறையிடுகிறான். சின்னத்தாயிக்கு என்ன பதில் சொல்வது என்று கொத்தல்லி வருந்துகிறான். அவள் மாதியுடன் இணைந்து வாழ சம்மதித்தால் எனக்கு தடையில்லை என்று உறுதியளிக்கிறான்.  கொத்தல்லி உடன்படுகிறான். தொட்டியிலுள்ள அனைவருக்கும் விருந்து வைத்துவிடுங்கள் என்ற நிபந்தனையுடன் அவர்களை வாழ அனுமதிக்கிறான். சோளகர் தொட்டியில் சிவண்ணாவின் மனைவி என்ற உரிமையுடன் மாதி வாழத்தொடங்குகிறாள். (பாலமுருகன்,ச.2013: 91-96)
        கெம்பம்மாளின் திருமண உறவு, கெஞ்சியின் திருமண உறவு, மாதியின் திருமண உறவு ஆகியவற்றின் வாயிலாக கீழ்வரும் முடிவுகளை அறிய முடிகின்றது. சோளகர்களின் குடும்ப அமைப்பில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் கணவர் மனைவி என்ற உரிமையுடன் தனி வீடு அமைத்து வாழ்கிறார்கள்.  கணவர் இறந்துவிட்ட  சோளகப் பெண்கள் விருப்பத்துடன் மறுதிருமணம் செய்து கொள்கிறார்கள். விதவையான பெண்கள் தனது பிள்ளைகளுடன் தாய்வீடு திரும்பி விடுகிறார்கள். தாய்வீட்டிலிருந்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்கிறார்கள். அல்லது கணவனது சகோதரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். சோளகர்கள் வயது பார்த்து திருமணம் செய்துகொள்வது இல்லை. பெரியவர்களால் குலம் பார்க்கப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக தங்களது காதலை முறையிடுவதற்கு எந்தத் தடைகளும் இ்ல்லை. மனம் உடன்பட்டால் திருமணம் செய்துகொள்கிறார்கள். விருப்பம் இல்லாத கணவனை விட்டு புதியக் கணவனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பெண்களுக்கு இருக்கின்றது. பழைய கணவன் கொடுத்தப்  பரிசப்பணத்தைப் புதிய காதலனிடமிருந்து திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். தன் மனைவி பழைய கணவருடன் வாழ்ந்து பெற்றக் குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்று வாழ்கிறார்கள். பழைய கணவரிடமே குழந்தையை விட்டுக்கொடுத்து வருவதும் நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் கூடி நிறைவேற்றுவதாக அமைகின்றது. பஞ்சாயத்தார் முன்பு பெண்கள் தங்களது நியாயமான பாலுறவு உரிமை பற்றிய கோரிக்கைகளைக்கூட வெளிப்படையாக பேசுகின்ற உரிமை நிலவுகின்றது. பெண்களின் இத்தகையப் பண்பானது ஆணாதிக்கத்தின் முதிர்ச்சியடையாத தன்மையையும் பெண்ணடிமைத்தனத்தின் இறுக்கமடையாத தன்மையையும் அறிவுறுத்துகின்றது. (சிவக்குமார்,கே.2016:176-177)
        ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றின் இறுதி வடிவமாக இருக்கின்றது. காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை நாகரிகத்திலும் இத்தகைய மணமுறை தோன்றவில்லை. தனிச்சொத்துடைமை தோன்றிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில்தான் இத்தகைய மணமுறை தோன்றியுள்ளது. தந்தையதிகாரச் சமூகமும் இத்தகைய நாகரிக காலத்தில்தான் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கால்நடை மந்தை வளர்ப்புக் நாகரிகத்தில் தோன்றிய பாலுறவு உரிமையானது இரு கூட்டங்களுக்கு இடையிலானதாகும். இதன் விளைவாக தாய்தலைமையிடமிருந்த சமூகச் சொத்துடைமையைத் தந்தையதிகாரம் பறிக்கத் தொடங்கியது. சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின் தனிச்சொத்துக்களாக உருமாறின. தனிச்சொத்துடைமையின் விளைவாக அவசியப்பட்ட வாரிசுரிமையால் தாய்தலைமைகள் ஆண்களின் பெண்ணடிமைகள் ஆயினர். பெண்கள் சொத்தாதிக்கமுடைய ஆண்களுக்குச் சொத்தாக உருமாறினார்கள். பெண்ணை ஆணின் சொத்தாக உருமாற்றிய பண்பாடே திருமணம் என்பது வரலாறு. இத்தகைய திருமணமே ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை குடும்பத்தின் தொடக்கமாகும். இத்தகையத் தொடக்கம் பாலுறவு உரிமையின் வரலாற்றிலிருந்து பிரித்தறிய கூடாதது. (சிவக்குமார்,கே.2016:176-177)
 பாலுறவு உரிமை வரைமுறையற்ற ஆரம்ப நிலையிலிருந்து பல மட்டங்களைக் கடந்து வந்துள்ளது. தாய் சேய் பாலுறவு உரிமை தடை, சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமை தடை,  இருவேறு கூட்டங்களுக்கு இடையில் வரைமுறையற்ற பாலுறவுஉரிமை. பல கணவர் முறை, பல மனைவியர் முறை, குழு மணமுறை, இறுதியாக ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டும் பாலுறவு உரிமையில்  இணைந்து வாழ்கின்ற ஒருத்திக்கு ஒருவன் மணமுறை ஆகும்.  ஆணின் சொத்தாதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டு ஒருத்திக்கு ஒருவன் என்றத் திருமண வடிவிலான குடும்ப அமைப்பு நிலைபெற்றுவிட்டது. எனினும், பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற திருமண அடிப்படை இறுக்கமான வடிவத்தை எட்டவில்லை. ஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றது. (சிவக்குமார்,கே.2016:176-177)
கணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொள்கின்ற நடைமுறை வடிவானது ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றது. இத்தகைய நீருபணத்தின் வழியாக திருமணம் என்ற தந்தையதிகாரச் பண்பாட்டிற்கு முந்தைய நிலையின் அடையாளங்களைக் கண்டறிய முடிகின்றது. அதாவது,   தாய்தலைமை சமூகம் மரணிப்பதற்கு முந்தைய இறுதிக்கட்டத் தருணங்களின் குடும்ப வடிவங்களை  பழங்குடிகளது பண்பாடுகளில் மிச்சசொச்சங்களாகக் கண்டறிய முடிகின்றது.
இத்தகைய கண்டறிதல்கள் பெண்களை ஓர் ஆணுக்கு சொத்தாக மாற்றுகின்ற தந்தையதிகாரத்தின் திருமணப் பண்பாடு உடைவதற்கான வரலாற்று சாத்தியங்கள் உண்டு என்பதை உணரச் செய்கின்றது. இத்தகைய உணர்தலானது பெண்ணடிமைப் பண்பாட்டைப் போற்றும் சமகாலத் திருமணங்களைப் புறக்கணிப்பதற்கும், பாலின சமத்துவத்தைப் போற்றும் சமூக மேன்மைக்கான இணையேற்பு  பண்பாட்டைச் சாத்தியப்படுத்துவதற்கும் அவசியமான சமூக உள்ளத்தியலின் ஊன்றுகோலாக அமைகின்றது.

துணை செய்தவை
1.  பாலமுருகன்,ச. 2013. சோளகர் தொட்டி. பொள்ளாச்சி: எதிர் வெளியீடு.
2.  எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
3.  பாரதி, பக்தவத்சல. 2003 (1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
4.  ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.
5.  புதியவன்.மே 2016. காதல் வரலாறு. புதியகோடாங்கி. பக்.20-25.
6.  புதியவன். 2018. இலக்கிய அறிவியல். - https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post_12.html
7.  சிவக்குமார்,கே. ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள் நூலகம். பக்.81-85.
8.  சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். 

         


                                                                 வெளிவந்த விபரம்

(புதுப்பிக்கப்படாத பழைய வடிவம்)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

         
         


4 comments:

Puthiyavan said...

அன்புடையீர்
வணக்கம்.
தங்களின் மூன்று கட்டுரைகளும் கிடைக்கப்பெற்றோம் (1.இலக்கிய அறிவியல், 2.கடவுள் வரலாறு, 3.சோளகர்தொட்டி;திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சங்கள்). மகிழ்ச்சி.
இக்கட்டுரைகளில் தங்களின் ஆழ்ந்தகன்ற வாசிப்பின் தன்மைகள் மிகச்சிறப்பாக மார்ச்சியப் பார்வையோடு வெளிப்படுகின்றன. ஆனால் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் பொதுக்கட்டுரை நிலையிலேயே இவை உள்ளமையால் இவற்றை ஆசிரியர் குழு நிலையிலேயே ஏற்க இயலவில்லை. உரிய ஆதாரக் கருத்துக்களுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளையும் சுட்டி ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றி எழுதுமாரு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
தாங்கள் அனுப்பும் ஆய்வுக்கட்டுரை உரிய புலம்சார்ந்த ஆய்வறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்கப்படும் நிலையில் அதனை வெளியிடுவதற்குப் பெயல் இதழ் காத்திருக்கிறது.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்
peyalpublications@gmail.com

Puthiyavan said...

பெயல் இதழ் peyalpublications@gmail.com
அன்புடையீர்
வணக்கம்.
தங்களின் கடவுள் வரலாறு கட்டுரையும் சோளகர் தொட்டி புதினம் குறித்த கட்டுரையும் ஏற்கெனவே பதிவுகள் பன்னாட்டு இணைய இதழில் வெளியிட்டுள்ளீர்கள்.
ஆகவே தங்களது இவ்விரு கட்டுரைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்பே வெளியிட்ட கட்டுரையை வெளியிடும் வழக்கத்தை ஆய்விதழ்கள் கொண்டிருப்பதில்லை.
புதிதாக எழுதும் கட்டுரையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரைகள் தெரிவு செய்யப்படும் முறை குறித்த கோப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்

Puthiyavan said...

வணக்கம் சான்றீர். மன்னிக்கவும். அந்த இரு கட்டுரைகளும் புதுப்பித்தலுக்கு முன்பு அனுப்பிய கட்டுரைகள். எனினும் தங்கள் ஆய்விதழுக்கான அணுகுமுறைகளை உடனே படித்தறிந்து அதன்படி தங்களை அணுகுவேன் என உறுதி அளிக்கிறேன். ஏனெனில் தங்களது மிகச்சரியான அணுகுமுறையால் நான் கவரப்பட்டுள்ளேன். இதுவரை எந்த இதழும் அனுப்பப்படும் படைப்பு குறித்த முறையான தகவல்களை எமக்கு வழங்கியதில்லை. ஆனால் தாங்கள் அக்கறையுடன்
தெரியப்படுத்துகிறீர்கள். நிச்சயம்
தங்கள் பரிசீலனையில் அங்கீகாரம் பெரும்படி ஆய்வினை மேற்கொள்வேன். இதோ தாங்கள் அனுப்பியுள்ள விதிமுறைகளை கற்கத் தொடங்குகிறேன். மகிழ்ச்சியும் நன்றியும்...
அறிவன்புடன் புதியவன்

Puthiyavan said...

பெயல் இதழ் peyalpublications@gmail.com

மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் விரிந்த அளவிலும் ஆழ்ந்த நிலையிலும் வாசிக்கும் திறனும் எழுதும் திறனும் பெற்றிருப்பது கண்டு அகமகிழ்கிறேன்.
ஆய்வுச்சிக்கல் கருதுகோள் சார்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதி அனுப்பவும்.

அதிகம் படித்தவை