தத்துவ அறிவியல்
முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர் பட்டம் வழங்குகிறார்கள். Ph. D - Doctor of Philosophy என்பது ஆங்கில விளக்கம்.
எந்தப் பல்கலைக்கழகமாவது ஆய்வாளர்களுக்கு பாடத்திட்டத்தில் தத்துவத்தை ஒரு பாடமாக இடம்பெறச் செய்துள்ளதா?
பல பேராசிரியர்களிடம் விசாரித்துள்ளேன். எவருக்கும் அப்படி ஒரு பாடம் இருந்ததாகத் தெரியவில்லை. M. Phil முடித்து வந்ததால் எங்களுக்குத் தத்துவம் பாடமாக அமையவில்லை என்கிறார் ஒரு கணிதப் பேராசிரியர். அவர் புன்னகையிலும் குழப்பத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். Master of Maths அதாவது கணிதத்தில் மாமேதை என்று ஏன் பட்டம் வழங்கவில்லை. எதற்காக தத்துவத்தின் மாமேதை Ph. D - Doctor of Philosophy என்று பட்டம் வழங்குகிறார்கள்.
வணிகவியல் துறைத்தலைவர் உறுதியாகச் சொல்கிறார். எங்களுக்குக் கருதுகோள்தான் தேவைப்படும் ஐயா. தத்துவம் தேவைப்படாது. புள்ளி விவரங்கள், தரவு பாகுபாடுகள் இவைகள்தான் எங்களுக்கு அடிப்படை என்கிறார். அதனால் தத்துவம் என்ற பாடம் எங்களுக்குக் கிடையாது என்கிறார்.
மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதைப்போல பேசுகிறார். இந்த ஆளுமைக்கு ஏன் Doctor of Commerce வணிகவியலின் மாமேதை என்று பட்டமளிக்கவில்லை. எதற்காக தத்துவத்தின் மாமேதை Ph. D - Doctor of Philosophy என்று பட்டம் வாங்கிக்கொண்டார். தத்துவம் குறித்த அடிப்படையே இல்லாமல் நம் நாட்டில் முனைவர் பட்டங்கள் நிகழ்கின்றன என்பதுதான் இதன் பொருள்.
மொழி, கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் என்பதாக எல்லா துறைகளிலும் உயர்மட்ட ஆராய்ச்சிக் கல்வியின் சான்றிதழ்கள் Ph. D - Doctor of Philosophy தத்துவத்தின் மாமேதை என்பதாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் கல்விச்சூழல் ஆராய்ச்சிகளில் தத்துவம் ஒரு பாடத்திட்டமாக இடம் பெற்றுள்ளதா?
ஆராய்ச்சியின் வகைகள், நோக்கம், தரவு சேகரிக்கும் முறைகள், புள்ளிவிவர முறைகள், கணினி மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள், ஆய்வு அறிக்கை எழுதும் முறைகள், ஆய்வு மேற்கொள்ளப்படும் துறை சார்ந்த பாட முறைகள் ஆகியன எல்லாம் இடம்பெறும். ஆனால், தத்துவம் ஒரு பாடத்திட்டமாக உள்ளதா? இல்லையெனில் எதற்காக பாடத்தின் பெயரில் முனைவர் பட்டத்தை வழங்காமல் தத்துவத்தின் பெயரில் வழங்குகிறார்கள். தத்துவம் என்பதுதான் என்ன?
தத்துவம் என்பது சமஸ்கிருத சொல். இருநிலை கண்ணோட்டங்கள் உள்ளடங்கியதாகத் தமிழில் பொருள்படுகின்றது.
புறநிலை உண்மைகளின் இருத்தல் பற்றிய நம்பிக்கைகளைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. அஞ்ஞானம், பொய்யறிவு, அகநிலை வாதம், இயங்காவியல் கருத்து முதல் வாதம் போன்றன அத்தகையத் தமிழ்ச்சொற்கள். தத்துவம் என்ற சொல் மேல் கண்ட தமிழ்ச் சொற்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவது முதல் நிலை.
புறநிலை உண்மைகளின் இருத்தல் பற்றிய கருத்துக்களைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. மெய்ஞானம், மெய்யறிவு, மெய்ப்பொருள், மெய்யியல், புறநிலைவாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் போன்றன அத்தகையத் தமிழ்ச்சொற்கள். தத்துவம் என்ற சொல் மேல்கண்ட தமிழ்ச் சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவது இரண்டாம் நிலை.
இரு நிலைகளும் உள்ளடங்கியதாகத் தத்துவம் திகழ்கிறது. இதன் அடிப்படையில் உலகளாவியத் தத்துவங்களை இரு வகைப்படுத்தலாம்.
1. ஆன்மீகத் தத்துவம்
2. அறிவியல் தத்துவம்
மனிதர்கள் தங்களுக்கு வெளியில் இயங்குகின்ற பொருள்களை இயற்கை, மனிதர்கள், சமூகம், சிந்தனை ஆகிய நான்கு வகைகளுக்குள் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இந்த நான்கிற்கும் பொதுவான விதிகளைப் பற்றிய அறிவே தத்துவம் என்று பொருள்படுகின்றது. ஆன்மீகத் தத்துவம் என்பது அஞ்ஞானங்களின் அஞ்ஞானமாக அமைகின்றது. அறிவியல் தத்துவம் என்பது விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அமைகின்றது.
ஆன்மீகத் தத்துவம் என்பது வெளியில் இயங்குகின்ற உண்மைகள் குறித்து மனித உணர்வுகளால் எழுப்பப்படுகின்ற கற்பனைகள். மாறாத உண்மைகளாக நம்பிக்கையில் ஆழ்த்துகின்ற கண்ணோட்டமாக அமைகின்றது.
இந்த உலகையும் பொருளையும் வெறும் மாயை என்கிறது. ஆன்மா, கடவுள் போன்ற நம்பிக்கைகளை உண்மை என்கிறது. உலகப்பொருள்கள் கடவுளிம் படைப்பு என்கிறது. இயக்கமும் மாற்றமும் உண்மையல்ல. இயக்கமற்ற நிலைத்த தன்மையே உண்மை என்கிறது. பொருளற்ற கருத்தே பொருள்களைப் படைத்து இயக்குகின்ற முதற்பொருள் பரம்பொருள் என்கிறது. உலகின் எல்லா மாற்றங்களும் கடவுளால் ஆதிமுதலாக தீர்மானிக்கப்பட்ட மாற்றங்களே. உலக மாற்றங்கள் அனைத்தும் மாயை. ஆனால், மாற்றங்களைத் தீர்மானித்துள்ள கடவுள் நிலையானவர். இத்தகைய நம்பிக்கைகளைச் சாரமாகக் கொண்டே ஆன்மீகத் தத்துவம் அமைகின்றது.
நாட்டு மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய ஜனநாயகக் கடமைக்கு கல்விநிறுவனங்கள் பொறுப்பு. எனவே, ஆன்மீகத் தத்துவங்கள் குறித்த பயிற்சி அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை அவசியமற்றதாகின்றது. ஆனால், அறிவியல் தத்துவப் பயிற்சி இன்றியமையாததாகின்றது.
அறிவியல் தத்துவம் என்பது வெளியில் இயங்குகின்ற உண்மைகள் குறித்து மனித அறிவில் எழுகின்ற கருத்துக்கள். முரண்பாடுகளைக் கடந்து செயல்பாடுகளில் பொருந்துகின்ற கண்ணோட்டமாக அமைகின்றது.
அறிவியல் தத்துவம் என்பது பிரபஞ்சம் முழுமையையும் பொருட்களின் இயக்கங்களாக அறிந்துகொள்ளுதலாகும். எல்லாக் கருத்துக்களுக்கும் முதன்மையாகப் பொருள் சார்ந்த வாழ்க்கை இருப்பதாக அறிந்து கொள்ளுதல் ஆகும். எல்லாவற்றையும் மாற்றங்களுக்கு இடைப்பட்டதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். எல்லாக் கருத்துக்களையும் சமூக வாழ்வியல் காரணங்களுக்கு உரியதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். அனைத்து அறிவும் செயல்களுக்கு உரிமையானதாக அறிந்துகொள்ளுதல் ஆகும்.
1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்,
2.பொருளையும் கருத்தையும் உணர்தல்,
3.வரலாற்றை உணர்தல்,
4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்
இவை ஐந்தும் அறிவியல் தத்துவத்தின் அடிப்படை விதிகளாகும். (சிவக்குமார்,கே.2016:7)
தத்துவ வரலாற்றின் தொடக்கம் என்பது மனிதகுலத்தின் தொடக்கம். மேற்கண்ட இரண்டு தத்துவங்களில் காலத்தால் முந்தையது அறிவியல் தத்துவமாகும். ஏனெனில், தத்துவக் கண்ணோட்டம் என்பது ஆறாம் அறிவு சார்ந்தது. மனிதர்கள் அல்லாத உயிரினங்களுக்கு ஆறாம் அறிவு கிடையாது. அறிவியல் தமிழின் தொல்காப்பியர் கூற்றுப்படி ஆறாவது அறிவு என்பது மனதால் நடக்கக்கூடிய மனித அறிவாகும்.
மனித அறிவு என்றாலே அது ஆறாவது அறிவுதான். அல்லது ஆறாவது அறிவு என்றாலே அது மனித அறிவுதான். பிரபஞ்ச வரலாற்றிலேயே திட்டமிட்ட மாற்றம் என்பது மனிதர்களின் செயல்பாடுகள்தான். ஒன்றுகூடி சிந்தித்து திட்டமிட்ட உழைப்பில் ஈடுபடுவதே மனித செயல்பாடுகளாகும்.
மனிதரல்லாத உயிரினங்கள் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் இயல்பூக்கத்தின் விளைவுகளாகும். இயல்பூக்க மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் சூழல்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்கின்ற விதிமுறைகளை மீறாதவையாகும். உயிரின வரலாற்றில் மனிதர்கள் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் செயலூக்கத்தின் விளைவுகளாகும். செயலூக்க மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் அங்கமாகிய மனிதர்கள் தங்களது வாழ்வியல் சூழல்களின் தேவைகளுக்காகப் போராடி இயற்கை சூழல்களையே மாற்றியமைக்கின்ற விதிமுறையை மேற்கொள்வதாகும். அதனால்தான் வரலாற்று அறிவியல் உயிரினங்களுக்கு எச்சங்களையும் மனிதர்களுக்கு செயல்பாட்டுக் கருவிகளையும் ஆதாரங்களாக்குகின்றன.
மனித வரலாற்றில் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை நாகரிகத்திலும் மனிதர்களின் அடிப்படை கண்ணோட்டம் அறிவியல் தத்துவக் கண்ணோட்டமாகவே அமைந்திருந்தன. இயற்கையின் அங்கமாகவே தங்களை உணர்ந்திருந்த தாய்தலைமை சமூகத்து மனிதர்கள் இயற்கையின் இயங்கியல் உண்மைகளை உணர்ந்து சேகரிப்புக் கருவிகளையும் வேட்டைக் கருவிகளையும் கண்டடைந்தார்கள். இயற்கை பொருள்கள் குறித்து அறிந்துகொண்ட கூட்டுச் சமுதாய அறிவிலிருந்துதான் இயற்கை பொருள்களைக் கருவிகளாகக் கண்டடைந்தார்கள். மேலும், புதியக் கருவிகளைக் கண்டுபிடித்து முன்னேறினார்கள்.
கருவிகளோடு முன்னேறிய ஆதிமனிதர்களின் இயற்கை கண்ணோட்டம் அறிவியல் தத்துவம் சார்ந்ததாக அமைந்திருந்தது. மனித கற்பனைகளைக் கடந்து எழுந்த அறிவியல் உண்மைகளின் கருத்தாக்கங்களே கருவிகளுக்கு அடித்தளம்.
அறியப்பட்ட ஒவ்வொரு உண்மையும் அறியப்படாத உண்மைகளின் மீது கற்பனைப் பெருங்கடலாக மேலெழுந்தன. அறியாமைப் பேரலைகளின் கற்பனைகளே ஆன்மீகத் தத்துவத்தின் நம்பிக்கைகளாக அடித்தளமிட்டன.
அறிவியல் தத்துவம் என்பது மனித வரலாற்றில் சமூகபொருளுற்பத்தி சார்ந்த நடைமுறை கண்ணோட்டமாகத் திகழ்கிறது.
ஆன்மீகத் தத்துவம் என்பது மனித பண்பாட்டு உறவுகளின் நம்பிக்கைகளாகத் திகழ்கிறது. அறியாமை பெருங்கடலை கோப்பைக்குள் அடைக்கின்ற ஆற்றலாக அறிவியல் தொழில்நுட்பத்தின் சமகால வளர்ச்சி கட்டமைந்துள்ளது. அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தின் நடைமுறையை சமூகப் பொருளுற்பத்தியிலிருந்து வாழ்வியல் பண்பாட்டு உறவுகள்வரை நடைமுறையாக்குவதே சமூகவிஞ்ஞானச் செயல்பாடுகளின் சவாலாக அமைந்திருக்கின்றது. இத்தகைய சவால்களின் கரம் பற்றியே கல்விக்கூடச் செயல்பாடுகளும் கட்டமைய வேண்டும்.
எல்லாத்துறைகளுக்கும் பொதுவான அறிவியல் தத்துவ விதிகளில் தெளிவுபெற்றுள்ளதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்டத் துறையினரும் தன் புலமையில் செம்மையாக ஆய்வில் ஈடுபட்டு புதிய உண்மைகளைக் கண்டடைந்து சமர்பிக்கிறார் என்பதாக அறிவிக்கப்படுகின்றது. அதனால்தான் எல்லாத் துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் அறிவியல் தத்துவப் புலமையே அடிப்படையாகிறது. எனவே, எந்தத்துறை சார்ந்த ஆய்வாளராக இருப்பினும் அவர் தத்துவத்தின் மாமேதையாக அறிவிக்கப்படுகிறார் (Ph.D - Doctor of Philosophy ). இந்த அறிவிப்பு வெறும் சடங்காக அல்லாமல் அறிவியல் மனப்பான்மையின் ஜனநாயகக் கடமையை சாதிக்கின்ற கல்விக்கோட்டைகளின் சாதனைகளாக நிரூபிக்கப்பட வேண்டும்.
துணைசெய்தவை
1.இலக்கிய அறிவியல்
'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 - 2991
2. அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/47523-2024-12-02-04-05-34
3. தேவிபிரசாத்சட்டோபாத்யாயா (தமிழில் எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
4. ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.
ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
5.எங்கெல்ஸ், பிரெடெரிக்.2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
6.சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
வெளிவந்த விவரம்
கீற்று 04 ஜுன் 2026
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/49450-tattuva-ariviyal
No comments:
Post a Comment