ஏமரா மன்னர்கள்
முனைவர் புதியவன்
கல்லூரியில் மாணவர்கள் குறைவு. மந்தைகள்தான் அதிகம். வகுப்பில் பாதிக்கும் மேல் மந்தைகள். மனிதர்கள் என்று ஒப்புக்கொள்ள நான்கு மாணவர்கள் உண்டு. மாணவர்கள்தான் என்பதற்கு எட்டு மாணவர்கள் உண்டு. மற்ற பதினெட்டும் கால்நடை மந்தைகள்தான்.
வகுப்பை நெருங்கும்போதே துப்பாக்கி வன்முறை சத்தங்கள் துளைத்துக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்தால் ஆறு மாணவர்களாவது காட்சி போதை வன்முறையில் செத்துக் கொண்டிருப்பார்கள். பையன்களும் பெண்களும் தோள் மேல் கை போட்டு அமர்ந்திருப்பார்கள். உரசிக்கொண்டு சிரித்திருப்பார்கள். பொது இடங்களில் தொட்டு பேசுவது எங்களின் உரிமை என்பதற்காக உரசி பழகுவதை நடைமுறையாக மாற்றியுள்ளார்கள் .
உள்ளே நுழைந்து விட்டேன். என்னை அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை. அவர்கள் உதட்டில் இருந்து துப்பிய போதை வஸ்துகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. நான் கவனித்தேன். குரல் எழுப்பி வணக்கம் சொன்னேன். பத்து மாணவர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. மெதுவாக சிரித்தபடி அலட்சியம் மாறாமல் வகுப்பறை ஒழுங்கிற்கு மாற முயல்கிறார்கள்.
நான் முதல் மூன்று நிமிட சிந்தனையைத் தொடங்கினேன்.
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’
இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டேன். பேச எழுந்த நல்ல மாணவர்களைப் பேச அனுமதிக்காமல் அமைதிப்படுத்தினேன். என் இலக்கு மந்தைகளை எழுப்புவதுதான். எருமை மேல் மழை பெய்தது போல கிடந்தார்கள்.
காட்சி போதையில் செத்துக் கொண்டிருந்தவர்களை ஒவ்வொருவராக எழுப்பினேன். அவர்கள் பதில் பேசாமல் அலட்சியமாக எழுந்து நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். தொட்டு பேசும் உரிமைக்காக உரசி பேசும் கிளர்ச்சியாளர்களையும் ஒவ்வொருவராக எழுப்பினேன். அமைதியாக எழுந்து மட்டும் நின்றார்கள். பதிலைக் கேட்டால் பல்லைக் காட்டி சிரித்தார்கள். பல்கலைக்கழகம்போல மிடுக்காக இருக்கிறார்கள். மூளையை வளர்க்காமல் விதவிதமாக முடியை மட்டும் வளர்க்கிறார்கள். மாணவர் போர்வையில் ஆட்டு மந்தைகளாகத் திரிகிறார்கள். குரங்கு கூட்டம் போல சேட்டை செய்கிறார்கள். கருத்துகளற்ற மந்தைகளின் ஓசைகளில் கத்துகிறார்கள். மாணவர் தகுதிக்கு எந்த ஒரு கருத்தையும் பேசக்கூடத் தெரிவதில்லை.
நான் விளக்கத் தொடங்கினேன் அமர்ந்திருக்கும் இந்த 12 மாணவர்கள் பொருட்டு உங்கள் எல்லோருக்கும் மாணவர் என்ற மரியாதை கிடைக்கிறதல்லவா. அந்த மரியாதைதான் மழை. அந்தப் பன்னிரு மாணவரும் நல்லவர்கள் எனில் எல்லோரும் யார்? உங்கள் எல்லாரையும் பற்றி துணைத் தலைவர் கேட்டார்கள்.
“மாணவர்களை சமாளிக்க முடிகிறதா?”
நான் உங்களைப் பெருமையாக பேசினேன்.
நல்ல ஆச்சரியமான மாணவர்களாக இருக்கிறார்களே என்றேன்.
“இருக்க வாய்ப்பில்லையே” என்பது போல துணைத்தலைவர் வியந்தார்கள் நான் விளக்கத் தொடங்கியதும் ஆச்சரியத்தைக் கலைத்துக் கொண்டு சிரிப்பில் ஆழ்ந்தார்கள். அவர் சிரிப்பில் உயிரோசை அடிவயிற்றிலிருந்து இசைத்துக் கொண்டிருந்தது.
மாணவர்களின் கண்களில் ஒரே ஆச்சரியம். இந்த ஆள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருப்பான் என்ற கேள்வி அவர்களுக்கு. கேள்விக்கு விளக்கம் சொல்வது என் தொழிலாயிற்றே. துறை தலைவரிடம் சொன்னதை அப்படியே சொன்னேன்.
1. ஆடு மாடு பன்றிகள் எல்லாம் வண்ண வண்ண உடை உடுத்தி அலங்காரம் செய்யுமா!
2. உடுத்துன உடைகளோடு பொது இடத்தில் ஆம்பள பொம்பளையா உரசிக்கிட்டுத் திரியுமா!
3. தான்தோன்றித்தனம், அலப்பறை, அலட்சியம், ஆரவாரம் அனைத்தையும் வகுப்பில் அமர்த்தபடி செய்து காட்டுமா!
4. களத்துல சண்டை போட பயந்துட்டு, திறன் பேசிய எடுத்து வித்தை காட்டி சாகுமா!
5. உதட்டுல போதைய வைத்து, மூளைய அடகு வைத்து, பைத்தியம்போல திரியுமா!
6. வயிறு கலக்குனா கக்கூஸ்லபோய் சாணி போடுமா!
நம்ம வகுப்புல இது எல்லாம் நடக்கிறது ஆச்சரியம் என்றேன்.
வகுப்பின் சிரிப்பலைகள் அவமான கரையைக் கடந்து அடித்தன. வகுப்பிலிருந்த மந்தைகளுக்கு மண்டையில் சிறிது விளக்குகள் எரிந்தன. இவர் நம்மை அவமானப்படுத்துகிறார் என்பதுபோல கண்களில் சிலர் பொங்கினார்கள். கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒன்று உயிர் வந்தது போல் கேள்வி கேட்டது.
‘பொது இடத்தில் ஆம்பள பொம்பளையா உரசிட்டு திரிகிறோம் என்று எப்படி சார் நீங்க சொல்லலாம்!’
நான் உணர்த்த தொடங்கினேன்.
பொது இடங்கள் ஆணுக்கும் பொண்ணுக்கும் சமமாக இல்லையே. வேறுவேறு மாதிரி இருக்கின்றன. பெண்களுக்கு ஆபத்தாகவும் ஆண்களுக்கு சாதகமாகவும் இருக்கின்றன. பொது இடங்களில் பொது ஒழுங்கை காப்பாற்றுவதற்கும் மனித உறவுகளை உயர்த்துவதற்கும் உரிய நடத்தைகளுடன் நடந்து கொள்கிறீர்களா. அல்லது நட்பு என்ற போர்வையில் பாலிச்சைக்குப் பலியாகிறீர்களா!
ஊர் மைதானங்களில் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கல …
வீட்டு வேலைகளில் ஆண்களைச் சமநிலைக்கு உயர்த்தல …
வேலை வாய்ப்புகள் பெண்களுக்குச் சமநிலையாக மாறல…
கல்வித் திறமைகளில் சமநிலைக்கு ஆண்கள் இன்னும் முயலல…
பெண்களும் குழந்தைகளும் வாழத் தகுதி இல்லாத உலகத்தில் வாழ்கிறீர்களே!
இந்த அவமானத்தில் உங்களுக்கு பங்கு இல்லையா…
ஆண்களை ஒழுக்கக்கேடானவர்களாக வளர்த்திருப்பதன் விளைவால் அடைந்துள்ள அவமானம்!
பெண்களை கண்ணியமிக்க வீரர்களாகவும் சமூக ஆளுமைகளாகவும் உயர்த்தாததன் விளைவால் அடைந்துள்ள அவமானம்!
ஒழுக்கமுள்ள ஆண்களை உருவாக்க நீங்கள் என்ன முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்!
வீரமிக்க அறிஞர்களாகப் பெண்களை உருவாக்க நீங்கள் என்ன முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்!
ஒழுக்கக் கேடான ஆண் சமூகத்தை உரசிக்கொண்டு ஒழுக்கமுள்ள தலைமுறையை எப்படி உருவாக்குவீர்கள்?
சமூக ஒழுக்கமற்ற ஆண்களின் உரசல்கள் பாலிச்சை எல்லையில் நின்று விடும்.
உரசல்களை அங்கீகரிக்கும் பெண்மையின் விளைவுகள் தலைமுறையைச் சுமப்பதில் பலியாகும்.
தலைமுறைகளின் பாதுகாப்பான உலகம் பற்றியக் கனவுகளும் திட்டங்களுமே மனித உணர்ச்சிகளின் அடிப்படை
வெறும் பாலிச்சை உரசல்களை மட்டுமே மனித உறவுகளாக அங்கீகரிக்க முடியாது!
பொது இடங்களில் உங்கள் நடத்தைகள் கண்ணியமிக்க உறவுகளாக இருக்கின்றனவா என்பதை பரிசோதியுங்கள்.
ஆண்களின் முதுகுக்குப் பின்னால் அலங்காரப் பொருள்களாக வளராமல் தலைமுறையைப் பாதுகாக்கும் வீரர்களாகவும் அறிஞர்களாகவும் வளர்வதுதான் பெண்களுக்கு அழகு என்பதை உணர்த்துங்கள்.
அடாவடியாகவும் தற்குறிகளாகவும் வளராமல் சமூக அக்கறையும் பொறுப்பும் நிறைந்தவர்களாக வளர்வதுதான் ஆண்களுக்கு அழகு என்பதை உணர்த்துங்கள்.
ஒவ்வொரு வினாடியும் உலகின் மையங்களில் பாலுறவு வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் பெண்கள் மீதான ஒழுக்கமும் பாதுகாப்பும் மரியாதையும்
நிறைந்த நல்ல சமூகத்தை உருவாக்காமல் உங்கள் தலைமுறைகளுடன் நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது.
நட்பு என்ற போர்வைக்குள் உங்கள் நடத்தைகளின் உளவியல் பாலுறவு ஆர்வங்களாகவே வெளிப்படுகின்றன.
முதலில் பெண்கள் உங்களுக்குள் நெருக்கமும், இறுக்கவும், நேர்மையும், பாதுகாப்பும் நிறைந்த நட்பு சங்கிலிகளை உருவாக்க முயலுங்கள்.
ஒழுக்கமற்ற ஆண்கள்கூட தங்களுக்குள் நட்பு சங்கலியை எவ்வளவு இறுக்கமாக பற்றி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் நட்பு சங்கிலி அறுபடாத அளவிற்கு பாதுகாப்பாக இருங்கள். எதிர்பாலின நட்பு உங்கள் நட்பு சங்கிலியை துண்டிக்க முடியாத அளவிற்கு பலமாக இருங்கள். ஆண் பெண் நட்புறவில் உரிமைமிக்க நட்புறவை உருவாக்க முயலாதீர்கள். பாதுகாப்பான நல்லுலகை உருவாக்கும் வரை உரிமை மிக்க நட்புறவு என்பது வெறும் கற்பனையே என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். ஆண்களும் பெண்களும் அறிவார்ந்த நண்பர்களாக நிலை பெற முயலுங்கள்.
‘அதுக்காக அவமானப்படுத்தி பேசலாமா சார்’
நான் கைதட்டலுடன் அங்கீகரித்துப் பேசினேன்.
வேறு எப்படி பேச முடியும்?
மனுசனா பிறந்தா மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாம் இருக்கணும். அப்பதான் சுயமரியாதையோட வாழ்வதாக அர்த்தம். அவமானப்படுத்தலாமா என்று கேட்கும் நீங்கள் சுயமரியாதைக்கான தகுதியோடு வாழ்கிறீர்களா? சுயமரியாதைக்கு சமூக மரியாதை அடிப்படை. சமூக மரியாதைக்கு மனிதத்தகுதி அடிப்படை. மனிதத் தகுதி என்பது திட்டமிடப்படாத மாற்றங்களுக்கு இடையில் திட்டமிட்ட மாற்றங்களுக்காக ஒன்றுகூடி சிந்தித்து உழைப்பதாகும். நீங்கள் மனிதத் தகுதியோடு இருக்கிறீர்களா?
என்ன சார் தகுதின்னு கேக்குறீங்க!
நம்ம வகுப்புல மாணவர்களுக்கான தகுதி உங்களுக்கு இருக்கா இல்லயா?
சலசலன்னு கத்துறீங்க. எல்லாருக்கும் புரியும்படி பேசச் சொன்னால் ஆடு மாடுகள்போல மந்தையாக நிக்கிறீங்க.
திறன்பேசி குள்ள புதைஞ்சு சாகுறீங்க. சூழலை புரிந்து வாழும் சமூக அறிவு சுத்தமா இல்லவே இல்ல.
உங்கள் சொந்த வாழ்க்கை முதல் கல்வி, சமூகம், இலக்கு எதையும் உங்களால் புரிந்து கொள்ளவே முடியல
புரிதலும் பேச்சும்தான் மாணவர்களின் அடிப்படைத் தகுதி. அதற்கே லாயக்கற்றவர்களாக இருக்கிறீர்களே!
பிறகு எப்படி கல்வித்திறன், சிந்திக்கும் திறன், கலைத்திறன், அறிவியல் திறன், கற்பனை திறன், முடிவு எடுக்கும் திறன், செயல்திறன் இன்னும் பலவிதமான பன்முகத் திறமைகளைப் பெற்று மாணவர்களாகத் தகுதி அடைவீர்கள்.
எந்த வகுப்பிலாவது நீங்கள் ஆர்வத்துடன் கவனித்ததுண்டா!
வாசிப்பு, உரையாடல், கலந்துரையாடல், விவாதம், எழுத்து, பரிமாற்றம் போன்ற கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டதுண்டா நீங்கள்!
புரிதல் திறன் மாணவர்களின் முதல் தகுதி. ஆசிரியர் அழகாக பேசினாரா என்பது இரண்டாவதுதான். ஆசிரியர் எப்படி பேசினார் என்பதை விட என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்து உள்ளீர்களா?
உதட்டில் போதை வஸ்துவை ஒதுக்கியபடி மயங்கி சாகிறீர்கள். மேசை மேல் மூளையை புதைத்துத் தூங்குகிறீர்கள். திறன் பேசி காட்சிகளில் முடங்கி போகிறீர்கள். நீங்கள் எப்போதாவது மாணவர்களுக்கான தகுதிகளுடன் இருந்திருக்கிறீர்களா?
‘சார், யாரு தப்பு செஞ்சாங்களோ அவங்கள பேசுங்க சார். எல்லோரையும் எப்படி சார் பொதுவாக பேசலாம்’
அது எப்படி வாழை இலையில் விதவிதமா உணவு பரிமாறி ஓரமா மலத்தை வச்சா திண்ண முடியுமா!
உணவைப்போல உணர்வுபூர்வமானது வகுப்பறை. யாரோ தப்பு செய்வதாக பலிபோட்டுவிட்டு, நீ நழுவப்பார்க்கிறீயே இதுதான் ஒழுக்கமா! உன் நண்பர்கள் செய்கிற தப்புக்கு நீயும்தான் பொறுப்பு. வகுப்பறையின் மரியாதையையும் மனிதகுலத்தின் மரியாதையையும் எல்லோரும்தான் காப்பாற்ற வேண்டும். யாரோ ஒருத்தன் செய்யும் தவறால் வகுப்பின் முழு மரியாதையும் கெட்டுப் போகிறதே. உங்கள் எல்லோரின் மரியாதையையும் கெடுக்கும்படி நடந்து கொள்பவரை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள். உனக்கு ரோசம் வேணாமா!
உன் நண்பர்கள் ஒழுக்கக்கேடாகத் திரிவதை நீ எப்படி அனுமதிக்க முடியும்?
அவர்களை ஒழுக்கப்படுத்துவது உங்கள் எல்லாருக்குமான கடமை.
பெத்த பிள்ளையாய் இருந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்துட்டா தோழர்கள். அதனால், அப்பன் ஆத்தாவாக இருந்தாலும் கண்டிக்க முடியாது. கண்டிக்கின்ற உரிமை நண்பர்களுக்கு மட்டும்தான் இருக்கு. நீ கண்டித்துப் பழகு. ஒழுக்கமா மரியாதையா இருக்கச் சொல்லு. அன்பா சொல்லிப் பாரு. சரி படலேன்னா நாலு அடி அடிச்சு மரியாதைய காப்பாத்திக்கும்படி நடந்துக்க சொல்லு. ஒத்து வரலைன்னா வகுப்பறை முழுவதும் அவரை புறக்கணித்து தனிமை படுத்துங்க. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோரிக்கை கொடுங்க.
எல்லா ஒழுக்கக் கேட்டுக்கும் நீங்களே உறுதுணையாக இருந்துகிட்டு யாரோ தப்பு செய்வதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று எப்படி விலகி நிற்க முடியும் ?
‘மத்தவங்க சுதந்திரத்துல தலையிடக்கூடாதுல சார்‘
தலையிடக்கூடாதுதான். ஆனால், நண்பர்கள் மத்தவங்களா? அவர்கள் செய்கிற பொறுக்கித்தனங்களுக்குப் பேரு சுதந்திரமா?
உன் நண்பர்களைப் பற்றி சொல்லு நீ யாருன்னு நான் சொல்றேன்னு ஒரு வாசகம் உண்டு. நீரின் உயரம்தான் தாமரையின் உயரம். உன் நண்பர்களின் மரியாதைதான் உன்னுடைய மரியாதை. உன்னுடைய மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமா உன் நண்பர்களை மரியாதைக்குரியவர்களாக மாற்று.
சுதந்திரம் என்பது பொறுக்கித்தனமோ, தான்தோன்றித்தனமோ கிடையாது. சுதந்திரம் என்பது சுயக்கட்டுப்பாடு. சுயக்கட்டுப்பாடு என்பது சமூகக் கட்டுப்பாடுகளின் அங்கம். சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுங்கமைக்கின்ற பண்புதான் சுதந்திரம். சமூகப் பொறுப்பும் அக்கறையும் அறிவும் இல்லாதவர்கள் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்!
மற்றவர்களுடன் தலையிடாமல் மனிதராக வாழ முடியுமா?
யார் மற்றவர்கள்? உங்களை சுற்றியுள்ள மற்றவர்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மனித உறவுகள்தான். சக மனித உறவுகளை மறுத்துவிட்டு எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும்!
மனிதர்களோடு ஒற்றுமையைப் பழகாமல் திறன் பேசி வன்முறை விளையாட்டுகளில் செத்து தொலைகிறீர்களே!
காட்சி போதை வன்முறைகளில் செயல் திறனை கொலை செய்கிறீர்களே! ஆனால், வீர சாகசத்தை முடித்தவர்கள்போல ஆரவாரம் செய்கிறீர்கள்.
மக்களின் துயரங்களைப் போக்க, மனித குலத்தை முன்னேற்ற, ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ, உங்கள் வீரம் என்றாவது பயன்பட்டது உண்டா!
சாதி வெறியர்கள் ஆணவப் படுகொலைகள் செய்த போது அவர்களை தடுத்து சண்டையிட்டு உங்கள் வீரத்தின் முன்னால் மண்டியிட வைத்தது உண்டா!
சமூக குற்றவாளிகள் உங்களுக்கு அஞ்சும்படி வீரத்தை நிரூபித்ததுண்டா!
உங்களுக்குச் சோறு போடும் விவசாயிகளும், சேவை செய்யும் தொழிலாளர்களும், நீங்கள் மூச்சு விடுவதற்காக உலகை சுழற்றிக் கொண்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களும் அதிகாரத்தின் இரக்கமற்ற வன்முறைகளை எதிர்த்து சாகிறார்களே…
உங்கள் வீரத்திலிருந்து அன்பைப் பிரசவித்து அவர்களின் வாழ்விற்கு நம்பிக்கையை பரிசளித்ததுண்டா!
உங்கள் அறிவான வீரம் அநீதியின் அடிவயிற்றில் உயிர்பயத்தைத் தூண்டியது உண்டா!
சாதிவெறி, மதவெறி, இனவெறி, லாபவெறி, போரவெறி எல்லாம் மனித குலத்தை வேட்டையாடுகின்ற ஓநாய்கள்.
இந்த ஓநாய்கள் கால் இடுக்கில் வால் குலைந்து அஞ்சிச் சாகும்படி உங்கள் வீரத்தை மனிதகுல பேரன்பின் பேராயுதமாக என்று நிலைநாட்டப் போகிறீர்கள்?
திறன்பேசி பிம்பபோதையில் செத்து விளையாடும் மனநோயாளிகளாகத் திரிவதில் இருந்து தப்பித்து வெளியே வாருங்கள்.
அன்றுதான் உங்கள் வீரத்தின் முன்பு சமூக அநீதிகள் மண்டியிட்டு சாகும்!
மனித குலத்தின் முன்னேற்றம் உங்கள் வீரத்தை ஒப்புக் கொள்ளும் !
மனிதர்களை மற்றவர்களாக கருதாதீர்கள். மனித உறவுகளில் பாசமிக்க வீரர்களாகத் தலையிடுங்கள். உங்கள் நண்பர்களைச் சரியான மனிதர்களாக உருமாற்றப் போராடுங்கள்.
இயற்கைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்ட மிருகங்கள் உயிரின வரலாற்றில் அழிந்த கதைகள் உள்ளன. ஆனால், தங்களுக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றத் தொடங்கியதால்தான் மனிதர்கள் தலைமுறை கடந்து இன்றும் வாழ்கிறார்கள். தன்னையும், தன் சகமனிதர்களையும், சமூகத்தையும், இயற்கையையும் திட்டமிட்ட மாற்றங்களுக்கு ஆட்படச் செய்வதுதான் மனித இயற்கை. நீங்கள் மனிதர்கள்தானே! உங்களையும் உங்கள் நண்பர்களையும் மாற்ற முயலுங்கள்.
உங்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் எது சமூக ஒழுக்கமோ மரியாதையோ அதை உருவாக்க முயலுங்கள். தனித்தனித் தீவுகளாகவும் தற்குறிகளாகவும் திரிவதை மாற்றுங்கள். மனித குலத்தை உயர்த்துகின்ற உறுதியான கருத்துக்களைச் செயல்படுத்த முயலுங்கள். சிந்தனை திறனும் செயல் திறனும் இல்லாமல் நடைபிணமாக வாழ்வதற்கு வெட்கப்படுங்கள்.
தற்குறிகளும் பொறுக்கிகளும் வெட்கமின்றி சுதந்திரமாகத் திரிகிறார்கள். சரியானவற்றைச் செயல்படுத்த உங்களுக்கு ஏன் வெட்கம். சுதந்திரமான மனநிலயுடன் தயக்கம் இன்றி செயல்படுங்கள். நீங்கள் எதை செய்தாலும் முடியப்போவது இரண்டில் ஒன்றுதான். ஒன்று, மனித குலத்திற்கு கொள்ளி வைக்கப் போகிறீர்கள். இரண்டு, மனிதகுலத்தை லாப வெறியிலிருந்து காப்பாற்றி தலைமுறைகளுக்கு நல்லுலகமாக பரிசளிக்கப் போகிறீர்கள். நீங்கள் பேரன்பாளர்கள். பரிசளிப்பதற்காகப் பாடுபடுங்கள்.
நண்பர்களை மனிதர்களாக திருத்தினால் உலகையே பரிசளிக்கலாம். மாணவர்களாக அமர்ந்து உள்ளீர்கள். மனித குலத்திற்குத் தலைவர்களாக எழுந்து செல்லுங்கள்!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (குறள்-448)
உங்களை இடித்துரைக்கும் இடத்தில் உள்ள அமைச்சர்கள் நாங்கள்.
மன்னர்கள் நீங்கள்தான்.
வகுப்பை முடித்துவிட்டு புன்னகையுடன் விடைபெற்றேன். எனக்கு ஆச்சரியம். வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் எழுந்து நின்று விடைகொடுத்தார்கள். மனித குலமே விழித்து எழுந்தது போல இதயத்தில் உணர்ந்தேன்.
No comments:
Post a Comment