எது பண்பாட்டு விழா?
முனைவர் புதியவன்
பண்பாட்டு விழா நடத்த மாணவர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். எனக்கும் மாணவர்களின் விருப்பத்தில் உடன்பாடு இருந்தது. பண்பாட்டு விழாக்கள் கல்லூரி மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பாக அமையும். எனவே பண்பாட்டு விழாவிற்கான நிகழ்ச்சி திட்டங்களை வடிவமைத்தேன். 25 நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய திட்டம் அது.
1. குழு நாடகம்
2. மௌன நாடகம்
3. தனிநடிப்பு
4. குழு பாடல்
5. தனிப்பாடல்
6. குழு இசை
7. தனி இசை
8. குழு நடனம்
9. தனி நடனம்
10. கவியரங்கம்
11. பட்டிமன்றம்
12. மேடைப்பேச்சு
13. ஓவிய மன்றம்
14. குறும்பட அரங்கம்
15. புகைப்படக் காட்சியகம்
16. நகைச்சுவை மன்றம்
17. கதை அரங்கம்
18. விடுகதை அரங்கம்
19. பழமொழி புதுமொழி அரங்கம்
20. இது உங்கள் மேடை
21. விளையாட்டு அரங்கம்
22. மாயாஜாலம்
23. கருத்துக் கோலங்கள்
24. புத்தக உரையாடல்
25. மனதை கவர்ந்த சமூக ஊடக காட்சிகள்
மாணவர்களைப் பெருந்திரளாகப் பங்கேற்க வாழ்த்தி கீழ்க்கண்டவாறு அறிவித்திருந்தேன்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களின் கவனத்திற்கு..
1. மனித குல மேன்மைக்கும் சமூக ஒழுக்கத்திற்கும் பங்கேற்கும் விதமாக திறன்களை வெளிப்படுத்தவும்
2. உங்கள் சொந்தப் படைப்புகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் வெளிப்படுத்தவும்
3. சினிமாத்தனங்களை அப்படியே பயன்படுத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடவும்
4. பின்வரும் தலைப்புகளை மையக் கருத்துகளாகப் பயன்படுத்தவும்
_மனித குலத்தின் மீதான பேரன்பும் பொறுப்புணர்வும்_
_போதைப்பொருள்கள் மற்றும் காட்சிபோதை வன்முறைகளைத் தடுத்தல்_
_ சமத்துவமும் சமூக நீதியும் _
_ பகுத்தறிவைப் பரப்புவோம் _
_ நாட்டுப்பற்று _
சுற்றறிக்கையாக இத்திட்டத்தை மாணவர்களிடம் வழங்கி இருந்தேன். பொங்கல் நிகழ்ச்சிகளோடு பண்பாட்டு விழாவை இணைத்து நடத்தலாம் என்பதாகவும் தெரிவித்திருந்தேன்.
பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன் நிகழ்ச்சி திட்டமும் என் பார்வைக்குக் கிடைத்தது. பட்டியலைக் கண்டதும் அதிர்ந்து போனேன்.
குழு நிகழ்வில் 15 குழுவும், தனிநபர் நிகழ்வில் ஏழு நபரும் பங்கேற்றுள்ளார்கள். ஆக மொத்தம் 22. இவற்றில் இரண்டு மட்டுமே சுற்றறிக்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தது.
_மனித குலத்தின் மீதான அன்பு_ என்ற தலைப்பில் ஒரு குழுவின் மௌன நாடகம் குறிக்கப்பட்டிருந்தது.
ஒரு நபர் பாடலில் ஜெய் பீம் படத்திலிருந்து தலைகோதும் இளங்காற்று பாடல் குறிக்கப்பட்டிருந்தது.
பட்டியலில் உள்ள மற்ற இருபதும் என்னவென்றால், 14 குழு நடனம், 4 தனி நடனம், 2 பாடல்கள். இவை அனைத்தும் சுற்றறிக்கை விதிகளுக்கு உட்படாததாகவும் ஏற்க தகுதியற்றதாகவும் இருந்தன.
* கழுகு திரைப்படத்திலிருந்து ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடல்
* பருத்திவீரன் திரைப்படத்திலிருந்து ஊரோரம் புளியமரம் என்ற பாடல்
* சிலம்பாட்டம் திரைப்படத்திலிருந்து வேர் இஸ் த பார்ட்டி என்ற பாடல்
* நாடோடிகள் திரைப்படத்திலிருந்து ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா என்ற பாடல்
* எதிர்நீச்சல் திரைப்படத்திலிருந்து சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை என்ற பாடல்
* லியோ திரைப்படத்திலிருந்து நான் ரெடி தான் வரவா என்ற பாடல்
இவைகள் மாணவர்களின் பண்பாட்டு விழா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடல்களில் சில..
மேலும், திட்டங்களில் பங்கேற்காமல் கைவிடப்பட்டுள்ளவை பல. பட்டிமன்றம் உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்களில் எந்த மாணவர்களும் பங்கேற்கவில்லை. கைவிடப்பட்டுள்ள இத்தகைய திட்டங்கள் மாணவர்களின் பன்முகத் திறமைகளுக்கு மிகவும் அவசியமானவைகளாகும்.
பன்முகத் திறமைகளுடன் பங்கேற்பதற்கான எந்த சிந்தனை தகுதிகளும் இல்லாத நிலையில் மாணவர்கள் இருப்பது என்னை மிகவும் வருந்தும் நிலைக்கு ஆழ்த்தியது.
பொதுவாகவே மாணவர்களின் பண்பாட்டு கண்ணோட்டங்கள் பண்பற்றதாகவே இருப்பதை என்னால் உணர முடிந்தது.
கல்விச் சுற்றுலா முதல் எந்த சுற்றுலாக்களிலும் இத்தகைய சீரழிவான சினிமா ஆபாச படல்களால் பேருந்து நடனங்கள் ததும்புகின்றன.
பொது நிகழ்ச்சிகள் முதல் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் இவைகளே நீடிக்கின்றன.
உள்ளூர் பேருந்துகளில் இத்தகைய இசைகள் இல்லாத பயணங்களே இல்லை.
ஆபாச இசை குத்தாட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை சங்கமித்திருக்கிறார்கள்.
பண்பற்ற சீரழிவுகளே பண்பாட்டின் எதார்த்தங்களாக நிலை பெற்று இருக்கின்றன.
வெறுப்பு பேச்சுகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் வன்முறை நோக்கங்களுக்கும் எளிதாக பற்றிக்கொள்ளும் சருகுகளாகவே சமூகம் அபாயப்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் மாணவர்களை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை என்பதாகவே உணர்கிறேன்.
மேலும் என் சக ஆசிரியரிடமும் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவரோ எனக்கு அறிவுரை வழங்கினார். இத்தகைய விதிமுறைகள் மாணவர்களுக்குப் பயன்படாது. அவர்கள் விருப்பப்படி சுதந்திரமாக ஒரு நாள் ஆடித்திரியப் போகிறார்கள். அதை தடுப்பது சரியல்ல என்கிறார். அதாவது விதிமுறைகள் இன்றி தற்குறிகளாகவோ தான்தோன்றித்தனமாகவோ ஆடிப் பாடுவதை அங்கீகரிக்கச் சொல்கிறார்.
அவர் சொல்வது போல அங்கீகரித்து விட்டால் அது எப்படி பண்பாட்டு விழாவாக கருத முடியும்?
சீரழிவான சமூகத்தை மேலும் சீரழிக்க தூண்டுவது எப்படி பண்பாடாகும்?
அது பண்பாடு அல்ல புண்பாடாகவே கருத முடியும்!
எது பண்பாட்டு விழா? என்ற கேள்வியுடன் மாணவர் தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எந்த விவாதங்களும் இன்றி பட்டியல் விவரங்களை அங்கீகரிக்க விரும்புகிறார்கள். வெளிப்படையாகக் கெஞ்சாமல் ஒரு போக்காகக் கெஞ்சுகிறார்கள். அவர்கள் விவாதிப்பதற்கான கருத்தியல் திறன் அற்றவர்களாகவே திகழ்கிறார்கள். லாபவெறிக்கும் பாசிச ஆட்சிக்கும் வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இத்தகைய இளம் தலைமுறைகள் போதை மற்றும் நுகர்வு வெறிமுதல் காட்சி போதை வன்முறைகளின் வழியாகக் கருத்தியல் திறன் அற்றவர்களாகக் காயடிக்கப்பட்டுள்ளார்கள்.
பாசிசக் கொள்ளியில் பற்றி கொள்வதற்கும் லாபவெறிப் போர்களில் பலியாவதற்கும் பதமான நிலையில் பதப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீண்டு எழாதவரை...
இடித்துரைத்தாவது இவர்களைப் பண்படுத்தாதவரை...
மனித குலத்தின் மீதான எந்த அடக்குமுறைகளும் முற்றுப்பெற முடியாது!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
( குறள்-448)
மன்னவரை இடித்துரைக்க வேண்டிய அமைச்சர் குழுக்களாக ஆசிரியர்களும்
மன்னர்களாக இளம் தலைமுறைகளும் இருக்கிறார்கள் என்பதே காலத்தின் நிதர்சனம்.
என் நெஞ்சில் உரைத்த உண்மைகளோடு மாணவர்களின் கண்களைப் பார்த்து கலந்துரையாடலை தொடங்கினேன்.
பண்பாட்டு விழா எதற்கு கொண்டாட வேண்டும்? நீங்கள் புரிந்து கொண்டிருப்பதை எனக்கு விளக்குங்கள் என்றேன்.
சற்று அமைதிக்குப் பிறகு ஒரு மாணவர் கூறினார்.
தொடர்ந்து படிப்பு, மன அழுத்தம், வேலை நெருக்கடிகள் இவற்றிலிருந்து சற்று நிதானம் அடைவதற்கான திட்டந்தான் ஐயா.
அவரை ஒரு பார்வை பார்த்தேன். என் பார்வையின் பொருளை அனைவரும் உணர்ந்து இருந்தார்கள்.
அந்த மாணவர் சொல்வதுபோல அத்தனை நெருக்கடியான வாழ்க்கை சூழலுக்கு மாணவர்கள் ஆட்படவில்லை. அந்த அளவிற்கு பொறுப்பான மாணவர்களும் அல்ல. அவர்களது பெற்றோர்களின் உழைப்புகளிலும் களைப்புகளிலும் ஒரு பங்குகூட இவர்களது உழைப்பு அடங்காது என்பது அவர்களுக்கே தெரியும்.
இன்னொரு மாணவர் சொன்னார். மாணவர்களின் திறமைகளுக்கான வாய்ப்புகள் ஐயா.
நான் அவரிடம் கேட்டேன்.
எது திறமை? ஆபாச பாடல்களுக்கும் சினிமாத்தனங்களுக்கும் பலியாவதுதான் திறமையா?
வெளிப்படையான பதிலின்றி முனங்கினார்கள். ஏன் முனங்குகிறீர்கள்? சத்தமாக பேசுங்கள் என்றேன். உடனே அமைதியாகி விட்டார்கள்.
பேருந்துக்கு மிக அழகான (side stand) பக்கநிறுத்தம் அமைப்பது திறமையாகுமா?
சிரித்தபடி பதில் சொல்கிறார் மாணவர். பேருந்துக்கு எதுக்கு ஐயா பக்கநிறுத்தும்?
அவரது பதிலைப் பற்றிக் கொண்டு நான் உணர்த்த முயன்றேன். பயன்பாடு அற்ற ஒரு செயலை திறமையாக கருதுவதில்லை . ஏளனமாக கருதி சிரிக்கிறோம். எல்லா திறமைகளும் அப்படித்தான்.
சமூகத் தேவையைக் கருதாத எந்த முயற்சிகளும் திறமையாகாது. அவைகளும் ஏளனமாகக் கருதும்படியான அவச் செயல்களே ஆகும்.
பண்பாடு என்பதை எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள் என்றேன். மாணவர்கள் பலவிதமாகப் பதில்களைத் தந்தார்கள்.
ஒரு மாணவர் கல்ச்சுரல் (cultural) என்று மொழி பெயர்த்தார். மற்றவர்கள்
பொங்கல் வைப்பது, வேட்டி கட்டுவது, சேலை கட்டுவது, இட்லி சாப்பிடுவது, ஜல்லிக்கட்டு, பாதுகாக்க வேண்டிய பாரம்பரியம், தமிழ் மொழி என்பதாக குறிப்பிட்டார்கள்..
நான் விளக்கத் தொடங்கினேன்.
“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133) என்று சங்கஇலக்கியம் உணர்த்துகிறது. பாடு என்பது உழைப்பு ஆகும். உழைப்பின் தேவைக்கேற்ப மனித உறவுகளை ஒழுங்கமைப்பதே பண்பாடு என்பதாக அர்த்தப்படும்.
மனிதர்களால் பண்படுத்தப்படுவது அனைத்தும் பண்பாடுதான். பண்பாடு என்பது பாரம்பரியமானது என்பதற்காகவே பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாடுகளும் உள்ளன.
ஒழிக்கப்பட வேண்டிய பண்பாடுகளும் உள்ளன.
சேர்ந்து உழைத்தல், பகிர்ந்து உண்ணுதல், ஒற்றுமையாகப் பழகுதல் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாடுகளில் அடங்கும்.
ஆணதிகாரம், பெண்ணடிமைத்தனம், சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்றவை ஒழிக்கப்பட வேண்டிய பண்பாடுகளில் அடங்கும்.
சமூக விஞ்ஞான விளக்கப்படி சமூகப் பொருளுற்பத்தி அல்லாத அனைத்தும் பண்பாடாக விளக்கம் பெறும்.
1. சமூக வாழ்வியல்
2. சமூக உள்ளத்தியல்
3. தனிமனித உள்ளத்தியல்
4. சமூக கருத்தியல்
5. தனிமனித கருத்து நிலைப்பாடு
6. தனிமனித உலக பார்வை
7. தத்துவ அடிப்படை
ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்ததே பண்பாடாகும்.
தமிழ்மொழி என்பது சமூகப் பொருள் உற்பத்திக்கும் பண்பாட்டிற்கும் முழுதளாவிய நிலையில் வினையாற்றுவதாகும்.
ஒரு சினிமா பாட்டிற்கு ஆடுவது என்பதே பண்பாட்டு விழா ஆகிவிடாது. விழா என்பது கலைகளால் கொண்டாடப்படுவது. அறிவார்ந்த கருத்துகளை ஆழ்மன உணர்வுவரை பற்றிக்கொள்ளச் செய்வது. மனிதகுலத்தில் வெளிப்படும் எல்லா குற்றங்களும் ஆழ்மன உணர்வுகளால் பற்றப்பட்டுள்ள தவறான கருத்துக்களின் வெளிப்பாடாகும். மனித குலத்தைக் குற்றங்களிலிருந்தும் கொடுமைகளில் இருந்தும் பேரழிவிலிருந்தும் பாதுகாக்கவே பண்பாட்டு விழாக்கள் அவசியப்படுகின்றன. மனித குலத்தின் ஆழ்மனதில் சரியான கருத்துக்களை விதைப்பதன் மூலமாக பண்பட்ட செயல்களால் புத்துயிர் பெற முடியும். நல்லுலகின் புதிய சிறகுகளாக மகிழ்ச்சியும் நிம்மதியும் சிறகடிக்க வண்ணமயமான உலகம் சுழன்று எழும்.
மனித குலத்தில் இத்தகைய பண்பட்ட வாழ்வியலைப் படைக்கவே மாணவர்களின் பண்பாட்டு விழாக்கள் அவசியப்படுகின்றன. உங்கள் பண்பாட்டு விழாக்கள் புண்பட்ட சமூகத்திற்கு மருந்திட வேண்டும். பண்பற்ற சமூகத்தைப் பண்படுத்த வேண்டும்.
நமது பண்பாட்டின் நிலைமை வாழ தகுதியற்றதாக அறியப்பட்டிருக்கிறது.
பெண்களும் குழந்தைகளும் வாழத் தகுதி இல்லாத நாடாக அவமானப்பட்டு இருக்கிறது.
போதை வெறி முதல் காட்சிபோதை வன்முறைகள்வரை நாம் பலியாகி இருக்கிறோம்.
சமூக அக்கறையற்ற சுயநல வெறி புண்பாட்டில் ஆழ்த்தப்பட்டிருக்கிறோம்.
மனிதர்களாக அல்லாமல் கருத்தியல்களற்ற மந்தை கூட்டங்களாக மாற்றப்பட்டிருக்கிறோம்.
இத்தகைய அபாயகரமான வாழ்க்கை சூழலில் இருந்து மீள்வதற்குத் தூண்டுவதே பண்பாட்டு விழாவாக அமையும்.
மீளத் தூண்டாதவை எத்தனை மகிழ்ச்சிகள் நிறைந்தவை எனினும் புண்பாட்டு நிலைமையாகவும் பண்பாட்டு வீழ்ச்சியாகவுமே கருத முடியும்.
பண்பாட்டு விழா குறித்த எனது விளக்கங்களை மறுப்பவர்கள் பேசலாம். மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அந்த அமைதியில் அலட்சியங்கள் வெளிப்படவில்லை. ஒரு உணர்வுபூர்வமான ஒப்புதலை தெரிவிப்பதாக அமைந்த அமைதியாகத் திகழ்ந்தது.
துடுக்காக பேசும் ஒரு மாணவர் கூறினார்.
பங்கேற்க முடியாது என்று விலகிச் செல்ல மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது எங்களது இயலாமையின் காரணமாக இருக்கலாம் ஐயா. ஆனால் உங்கள் விளக்கத்தை ஒரு சதவீதம் கூட யாராலும் மறுக்க முடியாதுங்க ஐயா.
நான் உறுதியாகச் சொன்னேன். ஒப்புக்கொண்ட மாணவர்கள் பண்பாட்டு விழாக்களில் முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். சமூகத்தின் முன்மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குவதில் மாணவர்கள் முன் நிற்க வேண்டும். விலகிச் செல்வது நம் பலவீனத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றேன்.
சினிமாத்தனங்களைக் கடந்து மாணவர்கள் பங்கேற்பது கடினம் ஐயா என்றார் ஒரு மாணவர்.
நான் நெறிப்படுத்தினேன். சினிமா பாடல்களையும் காட்சிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உங்களது புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் புகுத்துங்கள். சமூகப் பொறுப்புள்ள புதிய முயற்சிகளுக்கு சினிமாத்தனங்களைப் பயன்படுத்துவது தவறு இல்லை. உதாரணத்திற்கு உங்களுக்குப் பிடித்த பாடல்களை டப்பிங் பாடல்களாக மாற்ற முடியும் என்று உணர்த்தினேன்.
டப்பிங் பாடல் எப்படி எழுதுவது என்று ஒரு மாணவர் கேட்டார். நான் பாடும் இந்தப் பாடலை எந்த சினிமா பாடல் என்று கண்டுபிடியுங்கள் என்றேன்.
படிப்பு என்ன வேலை என்ன
லாபம் என்ன நட்டம் என்ன
பிழைப்புக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நாமல்ல
பாசம் வைக்க பாடம் கற்க
மக்கள் உண்டு வாழ வைக்க
அவரைப்போல உறவுக்காரர் யாரும் இங்கில்ல
உண்மை வெல்ல நாமே
உசுரக்கூடத் தானே
நம் மக்கள் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவோம்
நம் மக்கள் போட்ட சோறு
நிதமும் தின்னோம் பாரு
நாட்டைக் கூட தாயைப் போல எண்ணுவோம்
சோர்வு விட்டு மடமை விட்டு
சொர்க்கம் ஒன்று மண்ணில் கட்டு
நல்லுலகம் மலரச் செய்வோம் நாம்தான்!
பாடலை கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது புரிந்தது. எல்லோரும் ஒத்த குரலில் முழங்கினார்கள். காட்டுக்குயிலு மனசுக்குள்ளே என்ற பாடல்.
ரஜினி நடித்த தளபதி பட பாடல். அவர்கள் உற்சாகத்தில் தன்னம்பிக்கையைக் கண்டேன். கைதட்டல்களும் புன்னகைகளுமாக திகழ்ந்தார்கள்.
நான் சில வார்த்தைகளை உதிர்த்தேன். உங்களால் முடியும். சினிமாத்தனங்களில் இருந்தே உங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
நீங்களே பாடல் எழுதுங்கள், இசை இசைத்து நடனமாடுங்கள், திரைப்படக் காட்சிகளைப் புதுமைப்படுத்தி நாடகங்களை உருவாக்குங்கள்.
சிந்தனை உழைப்பில் ஈடுபடுகின்ற மாணவர்கள் நீங்கள்...
நாளைய சமூகத்தின் இன்றைய தலைவிதி நீங்கள் ...
உங்களால் புதுமைகளை படைக்க இயலாவிட்டால்
வேறு யாரால் முடியும் !
பண்பாட்டு விழாக்கள் என்பவை வீண் கொண்டாட்டங்கள் அல்ல.
கொண்டாட்டங்கள் என்பவை
வினையாற்ற பலப்படுத்தும் விளையாட்டாக வேண்டும்...
முன்னேற்றங்களைச் சொல்வதற்கு பாதையாக வேண்டும்...
பிரச்சனைகளை வெல்வதற்கு கல்வியாக வேண்டும்...
கண்டபடி நுகர்வுகளும் போதை ஆட்டம் செலவுகளும்
கொண்டாட்டம் என நினைத்தால்
அவை வீழ்த்தும் வீழ்த்தும் நம்மை கொண்டுபோய் வீழ்த்தும்!
பண்பாட்டு விழாக்கள் நம்மை வீழ்த்துவதாக அமைவதை தடுத்தாள வேண்டும்.
நமது பண்பாட்டு விழாக்கள் சகமனிதர்களையும் சமூகளாவிய உலகையும் பண்படுத்த வேண்டும்.
நீ சகமக்களின் சிறு துளி
நம் குடும்பம் ஒரு குட்டிச் சமூகம்
மானிட சமூகம் நம் மொத்த உருவம்
இதுதான் மனிதசாரம். எனவே,
மனிதப் பெருங்கடலின் சிறுதுளிகள்தான் நாம் ஒவ்வொருவரும். உங்களைப் பண்படுத்துகின்ற புதுமையின் எழுச்சிதான் பண்பாட்டுவிழாவின் தாகம்.
No comments:
Post a Comment