எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, August 21, 2025

கூலாங்கற்கள் உருட்டிய காலம்

 

கூலாங்கற்கள் உருட்டிய காலம்

 

 முனைவர் புதியவன்

 

வகுப்பில் அமைதி நிறைந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள் மாணவர்கள். அது படைப்பிலக்கிய வகுப்பு. கவிதை சொல்வதற்காக ஐந்து நிமிட நேரம் கொடுத்திருந்தேன். எந்த சலசலப்பும் இல்லாமல் காரியத்தில் இறங்கி விட்டார்கள். ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள். நம் மாணவர்களிடம் மாற்றங்கள் சாத்தியம்தானே.

 

என் மாணவர்கள் தற்பொழுது ஒழுக்கமடையத் தொடங்கி விட்டார்கள். பாடத்தில் 35 மதிப்பெண் அல்லது அதற்குமேல் என்பதற்கு நிகராக  பன்முகத்திறமைகளில் 65 சதவீத மதிப்பெண்ணுக்கு தகுதியுடன் இருப்பதை கல்வியின் சுயமரியாதையாக உணரத் தொடங்கி உள்ளார்கள். அறிவுச் சோம்பேறிகளாக இல்லாமல் வகுப்பறையில் உரையாடுவதும் வாசிப்பதும் கலந்துரையாடுவதும் இயல்பாகி விட்டது.

 

உதட்டில் தளானி போடுவது, காட்சி போதை, வன்முறை விளையாட்டுகளில் ஈடுபடுவது, தான்தோன்றித்தனம், அலட்சியம், மந்தைபுத்தி, பொறுப்பின்மை போன்றவற்றை அவமானமாகவும் குற்ற உணர்வாகவும்  உணரத் தொடங்கி உள்ளார்கள்.

 

 எட்டாவது நிமிடத்தின்போது கவிதை சொல்ல முன்வந்தான் ஐயப்பன். இப்பொழுதெல்லாம் வகுப்பில்  யாரேனும் முன்வந்தால் இயல்பாகவே கை தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். மூன்று வாக்கியத்தில் ஐயப்பன் முடித்தான்.

 

கட்டெறும்பை நசுக்க

கட்டை விரல் தேவையில்லை...

 

மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். நான் சில வார்த்தைகள் பேச வேண்டுமே. குழம்பிப் போய் நின்றேன். இது கவிதையா, தத்துவமா, கருத்தா! என்னவென்று சொல்வது? சொன்ன அழகை வியந்து திறமையைப் பாராட்டி முடித்தேன்.

 

 அடுத்த மாணவரை அழைத்தேன். கைதட்டின் இசைக்கு இடையில் விண்ணரசி எழுந்தாள்.

 

 பள்ளத்தாக்கு நகரங்களின்

இரவு நேர விளக்குகள்

 விண்மீன்களாய் ஜொலிக்கின்றன 

மலை உச்சியில் இருக்கும்

இரவு நேர பனை மரத்திற்கு

தலை சுற்றியது

விண்மீன்களின் வானம்

தலைக்கு மேலா?

காலிற்கு கீழா?

 

 கவிதையை வியந்து மாணவர்கள் கொண்டாடினார்கள். உற்சாகத்திற்கு இடையே ஒரு மாணவன் எழுந்து கேட்டான். ஆனால் மலை உச்சியில் பனைமரம் இருக்குமா?

 விண்ணரசி சிந்தித்துக் கொண்டே சொன்னாள். எனக்குத் தெரியாதே.

 நான் சமாளித்தேன். பார்த்தீர்களா மாணவர்களே தெரியாதவற்றிலும் கவிதை சொல்ல முடிகிறது. அதுவும் திறமைதான்.

 

 தெரியாததை தவறாக சொல்வது எப்படி சரியாகும் என்றான் அப்துல்லா. கவிதைக்கு பொய் அழகு என்று பாடலை மேற்கோளிட்டாள் நந்திதா. அழகிற்காக பொய்யை விட்டு வைக்கலாமா என்று அறம் பாடினான் ஜோம்ஸ். நல்லதுக்கு பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவரே சொன்னதாக சமாளித்தாள் விண்ணரசி. 

 

 நான் குறுக்கிட்டேன். தவறும் பொய்யும் கவிதையில் இருப்பது பிரச்சனை அல்ல. ஆனால், அது உணர்த்துகின்ற கருத்தில் இருந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.

 

 கருத்து என்பது அறிவியல் தத்துவத்தால் உணர்த்தப்படுவது..

 கருத்து என்பது மனிதகுல முன்னேற்றத்திற்கு வெளிச்சமாவது..

 கருத்து என்பது இயற்கையின் நல் வாழ்விற்கு வளம் செய்வது...

 கருத்து என்பது கலைகளின் இதய நரம்புகளால் இசைக்கப்படுவது..

 கருத்து என்பது மனிதர்களின் ஆத்மார்த்த செயல்களின் சாட்சியாவது..

 மனிதர்களின் ஆழ்மன உணர்வுகளில் எண்ணங்களாகவும் கற்பனைகளாகவும் கிளர்ச்சி அடைய வைக்கும் கவிதைகளின் இலக்கிய பணி எத்தகையது?  இலக்கிய அறிவியலின் சாட்சிப்படி சமூக மேன்மையின் சரியான கருத்துக்களை மனித ஆழ்மனம் பற்றிக்கொள்ள துணை செய்வது.

 

 படைப்பிலக்கிய மாணவர்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். கருத்தாழம் மிக்க கவிஞர்களின் கவிதைகளை உதாரணமாக்க முயன்றேன். ஒரு சமகால கவிஞரின் அறிமுகத்திலிருந்து தொடங்கினேன்.

 

 முகநூல் ஒரு கவிஞரை எனக்கு அறிமுகம் செய்தது. முகநூலில் ஆயிரம் கவிஞர்களின் முகங்கள் இருக்கின்றன. பா மகாலட்சுமி மட்டும் என் கவனத்தை கவர்ந்ததற்கு காரணம் உண்டு. அவரது முகநூலின் முகவுரையாக அமைந்துள்ள ஒரு கவிதையது.

 

“திசைகளைப் பிறகு தீர்மானிக்கலாம் கூண்டு உடைபடுதே முக்கியம் ”

 

 இந்த வரிகள் என் ஆழ்மனதில் ஏற்படுத்தி கிளர்ச்சியை என்னால் விளக்க முடியவில்லை.

 

 விழுப்புரம் மகளிர் கல்லூரியில் பணியாற்றியபோது சமூக விஞ்ஞான சாயலில் பெண்ணியம் பாடத்தை வழங்கிக் கொண்டிருந்தேன். மாணவர்களிடம் உற்சாகமும் வரவேற்பும் ஏற்பட்டதை பொறுக்க முடியாமல் அப்பாடத்தை என்னிடமிருந்து  பறித்த கதையை நினைத்துப் பார்க்கிறேன். மூன்று நாள் இடைவெளியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. எல்லோரும் உற்சாகமாக வீட்டிற்கு கிளம்புவதற்கான இறுதி மணி. வீட்டிற்குக் கிளம்பாத மூன்றாமாண்டின் மொத்த மாணவர்களும் நேராக துறைத்தலைவரை சந்தித்தார்கள். மறுநாளிலிருந்து மீண்டும் பெண்ணிய வகுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களுடன் ஒன்றிணைந்து பெண்ணிய   இலக்கியங்களைப் பயின்றுள்ளேன். ஆனால் பா.மகாலட்சுமியின் முகநூல் கவிதை வரிகளில்தான் பெண்களின் சமூகவிடுதலை குறித்த ஆழ அகலமான கருத்துக்களின் கிளர்ச்சிளை ஆழ்மன உணர்நிலையில் அனுபவித்தேன்.

 

 கீழடி தமிழகத்தின் தாய்மடி என்ற சமீபத்திய நிகழ்ச்சியில்  இவரை நேரில் சந்தித்து நட்பு பாராட்டினேன். தாய் தலைமை சமூகத்தின் விவரிப்பு, காதல் வரலாறு, கடவுள் வரலாறு, சமூக விஞ்ஞான அமைப்புகளைச் சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியம்  குறித்த ஒரு நூலைப் பரிசளித்தேன்.

 

 அவர் எனக்காக எடுத்து வைத்திருந்த கூலாங்கற்கள் உருண்ட காலம் என்ற தனது கவிதை நூலை  பரிசளித்தார். சொற்கூடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்த நூல் அது. படித்துவிட்டு சந்திக்க வருவேன் என்று விடைபெற்றேன். அந்த நூலில் இருந்து சில கவிதை வரிகளை உங்களுக்கு கூறுகிறேன். அதன் கருத்தாழத்துடன் நீங்கள் பேச முடிகிறதா என்பதை பரிசீலிக்கலாம் என்றேன். 

 

 மாணவர்கள் கவிதை வரிகளை மனதில் அசை போட காத்திருந்தனர்.  

    நான் சொல்லுகின்ற கவிதை வரிகளை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை சுதந்திரமான மனநிலையில் பேசுங்கள். கவிதை இலக்கியம் என்பது ஆழ்மன உணர்வுகளோடு கருத்துகளை பேசுவது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தேடாமல் வார்த்தை இடைவெளிகளில் கிடைக்கும் காட்சிகளை உணர்வுகளை உணர்ந்து விளக்க முயலுங்கள். ஒரே நேரத்தில் அனைவரும் பேசுவது கூடாது. ஒருவர் பேசினால் உங்கள் எல்லோரைம் மதித்து பேசுகிறார் என்று புரிந்து கொள்ளவும். மற்றவர்கள் அமைதி காத்து கவனிக்கவும். எல்லோரும் பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நான் அழைப்பவர்கள் மட்டும் முன்வந்து பேச வேண்டும். சரி தொடங்கலாம்...

 

மாரிமுத்து இந்த வரிகள் உங்களுக்கு

“உங்கள் தொலைபேசி அழைப்பின் போதெல்லாம் நான் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பதாகவே உங்களுக்கு தோன்றுமானால்

ஒன்றும் சொல்வதற்கில்லை

தேய்க்கப்படாத உங்கள்

துருப்பிடித்த சிந்தனையை”

 மாரிமுத்து பேசலாம்

 ஐயா எங்களைத் திட்டுறாங்க. பெண்களும் படிச்சு வேலை பார்த்து முன்னேறிட்டு இருக்காங்க. விடுதலை உரிமைன்னு பேசிட்டு இருக்காங்க. எல்லா பெண்களும் அடிமையாக வாழ்றாங்கன்னு நினைக்க கூடாதுன்னு சொல்றாங்க ஐயா.

 

 மாரிமுத்துவை பாரட்டும் சத்தம் வகுப்பறையை நிறைத்தது.

 

 இந்த வரிகள் காருண்யாவிற்கு

“தங்கமா வளர்த்தாலும்

தாரை வார்த்து கொடுத்தாகணும்

கண்ணீர் தெரியாமல்

புருஷன் வீட்டில் அழுதாகனும்”

 காருண்யா பேசலாம்

 பெற்றோரிடம் மகிழ்ச்சியாக வாழ்ந்த பெண்  திருமணம் செய்து கணவர் வீட்டில் கொடுமைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் நிம்மதியற்று வாழும் நிலையை உணர்த்துகிறது ஐயா.

 

 காருண்யாவை பாராட்டும் கரவொலிகள் கல்லூரியை நிறைத்தன.

 

 இந்த வரிகள் அன்வருக்கு

“பெரியவளா குழந்தையா என்ற பேதம் இல்லை

பெண்ணாக இருந்தாலே போதுமானதாக இருக்கிறது

இங்கிதம் தெரியாத உன் ஆண் குறிக்கு..

வெட்கமாகத்தான் இருக்கிறது

உன்னையும் நாங்கள்

அடி வயிறு கலங்க

யோனி கிழித்து பெற்றதற்கு”

 அன்வர் பேசலாம்

 ஐயா யோனின்னா என்னங்கய்யா?

 நம்ம எல்லாரும் அம்மாவின் வயிற்றில் கருப்பை நீரில் குழந்தையாக நீந்திக் கொண்டிருந்தபோது எந்த உறுப்பின் வழியாக வெளிவந்து அம்மாவின் கையில் கவிதை போல் தவழ்ந்தோமோ அந்த உறுப்புதான் யோனி. 

       எனது விளக்கத்தைத் தொடர்ந்து  அதிர்ந்தபடி பேசினான் அன்வர். உண்மையிலேயே ஆம்பளையா பொறந்ததுக்கு அவமானப்படுகிறேன் ஐயா. பெத்தவள் கொதித்து பேசுற வார்த்தைகளாத்தான் பார்க்கிறேன். எங்க அண்ணன் ஆசைப்பட்ட பொண்ண கட்டிக்கிட்டான். அண்ணன் காதலுக்கு நான் உதவியா இருந்திருக்கிறேன். காதலிச்சப்ப அண்ணிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தான். கட்டுனதுக்கு அப்புறம் எல்லாத்துக்கும் சண்டை போடுறான். காதலிச்ச பொண்ணுக்கு கொடுத்த சுதந்திரத்தை கூடபிறந்த அக்காவுக்கு கொடுக்க மாட்டான். எல்லாரும் பொம்பளைப் பிள்ளையை அடக்க ஒடுக்குமா வளக்கணும்னு சொல்றாங்க. எல்லா குழந்தைகளையும் அப்படித்தான் வளக்கணும். ஆம்பளைங்கள அடக்க ஒடுக்கமா வளர்த்திருந்தா இந்த அவமானம் வந்திருக்காது. சில மாணவர்கள் முறைத்துக் கொண்டிருந்தபோது பாதி வகுப்பறை அவர்களுக்கும் சேர்த்து கைதட்டி அன்வரை கொண்டாடியது.

 

 இந்த வரி ஹஸ்ரத் பேகத்துக்கு

“சோத்துல உப்பு கூடிவிட்டது என்று

புருஷன் காரன் நோக

உப்பில்லாத கண்ணீருக்கு

நான் எங்கே போக”

 ஹஸ்ரத் பேகம் பேசலாம்

 திருமணமானதுக்கு அப்புறம் பெண்கள் கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியும் இல்லாம போயிடறாங்க. உப்பில்லாத கண்ணீருக்கு நான் எங்கே போக என்ற வரிகள் எங்க அம்மாவுடைய அழுத முகத்தை நினைக்க வைக்குது. நாங்க வளரும் போதே அடுத்த வீட்டிற்குப் போக போறவன்னு சொல்லி சொல்லி வளக்குறாங்க. புகுந்த வீட்ல அடுத்த வீட்டுக்காரியாதான் நடத்துவாங்க. ஆம்பளைங்க யாரும் புகுந்த வீடு போறதில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமைன்னு புரியல. உறவுமுறை எல்லாம் அப்புறம் ஐயா. குறைந்தபட்சம் நண்பர்களா பழக முடியாத இடத்துல மகிழ்ச்சியா வாழறதுக்கு வழி இல்ல. சொத்து கௌரவம் ஜாதி மதம் மூடநம்பிக்கை இத வச்சிதான் திருமணத்தை தீர்மானிக்கிறாங்க. இதுல நட்புக்கோ காதலுக்கோ வழியில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தா கண்ணீருக்கு அவசியம் ஏற்படாதுன்னு நினைக்கிறேன் ஐயா.

 வகுப்பறையில் உணர்ச்சிவசப்பட்ட மன உணர்வுகள் மென்மையான கைத்தட்டல்களாக வெளிப்பட்டன.

 

 இந்த வரிகள் மருதையனுக்கு

“இன்னுமா பொறுக்க

நீங்கள் கழுத்தை இறுக்க

உன் மனுநீதியின் வேரை

மண்ணோடு புதைக்க

ஏகலைவன் எங்களுக்கு

கட்டைவிரல் எதற்கு

போதும் கால்விரல்”

 மருதையன் பேசலாம்

 இந்து மதத்தின் புனித நூல் மனுநீதியை ஒழிக்கணும்னு சொல்றாங்க. மனிதர்களை நேசிக்க விடாமல் ஜாதி வெறியோட திரியுறதுக்கு காரணம் மனுநீதி. அதனால அத ஒழிக்கணும்னு சொல்றது சரிதான். நம்ம நாட்டுல இந்தி மொழிய திணிக்கிறாங்க. எல்லா வளங்களையும் வெளிநாட்டுக்கு விக்கிறாங்க. மக்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை போடுறாங்க. இது எதையும் யோசிக்க விடாம ஜாதி மத வெறியால் பெண்கள் குழந்தைகள் மீது வன்முறை கலவரங்கள் எல்லாம் நடக்குது. ஏகலைவன் படிக்கக் கூடாதுன்னு தடுத்த ஜாதி அவருடைய கட்டைவிரல வெட்டுச்சு. இன்னைக்கு எல்லாரும் படிக்கிறோம். மதம் ஜாதி மூடநம்பிக்கை எல்லாத்துக்கும் எதிரா அறிவியல படிக்கிறோம். படிக்காத ஏகலைவனுக்கு  ஜாதி வெறி வரலாறு தெரியல. அதனால கட்டை விரலை வெட்டவிட்டாரு. இன்னைக்கு எங்களை அப்படி வெட்ட முடியாது. ஏன்னா எங்களுக்கு அறிவியல் தெரியும். வரலாறு தெரியும். அவங்க ஜாதி மத வெறி எங்களுக்கு பெருசா தெரியாததுனால உழைக்காமல் ஏய்த்துப் பிழைக்கிற அவங்களை நாங்க பெருசா நினைக்கல. கால் தூசியா நினைக்கிறோம். அவங்களுடைய மனுநீதி திமிர ஒழிக்கிறதுக்கு கட்டை விரல் தேவையில்லை கால் விரலே போதும்னு சொல்றாங்க ஐயா.

 மருதையனுக்கான பாராட்டுச் சத்தங்களில் கவனம் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் வகுப்பறையை எட்டிப் பார்த்து புன்னகை செய்துவிட்டு போனார்கள்.

 இந்த வரிகள் பிரேமுக்கு

“உண்ணத்தான் முடியுமா

பிணத்தால் வாய்க்கரிசி”

 பிரேம் பேசலாம்

மனிதர்கள் வாழும் போதே உறவுகளுடன் மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் வாழந்து விடனும். வாழும்போது எந்த உதவியும் செய்யாமல் ஒருவர் செத்த பிறகு காரியம் செய்வதில் எந்த பயனும் இல்லை ஐயா.

 பிரேமிற்கான பாராட்டுக்கள் அதிர்ந்து முழங்கின

 இந்த வரிகள் சரண்யாவிற்கு

“புலம்பெயரும் மனிதர்களோ

அவரவர் மனவெளியில்

நிலம் சுமந்து அலைகிறார்கள்”

 சரண்யா பேசலாம்

 அரச பயங்கரவாதம், ராணுவத்தின் அத்துமீறல்,  போர் காலச்சூழல் போன்ற காரணத்தினால் சொந்த வீட்டை ஊரை நாட்டை மக்களை விட்டுவிட்டு வேறு ஏதேனும் இடத்தில் வாழும் வழி தேடி போகிறவர்கள் மனதால் விட்டுப்பிரிய முடியாமல்  தவித்துக் கொண்டிருப்பார்கள் ஐயா. அவர்களுடைய மனநிலையை உணர்த்துகின்றது ஐயா. நம் ஈழத்தமிழர்கள் தாய் நிலத்தை பிரிந்து தவிப்பதை போல ஐயா. தாய் வீட்டைப் பிரிந்து புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கும் இந்த நிலை இருப்பதாகவே கருதுகிறேன் ஐயா.

  சரண்யா பாராட்டுகளால் மகிழ்ந்து நின்றார்

 

 இந்த வரிகள் ஸ்ரீராமனுக்கு

”இடித்து தரைமட்டமாக்க வேண்டியவை

ஏராளமாக கிடைக்கின்றன

மனித மூளைகளில்

பாவம் என்ன செய்யும்

பாபர் மசூதியின் கற் சுவர்கள்”

 ஸ்ரீ ராமன் பேசலாம்

       பாபர் மசூதியை இடித்தது குற்றம் ஐயா. அங்கே ராமர் கோவில் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது ஐயா. ஆனால் பாபர் மசூதியை இடித்து இராமன் கோயில் கட்டுவதாக மதவெறியைத் தூண்டிவிட்டு வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்ந்தது பெரிய குற்றம் ஐயா. உண்மையில் இடிக்கப்பட வேண்டியது மூளையில் உள்ள தவறான கருத்துக்கள் ஐயா. மதவெறி ஜாதி வெறி, பெண் அடிமைத்தனம் ஆணாதிக்கம் தீண்டாமை வன்முறை போதை வெறி போன்ற மனித குலத்திற்கு எதிரான கருத்துகள் செயல்பாடுகள் பலவற்றை இடித்து நொறுக்க வேண்டியுள்ளது ஐயா.

 ஸ்ரீராமனுக்கான பாராட்டுக்கள் வகுப்பறையை அலங்கரித்தன.

 

 இந்த வரிகள் நந்திதாவிற்கு

”பெண்களின் ஆழ்மனதை மட்டும்

அகழாய்வு செய்து விடாதீர்கள்

கிடைக்கக்கூடும்

கொலை செய்யப்பட்ட

அவர்களின் பிணங்களோடு

உங்களின் கைரேகை படிந்த

கூறாயுதங்களும்”

 நந்திதா பேசலாம்

 பெண்களின் ஆழ் மனதில் வெளிப்படுத்த முடியாத சமூகத் துயரங்கள் அதிகம் ஐயா. அந்த துயரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமக்கப்படுபவை ஐயா. அந்த துயர்களின் தொடக்கம் ஆணாதிக்க உலகத்தில் அமைந்துள்ளது ஐயா. பெண்களின் துயரக் கதைக்கு காரணமான உண்மைகளை ஆண்களுக்கு உணர்த்துவதாக இந்த கவிதை அமைந்துள்ளது ஐயா.

 நந்திதாவிற்கான பாராட்டுக்கள் வகுப்பறையை நிறைத்தது.

 

 இந்த வரிகள் சிவபாலனுக்கு

”உதிர்தல் என்பது இறப்பதல்ல

இளைப்பாறுதல்”

 சிவபாலன் பேசலாம்

 

 எந்த முடிவும் முடிவு அல்ல அது இன்னொன்றின் தொடர்ச்சி ஐயா. இலை உதிர்தல் என்பது மீண்டும் துளிர்ப்பதற்காக. நம் உழைப்பும் அப்படித்தான் ஐயா. ஓய்வு என்பது உழைப்பிலிருந்து நீங்குவதற்காக அல்ல. மீண்டும் உழைப்பதற்கான உற்சாகத்தை ஆற்றலை பெறுவதற்காக ஐயா.

 சிவபாலனுக்கான  பாராட்டுக்கள் முதல்வரின் அறைவரை எட்டி முழங்கின.

 இந்த வரிகள் மேரிக்கு

”கிழித்தெறியப்பட்ட வாழ்வையும்

நிராகரிக்கப்பட்ட உறவுகளையும்

ஈடு செய்ய முடியாமல்...

பிச்சை எடுக்கும் மனிதர்கள்”

 மேரி பேசலாம்

 மனிதர்கள் மரியாதையுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு வழிவகை செய்வது ஒரு சமூகத்தின் கடமை. மனிதர்கள் வாழத் தகுதி இல்லாத நாட்டில்தான் மனிதர்கள் ஒற்றுமையை இழந்து, உறவுகளை இழந்து, மகிழ்ச்சியை இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாட்டை நிராகரித்துவிட்டு மனிதர்கள் பிச்சை எடுப்பது இல்லை. நாடு மனிதர்களை நிராகரிப்பதால்தான் மனிதர்கள் பிச்சை எடுக்கிறார்கள் ஐயா.

 கனத்த கரவொலிகள் கல்லூரியை நிறைத்தன.

 இந்த வரிகள் ஜோதிப்பிரியாவிற்கு

”உங்கள் சுடு சொற்கள்

ஒரு பொருட்டல்ல எனக்கு

நான் நெருப்பையே நெய்பவள்”

 

 ஜோதிப்பிரியா பேசலாம்

 பெண்கள் இயற்கையாகவே பேரறிவிற்கு  தகுதியானவர்கள். பெண்களின் மொழிவளப்புலம் பெரிது என்பார்கள். ஆனால் வரலாற்றில் ஆணாதிக்க உலகம் தொடங்கிய போது பெண்களின் அறிவிற்கு விலங்கிடப்பட்டது. ஆனால் மொழி தோன்றியதே ஆதித்தாய் வாழ்ந்த  தாய் தலைமை சமூகத்தில் இருந்துதான். லட்சம் ஆண்டுகள் வாழ்ந்த தாய் தலைமையின் மொழியை ஆணாதிக்க உலகம் சில ஆயிரம் ஆண்டுகளில் அடக்கி வைத்து விட்டது. இன்று பெண்கள் எழுச்சி பெற தொடங்கியுள்ளார்கள். பெண் விடுதலையே சமூக விடுதலை என்ற கண்ணோட்டத்திற்கு உயர்ந்துள்ளார்கள். இவர்களின் முன்னேற்றத்தை ஆணாதிக்க மன நோயாளிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. முன்னேற்றம் அடையும் பெண் சமூகத்தை வன்மத்துடன் கண்ணியமற்ற வார்த்தைகளால் ஏசுகிறார்கள். அவர்களின் ஏச்சுக்காக பயந்து ஒடுங்கும் நிலையிலிருந்து பெண்கள் மேலானவர்களாக மாறிவிட்டார்கள். தாய் தலைமை சமூகத்தில் நெருப்பைக் கண்டுபிடித்தவர்களே பெண்கள்தான். ஆணாதிக்க வெறியர்களின் சுடு சொற்களுக்கா அஞ்சுவோம் என்று சவால் விடுவதாக இந்த கவிதை அமைந்துள்ளது ஐயா.

 ஜோதிப்பிரியாவின் உற்சாகமான விளக்கம் அவருக்கான பாராட்டை ஆழிப்பேரலையாக எழுந்து இசைத்தது.

 நிறைந்த மன மகிழ்ச்சியுடன் மாணவர்களுடன் பேசத் தொடங்கினேன். பா.மகாலெட்சுமியின் கவிதை வரிகளை மிக அருமையாக பிரதிபலிக்கும்படி பேசினீர்கள். வாழ்த்துக்கள் மாணவர்களே. இலக்கிய அறிவியல் உணர்த்தும் 20 அணுகுமுறைகளை படித்து உரையாடியதால் உங்களால் கவிதைகளை சிந்தித்துப் பேச முடிகிறது வாழ்த்துக்கள்.

பா மகாலட்சுமியின் இந்த கவிதை நூலில் இயல்பாகவே அமைந்துள்ள கவிதையையும்,  ஒரு கவிதை கவிதையாக உயிர்பெறுகின்ற தருணத்தையும் ஓர் அனுபவமாக  உங்களுக்குச் சொல்வது மேலும் பயன்படும்.

” கைக்கு வரும் காசெல்லாம்

கவர்மெண்ட் வரியாகுது

விலைவாசிய நெனச்சா

நெஞ்சு விறகில்லாமல் வேகுது ”

 விலைவாசி பிரச்சனை குறித்த  இந்த வரிகள் இயல்பான கவிதையாகவே அமைந்துள்ளன. இந்த வரிகளின் கவிதை சாரத்தை உணர்வதற்கு முன்னொட்டு கவிதைகளோ பின்னொட்டு கவிதைகளோ அவசியம் இல்லை. நெஞ்சு விறகில்லாமல் வேகுது என்ற வரி மிக அற்புதமான கவிதை. ஆனால் அம்மாவைப் பற்றிய ஒரு கவிதையைப் பாருங்கள்.

”நலம் விசாரிப்பது போல்

என்மீது வந்து உதிர்கிறாள்

வேப்பம்பூக்களாய் அம்மா”

       இந்தக் கவிதை வரிகள் ஆகச்சிறந்த வாழ்வியல் அடர்த்தியை வெளிப்படுத்துகின்றன. ஆனால், இந்த கவிதை வரிகள் எப்பொழுது கவிதையாக உருவம் பெறுகிறது என்றால் நிலத்தோடு தனக்கு இருக்கும் உறவுகளை, தொடர்புகளை, பிரிக்க முடியாத நினைவுகளை மொழிவயப்படுத்தி பிரசவித்த போதுதான் அந்த வரிகள் ஆகப் பெரிய கவிதை உணர்வின் பிரமாண்ட உருவமாக வாசகர்களது ஆழ்மனதில்  அவதாரம் பெறுகின்றது.

இந்த கவிதை தொகுப்பில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை உங்களுக்கு சொல்ல வேண்டும். கவிதையின் பெயர் 'ஆதிக்கனல்'

 

”சந்ததியை வயிற்றிலும் விதையை நிலத்திலுமாய்

வளர்த்தெடுத்தவள் அவள்

ஆதி நெருப்பை அணையாமல் வைத்திருந்த

அவளின் கரங்களில்

விலங்கிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்

கொடிய மிருகங்களைக் கொன்றாள்

பகிர்ந்து உண்ணும் பகுத்தறிவு கொண்டாள்

உணர்வில் விசாலத்தை அடையாளப்படுத்த

உள்ளும் புறமுமாக கனன்று கொண்டிருக்கிறது

அவளது ஆதிக்கனல்

காட்டுமிராண்டியை மெல்ல மனிதனாக்கிய அவளை

கலாச்சார கயிற்றில் கட்டவா முடியும்

நெருப்பை நெய்தவளுக்கு கயிறு எரிக்க தெரியாதா?

பாவம் அவளிடம் தோற்றுப் போன உங்களால்

அவள் உடலை வன்புணரத்தான் முடிந்தது

உங்கள் அடக்குமுறையால்

புதைந்து கிடக்கும் பெண் குரல்

சிறகு விரிக்க

அவள் வானம் நெய்து கொண்டிருக்கிறாள்”

 

 இந்த கவிதையை இலக்கிய அறிவியலின் மனித வரலாற்றுப் படிநிலை என்ற கண்ணோட்டத்தில் படித்து புரிந்துகொண்டு வாருங்கள்.நாளை கலந்துரையாடுவோம் என்று வகுப்பை நிறைவு செய்தேன்.

கைப்பிடியில் விளக்கைப் பிடித்துக் கொண்டு இருட்டில் பயணிப்பவரை  போல கவிதையைப் பற்றி கொண்டு வரலாற்றுக் காலத்திற்கு பயணம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

 

 துணை செய்தவை

1. கூலாங்கற்கள் உருண்ட காலம் - பா. மகாலட்சுமி. சொற்கூடு பதிப்பகம்

2. இலக்கிய அறிவியல் - புதியவன்

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

No comments:

அதிகம் படித்தவை