எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, April 29, 2022

முயலுக்கும் ஆமைக்கும் திருமணம்

 

முயலுக்கும் ஆமைக்கும் திருமணம்

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

 

காட்டில் அந்த முயலுக்கு மலைதான் வீரம். இயற்கைதான் மூச்சு. அறிவியல்தான் உணவு. கலைதான் மொழி. இலக்கியம்தான் பேச்சு. அரசியல்தான் வெளிச்சம். விடுதலைதான் தாகம். புதிய தலைமுறைகளின் நல்லுலகை படைப்பதுதான் கனவு. இவற்றிற்காக உழைப்பதுதான் வாழ்க்கை என்ற இலட்சியங்களுடன் ஓடித்திரிந்தது.

     முயல் கூட்டத்தார் அந்த முயலின் கனவுகளையும் இலட்சியங்களையும் சேற்றிலே வாரி இறைத்தார்கள். துள்ளி ஆர்பரித்த முயலுக்கு கால்கட்டு போட முடிவெடுத்தார்கள். முயலுக்கு திருமணம் செய்யப்போவதாக காடெல்லாம் பேச்சு. ஆனால் முயலுக்கும் குதிரைக்கும் ஒரே காதல். முயல் காதில் விழுந்ததும் காதலைத் தேடி ஓடியது.

     தன்னைப்போல இலட்சியங்களுடன் ஓடித்திரிந்த குதிரையுடன் இணைசேர்வதே முயலின் விருப்பம். இருவரும் காதலை ஒப்புக்கொண்டு காடெல்லாம் திரிந்தார்கள். காலமெல்லாம் சேர்ந்தே ஓடுவோம். வருங்காலம் போற்றும்படி துயர உலகை வெல்வோம். காடெல்லாம் இரண்டும் ஓடி மகிழ்ந்தன. சூழல் பிரிக்காதபடி இணைந்தே ஓட திருமணம் அவசியப்பட்டது.

     குதிரை கூட்டத்தார் காதலை எதிர்த்தார்கள். ஆணவ படுகொலை செய்வதில் பலே கில்லாடிகள். பெற்று சீராட்டி தோளில் வளர்ந்த குதிரை என்ற உணர்வில்லாமல் எண்ண இயலா குதிரைகளை எரித்துக் கொன்றுள்ளார்கள். கர்ப்பவதி என்றும் பாராமல் வயிற்றை கிழித்துக் கொன்றுள்ளார்கள். காதலில் ஈடுபட்ட பிற சாதிகளின் அவலங்களைச் சொல்லி முடிக்க இயலாது.

     தங்கள் பிள்ளைகளைக் காதலித்த குற்றத்திற்காக சிறுத்தையை கட்டி வைத்து உதைத்தே கொன்றார்கள். ஒரு மண்புழுவை காட்டாற்று வெள்ளத்தில் கழுத்தை முக்கி கொன்றார்கள். சிங்கத்தை துண்டு துண்டாக வெட்டி எறும்பிற்கு விருந்திட்டார்கள். புலியை மலையிலிருந்து உருட்டி கழுகிற்கு விருந்திட்டார்கள். நீலத்திமிங்களத்தை இழுத்து வந்து கருவேல முள்ளால் அடித்தே கொன்றார்கள். யானையை கொன்று வேப்பமரத்தில் தொங்கவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடினார்கள். அடுத்த குறி முயலுக்கு என்பதாக உறுதியாகிவிட்டது.

தன் காதலால் முயல் பலியாகப் போவதை பொறுத்துக்கொள்ள முடியாத குதிரை சந்திப்பை தவிர்த்தது. இறுதியாகவும் உறுதியாகவும் முயலின் உயர்ந்த காதலை தியாகம் செய்தது. குதிரையைப் பிரிந்த முயலும் சோகத்தில் ஆழ்ந்தது. சோகத்திலும் முயலின் இலட்சிய ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. முயலின் நடவடிக்கை முயல் கூட்டத்தாருக்கு பிடிக்கவில்லை. காலாகாலத்தில் கல்யாணம் முடித்து குடும்பம் குட்டியுமா, கடனும் வட்டியுமா, பொறுப்பா வாழாமல் இலட்சியம் பூஜ்ஜியம் என்று திரிவதாக திட்டித் தீர்த்தார்கள்.

முயலின் கால்களை விதவிதமாகக் கட்டப் பார்த்தார்கள். ஒரே கட்டு திருமணம்தான் என்று நிச்சயித்தார்கள். நிச்சயிக்கப்பட்டது ஓர் ஆமை. முயலோடு வாழ ஆமை சம்மதம் தெரிவித்திருந்தது. முயலுக்கு ஆமை பற்றி தெரியவில்லை. ஆமையிடம் தன் நிலைமை பற்றி சொல்லியது.

எனது ஓட்டமும் இலட்சியமும் உனக்கு சம்மதமா? உடன்பட்டு ஓட சம்மதம் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு உடன்படலாம். முயல் தன் முடிவை தெளிவாக சொல்லியதும் ஆமை குழப்பம் செய்யத் தொடங்கியது.

ஓடத் தெரியாத ஆமை முயலின் விருப்பத்திற்கு உடன்படவில்லை. உடன்பாடற்ற மனதை ஓட்டிற்குள் ஒளித்துவிட்டு சம்மதம் என்று பல் இழித்தது. திருமணத்திற்கு பிறகு நாம் அருகருகே இருப்போம். அருகே வந்ததும் தங்களுடன் ஓடக் கற்றுவிடுவேன். அதுவரை என்னுடன் பொறுமையாக ஊர்ந்து நடக்கவும். குரங்குகள் தலைமையில் நடக்கும் திருமண சம்பிரதாயங்களையும் கூட்டத்தாரையும் பழிக்காமல் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.

வேசக்கார ஆமையின் வார்த்தைகளை அறிவுகெட்ட முயல் நம்பி விழுந்தது. முயலின் பெற்றோர்கள் மனம் குளிர்ந்து வாழ்த்தினார்கள். குளிர்ச்சிக்கு பின் கொதிநிலை தொடரும்.

அன்று விழுந்த முயலுக்கு எழுந்திருக்க வழியே இல்லை. ஆதிக்க வெறி உலகின் அத்தனை கன்னிகளிலும் பிடிபட்டு விழுந்ததுபோல் விழுந்து போனது.

     ஆமையின் நடை முழுக்க தான்தோன்றித்தனத்தின் அலங்கோலம்.

பல் ஒளிர சிரித்தால் ஆடம்பரந்தான் விளக்கெரியும். ஓட்டம் பழகுவதாக வாயிலே வடை சுடும். ஆபாசத் திரைகளில் நளினம் பழகும்.

     முயல் கடைபிடித்த பொறுமையில் ஆமை ஓடியதோ இல்லையோ முயலுக்கு ஓட்டம் மறந்தது.

     அறிவியல் குறித்து பேசினால் முதலில் காபி போடச் சொல்லும்

இலக்கியம் குறித்து பேசினால் ஆபாச அணிகலன்களை மாட்டிக்கொண்டு ஆடும்

கலை குறித்து பேசினால் முதலில் தனியா வாவென்று சொல்லும்

அரசியல் குறித்து பேசினால் காய்த்து தொங்கும் பணத்தை பறித்து வரச் சொல்லும்

தத்துவம் குறித்து பேசினால் கோயில் பூஜைக்கு கிளம்பி நிற்கும்

வரலாறு குறித்து பேசினால் கேளிக்கை சுற்றுலா போக நிற்கும்

தாய்மொழி குறித்து பேசினால் இங்கிலீசு அளவுக்கு தமிழ் தெரியாதுனு சிரிக்கும்

இயற்கை குறித்து பேசினால் தூக்கம் வருதென்று தூங்கும்

அமைதியாக இருக்கலாமென்றால் வம்பு சண்டையில் வார்த்தை நீளும்…

     ஓட முயலாத ஆமையை சுமந்து ஓடிய முயலுக்கு ஒவ்வொரு ஓட்டத்திலும் கால்கள் முறிந்தன. சுமக்க முடியாத பெருஞ்சுமையாக வாழ்வை சுமக்கும் நிலையானது முயலுக்கு.

     ஆமையுடன் நீருக்குள் இழுபட்டு வாழ்ந்த தருணங்களில்தான் முயலுக்கு ஆமையின் மறுமுகம் தெரிந்தது. ஆமைக்கு கோரப் பற்கள் உண்டு. முதலையின் வேகம் உண்டு. கூர்மையான நகங்கள் உண்டு. வேட்டையாடும் குணம் உண்டு. மரணத்தைக் கொடுக்கும் கருணை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக கதையில்கூட ஆமைக்கு ஓடி முன்னேறும் குணம் கிடையவே கிடையாது.

     உண்மையை உணர்வதற்கு முன்பிருந்தே முயலின் வாழ்க்கை ஆமையால் வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் முடிந்துகொண்டிருந்தது. இலட்சியவாதியாக முடிய வேண்டிய முயலை  வெறும் பிழைப்புவாதியாகவும், ஏமாளியாகவும் முடித்துக்கொண்டிருந்தது காடு. முடிவதற்கு முன்புள்ள சிரிப்புகள் முழுதும் தன் குழந்தைகளைச் சுற்றியே முயல் பொசிந்தது. அதன் பார்வையில் அழுகையும், சிரிப்பும், பரிதாபமும், கருணையும் மாறி மாறி எத்தனித்தன.

     வறுமை நிறைந்த உலகம், சுயநல வெறிபிடித்த சுற்றம், இலாப வெறியில் அழிகின்றது காலம், இயற்கை உண்மைகள் திசைமாறி செல்லும் அவலம். உயிரினம் வாழத் தகுதியற்ற காடு, போர்கள் சூழ்ந்த வாழ்க்கை , இவற்றில் உலக வளர்ச்சி உயர்வதற்காகவும் அடைய வேண்டிய பொன்னுலகை அடைவதற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஊடாடி வளரப்போகும் பிஞ்சுக் குழந்தைகள்…

     இலட்சியம் தொடும் முயலை பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில் தேடி மகிழ்கிறது முயல். தன் நிறைந்த தேடலுடன் குழந்தைகளைக் கொஞ்சி சிரித்தபடி செத்துக்கொண்டிருக்கிறது காட்டில்.

முயலின் சிரிப்பு காட்டின் திசையெங்கும் பறை இசைபோல் இசைத்துக்கொண்டே இருக்கும்.

 

 

No comments:

அதிகம் படித்தவை