எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, April 18, 2018

காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்

காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்
ஆய்வாளர்     கே.சிவக்குமார்
பதிவு எண்:M825053

மேற்பார்வையாளர்    -   பேராசிரியர்.இ.முத்தையா,
மதுரை காமராசர் பல்கலைக்கழக இளநிலை ஆய்வாளர்        (எம்.ஃபில்) பட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வேடு
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
2009-2010
முனைவர்.இ.முத்தையா, எம்.ஏ,பிஎச்.டி
பேராசிரியர், தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
              மேற்பார்வையாளர் சான்றிதழ்
காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் என்னும்  தலைப்பில் எம்.ஃபில் பட்டத்திற்காக கே.சிவக்குமார் அவர்கள் செய்துள்ள இவ்வாய்வு மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்த காலத்தில் அவர்தம் சொந்த முயற்சியால் செய்யப்பட்டது என்றும், இவ்வாய்வின் பேரில் வேறு எந்தப் பட்டமும் ஆய்வாளருக்கு அளிக்கப்படவில்லை என்றும் உறுதியளிக்கிறேன்.
இடம் :மதுரை
நாள் :        மேற்பார்வையாளர்
                                                (இ.முத்தையா)
கே.சிவக்குமார்
இளநிலை ஆய்வாளர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
                        ஆய்வாளர் உறுதிமொழி
   “காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் என்னும்  தலைப்பில் எம்.ஃபில் பட்டத்திற்காகச் செய்யப்பட்ட இவ்வாய்வு என் சொந்த முயற்சியால் உருவானதேயாகும். இதற்கு முன் வேறு எந்த ஆராய்ச்சிப் பட்டத்திற்கும் இவ்வாய்வேடு அளிக்கப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
இடம் :மதுரை
நாள் :        ஆய்வாளர்
                                                (கே.சிவக்குமார்)

மேற்பார்வையாளர் உறுதிக் கையொப்பம்
முனைவர்.இ.முத்தையா, எம்.ஏ,பிஎச்.டி
பேராசிரியர், தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
             சுருக்கக் குறியீட்டு விளக்கம்
            பக்    -பக்கம்
                -பக்கங்கள்
            மொ.பெ.   -மொழி பெயர்ப்பாளர்
            ஏப்    -ஏப்ரல்
            நவ    -நவம்பர்
            டிச    -டிசம்பர்


நன்றியுரை
•        என்னைப் படிக்க வைத்து நல்ல கல்வியாளனாகப் பார்க்க விரும்பியும், நான்; படிப்பதற்காக எவ்வளவோ இன்னல்களைத் தாங்கியும் என்னைப் படிக்க வைத்த பாசத்திற்குறிய பெற்றோர்களுக்கும் (திருமதி கே.ருக்மணி, திரு.ச.கேசவன்), உடன் பிறந்த சகோதரர்க்கும்(கே.நாகராஜன்), மற்றுமுள்ள உறவினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி
•        ‘காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்க அனுமதியளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றி.
•        பல்வேறு வேலைச்சுமைகளுக்கு இடையில், இனிய முகத்தோடு எனக்காகவும் நேரம் ஒதுக்கி, என் மூளைக்குத் தீனி போட்டு, சிந்தனையைத்தூண்டி விட்டு ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கச் செய்த வெற்றிக்குரியவரும் ஒப்பீட்டளவில் மாணவர்களின் சுயமரியாதை மீது மிகுந்த அக்கறை காட்டும் பேராசிரியப் பெருந்தகையும், சக மனிதர்களை மதிக்கும் உயர்ந்த பண்பாளருமாகிய நாட்டுப்புறவியல் துறையின் தலைவர்  எங்கள் முத்தான ஐயா முனைவர்.இ.முத்தையா, எம்.ஏ,பிஎச்.டி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        என் ஆய்வேட்டிற்கு கணிணி தட்டச்சு செய்த நல்ல பண்பாளரும் படைப்பாளருமாகிய நண்பர் சோ.அறிவுமணி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        என்ஆய்விற்குப் பல்வேறு வகையில் உதவிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த மாணவர்களும், ஆய்வாளர்களுமாகிய என் சகநண்பர்களுக்கு உளமார்ந்த நன்றி.
•        பல்வேறு தளங்களில் இருந்தும் என் ஆய்வு முயற்சியை ஊக்கப்படுத்திய பல்வேறு துறை சார்ந்த தோழர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        சகமாணவராக சகநண்பராக சகமனிதராகமீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!   

உள்ளடக்கம்

      1. முன்னுரை       1-5
      2. காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல்   6-22
      3. காவல்கோட்டம் நாவலில் சாதிய அரசியல்  23-42
      4. காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல   43-56
      5. முடிவுரை        57-58
      6. துணைநூற்பட்டியல்      59-61



ஆய்வு முன்னுரை

முன்னுரை:
காவல்கோட்டம் சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலே ஆய்வுக்களமாக அமைகிறது. காவல் கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் இது ஆய்வின் தலைப்பு. சொத்துடைமை சமூகத்தில் எல்லாமே அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இருக்கமுடியாது. மனிதர்களின் அத்தனை வெளிப்பாடுகளும் பண்பாடுதான். ஆய்வின் தலைப்பு சாதியப் பண்பாடு, சமயப்பண்பாடு, பாலினப்பண்பாடு இவற்றை முதன்மைப்படுத்தி மூன்று இயல்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை
1.    காவல் கோட்டம் நாவலில் பாலின அரசியல்
2.    காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
3.    காவல் கோட்டம் நாவலில் சமய அரசியல்
முன்னுரை, முடிவுரை, நன்றியுரை எல்லாம் இயல்களுள் அடங்கா.
ஆய்வுப் பொருள் :
           எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்கின்ற ஆர்வமும,; விருப்பமும் எல்லோருக்கும் அவசியம். முடிவெடுத்து செயல்படுகின்ற உணர்வு மிக்க வீரர்களுக்கு இது அடிப்படை என்பதில் சந்தேகமற்றவன், நான். சு.வெங்கடேசன் அவர்களை எனக்கு இதற்கு முன் தெரியாது. சிக்கலின் முடிச்சவிழ்க்கும் வேலை போன்றது ஆய்வு. இந்த உண்மையை நானும் உணர்ந்திருக்கவில்லை. பெரும்பாலான ஆய்வு மாணவர்களைப் போல சிக்கலில்லாத தலைப்பைத் தேடினேன். ஏதாவது நாவலை எடுத்துக் கொள்ள விரும்பினேன். மதிப்பிற்குரிய பேராசிரியர் என் விருப்பத்தை உணர்ந்து குறிப்பிட்டிருந்த நாவல்களுள் காவல்கோட்டமும் ஒன்று. இலக்கிய விமர்சகர்களின் இன்றைய காரசாரமான பேச்சுக்களுள் அடிக்கடி அடிபடுகின்ற பெயர் காவல்கோட்டம்’. இந்த நாவலையே தேர்வு செய்யலாமே? காவல்கோட்டத்தில் கண் வைத்தேன். ஆயிரம் பக்கத்தை வாசிப்பதா! என்னால் முடியுமா? என்ற பயம். என் அச்சத்தை அகற்றி வாசிக்கத்தான் வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியது ஓர் விமர்சனம். விமர்சனம் என்ற பெயரில் ஓர் அபத்தம் காவல்கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’. இந்த அபத்தத்துக்குச் சொந்தக்காரர் எஸ்.ராமகிரு~;ணன் என்ற சக எழுத்தாளர். இவரையும் இதற்கு முன் தெரியாது. இவரது விமர்சனமே இரண்டு எழுத்தாளர்களையும் எனக்கு உணர்த்தியது. காவல்கோட்டம் நாவலையே தேர்ந்தெடுக்கவும் தூண்டியது. காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் என்ற தலைப்பு மலர்ந்தது.

ஆய்வுநோக்கம்:
காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் வெளிப்படுகின்ற முறையைப்பற்றி விளக்குவதும் ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் பண்பாட்டு அரசியலை விளக்குவதும்இ காவல்கோட்டம் கதை நிகழும் காலக்கட்டங்களில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையிலான, சமயங்களுக்கு இடையிலான, சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு பற்றிய சமூக இயங்கியலை விளக்குவதும் ஆய்வின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வுஎல்லை:
      ‘காவல்கோட்டம் இந்த நாவல் சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்டு, 2008ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த நாவலுடைய பனுவல் மட்டுமே ஆய்வின் எல்லையாக அமைகிறது.
ஆய்வுக் கட்டமைப்பு:
 ‘காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் என்ற இத்தலைப்பின் கீழ் முன்னுரை, முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. காவல் கோட்டம் நாவலில் பாலின அரசியல்
2. காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
3. காவல் கோட்டம் நாவலில் சமய அரசியல்
பாலினம் இது பெண் திருநங்கை ஆண் ஆகிய முரண்பட்ட மூன்று இனத்தையும் பிரதிபலிக்கின்ற சொல். பெண்கள் ஆணுக்குள் அடங்குவர், அதிகாரம் ஆணுக்கு மட்டுமே இது ஆணாதிக்க சிந்தனை. ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், அதிகாரம் பெண்களுக்கும் உரியது இது பெண்ணிய சிந்தனை. வக்கிரமும் திமிரும் நிறைந்த அடக்குமுறையின் சின்னம் ஆணாதிக்கம்’. ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் குரல் பெண்ணிய சிந்தனை’. இரண்டு சிந்தனைகளும் ஒன்றுக்கொன்று எதிரானது. மூர்க்கமாக சண்டையிடும் தன்மைக்குரியது. இவைகளின் சண்டை நாவலுக்குள்ளும் இருக்கிறது. இதற்கான மேடையாகவும் நாவல் அமைந்திருக்கிறது. இதை விளக்குகின்றது இயல் ஒன்று.
சாதியம் இந்தக் குட்டிச்சாத்தானைப் பெற்றுப் போட்டது நிலப்பிரபுத்துவம். இன்னும் கட்டியாகிறது. சமூகத்தில் கணக்கிறது. இதன் இதயத்துடிப்பை நிறுத்துவது எப்படி? இதன் நாடி நரம்புகளை அறுத்தெரிவது எப்படி? இப்படி இடைவிடாமல் சிந்திக்கும் சமூகமாற்ற வீரர்களின் முன் மலையைப் போல உயர்ந்து பயங்கரமாக நிற்கிறது சாதியம்’. இன்றைய ஏகாதிபத்திய சூழல் இன்னும் கரடுமுரடாக்குகிறது, சாதியத்தின் கரங்களை. நாவலாசிரியரும் ஒரு சமூக மாற்ற வீரர். இத்தகைய நிலைமைகளிலும் சாதியைக் கட்டுக்கட்டாக பதிவு செய்திருக்கிறார், ஏன்? ‘சாதியம் கதை நிகழும் காலத்தை விளக்க இயல்பாக பதிவு பெற்றுள்ளதா? நாவலாசிரியரின் சாதியச் சார்பு எங்காவது வெளிப்படுகிறதா? சமூகமாற்றப் போர்வைக்குள் இருந்து சாதிச் சனியனுக்கு ஆதரவு தருகிறாரா? சாதியச் சிந்தனைகளோடு சண்டையிட சிறு களமாகவாவது நாவலைப் பயன்படுத்தியிருக்கிறாரா? ஆசிரியரின் நோக்கம் என்ன? இதை விளக்குகிறது இயல் இரண்டு.
சமயம் இது கடவுள் பற்றிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது.  கடவுள் இருக்கிறாரோ இலலையோ, இன்றும் மக்களால் பயன்படுத்தப்படுகிறார். விஞ்ஞான உணர்வு வளர்க்கப்படாத மக்களின் இன்றைய வாழ்நிலையிலும் கடவுள் பற்றிய சிந்தனை ஒருவகைத் தேவையாக இருக்கிறது. இத்தகைய நிலைமையில் காவல்கோட்டம் நாவலுள் பல்வேறு சமயங்கள் பல சமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சமயத்திற்கான சரியான வரையறை ஏதுமில்லாமல் நானும் சமயம்தான் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட இந்து சமயத்தோடு இஸ்;லாமிய சமயம் மோத வைக்கப்பட்டுள்ளது. சைவ வைணவ சமயத்தின் நெருக்கம் மற்றும் விரிசல்களை அளந்திருக்கிறது. கிறித்தவ நிறுவனங்களின் மனித நேய வேலைகளை முதன்மைப்படுத்தி இருக்கிறது. சமண சமயத்தைச் சின்னதாகச் செதுக்கி இருக்கிறது. நாட்டுப்புறச் சமயத்தின் வீரத்தை வெளிக்காட்டியிருக்கிறது. ஆசிரியரின் இத்தகைய பதிவுகள் இந்த இயலில் விவரிக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறசமயத்திற்கும், நிறுவனச் சமயத்திற்கும் என்ன வேறுபாடு? இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பெற்றெடுத்த இந்து பயங்கரவாதம் வலிமை பெற்று வருகின்ற இன்றைய சூழலில் நாவலின் விளைவு என்ன? சமயம் பற்றிய இரண்டு வர்க்கப் பார்வை என்ன? சிறு சிதறலாகவாவது சமணத்தைப் பதிவு செய்திருக்கும் ஆசிரியரின் நோக்கம் என்ன? இதை விளக்குகிறது இயல் மூன்று.


இயல் 1
     காவல்கோட்டம்  நாவலில் பாலின அரசியல்

நாவலின் ஆரம்பம் மதுரா விஜயம். முதல் அத்தியாயத்தில் மாலிக்காபூர் மதுரைக்குப் படையெடுத்து வருகின்றான். மாலிக்கபூர் இவர் திருநங்கை. இந்த வரலாற்று உண்மை நாவலுள் பதிவு பெறவில்லை. மதுரையின் காவலன் கருப்பு. கருப்பனின் கண்ணெதிரே மதுரை கொள்ளைபோகிறது. சொத்துக்களைச் சூறையாடுகிறார்கள். பெண்களைத் தூக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் கொடுமைப் படுத்துகிறார்கள். மாலிக்காபூரின் படையைத் தடுக்க முயற்சி செய்து வீரத்துடன் போராடி ஏதும் செய்ய முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டு ரத்தத்தில் மூழ்கியிருந்தான் கருப்பன். கருப்பனின் மனைவி சடச்சியைக் கர்ப்பிணிப் பெண் என்ற காரணத்தால் அடித்ததோடு விட்டுவிட்டார்கள். இந்நிலையில் சடச்சியின் வீரஉணர்வை நாவலாசிரியர் பதிவு செய்கிறார். அவள் வலது கையில் வேல்கம்பும், இடது கையில் அரிவாளும். அவனைக் கண்டு அவள் அழவில்லை நேராகப் பின்னால் போய் கட்டை அறுத்துக் கொண்டே சொன்னாள் உசுரு இருக்குற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக் கூடாது என்று வேல்கம்பை நீட்டினாள்’.(சு.வெங்கடேசன்: 2008,பக்-09) கருப்பனின் வீரஉணர்வுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத சடச்சியின் வீர வெளிப்பாடானது சங்க இலக்கியத்தின் வீரத்தாய்க்கு நிகரான ஓர் வெளிப்பாடாகும். இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள தாதனூரும், தாதனூர்க்காரர்கள் ஒவ்வொருவரும் நாவலின் கதாநாயகர்கள். தாதனூரின் முதல் தெய்வம் ஆதிக்கிழவி சடச்சி, பிறகுதான் கருப்பு. தாதனூரின் ஆதிக்கிழவி சடச்சியே இந்தக் கர்ப்பிணிப்பெண்.
   மதுரை முகமதியர்களின் கையில் இருந்த போது குமாரகம்பணனின் படை துவாரசமுத்திரத்திலிருந்து மதுரைக்குப் படையெடுத்தது. மதுரையைச் சுற்றிலும் அணிவகுத்திருந்த கம்பணனின் படைகளில் ஒரு குதிரைப்படையின் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் நலகாவுலசிவக்கா. அவரது படையில் உள்ள முன்னூறு வீரர்களும் பெண்களே. இந்தப்படை முந்நூற்றுவர் குதிரை வீராங்கணைகள் பிரிவு என்று குறிப்பிடப்படுகிறது.
குமாரகம்பணனின் துணைவி கங்காதேவியும் வீரப்பெண்ணாகவே பதிவு செய்யப்பட்டுள்ளார். குமாரகம்பணனின் படைத்தளபதி பொய்யாவுலமங்கனிடம் கங்கா ஒரு கட்டளையைப் பிறப்பித்தாள். அது பெண் வீராங்கணைகளின் படை குறித்த ஒரு கட்டளை. கோட்டைக்குள்; நுழையும் முதல் குதிரை முந்நூற்றுவர் அணியினதாய் இருக்க வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-23) என்பதே அந்தக் கட்டளை. அதன்படியே இரவில் துவங்கிய போரில் கோட்டைக்குள் நுழைந்த பெண் வீராங்கனைகளின் வீரச்செயல்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. வடுகச்சிகளில் ஒருத்தி கூட வாளை எடுக்கவில்லை. ஈட்டியாலேயே குத்தித்தள்ளினர். போர்; செய்த வீராங்கனைகளில் பலரும் காணவில்லை. சிலர் கடுமையான காயங்களுடனும், சிலர் சிறிய காயங்களுடனும் இருந்தனர். கவுலாவுல காமாட்சி. கோவுதால கிருஷ்ணம்மா, காலமு ரேணுகா, தாமசாணி ஆரம்மா, கோதண்டஅகுமஞ்சி, போடாவுல சுராதேவி போன்ற பெண் வீராங்கனைகள் காணவில்லை’ (சு.வெங்கடேசன்: 2008,ப-24-25). போர் செய்ததில் வீரமரணம் அடைந்துள்ளார்களா? அல்லது மருத்துவ தேவைக்காகக் குற்றுயிருடன் தவிக்கிறார்களா? என்பதே தெரியாமல் போனது. மதுரை சுல்தான் ஓடி ஒளிந்திருந்த இடம் அறிந்து கங்காதேவி படையுடன் புறப்பட்டாள். மொட்டைப்பாறையில் வாளோடு கத்திக் கொண்டிருந்த முகம்மதியர்கள் மீது முதலாவதாக ஈட்டியோடு முன்னே பாய்ந்தவர் ஒரு பெண் வீராங்கனை. அவர் பெயர் கோலவாரி கிரு~;ணை.
போர் தொடங்கியதும் எல்லம்மன் வழிபாடு நடைபெறுவது வழக்கம். உயரமான இடத்தில் எல்லம்மன் தெய்வம் இருக்கும். முதலில் எல்லம்மனின் மாலையை எடுக்கும் பூஜை. எல்லம்மனின் அருகே ரேணுகை தெய்வமும் அதனது சிவப்புக்கச்சையில் குறுவாளும் இருக்கும். ஆர்வமுள்ள இளைஞர்கள் எல்லாம் அலைமோதுகிறார்கள். மாலையை எடுக்க யார் முதல் எட்டு வைப்பது என்பதில்தான் தாமதம் ஏற்படும். பிறகு ஆளாளுக்கென்று அனைவரும் எல்லம்மனை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். இந்த பூஜையில் முந்நூற்றுவர் குதிரைப்படை வீராங்கனைகளிலிருந்து ஸ்ரீஜானகிவாரிகனகநூஜாதான் எல்லம்மனை நோக்கி முன்னேறி மாலையை எடுத்துத் தனது கழுத்தில் அணிந்துகொண்டு ரேணுகை தெய்வத்தின் குறுவாளை எடுத்துத் தன்னைத்தானே பலியிட்டாள்.
பக்தி நடவடிக்கையாக இருந்தாலும் கூட ஒருபெண் தானே முன்வந்து தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் துணிவை இங்கு நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல இதுபோன்ற பக்தி நடவடிக்கைகள் ஆண் பெண் வேறுபாடில்லாமல் பொதுவானதாக அமைந்துள்ள  சமத்துவ போக்கையும்  பதிவு செய்துள்ளார். இவ்வாறு பெண்கள் போர்க்களத்தில் போட்டிப் போட்டு;க் கொண்டு தங்களது வீரஉணர்வையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ள பாங்கினை நாவலாசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
            அரசன் குமாரகம்பணன், துணைவி கங்காதேவியின் கட்டளைக்கும், அதிகாரத்திற்கும் அடிபணிந்து நடந்து கொள்வதாக நாவலில் பதிவாகியுள்ளது. கம்பணனின் படை மதுரையைச் சுற்றி வளைத்திருந்தது. மறுநாள் காலையில் போர் நடைபெறப் போகிறது. போர்க் குறித்துத் தளபதிகளுடன் ஆலோசனையில் இருக்கிறான் கம்பணன். அமண மலையில் இருக்கும் தீர்த்தங்கரர்களைத் தரிசிக்கத் தயாராகுமாறு கங்காதேவியிடமிருந்து வந்த அழைப்பிற்கு போர் முடிந்தவுடன் அங்கு போகலாம் என்று பதில் அனுப்பினான். உடனே அமண மலைக்குக் கிளம்ப வேண்டும் என்று கங்கா ஆணையிடுகிறாள்;. வேறுவழியின்றி கம்பணன் அமண மலைக்கு வந்து காத்திருந்தான்.
கங்கா அந்த அழகான மாலை நேரத்தில் நீராடிக் கொண்டிருந்தாள்;. தோப்புக்குள் பறந்து போகின்ற கிளிக்கூட்டத்தை இரசித்துக் கொண்டிருந்தாள். இருட்டப்போகும் நேரம். அம்பு போன்ற ஒன்று கிளிக் கூட்டத்தில் தைத்து ஆலமரத்தின் பின் மறைந்தது. உடனே கங்கா முடிவெடுத்தாள். பணிப்பெண் ஜோகம்மாவின் மூலம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று கம்பணனுக்குத் தெரிவித்தாள். கம்பணன் கோபத்தோடு கங்காவிடம் கத்தினான் கங்கா! இது விளையாட்டல்ல, போர். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். முழு அமாவாசை…”. (சு.வெங்கடேசன்: 2008,பக்-19)  கங்கா கேட்டபாடில்லை. நான் தீர்மானித்து விட்டேன், இனி மாற்றமில்லை, உடனே தயாராகுங்கள் என்றாள். கம்பணனுக்குக் கோபம் முட்டியது. கங்காவை எச்சரித்தான். உன் பிடிவாதத்திற்கு அளவில்லையா? என்னோடு விளையாடலாம் ஆயிரமாயிரம் உயிர்களோடு விளையாடுவது சரியல்ல.” (சு.வெங்கடேசன்: 2008,பக்-19)  என்று மறுத்துரைத்தான். அப்பொழுது கங்காவின் குரலானது கம்பணனை நடுங்க வைத்தது. குமாரகம்பணா! விலகி நில். விஜய நகரப் போர் இதுவல்ல. இது என் யுத்தம். கம்பிளியின் யுத்தம். இதற்காகவே நான் பிறந்தேன். இந்த நாளுக்காகவே  காத்திருந்தேன்.  இதற்காகத்தான் வாளெடுத்தேன். ஆயிரமாயிரம் கொல்லவாருகளை இழந்தாலும் அந்த இரத்தத்தில் நடந்து போய் இன்று இரவே பலியெடுப்பேன். ஆனைக் குந்தியின் பகை முடிப்பேன். போ! அந்த ரேணுகையின் மேல் ஆணை.”  (சு.வெங்கடேசன்: 2008,பக்-19) கங்கையின் உத்தரவை மீறாமல் கம்பணன் நடந்து கொண்டான். அன்று இரவே கங்கையம்மன் வழிபாடும், எல்லம்மன் பூஜையும் முடிந்து இரவோடு இரவாக போரும் நடைபெற்றது. இறுதியில் மதுரை சுல்தானைக் கங்கையே தனது  வீர ஈட்டியால் வீழ்த்தினாள்.
கங்கா என்ற ஒரு பெண்ணின் முடிவும், சொல்லும். வீரமுமே மதுரைசுல்தான் மீதான போரைத் துவக்கியும் வைத்துள்ளது, முடித்தும் வைத்துள்ளது. ஆனாலும், தாய்; வழிச் சமூகத்தின் தோல்வியும், தந்தை வழிச்சமூகத்தின் வெற்றியும் ஆண்களை முதன்மைப்படுத்தியதிலிருந்து பெண்களின் மூளைக்கூட ஆண்களின் நலன் சார்ந்தே சிந்திப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டும், பயிற்சி கொடுக்கப்பட்டும், ஆண்டாண்டுகாலமாய் பெண்ணடிமைத்தனம் பழக்கப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. ஆகவே பெண்ணின் சிந்தனையில் இருக்கும் ஆண் நலன் சார்ந்த  போக்கே கங்காவின் பெண்ணடிமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
இரவு நேரமாகிவிட்டது. கங்கா எழுத்தாணியைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தாள். கம்பணன் கங்காவின் குடிலுக்குள் நுழைந்தான். கங்கா! இன்னும் தூங்கவில்லையா என்று வியந்தான். மதுரா விஜயம் என்ற வரலாற்றுக்காதையை எழுதுவதாகக்  கங்கா பெருமிதத்துடன் கூறினாள். விஜய நகர இளவரசன் குமாரகம்பணனின் போர் வெற்றிகளை விவரிக்கும் சமஸ்கிருத கவிதை என்று மேலும் விவரித்துச் சொன்னாள். மதுரா விஜயம் என்று பெயர் சூட்டுவதை விட கங்கா ரௌத்ரம் என்று பெயர் சூட்டு. ஏனெனில் ஆனைக்குந்தி இளவரசியின் சாகசமல்லவா இந்த வெற்றி என்று கங்காவை நெகிழவைத்தான். உடனே கங்கா சிரித்துக் கொண்டே சொல்கிறாள். என்நிகழ் காலம் உங்கள் நிழலிலேயே கழிந்து விட்டது. இது போதும் எனக்கு.” (சு.வெங்கடேசன்: 2008,பக்-28) 
இந்த வார்த்தைகள் முழுவதும் பெண் என்பவள் ஆணிற்கு கட்டுப்பட்டு வாழ்வதிலேயே சிறப்புப் பெறுகிறாள் என்ற பெண்ணடிமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. வாசகர் உள்ளத்தில் வீரப்பெண்ணாகவே வலம் வந்த கங்காதேவியின் இத்தகைய வார்த்தைகளால் பெண்ணடிமைச் சிந்தனையை வெளிப்படுத்தியது எது? அதுதான் ஒரு ஆண் படைப்பாளியின் ஆண்நலன் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. அதனால்தான் கங்காவின் வீரவரலாறை கம்பணனின் நிழலில் காயப் போட்டுவிட்டார், நாவலாசிரியர்.
குமாரகம்பணன் தன்மனைவி கங்காவின் சொல்லுக்கும், செயலுக்கும், முடிவிற்கும், உணர்விற்கும் மதிப்பளித்து நடந்து கொள்கின்றான்;. அவனது பெருந்தன்மையைப் பாராட்டத் தூண்டுகிற வகையில் நாவலாசிரியர் அமைத்திருக்கிறார். பெருந்தன்மையின் அரசியலைப் பின்னால் பார்க்கலாம்.
கிரு~;ணதேவராயரின் மூன்றாவது பட்டத்தரசியாக வரவழைக்கப்பட்டவள் துக்காதேவி. இவள் கலிங்க இளவரசி. இவளது திருமணம் ஓர் ஒப்பந்தத்தின் விளைவால் நிகழ்ந்தது. கலிங்க இளவரசி விஜயநகரத்தில் தனது வீரஉணர்வை வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஜயநகரம் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றியது. கலிங்க வீரர்களும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இறுதிவரையிலும் புறமுதுகிடாமல் போர்க்களத்தில் வீரமரணம் அடைவதை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். விஜயநகர வீரக்கதைப்பாடல்களின் நாயகனும், அரசன் கிருஷ்ணதேவராயரின் மெய்க்காப்பாளனும், நண்பனுமாகிய வி~;வநாதனே உண்மையில் விஜயநகரம் ஆட்பலத்தைக் கொண்டுதான் முன்னேறுகிறது என்று கலிங்கத்தின் வீரத்தை வியந்து கூறுகிறான். ராயர்தான் போரை நீடிக்கும் எண்ணம்  இல்லாமல் சமயோசிதமாக ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நிறைவு செய்கிறார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் விஜயநகர அரசு கைப்பற்றியிருந்த கலிங்கப் பகுதிகளைக் கலிங்கத்திற்கே ஒப்படைத்தது. கலிங்க இளவரசி துக்காதேவி ராயரின் பட்டத்தரசியானாள்.
இளவரசி துக்காதேவியால் கலிங்கத்தின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைவிட அவளது அண்ணன் வீரபத்ரனின் இறப்பையும், அதற்கு காரணமான விஜயநகரையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீரபத்ரன் விஜயநகரில் கைதியாக இருந்த போது விஜயதசமி விழாவில் ராயர் அறிவித்தார். லட்சம் மக்கள் கூடியிருந்த அவ்விடத்தில் விஷ்வாவுடன் வாள்போட்டியில் வென்றுவிட்டால் வீரபத்ரனுக்கு விடுதலை, சுதந்திர புருசனாய் நாடு திரும்பலாம் என்பதே ராயர் அறிவித்தது. அரச குலத்தினனோடு மட்டும்தான் போரிடுவேன் என்று மறுத்துரைத்தான் கலிங்க இளவரசன். வீரபத்ரனின் தன்னம்பிக்கையின்மையை விஷ்வா கணித்திருந்தான். இறுதியில் வீரபத்ரன் தற்கொலை செய்து கொண்டான். அண்ணனின் இறப்பு பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை துக்காதேவி. ஆனாலும் அதற்குப் பலிதீர்க்க வேண்டும் என்பதே துக்காதேவியின் நோக்கம்.
கிரு~;ண தேவராயர் தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் துக்காதேவியின் கோபமும், வீர உணர்வும் வெளிப்படுகிறது. ராயர் பலமுறை அவளை அன்போடு நெருங்கி வந்துள்ளார். துக்காதேவியோ அவரைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. மீண்டும் ஓர் இரவில் ராயர் முயற்சி செய்திருக்கிறார். அன்று அவரை அமைதியாக ஏற்றுக்கொண்ட துக்காவின் நோக்கம் தோல்வியடைந்தது. தலையணையின் கீழ் ஒளித்துவைத்திருந்த குறுவாளை எடுத்து ஓங்கிக் குத்தியிருக்கிறாள். எப்படியோ, ராயர் விலகிக் கொண்டு அவளிடமிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார். இதனால் ராயர் மிகவும் மன வேதனை அடைந்தார். ராயரின் உயிர் போன்றவனான விஷ்வநாதனும் வருத்தமுற்றான். ராயருக்காக துக்காதேவியை சந்தித்து பேசினான்.
ஒருமுறை தன் அண்ணன் வீரபத்ரனோடு வாட்போருக்கு தயாரானவனே இந்த விஷ்வநாதன் என்பதை அறிந்ததும் துக்கா தன் வீர உணர்வை வெளிப்படுத்தினாள். சடாரென எழுந்து போய் சுவரில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு விஷ்வாவின் கண்ணைப் பார்த்து சொன்னாள். உன் வாளை எடுத்துக் கொள். இப்போது நான் நிரூபிக்கிறேன். கலிங்க சிங்கம் வராகத்திற்கு அடிபணியாது. எடு உன்வாளை” (சு.வெங்கடேசன்: 2008,பக்-63)இவ்வாறு துக்காதேவி என்ற அந்தப் பெண்ணின் வீரஉணர்வு அவளது சொல்லிலும், செயலிலும் வெளிப்படுவதை நாவலாசிரியர் காட்டுகிறார்.
அதே நேரத்தில் ஒரு அரசகுலப்பெண் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டே தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்ற பெண்ணடிமைத்தனத்தின் போக்கை அவளது வார்த்தையிலேயே வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். விஷ்வநாதன் விஜயநகரின் நியாயம் பற்றியும், வீரபத்ரனின் தற்கொலை  பற்றியும் துக்காதேவி;க்கு உணர்த்தி சமாதானப்படுத்தியப்பிறகு ஒருகேள்வி கேட்கிறார். ராயர் நிராயுதபாணியாக இருக்கும் போது அவரை ஆயுதங்;கொண்டு தாக்க முயற்சிப்பது ஒரு வீரபெண்ணுக்;கு நியாயமானதா? என்பதே அந்தக் கேள்வி. பெண்மனதின் குமுறல்களை நீ அறியமாட்டாய். அந்தப்புரத்தின் சுவர்களுக்குள்தான் அவள் எதையும் செய்ய முடியும்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64). இதுவே அந்த வீரப்பெண் விஷ்வநாதனுக்கு உரைத்த பதில்.
 ராயரின் விருப்பத்திற்கு இணங்காதவளாகவே துக்காதேவியின் நடத்தை தொடர்கிறது. இருந்த போதிலும் ராயர் தனது அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி துக்காவின் உணர்வுகளை ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை. மாறாக, வன்மம் இருக்கும் வரைதான் அரசகுலங்கள் நிலைத்திருக்கும் என்று அவளது வன்மத்தை புகழ்கிறார். அதுமட்டுமல்ல அவளது இறுதி முடிவான துறவு வாழ்விற்கும், அவளது ஆசிரமத்திற்கும், அவள் ஈடுபடும் பொதுக்காரியங்களுக்கும், தேவையான அனைத்து செலவுகளையும் ராயர் தொடர்ந்து செய்வதோடு மட்டுமல்லாமல் அவளைச்சுற்றிலும் பாதுகாவலர்களை மக்களோடு மக்களாக நியமித்து அவளுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றால் துக்காதேவியிடம் ராயரின் இத்தகைய பண்புகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ராயருக்காக விஷ்வநாதன் துக்காதேவியிடம் பேசச்சென்றான். அந்த நேரத்தில் துக்கா தனது வீரஉணர்வை வெளிப்படுத்தும் வகையில் விஷ்வாவை தன்னோடு வாள் போருக்குத் தயாராகுமாறு சொல்கிறாள். பெண்ணுக்கு எதிரே நான் வாளெடுப்பதில்லை என்று பதில் உரைத்தான் விஷ்வா. என்னதான் பெண்கள் வாளெடுத்தாலும் ஆணின் வீரத்திற்கு இணையாக மாட்டார்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகவே அவனது பதிலை அமைத்திருக்கிறார். இருந்தாலும் கூட என்னை வாள் சண்டைக்கு அழைத்ததற்காக உங்கள் மீது என்மதிப்பு உயர்கிறது’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64)என்று இறுதியாக அவன் சொன்ன போது பெண்ணின் வீர உணர்வை மதிக்கின்ற அவனது பெருந்தன்மையும் எட்டிப் பார்ப்பதை; உணர முடிகிறது.
உற்பத்தியில் ஈடுபடுகின்ற உழைக்கும் மக்களின் மீது அதிகாரம் உடையவன் அரசன். அரச மாளிகை ஓர் அதிகாரத்தின் சின்னம். அரசனும், அரசனைச் சேர்ந்தவர்களும், அரசப்படைகளும் அதிகாரத்தின் பேரலைகள். பணிப்பெண்களும், அந்தப்புரப்பெண்களும், உழைக்கும் பெண்களும் அரச மாளிகையின் அடிமைகள். அரசகுல ஆண்களை மகிழ்விக்கும் காமப்பண்டங்கள். நிலவுடைமைச் சமூகத்தில் இதுதான் நிலமை. ஆனாலும் ஆணாதிக்கத்தின் சின்னங்களுள் அடங்கும் அரசர் கிருஷ்ணதேவராயர்  மற்றும் விஷ்வநாதனின் சொல்லிலும் செயலிலும் பெண்ணை மதிக்கின்ற பெருந்தன்மையை நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். இந்தப் பெருந்தன்மையின் அரசியல் எத்தகையது என்பதை பின்னால்; பார்ப்போம்.
காவல் செய்து காவக்கூலி வாங்கும் தாதனூர்க்காரர்களில் கொடிக்கா வகையறாக்கள் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரண்மனைக்கோ, நகரத்தெருக்களுக்கோ, கிராமங்களுக்கோ காவல் தொழில் செய்தது ராணி மங்கம்மாவின் காலத்திலிருந்தே விடுபட்டது. மங்கம்மாளின் வெற்றிலைத் தோட்டத்திற்கு காவல் வேலை கிடைத்ததால் மற்ற தாதுனூர்க்காரர்களைப் போன்ற முறையில் கொடிக்கா வகையறாவைச் சேர்ந்தவர்கள் காவக்கூலி பெறுவதில்லை. ஆனால் மங்கம்மா காலத்திற்குப் பிறகு வெற்றிலைத் தோட்ட காவல் நிறைவுபெற்றது. அரண்மனைத் தோட்டக்காவலையும் இழந்து, மற்ற தாதனூர்க்காரர்களைப் போன்ற காவக்கூலி பெறுகின்ற உரிமையையும் இழந்து வாடியது கொடிக்கா வகையறா. இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் பல பிரச்சினைகள் நடந்துள்ளன. இறுதியாகத் தாதனூர் கருப்பு கோயிலில் நீதி கேட்டுப் பெண்களுடன் கூடியிருந்தார்கள் கொடிக்கா வகையறாக்கள். இந்த நிகழ்வின் மூலம் கலகம் செய்வது ஆணின் பண்பு, பயம் என்பது பெண்ணின் பண்பு’  என்ற சமூகத்தின் பாரம்பரிய கருத்திற்கு எதிராகப் பெண்கள் கலகம் செய்தால் அஞ்சாத ஆண்களே கிடையாது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஆமாம்பா கலகம் பண்றதுக்காகவே பொம்பளப்புள்ளைகளபூரா கூட்டி வந்திருக்காங்கெ. அவளுகளும் கொண்டைகள இழுத்து முடிஞ்சிட்டு வந்து நிக்கிறாளுக’(சு.வெங்கடேசன்: 2008,பக்-507) இந்த வார்த்தைகள் ஊர்ப் பெரியாம்பள மாயாண்டிப் பெருசிடம் அவரை அழைத்து வரச்சென்ற பேயாண்டியின் வார்த்தைகளாகும்.
பேயாண்டியின் இத்தகைய வார்த்தைகள் வெளிப்படுத்துவது எதை? ஊர்;க்கூட்டத்தில் பெண்கள் சாதாரணமாக கலந்துகொள்ள முடியாது. ஆண்கள் மட்டுமே கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் பெண்களுக்கு என்ன வேலை? ஆம், ஊர்க்கூட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது. பெண்கள் கலந்து கொள்வது ஆண்களுக்கு இழிவு. காவல் உரிமைக்காக தாதனூரில் முன்பு நடந்த கூட்டமெல்லாம் கொடிக்காவகையறாவின் ஆண்களோடு மட்டுமே முடிந்து போயுள்ளது. அதனால்தான் இழிவென்றும் பாராமல் இந்த முறை பெண்களையும் கூட்டி வந்துள்ளனர் கொடிக்காவகையறாக்கள். தானாக முன்வந்து கூட்டத்தில் பங்கு பெறவில்லை, பெண்கள். ஆண்களால் கூட்டி வரப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடவேண்டாம். ஏதாவது வழியில் பெண்கள் கலந்து கொண்டால் அதிகாரம் படைத்த ஆண்கள் எப்படி ஏசுகிறார்கள். கொடிக்கா வகையறாப் பெண்களை நையாண்டி செய்து அறிமுகப்படுத்த அவசியம் என்ன இருக்கிறது. ஆண்களை முதன்மைப்படுத்தி பெண்களை இழிவுபடுத்துகின்ற அரசியல்தான் இருக்கிறது. அதனால்தான் பேயாண்டியின் வார்த்தைகளை இவ்வாறு செதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
கருப்பு கோயிலில் கொடிக்கா வகையறா பெரியாம்பள மண்டையன் யப்பா நாங்களும் சடச்சி மக்கதான். இனியும் எங்கனால பொறுக்க முடியாது. மருத காவல்ல எங்களுக்குன்னு நாலு தெரு பகுந்து வுடு’  (சு.வெங்கடேசன்: 2008,பக்-510) என்று பேச்சை தொடங்கி வைத்தார். பிறகு இருநூறு ஆண்டுகால நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியும், நையாண்டி செய்தும், ஈவு இரக்கமில்லாமலும் ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ உதிர்த்து விட்ட வார்த்தைகள் கொடிக்கா வகையறாவின் செல்லாயிக்கிழவியை உசுப்பேற்றிவிட்டது. ஆம்பளய ஆசப்பட்ட தேவடியாளும் கெட்டா பொம்பளய ஆசப்பட்ட காவக்காரனும் கெட்டான்டா…’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-511) என்ற வார்த்தைகளைக்கேட்டு கொதித்துப் போன செல்லாயிக்கிழவியின் பேச்சு தாதனூக்காரர்ளை உண்டு இல்லையென்று செய்தது. எவனும் பதில் பேச முடியாத அளவிற்கு கேட்க முடியாத வார்த்தைகளைக் கொட்டித்தீர்;த்தாள்.
மாயாண்டிப்பெருசு கூட்டத்திற்கு வந்த போது கூட அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது கூட்டத்தின் முன்பகுதியில் அமைதியாய் அமர்ந்திருந்த இந்த செல்லாயிக்கிழவிதான். இவள் மாயாண்டிப் பெருசுவின் வயதை ஒத்தவள். கொடிக்கா வகையறாவின் உயிரோடு இருப்பவர்களில் மூத்த கிழவி. பொண்டுகச்சட்டிப்பய நீயெல்லாம் ஊர் பெரியாம்பள” (சு.வெங்கடேசன்: 2008,பக்-511)என்ற செல்லாயிக்கிழவியின் வார்த்தைகள் மாயாண்டிப் பெருசை அரட்டிப்போட்டது. இப்ப சொல்றெ கேட்டுக்கோ வர்ற அமாவாசைக்குள்ள காவப்புடிச்சு வுடலைன்னா என்ன நடக்கும்னு தெரியாது’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-511)என்று எச்சரித்து கூட்டத்தை முடித்து வைத்தாள் செல்லாயிக்கிழவி.  அவ்வாறே மதுரைக்கு பக்கத்திலிருக்கும் பெரிய கிராமமான நெடுங்குளத்தை காவல் பெற்றார்கள் கொடிக்கா வகையறா.
கூட்டத்தில் பெண்கள் தங்கள் கருத்துக்களையோ, உணர்வுகளையோ வெளிப்படுத்துவது அநாகரிகமானது என்ற சமூகத்தின் ஆணாதிக்க கருத்திற்கு எதிராக ஒரு பெண்ணாகிய செல்லாயிக்கிழவியின் பேச்சு அந்த கூட்டத்தில் எவ்வளவு முக்கியத்துவமும், முதன்மையும் பெற்றிருந்தது என்பதை இங்கு அழகாக சித்தரித்துள்ளார் ஆசிரியர்.  ஆயினும் கொடிக்கா வகையறா செல்லாயிக்கிழவியை பெரியாம்பள மாயாண்டிப் பெருசுக்கு நிகரானவராக கருத இடமில்லை. பெரியாம்பள என்பது கூட்டத்தின் தலைமைப் பண்புள்ளவரை குறிக்கும் ஒரே சொல். பெரியமனுசி, பெரியாத்தா போன்ற சொல் இதற்கு நிகரான சொல் அல்ல. காவல் உரிமைகேட்கும் கொடிக்கா வகையறாக்களை தலைமையேற்று வழிநடத்துபவர்  பெரியாம்பள மண்டையனே, செல்லாயிக்கிழவி அல்ல. தாதனூர்க்காரர்களை அரட்டிப்போட்ட செல்லாயிக்கிழவியின் வார்த்தைகள்  அவர்களின் கல்லெறி போலவும், வளறியெறி  போலவும் வீரியமானதாக தோன்றினாலும், உண்மையில் கொடிக்கா வகையறாவின் சார்பாக தாதனூர் பெரியாம்பள மாயாண்டி என்ற ஆணிடம் செல்லாயிக்கிழவி என்ற பெண் முறையிடுவதாகவே அமைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
பிரிட்டி~; ஏகாதிபத்தியத்தால் காவல்முறை ஒடுக்கப்பட்டது. ஐரோப்பிய பாணியில் சட்டம் ஒழுங்கு, நீதித்துறை, காவல்துறை போன்ற தனக்குச் சாதகமான வடிவங்களை இங்கு நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தது பாரம்பரியம். பாரம்பரியமாக இருந்த காவக்கூலி முறையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டது. காவல்துறையினர்க்கும், காவல்காரர்களுக்கும் இடையிலான வீரம் செறிந்த சண்டைகள் அதிகமாகவே நடந்துள்ளன. காவல்காரப் பெண்களின் வீர உணர்வுகள் வெளிப்படுகின்ற பல சம்பவங்கள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீஸ்;காரர்கள் காவக்காரர்களை அடித்து நொறுக்கி கைது செய்து இழுத்துப் போகிறார்கள். விராட்டிப்பத்தை கடந்து செல்லும் போது விராட்டிபத்து காவக்காரனின் மனைவி வீராயி என்பவள் தண்ணீர் கொடுப்பதற்காக ஓடுகிறாள். போலீஸ்காரர்கள் தடுக்கிறார்கள். ஏ மாமே மச்சாங்களுக்கு நீங்க என்னடா தண்ணீ கொடுக்கக் கூடாதுன்னு சொல்றது’(சு.வெங்கடேசன்: 2008,பக்-817) என்று நரம்பு புடைக்க கோபத்தோடு கத்துகிறாள். குதிரையிலிருந்த ரிசர்வ் போலிஸ் சார்ஜன்ட் ஸ்பெல்டிங் தண்ணீர் குடத்தை எட்டி உதைத்துக் கொட்டினான். அவ்வளவுதான், அடுத்த நொடியில் கண்சிமிட்டும் நேரத்தில் அவளது வீரச்செயல் அரங்கேறியது. அவனது காலைப்பிடித்து கீழே இழுத்து இடுப்பிலிருந்த பனங்கருக்கால் சங்குக்குழியை அறுத்துக்கொன்றாள். அடுத்த சில நிமிடங்களில் போலிஸ் நாய்களால் அடித்தே  கொல்லப்பட்டாள்.
ஊர்க்கண்மாயில் வயிறு கிழிக்கப்பட்ட ஓரு பிணம். கோரைப்புல் தூரைப் போல பிணத்தைச்சுற்றிலும் கொத்துக் கொத்தாக மிதந்தன அதன் குடல்கள். இன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளைக்கே இந்த நிலமையா! என்று கச்சேரி போலீஸார் அனைவரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். வண்டியோட்டி சொன்னதை முக்கிய அதிகாரி ஸ்டீபென்ஸன் நம்புவதற்கு தயாரில்லை. ஆனாலும்;, டி.எஸ்.பி. ஸ்டெட்மென்ட்டாக எழுதிவாங்கிக்கொண்டார். ஸ்டேட்மென்ட்டில் இருப்பதும், ஸ்டீபென்ஸன் நம்ப மறுத்ததும் இதுதான். இன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளையைக் கொன்றது இரண்டு பெண்கள். கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தான் சேதுப்பிள்ளை. புல்லுக்கட்டு தூக்கிப் போன வழியில் கண்மாயில் சிக்கிய விஷமியை இரண்டு வீரப் பெண்களும் நழுவ விடாமல் காரியம் சாதித்துள்ளனர்.
மொக்கைச்சாமி, மந்தைக்கல் பெரியாம்பள என்று எல்லோராலும் கிண்டலாக அழைக்கப்படுபவர். ஊர்ப்பெண்களை ஒருத்திவிடாமல் வம்பளப்பவர். ஆனால், கழுவாயியைக் கண்டால் மட்டும் மனுசன் பொட்டிப் பாம்பாக ஆயிடுவான். அவ முக்கு திரும்புனா போதும், மந்தைக்கல்ல விட்டு எந்திருச்சு எவ்வளவு வேகத்துல போவார்னு சொல்லமுடியாது. இவர் கழுவாயிக்கு மட்டும் இப்படி பயப்படுவதற்கு என்ன காரணம் என்பது ஊருக்கே தெரியாத ரகசியம். உண்மையில் கழுவாயியின் பலமே அவரை பயமுறுத்தியிருக்கிறது. மந்தையில் கிடக்கும் இளவட்டக் கல்லை இரண்டு, மூன்று முறை தூக்கிப் போடுகின்ற பலம் அவளுக்குத்தான் உண்டு. பொசகெட்ட ஆம்பிளைக ஆட்டையும் கன்னுக்குட்டியையும்தான் தூக்குவாங்கெ. என்னோட வயசு ஆம்புளைய வந்து கல்ல மூனு  தடவ தூக்கிப் போடச் சொல்லு பாப்போம்” (சு.வெங்கடேசன்: 2008,பக்-983); என்று மந்தையில் நின்று சவால் விட்டு கூப்பிடுவாள். எங்கே தன்னை நேருக்கு நேராக கல்லைத்தூக்கச் சொல்லி கூப்பிட்டுவிடுவாளோ என்று ரோசப்பட்டுதான் மந்தைக்கல் பெரியாம்பிளை இவளைப் பார்த்தபோதெல்லாம் ஓடி ஒளிந்தார். இந்தக் கழுவாயிதான் ஒரு இரவில் அவுட்போஸ்ட் கட்டிடத்திற்கு அருகிலுள்ள புதரில் மறைந்து கொண்டாள். வெளியில் காவலுக்கு நின்ற வெள்ளைக்கார போலிசுகளில் ஒருவனை மட்டும் அடித்து பன்னரிவாளால் மூன்றே இழுவையில் கழுத்தைத் தனியாக அறுத்து எடுத்து அவுட்போஸ்ட் கட்டிடத்திற்குள் வீசி எறிந்து போலீஸ்காரர்களைப் பயத்தில் உறைய வைத்தாள். பின்னொரு நாள் இந்த வீரப்பெண்ணும் போலீஸ் நாய்களால் காணாமல் போய்விட்டாள்.
கச்சேரிப் போலீஸ்காரர்கள் மீது ஒரு மிகப் பெரிய தாக்குதலை வீரப்பெண்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்களது திட்டம் வெற்றி பெறுவதற்கு ஏதுவான முறையில் பெண்கள் கூட்டமாகக் கூடி கச்சேரி போலீஸ்காரர்கள் அறிய முடியாத அளவிற்குக் கிணற்றின் வாயை அடைத்துவிட்டுச் சென்றார்கள். அவ்வளவுதான், அன்று இரவு கச்சேரி போலீஸ்படைமீது காளைகளை ஏவி;தாக்குதலை நிகழ்த்தினர். ஆறுகாளைகள் முழு போலீஸ்படையையும் குத்திக் கிழித்த செய்தி ஆட்சியாளர்களைத் தொடை நடுங்க வைத்தது. அந்த ஆறு காளைகளில் அங்கம்மாக்கிழவியின் பேத்தி பின்னியக்காளின் காளைகள் மட்டும் இரண்டு. கச்சேரி போலீஸார் பின்னியக்காளைத் தேடினார்கள். இன்னொரு திட்டத்திற்குத் தன் காளைகளைத் தயார்படுத்தி அனுப்பி வைத்தாள், பின்னியக்காள். மறுநாள் காலையில் காளைகள் குடல்சரிந்து இறந்து கிடந்தன. அந்த சோகத்திலேயே கிடந்தவள் ஐந்தாம் நாளில் உயிரை விட்டாள்.
தாதனூருக்கு ஜல்லிக்கட்டுக்காளைகளை அனுப்பியதிலிருந்து போலீஸ் கையில் சிக்காமல் இருந்த அங்கம்மாக்கிழவி நல்லூர் முகாமில் சிக்கினாள். கிழவி என்று கூட பார்க்காமல் ஆளாளுக்கு மிதித்தார்கள். பெரியாத்தாவைக் காப்பாற்ற குரல் கொடுத்தவர்களுக்கான அடியில் பாதியையும் கிழவியே வாங்கிக் கட்டிக்கொண்டாள். பிறகு, அரைமயக்கத்திலிருந்த கிழவி எதிரில் நின்றுகொண்டிருந்த போலீஸை நோக்கி கும்பிடுவதைப்போல செய்கை செய்தாள். என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரன் மேல் சற்றும் எதிர்பாராதபடி பாய்ந்து குரல்வளையைக் கடித்துத்துப்பினாள். மூஞ்சியெல்லாம் ரத்தம் தெரித்தது. போலீஸ்காரனின் அலறலில் லத்திகள் கிழவியின் உடலை நொறுக்கித்தள்ளின. நல்லூர் மந்தையில் குப்புற விழுந்தபடி வீரக்கிழவியின் உயிர் பிரிந்தது. இவ்வாறு தாதனூரின் பெண்கள் கச்சேரி போலீஸ்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திய வீரதீரச் செயல்கள் நம்மை உறைய வைக்கின்றன. 
மக்கள் மறந்து விடுவதில்லை. தங்களுடன் வாழ்ந்தவர்களையும் தங்களுக்காக வாழ்ந்தவர்களையும் ஏதேனும் வழியில் நினைவு கொள்கிறார்கள். ஊர்ப் பெரியாம்பள மாயாண்டிப்பெருசின் மகள் அங்கம்மாக்கிழவியும். அவளது பேத்தி பின்னியக்காளும், போலிஸ்காரர்களைத் தொடை நடுங்கவைத்த அவளது கொறவக்காளையும் வீரணக்காளையும் பட்ட சாமிகளாக வழிபடப்பட்டன. ஒரு வேப்பமரத்தின் அடியில் நடப்பட்டுள்ள இரண்டு பெரிய மற்றும் சிறிய குத்துக்கற்களே அந்தப் பட்ட சாமிகள். அந்த வேப்பமரத்தை மாயாண்டிப் பெருசாகக் கருதினார்கள். நாவலின் முடிவுக்கு முன் மாயாண்டிப் பெரியாம்பிள கிளை பரப்பி வேம்பென நின்று கொண்டிருந்தார்’(சு.வெங்கடேசன்: 2008,பக்-1039) என நாவலாசிரியர் குறிப்பிடுவது எதைக் குறிக்கின்றது? மண்ணின் வீரப்பெண்களான அங்கம்மாக்கிழவி மற்றும் பின்னியக்காளின் வரலாற்றுப் புகழ் மாயாண்டிப் பெரியாம்பள என்ற ஆணுக்குள் அடங்கி விடுகிறது என்பதையே.
கம்பணன், கிரு~;ணதேவராயர், விஷ்வநாதன் போன்றவர்கள் பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் பெருந்தன்மை உடையவர்களாக சி;த்தரிக்கப்பட்டிருந்தாலும், பெருந்தன்மை என்பதும் அதிகாரத்தின் வெளிப்பாடு என்பதை மறந்து விட முடியாது. வெகு சில காரணங்களால் அதிகாரம் நிறைந்த இத்தகைய ஆண்கள் ஒருசில பெண்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையை, சமஉரிமையை, உணர்வு வெளிப்பாட்டை மதிக்கக் கூடியவர்கள் அல்ல என்பதே இதன் பொருள். அதிகாரம் படைத்த நாங்கள் அதிகாரமற்ற எல்லோரிடமும் மோசமாக நடந்து கொள்வதைப் போல நான் உங்களிடம் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் பெருந்தன்மை. நாவலில் இடம் பெற்றுள்ள இத்தகைய பெருந்தன்மையாளர்களை ஆணாதிக்க போக்கிற்கு எதிரான கதாப்பாத்திரங்களாக கருத முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
          கர்ப்பினிப்பெண் சடச்சி, கங்காதேவி, முந்நூற்றுவர் குதிரைப்படை வீராங்கனைகள். துக்காதேவி, தாதனூரை நடுங்கவைத்த செல்லாயிக்கிழவி, விராட்டிப்பத்துக் காவக்காரனின் மனைவி வீராயி, இன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளையைக் கொன்ற இரு வீரப் பெண்கள், கழுவாயி, அங்கம்மாக்கிழவி, பின்னியக்காள் ஆகிய பெண்களது வீர வெளிப்பாடுகள் மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயினும் என்நிகழ்காலம் உங்கள் நிழலிலேயே கழிந்து விட்டது. இது போதும் எனக்கு’(சு.வெங்கடேசன்: 2008,பக்-28) என்ற கங்காவின்  வார்த்தைகளும், ‘பெண்மனதின் குமுறல்களை நீ அறிய மாட்டாய். அந்தப்புரத்தின் சுவர்களுக்குள்தான் அவள் எதையும் செய்ய முடியும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64) என்ற துக்காதேவியின் வார்த்தைகளும், ‘பெரியாம்பிள கிளை பரப்பி வேம்பென நின்று கொண்டிருந்தார்’(சு.வெங்கடேசன்: 2008,பக்-1039) என்ற சொற்களின் பயன்பாடும் நமக்கு உணர்த்துவது இதுதான். பெண்களை அடிமைப்படுத்தும் பாரம்பரிய கருத்திற்கு எதிராக பெண்களை அமைத்திருக்கிறார். ஆனால், பெண்களை வீரர்களாக படைத்திருப்பதன் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தோன்றினாலும், அதன் உள்ளீடாக ஆண்களை முதன்மைப்படுத்துவதே ஆசிரியரின் நோக்;கம். அதுவே நாவலிலும் வடிக்கப்பட்டுள்ளது.
          நாவலில் வெளிப்பட்டுள்ள இத்தகைய ஆணாதிக்கத் தன்மையானது, பெண் விடுதலையில்தான் சமூக விடுதலை அடங்கியிருக்கிறது என்றுணர்ந்துள்ள மார்க்சியராகிய நாவலாசிரியரின் வெளிப்பாடு என்பதை மறுக்கமுடியாது. ஆனாலும், இது திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது ஆயிரமாயிரம் காலமாய் நம் மூளையில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கப்போக்கு நம்மை மீறிக்கொண்டு வெளிப்படுகிறதே, அத்தகைய ஒரு வெளிப்பாடா? என்பது ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

                                          
  
                                                          இயல்2
காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்

மாலிக்காப்பூரின் படையெடுப்பின் விளைவு, துக்ளக்கின் கையில் மதுரை, காலம் 1328. அடுத்தடுத்த ஏழுசுல்தான்களின் ஆட்சி. மதுரையின் கடைசி சுல்தான் அலாவுதின் சிக்கந்தர் குமாரகம்பணனின் படையெடுப்போடு மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இறுதி பெற்றது. மதுரையில் நாற்பத்திமூன்று ஆண்டுகள் சுல்தான்கள் நீடித்துள்ளனர். கம்பணனின் படை முற்றுகைக்குள் மதுரை குறுகியிருந்தது. காலம் 1371. யானை, குதிரை, காலாட்படையென திசைக்குத்திசை படை. படைக்குப்படை தலைமை. பொறுப்பான தளபதி. உறுதியான ராணி. நிகரான ராஜா. படைப்பிரிவுகளை விவரிக்கும் போதே சாதிப்பெயரையும் குறிப்பிட்டே வருகிறார், நாவலாசிரியர்.
          செலகொல்ல லட்சுமய்யா, நேதிவாரி ஒபுலுவின் குதிரைப்படைக்கும் ஜடாதாரி கங்கையாவின் யானைப்படைக்கும் தலைவர். காலாட்படையின் தலைவர் கொமனால் நரகிரி. முந்நூற்றுவர் பெண்கள் படைக்குத்தலைவர் நலகாவுலசிவக்கா. பெதவீரலு வெங்கடாத்திரி, சக்கிலியர்களின் கோசாங்கியர் அணிக்குத்தலைவர். ரம்பாவுலகேசவன், ஆறாயிரம் குதிரைகளுக்;குத்தலைவர். அதனூர் ஒபண்ணா, மூவாயிரம் மாதிக வில்லாளிகளுக்குத் தலைமை. பன்னீராயிரம் காலாள் வீரர்களுக்குத் தலைவர், தகுசில்ல ரெக்கிரபுரி. அச்சுதவாரு, புல்லாவுலவாரு பந்துமுலவாரு சூர்ணவாரு போன்ற நாற்பத்தியிரண்டு குறுங்குலங்களும் களத்தில் நிற்கின்றன. இந்த நாற்பத்தியிரண்டும், சில்லவாரு என்ற தொன்னூற்றாறு குறுங்;குலங்களை உள்ளடக்கிய பிரிவில் அடங்கும். சில்லவாரு படையின் தலைவர் சில்லநரசய்யா. காலாட்படையின் நாற்பத்தியிரண்டு தலைவருள் இருவர் புகழ் பெற்றவர்கள.; அவர்கள் மருலபின்னமன், ராகுடிமல்லய்யா. செஞ்சு வேடர்களில் ஆயிரம் வில்லாளிகளை அழைத்து வந்தவர் கரிவரதபெத்தய்யா. வல்லக்கவாரு குலம், வீரத்திற்குப் பேர் போன படை. இதன் தலைவர் தரிகோடிபசவய்யா. அனைத்து படைகளையும் வழிநடத்தும் தளபதியும் ஒரு வல்லக்கவாரு. அவன் பெயர் பொய்யாவுல மங்கன். கிணறு, அகழி இவற்றை நோட்டமிட்டுப் போருக்குச் சாதகம் செய்தவர்கள் உப்பலவாரு குலம். கிணறு வெட்டுவதும், கல் உடைப்பதுமே இவர்களது பாரம்பரியத்தொழில். அத்தனை ஆருகளையும் உள்ளடக்கிய பெரியவாருதான் கொல்லவாருகுலம்.
போர் தொடங்கியதும் எல்லம்மன் வழிபாடு. எல்லம்மனின் வஞ்சி மாலையைச் சூடப் போவது யார்? ரேணுகை தெய்வத்தின் வாளை உருவப் போவது யார்? தன்னையே பலியிடப் போகும் வீரர் யார்? அனைத்து வீரர்களும் ஓடுகிறார்கள், எல்லம்மனை நோக்கி. இது வெறும் சடங்கல்ல, போட்டி. வல்லக்கவாருக்கும், சில்லவாருக்கும் கௌரவப் பிரச்சினை. யார்?... யார்?... வெற்றியைக் கணித்து விட்ட உறுதியுடன் பேரிரைச்சலுக்கும் இடையில் பாலமவாரு என்ற சொல் ஒலித்துக் கொண்டிருந்தது. முந்நூற்றுவர் பெண் வீராங்கனைகளுள் ஒரு வீரர், ஸ்ரீஜானகிவாரிகனகநூகா. அனைத்து ஓட்டக்காரர்களையும் உதறிக் கொண்டு முன்னே பாய்ந்தாள். எல்லம்மனின் அருகில் அவள். வஞ்சி மாலை அவள் கழுத்தில். ரேணுகையின் சிவப்புக்கச்சையின் குறுவாள் அவள் கையில். தன் கழுத்தைத் தானே அறுத்துப்பலியானாள். இவள் குலம், பாலமவாரு.
          கங்கையம்மன் வழிபாடு, எல்லம்மனின் வழிபாட்டுக்கு முன்னதாக நடைபெறுவது. இவ்வழிபாட்டில் குலங்களின் வரலாறு பாடப்படும். பன்னிரு கைகளை விரித்துக்கொண்டு கங்கை நின்றாள். ஆவு என்றால் பசு. தேவியின் முன்னால் ஒவ்வொரு குலத்திற்கான ஆவும் ஒவ்வொன்றாக வரவழைக்கப்பட்டு ஜென்டடுவாருவால் குலவரலாறு பாடப்படும். ஜென்டடுவாரு என்பவன் வரலாற்றுப்பாடகன். முதலில் வந்தது கொல்லவாருகளின் பொலி ஆவு. அடுத்து வர வேண்டிய ஆவு கொல்லவாருகளின் மூத்த குடியினரான சக்கிலியர்களுடையது. ஆனால், அவர்களுக்கு ஏது ஆவு? ஆதியில் ஒருமுறை ஆவையே கொன்று தின்று விட்டார்களாம். அதனால் ஆவுடன் கூடிய வாழ்க்கை இவர்களுக்குக் கிடையாது. ஆனாலும் சடங்குகளில் முதல்மரியாதை இவர்களுக்குத்தான். இவர்களுக்காக பசவண்ண ஆவு வந்தது. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக இச்சடங்கு அனைத்து குலத்திற்கும் நிகழ்ந்தது. அத்துடன் கங்கை வழிபாடும் முடிவுற்றது. இவ்வழிபாட்டில் சக்கிலியர் குலம் பற்றிய தொன்மத்தை நாவலாசிரியர் கூறியுள்ளார்.
          நாகமரின் முழுப்பெயர், தட்சிண மண்டலேஸ்வரர் கொட்டியம் நாகம நாயக்கர். கொல்லவாரு  குலத்தைச் சேர்ந்தவர். விஜய நகரப் பேரரசின் பல்வேறு ஆளுநர்களுள் இவரும் ஒருவர். இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பாகிய இவர் அரசரின் நண்பருமாவார். வீரகதைப்பாடல்களின் நாயகன் வி~;வநாதன், நாகமருக்கு மகன், அரசனுக்கு மெய்க்காப்பாளன். விஜயநகர அரசன் கிரு~;ணதேவராயர், காப்புபலிஜர் குலம். அரச கட்டளைக்கு எதிராக நடந்து கொண்ட நாகமரைச் சிறைபிடிக்க உத்தரவிட்டார். ராயரின் உத்தரவு அவையை நடுங்க வைத்தது. ரோசப்பட்ட வி~;வநாதன் முந்திக் கொண்டான். தந்தையைச் சிறைபிடிக்க படையுடன் விரைந்தான். சகரம் தம்மைய நாயக்கர் விஷ்வநாதனின் தூதுவன்.நாகமரை நடுக்கத்துடன் சந்தித்தான். விஷயத்தை கேள்விப்பட்ட நாகமர் தன் மிடுக்கான குரலில் பேசினார். அன்பு நிறைந்த அடக்கத்துடன் தம்மையா செவிமடுத்தார். நாகமரின் பேச்சில் வெளிப்படும் விஷயம் இதுதான். காப்புபலிஜர்கள் மீதான கொல்லவாருகளின் வரலாற்றுக் கோபம். முட்டிக் கொள்ளும் இவ்விரண்டு குலமும் நாயக்கர் குலம் என்பதை மறக்க வேண்டாம்.
விஜயநகருக்கு முன்பிருந்தே போராட்ட வரலாறுடையவர்கள் கொல்லவாருகள். ஏறத்தாழ ஐநூறு வருடங்களாக இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். விஜயநகர வரலாற்றில் காப்புபலிஜர்களின் போராட்ட வரலாறு அதிக பட்சம் அறுபது ஆண்டுகளே. இதை விளக்குவதற்காக ராயரின்  தாத்தா கதையையும் சொல்லுகிறார், நாகமர். ஆயினும், விஜயநகரின் நிலையும், நாகமரின் ஆதங்கமும் இதுதான். அரசனும், சேனாதிபதிகளும், ஆளுநர்களும், அதிபதிகளும் காப்புபலிஜர்களே. முன்களத்தில் போராடி மடியும் படைத்தலைவர்களும், வீரர்களும் மட்டும் கொல்லவாருகள். நாகமரின் விருப்பமெல்லாம் கொல்லவாருகளின் விஜயநகரத்தைப் படைக்க வேண்டும்.
          மகன் என்பதால் சரணடைந்து விட்டார், நாகமர். விஜயநகரம் விரைந்தது வி~;வாவின் படை. நாகமர், மறுநாள் அவையில் நிற்பார், ஒரு குற்றவாளியாக. அரண்மனையே அரண்டு கிடந்தது. அதற்கு அவசியம் இல்லாமல் செய்தாள் வீரநாகம்மா. இவள், விஷ்வாவிற்கு துணைவி, ராயருக்குச் சொந்தக்காரி, நாகமருக்கு மருமகள். செல்லி  என்ற செல்லப்பெயரும் உண்டு. வி~;வா விஜயநகரம் நுழைவதற்குள் விரைந்து சென்றாள் நாகம்மா. ராயரைச் சந்தித்து அடம்பிடித்தாள். உறவுக்காரி உரிமையாகப் பேசியதில் ராயர் அடங்கிப்போனார். விளைவு, அதிகாலை நேரம் ஆற்றங்கரையில் சந்தித்தனர், ராயரும் நாகமரும்.
நாகமரை நலம் விசாரித்தார் ராயர். நாகமரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆதங்கம் கொட்டியது. அதை அள்ளிப்போட முயற்சித்தார் ராயர். காப்புபலிஜர்களின் வரலாறு விஜயநகருக்கு வலிமை சேர்த்துள்ளது. வரலாறு இதை மறுக்காது. அதனால்தான், கோவாவிலிருந்து கன்னியாகுமரி வரை விஜயநகரம் பரந்திருக்கிறது. இல்லையென்றால் தேவகிரி அகமது நகரானது போல முகமதியர் நாடாக இருந்திருக்கும், விஜயநகரம். கொல்லவாருகளுக்கான தனிநியாயம் அர்த்தமற்றது என்பதை நாகமருக்கு உணர்த்த எவ்வளவோ முயற்சித்தார். நாகமரும் முரண்டுபிடிப்பதை விடவில்லை. நிலைதடுமாறிய ராயரும் விடுவதாக இல்லை. கேசவா, அவர் தலையை எடு! என்று ஆணையிட்டார். ஏதும் செய்யமுடியாமல் பதறி நின்றான் கேசவன். இங்கும் முந்திக் கொண்டான் விஷ்வநாதன். வாளை ஓங்கியவனை சுற்றியிருந்தவர்கள் தடுத்தார்கள். கையைப்பற்றிக்கொண்ட செல்லியிடம் முகம் புதைத்துக் குறுகினான் விஷ்வா. கிடைத்த அவகாசத்தில் ராயரின் முடிவும் மாறியது. ராயர், நாகமரை மன்னித்தார், வி~;வாவை அரவ நாட்டின் அரசனாக அறிவித்தார். ராயரும் நாகமரும் ஒருவருக்கொருவர் மன்னிப்புக்கேட்டு மன்றாடினார்கள். அரசு பொறுப்புகளிலிருந்;து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார், நாகமர்.
நாகமரின் கொல்லவாருக்கான விஜயநகரக் கொள்கையைக் கைவிடச்செய்தது எது? வி~;வாவுக்கு கிடைத்த அரவநாடாக இருக்கலாம். விஜய நகர அதிகாரத்தை, காப்புபலிஜர் குலமே நீட்டிக்குமா? கொல்லவாருகுலம் கைப்பற்றுமா? என்ற போட்டி சமரசத்தில் முடிந்துள்ளது.  உடைமைச் சமூகத்தில் எல்லாமே சொத்துதான். மண்ணும், பொன்னும், பெண்ணும் இவற்றின் மீதான அதிகாரமும் அனைத்தும் சொத்துக்;களே. இதற்காகத்தான் போட்டிகளும், சண்டைகளும். சொத்துடைமைச் சமூகத்தில் அதிகாரத்திற்கான போட்டியில் சமரசத்தின் பங்கு என்ன? எதிர்ப்பவன் தோப்பு கேட்கிறான். அதிகாரத்தில் உள்ளவன் பழத்தைக் கொடுத்து சமரசத்தை வலியுறுத்துகிறான். பழத்தைப் பெற்றுக் கொண்டவன் சமரசத்தை ஏற்றுக்கொள்கிறான். சமரசத்தின் வரலாறே இப்படித்தான். விஜயநகர அதிகாரம் காப்புபலிஜனுக்கா? கொல்லவாருக்கா? இரண்டிற்கும் இடையில்  சமரசத்தின் சின்னமாக அமைந்தது அரவ நாடு.
          அரவநாடு என்பது மதுரை.  மதுரையின் அரசன் வி~;வநாதன். அரசனின் அரண்மனை செங்கல்லால் ஆனது. மிகப் பழையக் கோட்டை. கல்கோட்டை கட்டுவது விஷ்வாவின் விருப்பம். தேவையான ஆட்களெல்லாம் வரவழைக்கப்பட்டுப் புதிய கோட்டைக்குத் திட்டம் வரைந்தாயிற்று. திட்டம் நடைமுறைப்படுத்தும் முன் கோட்டைக்கான பூஜை நடைபெற வேண்டும். இருபத்தியிரண்டு மந்திரவாதிகள் முன்னிலையில் அமாவாசை நடு இரவில் பூஜை துவங்கியது. திசைக்கு ஒருவனாக நான்கு திசையிலும் நிகழும் மனிதப்பலி. மேற்கு வாசலில் சக்கிலியனும், வடக்கு வாசலில் வெக்கிலியனும், கிழக்கு வாசலில் சில்லவானும், தெற்கில் வல்லக்கவானும் தயாராக இருந்தனர். மூத்த குடியான சக்கிலியனுக்கே முதல் மரியாதை. மந்திரவாதிகளின் உடுக்கை ஒலி மேற்கிலிருந்து அதிர்ந்தது. சத்தத்தின் ஊடே சக்கிலிய இளைஞன் முதல் மரியாதையை எடுத்துக்கொண்டான். கையிலிருந்த குறுவாளால் தன் கழுத்தையே அறுத்துக்கொண்டான். மேற்கு திசையில் காரியம் முடிந்தது. அடுத்தடுத்து மூன்று திசையிலும் அதேபோல் அதிர்ந்தது உடுக்கை ஒலி. இறுதியாக அடங்கியது, உடுக்கையும் மற்ற மூவரின் உயிரும். இந்த பூஜையில் பலியான நான்கு இளைஞர்களும் கொல்லவாருகளே.
          கொல்லவாருகளுள் அதிகாரமுடைய வாரும் அதிகாரமற்ற வாரும் சரிசமமற்றவர்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள். சக்கிலியர்கள் மூத்த குடிகளாம், புகழ்கிறார்கள். இவர்கள் அதிகாரமுடையவர்கள் அல்லர். அதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டியவர்கள். இந்த மூத்த குடிக்கே முதல்மரியாதையாம். புகழில் மயங்கியவர்களுக்கு இரத்தம் சிந்துவதே முதல் மரியாதையாக அமைகிறது. கோட்டை கட்டுவதற்காகப் பூஜை. கோட்டை அரசனின் நலனுக்கானது. இந்த பூஜையில் தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் துணிச்சல் ஒருமனிதனுக்கு எப்படி வர முடியும்? துணிச்சல் வருவதைத்தவிர வேறுவழியுமில்லை. மறுக்க முடியாது, ஏற்றுக்கொண்டால் அரச மரியாதையோடு உயிர் விடலாம்.  சிறை, சித்திரவதை, படுகொலையெல்லாம் எவ்வளவு கொடூரம்? இதற்கு விடைதான் கோட்டைபூஜையில் தானே முன்வந்து நிகழ்ந்;துள்ள நான்கு பலிகளும்.
          பாளையம் பிரிக்கும் திட்டத்திற்கு வேகம் காட்டினான் விஷ்வா. வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அதிகாரம் செலுத்துபவன் பாளையக்காரன். மக்களிடம் வரியை வசூலித்து அரசனுக்குரியதை ஒப்படைப்பதும், போருக்குத் தேவையான படைகளை வழங்கிச் சேவை செய்வதும் பாளையக்காரர்களின் பொறுப்பு. அரசனுக்குக் கட்டுப்படுவதில்தான் பாளையக்காரர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதுதான் பாளையக்காரமுறை. பிரிக்கப்பட்ட பாளையங்களின் பாளையக்காரர்களை வாசித்தான், அரியநாதன். பாளையக்காரர்கள் பட்டியலில் ராமபத்ர நாயக்கரும், செஞ்சு வேடர்குலத்தலைவரும் இடம் பெற்றிருந்தார்கள். அமைதியாக கலைந்த கூட்டத்தில் ஒவ்வொரு மனதும் புகைந்தது, மறுநாள் காலை வெடித்தது. விஷ்வநாதனிடம் கேசவன் வெளிப்படுத்திய தளபதிகளின் ஆதங்கம் இதுதான். ராமபத்ர நாயக்கர் ஒரு காப்புபலிஜர். செஞ்சு வேடர்குலத்தலைவனோ தாழ்ந்த சாதிக்காரன். ஒருபலிஜனுக்கு பாளையம் கொடுத்தது பரவாயில்லை ஏனெனில் வடுகநாட்டில் பாளையக்கார வரலாற்றில் கொல்லவாருகளும் காப்புபலிஜர்களுமே பாளையக்காரர்கள். ஆனால், தாழ்ந்த சாதிக்காரனுக்கு பாளையக்கார அந்தஸ்து கொடுத்து சக சாதியினனாக நடத்துவது வழக்கத்திற்கு மாறானது என்பதே பிரச்சினை. உறுதியாகவும், இறுதியாகவும் சொன்னான் வி~;வா. தீர யோசித்து எடுத்த முடிவில் இனி மாற்றமில்லை. அவரவர் பிரச்சனையை மட்டும் பேசச்சொல் என்று அனுப்பி வைத்தான்.
பிரிக்கப்பட்ட பாளையத்தில் அதிக எண்ணிக்கையும், அதிக பலமும் கொண்டவர்கள் எந்த சாதியாக இருந்தால் என்ன? அந்த சாதிக்காரனை பாளையக்காரனாக ஆக்குவதுதான் பலம். விஷ்வாவின் வாதம் இதுதான். அவன் கணக்குப்படி அதிகார நலனுக்காகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்காக அமைந்தான் செஞ்சு வேடர் குலத்தலைவன்.
          பாளையக்காரர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டினான், வி~;வா. எர்ரஜக்குவுக்கும், கண்டமனுக்கும் பிரிக்கப்பட்ட பாளையம் வெறும் காடுகளே. காட்டை அழித்து விளைநிலமாக்கினாலும் விவசாயம் செய்வது யார்? அந்தப்பாளையக்காரர்களுக்கு விவசாயிகள் கிடையாது. இந்தப் பிரச்சனையே அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  திண்டுக்கல் வட்டத்தில் அதிகம் இருக்கும் காப்பு ஒக்கலிகர்களை குடியேற்றிவிடலாம். இரண்டு தலைமுறையில் நஞ்செய் நிலமாக்கி விடுவார்கள் என்று யோசனையை எடுத்து விட்டார் சகரம் தொப்பள நாயக்கர். பாஷை தெரியாதவர்களை எப்படி சமாளிப்பது? அதுவும் காப்புபலிஜர் குலம் என்று தயங்கினார் எர்ரஜக்கு. ஒக்கலிகர்கள் காப்புகளல்ல வடுகர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விளக்க முயற்சித்தார் வெக்கிலியர் கோடங்கி நாயக்கர். இவர் குலக்கதைப் பாடல்களையெல்லாம் அறிந்தவர். ஒக்கலிகர் ஆதியில் வடுகர்கள்தான். முன்னொரு காலத்தில் காப்புகள் ஸ்ரீஜைலத்தை இழந்து வடக்கே போன போது அதில் ஒரு பிரிவினர் மேற்கே வந்து நம்மோடு கலந்து விட்டனர். நமது சடங்குகள்தான் அவர்களுக்கும். புதிதாக வந்தவர்கள் ஆதலால் அவர்களது தேவர ஆவுக்கு கம்பளி அதிகாரம் மட்டும் தரவில்லை. பிறகு பெனுகொண்டாவில் இருந்து கன்னடதேசத்திற்குப் போய் வடுகை மறந்து விட்டனர். ஆனால், முன்னொரு பஞ்ச காலத்தில் நம்மிலிருந்து பிரிந்து கிழக்கே நதியோரம் போன சக்கிலியர்களை காப்புகள் அடிமைபடுத்தி விட்டனர்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-101). இது வெக்கிலியர் கோடங்கி நாயக்கரின் வார்த்தைகள். இறுதியில் காப்பு ஒக்கலிகர்களை குடியேற்றும் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வி~;வநாதன் இறந்தார். அவர் மகன்; கிருஷ்ணனே மதுரையின் அரசன். கோல்கொண்டா சுல்தான் இப்ராகிமின் படையெடுப்பில் ஏராளமான மக்கள் இறந்தார்கள். தப்பித்தவர்கள் காடுகளில் ஓடித்திரிகிறார்கள். காடுகளில் எப்படி வாழ முடியும்?. விஷயம் கேள்விப்பட்ட லட்சுமியம்மாள் செஞ்சி, வேலூர், மதுரைக்கு ஓலை அனுப்பினாள். இவள், கிரு~;ண தேவராயரின் மகள், செல்லிக்குத் தோழி, கிருஷ்ணனுக்கு சித்தி. உணவும் உதவிகளும் தந்து காப்புகளை பராமரிக்கும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வளவுதான் அரியநாத முதலி பொரும ஆரம்பித்தார். காப்புகளும், அவர்களோடு மாதிகர்களும், கொஞ்சம் வணிகர்களும் வருகிறார்கள் என்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. லட்சுமியம்மாளை தூண்டி விட்டது வடுகபார்ப்பான் நரசிம்மையாவின் வேலை என்று நம்பினார். காப்புகள் குடியேறிவிட்டால் பாளையங்களை கொடுக்கச் சொல்வான் நரசிம்மைய்யா. எக்காலத்திலும் ஒத்துக்கொள்ளாதே என்று கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.  மதுரை அரசின் காட்டுப்பகுதியில் குடியேற்றுமாறு யோசனை கூறினார்.
அரியநாத முதலி;யின் ஒவ்வொரு சொல்லிலும் பாளையங்களின் மீதான அக்கறை வெளிப்படுகிறதே ஏன்? காப்புகள் திமிர்பிடித்தவன்கள், கொல்லவாருகளோடு ஒத்துப்போக மாட்டான்கள் என்றெல்லாம் கிருஷ்ணனிடம் எதற்காக சொல்கிறார்? ஆயிரந்தானிருந்தாலும் காப்புபலிஜர்களும், கொல்லவாருகளும், நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியநாதரோ ஒரு முதலியார். இவருக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? இதன் அர்த்தம் கிருஷ்ணனின் வார்த்தையில் உறைந்திருக்கிறது.
வி~;வநாதனுக்கு விசுவாசமானவர், பொறுப்பான மந்திரி, முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அரியநாதமுதலி இப்படித்தான். ஆனால் கிருஷ்ணனின் ஆட்சியில் எப்படித்தெரியுமா? முதலிகளைக் குடியேற்றி சர்வ வசதிகளும் உடைய நான்கு  ஊர்களை உருவாக்கியுள்ளார். பாளையங்களை முதலிமார்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். அனைத்துப் பாளையங்களிலும் முதலிகளையே ராயசமாக நியமித்திருக்கிறார். எல்லாம் அறிந்திருந்த கிருஷ்ணன், ‘இதை எல்லாம் நீங்கள் ஏன் என் தந்தையின் காலத்தில் செய்யவில்லை?’ என்று முதலியின் கண்ணைப்பார்த்து கேட்க பலமுறை நினைத்திருக்கிறார். மரியாதையின் காரணமாக இதுவரை கேட்கவில்லை. ஆனாலும், ஒரு வேகத்தில் பேசிய கிரு~;ணனது வார்த்தைகள் அரியநாத முதலியை குறுக வைத்தது.
வீரசின்னுவின் புருசன் பொம்மலுநாயக்கன். கண்டமனூரிலேயே மந்தை வைத்திருந்தான். வீரசின்னுவின் தங்கை ரேணுகா. ரேணுகையின் அழகில் சொக்கிப்போய் அவளையும் கட்டிக் கொண்டான். வீட்டுக்குப் பெரியமனுசி அவ்வா. சண்டையென்று வந்துவிட்டால் யாரென்று பார்க்காமல் வெட்டும், அவ்வளவு கெடுபிடியான ஆள். கண்டமனூர் ஜமீனே அவ்வாவைக்கண்டால் கொஞ்சம் பம்முவான். பொம்மலுநாயக்கன் பாம்புகடித்து செத்துப் போனான். ரேணுகை இரண்டே ஆண்டில் விதவையான கொடூரம். பாவம், சின்னப் பொண்ணுதான் என்ன செய்யப் போகிறாள். வீட்டுக்கு தேவையானது போக மற்ற மாடுகளை விற்றுவிட்டு நிலம் வாங்குவது அவ்வாவின் முடிவு. மாட்டுவியாபாரி ராமானுஜம் அவள் முடிவுக்கு ஒத்தாசை. ரேணுகாவின் கண்ணெல்லாம் ராமானுஜம் மீதுதான். இவன் ஒரு காப்புபலிஜன். மாட்டுவியாபாரியாகத்தான் ஊருக்கு அடிக்கடி வருவதாக அவ்வா நினைத்தது. அவன் ஏழெட்டுமுறை படிதாண்டி நுழைந்திருக்கிறான் என்பது அவ்வாவுக்குத் தெரியாது. ஆனால், அக்காவிற்குத் தெரியும். அக்காவுக்கு தெரியுமென்பது ரேணுகாவிற்கும் தெரியும். வீரசின்னுவின் கண்ணெதிரிலேயே சில சமயம் அவனை அறைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறாள். வண்ணாத்தி சொல்லிதான் அவ்வாவுக்குத் தெரியும். இனி, ஊர்ப்பக்கம் தலைகாட்ட மாட்டான் ராமானுஜம். அந்த அளவிற்கு அவ்வா பேசி விட்டது.ரேணுகாவின் கருவை குச்சிவைத்துக் கலைத்தாள் மருத்துவச்சி.
வயதுக்கு வந்து விட்டாள் மருத்துவச்சியின் மகள். கண்டமனூர் ஜமீன் மோப்பம் பிடித்து வந்தான். இவன் கொல்லவாரு குலத்தைச் சேர்ந்தவன். சின்னப்புள்ள, நாளாகட்டும் என்று கெஞ்சிப் பார்த்தாள் அம்மாக்காரி. மருத்துவச்சியின் சொல் எடுபடவில்லை. ஜமீன் வாலை ஆட்டி ஆட்டி குழைந்தான். பல்லைக்காட்டி மிரட்டினான். ஐந்து பவுன் கைமாறியது. மகளின் திருமண செலவுக்கும் உத்திரவாதம் கிடைத்தது. இரவு நேரம், குடிசையே கதறியது. அதைவிடக் கதறியது தாயின் உள்ளம். ஜமீன் மேய்வதைத் தாங்க முடியாமல் திமிறிக் கொண்டு ஓடி வந்தாள் பிஞ்சு மகள். விட்டுவிடும்படிக் கெஞ்சினாள். காலில் விழுந்து அழுதாள் மருத்துவச்சி. வெறி பிடித்த ஜமீன் விடுவதாக இல்லை. மருத்துவச்சியின் குலத்தையே கேவலப்படுத்துகிற பழமொழிகளில் வைதான். தாய் கோபம் சும்மா விடுமா! நீதாண்டா ஈனச்சாதிப்பய. உன் ஊர்ப் பொம்பளைக எல்லாம் ஒழுங்கா? எத்தனை பேரு பத்தினினு குச்சி வெக்கிற எனக்குத் தெரியாதா?’ அவ்வளவுதான், மருத்துவச்சியின் நாக்கிலிருந்து பிடுங்கினான் ரேணுகாவின் கருவை. இனி, ரேணுகாவின் முடிவு ஜமீன் கையில்.
ரேணுகாவின் மீதான கிரக்கத்தை அவ்வாவுக்குப் பயந்துதான் இதுவரைக் காட்டாமலிருந்தான் ஜமீன். வி~யம் தெரிந்தவன் இனி என்ன செய்வான்? விடியுமுன்னே பஞ்சாயத்துக் கூடியது. படியேறியவன் அல்லிப்பட்டிக்கார ராமானுஜம் என்பது உறுதியானது.  அதுவும் காப்புபலிஜன் என்றால் சொல்லவா வேண்டும்! தான் அனுபவிக்காதவளை அசலூர்க்காரன் அனுபவித்துவிட்டானென்ற பொறாமையில் பயல் வெறிபிடித்துத் துள்ளினான். லட்சுமிபட்டியில் ஒரு சடங்கு வீட்டிற்கு போயிருந்தவனை இழுத்துக்கொண்டு வந்தார்கள் கண்டமனூர் இளைஞர்கள். லட்சுமிபட்டியிலிருந்து ராமானுஜத்துக்காகப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள், ஊர்க்காரர்கள்.
மன்னித்து விடனும் என்று மன்றாடினார்கள். பெரியகுளம் ஜமீன் வரும்வரை ஆறப்போடச் சொன்னார்கள். காப்புகள்லாம் ஒண்ணு சேந்துக்கிட்டு வாறீங்களாடா? பலிஜனுக்கு பாளையம் கொடுத்ததே தப்பு. போயி கவரைப் பொண்ணப்பிடிக்க வேண்டியதுதானே கம்மாளப் பொண்ணுதான் வேணுமாக்கும்!’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்று கொதித்தான் ஜமீன். நல்லாண்டு என்ற லட்சுமிப்பட்டிக்காரன் நறுக்கென்று சொன்னான். அந்தப் பொண்;ண வேணா நாங்க கூட்டிட்டுப்போறோம். நம்ம பயலுக்கு நாலு அடியப் போட்டு அனுப்பி விடுங்க’(சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்றான். லட்சுமிப்பட்டிக்காரர்களுக்கே அடிவயிறு விக் என்றது. ஜமீனை சொல்லவா வேண்டும்.  ஏண்டா கலப்பை பிடிக்கிற பயகளுக்கு கொல்லவாரு பொண்ணு கேட்குதோ! உங்களை உக்கார வச்சுப் பேசுன என்னைச் செருப்பால அடிக்கணும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்று வசைமாரிப் பொழிந்தான்.
கண்டமனூர் மந்தையில் தீவனப்படைப்பாய் எரிந்தாள், ரேணுகா. ராமுபகடைதான் ராமானுஜத்தைத் தண்டித்தான். வைகை நீரில் தலையை முக்கியதில் மூச்சு முட்டி இறந்தான். பகடாலுவாரு என்பது தமிழ்நாட்டில் பகடை என்று மறுவியது. தீர்ப்பு வழங்கும் உரிமையும், தண்டிக்கும் உரிமையும் உடையவர்கள். ஆதியில் குலதெய்வத்தையே கொன்று தின்றதால் தீர்ப்பு வழங்கும் உரிமை மட்டும் பறிபோனது. செம்மணி அந்தஸ்து உடையவர்கள். மற்ற கொல்லவாருகளைப் போல கருகமணி அணிவதில்லை.
சாதியம் நிலப்பிரபுத்துவத்தில் வேரூன்றிய பண்பாடு. நிலவுடைமைச் சமூகத்தில் பெண் என்பவள் சொத்து. பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு என்பது உடைமைச் சமூகத்தின் மானம், அந்தஸ்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. அதனால்தான், சமூகத்தில் பாலினங்களின் இயல்புத் தேவையாக கருதப்படுகின்ற பாலுறவு, காதல்  போன்றவை மதம், சாதி இவற்றின் கௌரவப் பிரச்சனையாகி விடுகின்றன. மாபெரும் கலவரங்கள் வெடிக்கின்றன. ரேணுகாவின் பாலியல் தேவையும், ராமானுஜம் மீதான ஜமீனின் பொறாமையும் சாதிய மோதலாக வெளிப்பட்டிருக்கிறது. காப்புபலிஜத்தின் மீதான கோபமும், கொல்லவாருகளின் கௌரவமும் வெளிப்படுவதற்கு ரேணுகா எப்படி விதையாக முடியும்? கொல்லவாருகளைப் பொருத்தவரை ரேணுகா கலங்கப்பட்ட சொத்து. கலங்கம் ஏற்படுத்தியவன் களையெடுக்கப்பட்டான். கொளுந்து விட்டு எரியும் சொத்தில்(ள்) கொல்லவாரு குலம் பிரகாசிக்கிறது. சமூகம் அழுகிப் போய் நாறுகிறது. ச்சீசாதியத்தின் ஒரே வீச்சம்!     
ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் உள்;ர் ஆதிக்கக்காரர்களின் உதவியுடன் எடுத்த முடிவு. விஷ்வநாதன் காலத்தில் எழுப்பப்பட்ட மதுரை கோட்டைச்சுவரை இடிப்பதற்கான முடிவு. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்காக, கிழக்கிந்திய கம்பெனியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. மதுரை கலெக்டர் பிளாக்பெர்னின் முடிவு. மக்கள் மனதில் கோட்டை கல்லால் ஆனது அல்ல, முன்னோர்களின் ரத்தம். 21 காவல்தெய்வங்களின் வீடு. இடிக்க நினைத்தவர்கள் அரசத்துப் போவார்கள். காவல் தெய்வங்களின் கோபம் சும்மா விடாது. மக்கள் எதிர்ப்பை மழுங்கடிக்கும் வேலையும் சிறப்பாய் நடந்தது.
காவல் தெய்வங்களுக்குப் பரிகார பூஜை. காவல் தெய்வம் இருபத்தியொன்றையும் இழுத்து வந்தார்கள் மந்திரவாதிகள். கோட்டைச் சுவரிலிருந்து வந்தவர்களைச் செல்லத்தம்மன் ஏற்றுக்கொண்டாள். மக்களின் மூதாதையர்களும், நடுகற்களும் கோட்டைச் சுவரினுள் இருக்கிறது. மக்கள் என்ன செய்வார்கள்? ஆறுபேர் கொண்ட குழு இம்மிடி செட்டியார் தலைமையில் மதராஸ்; சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுத்தது. பிளாக்பெர்னும் சந்தித்தான், கவர்னருக்கு விளக்கம் கொடுத்து அனுமதியுடன் திரும்பினான். மக்களுக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு கொத்தளமாக வந்தார்கள். மூதாதையர்களது சின்னங்களை எடுத்துப் போகும் சடங்கு நிகழ்ந்து கொண்டே இருந்தது. உருமியின் ஒலியும் குலப்பாடகனின் பாடலும் கேட்டுக் கொண்டே இருந்தது. மக்களின் இத்தகைய செயல்கள் கலெக்டரை ஏதோ செய்தது. மேலும் விளங்கிக் கொள்ள இம்மிடிச் செட்டியை சந்தித்தார், பிளாக்பெர்ன். இம்மிடியின் கோபம் மாறவில்லை. பிளாக்பெர்ன்;, தணிந்து, தணிந்து பேசினான். அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது
கிழக்குகோபுர வாசலுக்கு வந்ததும் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கருப்பசாமி, மதுரைவீரன் சிலைகளைச் சுட்டிக்காட்டினார் கலெக்டர். இரண்டு சிலைகளும் கோட்டைச்சுவரிலிருந்திருந்;தது. இப்பொழுது அதை வழிபடுபவர்கள் கோபுர வாசலில் வைத்துவிட்டார்கள். கலெக்டர் சொன்னார் மதுரை வீரன் சிலையை அகற்ற வேண்டும் என்று உயர்சாதிக்காரர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். இரண்டு சிலைகளையும் அகற்ற வேண்டுமென்று கோவில் பட்டர்களும்; பிராமணர்களும் மனு கொடுத்திருக்கிறார்கள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-343). சாமிகள்தானே! இருந்து விட்டுப்போகட்டும் என்று இம்மிடி தொடர்ந்து பேசினார். ஒரே குலத்தில் ஒரு பிரிவினர் ராஜாக்கள்! இன்னொரு பிரிவினர் தோட்டிகள்! வடுகர்களின் அத்தனை போர்களிலும் சக்கிலியர்கள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். வெக்கிலியர் இந்த மண்ணெல்லாம் பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பினார்கள். இன்று சக்கிலியர் தமது சாமிக்கு நிற்க ஒருபிடி மண் தேடுகிறார்கள்! நீங்கள் துப்புறவு  வேலைக்கு நியமித்தபின் தோட்டிகளாகவும் ஆகிப் போனார்கள்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-343) இம்மிடி செட்டியின் வருத்தம் நிறைந்த இவ்வார்த்தைகள் கொல்லவாரு குலத்தின் நிலையையே விளக்கி வரைகிறது.
வெள்ளைக்காரன் எதிர்பார்ப்பதை விட மதுரை வேகமாக வளர்ந்தது. கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு கட்டிடங்கள் பெருகின. மக்கள் கூட்டம் நகரத்திற்குள் குவிந்தது. குடியேற்றம், கடைகள், போக்குவரத்து எல்லாம் பெருகின. கிராமத்திலிருந்து வந்தவர்கள் வீடுகட்டிக் குடியேறிக் கொண்டேயிருந்தார்கள். நிலப்பிரபுத்துவ சாதியம் அவ்வப்பொழுது கழுத்தை நீட்டும்;. பிரிட்டி~; ஏகாதிபத்தியத்தின் ஆளுமை. நகரின் வேகமான சுழற்சிக்குள்; சாதியம் என்ன செய்யும்? நிதானம் கிடைக்காமல் ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல நடிக்கும். சிம்மக்கல் பகுதியில் இதுதான் நடந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகட்டினார்கள். ஆதிக்கச் சாதியினர் எதிர்த்தார்கள். நகருக்குள் யார்? யார்? இருக்க வேண்டுமென்று காலங்காலமாய் இருக்கும் நடைமுறையை மீறக்கூடாது என்று கத்திப்பார்த்தார்கள். நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனையை நகரம் கண்டுகொள்ளவில்லை. சக்தி இல்லாமல் அப்பொழுது மட்டும் அமைதியானது, சாதியம்.
மக்களை இருள் சூழ்ந்தது. பஞ்சத்தில் வாடியவர்கள் பசியால் செத்தார்கள். ஊர் ஊராய் மக்கள் கொள்ளை போனார்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு வேலை இல்லை. கொத்துக் கொத்தாய் பிணங்கள். இரண்டும் இருந்தவர்கள் கஞ்சி ஊற்றினார்கள். உதிர்ந்த பருக்கைக்கு எறும்புக்கூட்டம் போல, கோப்பைக்குள் இடந்தேடும் பெருங்கடல் போல, காவயித்துக் கஞ்சிக்காக அலைமோதியது மக்கள் கூட்டம். அமெரிக்க மி~pனரிமார்களில் மனசாட்சியுள்ளவர்கள் கர்த்தரின் பேரைச் சொல்லி அழுதார்கள். மக்களை மீட்க மாற்றுவழி தேடினர். மிஷினரிமார்களின் கடிதங்களிலிருந்து சில
கஞ்சிக்கு நின்ற வரிசையிலும் சாதி. பசியில் எறியும் இரண்டு பிஞ்சு வயிற்றுக்காகக் கையேந்தி நின்றாள் தாய். பறைச்சி வரிசையில் நின்றால் என்னவாகும் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறுவழியில்லை. கையை நீட்டியவளை கட்டையால் அடித்தார்கள்;. விரட்டி விரட்டி மிதித்தார்கள். ஆதிக்க சாதி வெறிக்குப் பலியாவது பெண்ணென்றால் வன்புணர்ச்சியில்தான் முடியும். நிலப்பிரபுத்துவத்தில் இது ஒரு வழக்கம். நேரமில்லை போல, இல்லையென்றால் அதையும் செய்திருப்பார்கள். அருகில் இரண்டு குழந்தைகளுடன் இரத்தப்பிசுக்கேறிக் கிடந்தாள். ரெவ்.லாரன்ஸ் காப்பாற்ற முயற்சித்தார். இரண்டு குழந்தைகளுக்கும் வாழ்வு கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு உயிரை விட்டார், அந்தத்தாய். இது ரெவ்.லாரன்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள செய்தி.
ராயப்பன், மி~pனரிமார்கள் நடத்தும் பள்ளியின் ஆசிரியர். பள்ளியின் முன்பு சிறு கும்பல், ஆனால் மாணவர்கள் அல்ல. அந்தப் பெரிய மனிதர்கள் யார்? அவர்கள் ஆதிக்கச்சாதி மாணவர்களின் பெற்றோர்கள். மி~pனரிமார்களிடம் ஆவேசமாகப் பேசினார்கள். கிறிஸ்துவில் சேர்ந்தவர்க்கு சாதி கிடையாதென்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியது அமெரிக்க மி~pனரி. மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ராயப்பன் உயர்சாதிப் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவதா? எப்படி அனுமதிக்க முடியும் என்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளை மிஷினரிமார்களது கல்வி நிறுவனம் தொடர்ந்து எதிர்கொள்கிறது. இது ரெவ். லாரன்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள செய்தி.
சென்னையில் அமெரிக்க மிஷினரிமார்கள் நடத்திய மாநாடு. காலம் 1850. எண்பத்தியிரண்டு பாதிரிமார்கள் கலந்து கொண்டனர். சாதிபாராட்டும் ஒழுக்கம் கூடாது. சபைகள் இத்தகைய ஒழுக்கங்களைக் கைவிட வேண்டும். இதை ஒரு விதியாக செய்தது அம்மாநாடு. சாதிபாராட்டுவது கிறிஸ்துவுக்கு எதிரானது என்ற அர்த்தத்தில், அனைத்துச் சபைகளும் கடைபிடிக்கவேண்டும். ஆனால் 26 ஆண்டுகளாகியும் நடைமுறையில் வலிமை பெறவில்லை. திருவிதாங்கூர் மிஷினரி சாதிபாராட்டுவதை அனுசரித்தே செயல்படுகிறது. தஞ்சாவூர் சபையில் பலி பெறும் பொழுது சாதிபாராட்டுதல்  அடிப்படையில் தனித்தனி இருக்கைகள் இருக்கிறது. இதனை அறிந்த உண்மையான கிறிஸ்துவால் மனம் வருந்தாமல் எப்படி இருக்க முடியும்? இது அருட்தந்தை ஜேம்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள செய்தி.
ஆரோக்கியமேரி, சிறுபிள்ளைகளுக்குப்பாடம் நடத்தும் பெண். இவரது பணியிடம் ரெவ். மார்ஸ்டன் தலைமையிலான கலாசாலை. ஆதிக்க சாதிக்காரர்கள் பிரச்சனை செய்தார்கள். தாழ்த்தப்பட்ட குலத்திலேயே பிறந்த ஒருத்தி பாடம் நடத்துவதையே நாங்கள் ஏற்கமாட்டோம். அதுவும் அவள் ஜாக்கெட் வேறு அணிந்து வருகிறாள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-717) என்று முட்டிப்பார்த்தார்கள். ஆரோக்கிய மேரி என்கிற கிறிஸ்தவப் பெண் ஜாக்கெட் அணிந்து பாடம் நடத்துவதை எதிர்க்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை’(சு.வெங்கடேசன்: 2008,பக்-718) என்று கலெக்டர் நிர்வாகம் தீர்ப்பளித்தது. வேறு வழியில்லாமல் வாலைச்சுருட்டிக் கொண்டு போயுள்ளார்கள்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அமெரிக்க மிஷினரியும் சாதிய அநீதியை எதிர்த்தார்கள். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இத்தகைய முடிவுகள் நாவலில் வலிமை பெற்றுள்ளன. ஆனால் எத்தகைய நோக்கத்தின் அடிப்படையில் இதை செய்தார்கள்? இந்த நுண் அரசியலை நாவலாசிரியர் வெளிப்படுத்தவில்லை. அதற்கான முயற்சியும் தென்படவில்லை.
குஞ்சரத்தம்மாள், தாசி குலத்து மனிதர். இவளது அழகு செல்வந்தர்களின் சொத்துக்களை காந்தம் போல கவர்ந்தது. இவள் அளவிற்கு எந்த தாசியும் சொத்து சேர்க்கவில்லை. பஞ்ச பராரிகளாய் திரிந்து, பசியில் எரிந்து, தாது பஞ்சத்திற்கு மிரண்டு போயுள்ள மக்கள் எல்லாம் இவள் ஊற்றும் கஞ்சிக்காக குவிந்திருக்கிறார்கள். மற்ற செல்வந்தர்களின் மூட்டையெல்லாம் மக்களைக் காணாதது போலத் தூங்கின. குஞ்சரத்தம்மாள் வீட்டில் மட்டும் எந்த நேரமும் அடுப்பு எரிந்தது. பணக்காரர்கள் அவள் மீது வயிறெரிந்தார்கள். நாங்களும் கஞ்சி ஊத்துவோம் என்று சில சமயமாவது காட்டிக் கொண்டார்கள். ஆனால் குஞ்சரத்தம்மாள் அத்தனை செல்வங்களையும் மக்களுக்காக செலவிட்டாள். இறுதியில் எந்த சொத்தும் இல்லாமலேயே இறந்து போனாள். அவளுக்கு நிலைத்த ஒரே சொத்து மக்கள் மட்டுந்தான். மக்கள் அவளைத் தெய்வமாக்கினார்கள். ராஜம்மாவைப் போல் சலங்கை வைத்து வழிபட்டார்கள். யார் இந்த ராஜம்மாள்? கூத்தியார் குண்டு தெரியுமா? குருவிநத்தம் என்ற ஊரைக் கூத்தியார் குண்டு என்கிறார்கள். ராஜம்மாள், இந்த ஊரின் வரலாற்று நாயகி. இவளும் தாசி குலம். இவள் அழகில் திருமலை நாயக்கன் சிக்கித்தவித்தான். இவளை அந்தப்புர நாயகியாக்க அடம் பிடித்தான் அரசன். காதலன் இசைவாணனையும், தன் மக்களையும், ஊரையும், மண்ணையும் விட்டுப்பிரிகின்ற சக்தி ராஜம்மாளுக்கு இல்லை. அடம் பிடிக்கும் அரசனின்; அதிகாரம் பாய்ந்து விடும் என்று எச்சரித்தார்கள் செவிலிகள். தீர யோசித்து முடிவுக்கு வந்தாள். சிக்கிக் கிடந்தவனின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். சொக்கிப்போனவன் துள்ளிக்குதித்தான். பரிசு கொடுக்க விரும்பினான். அவள் உலகைக் கேட்டிருந்தாலும் பரித்துக்கொடுத்திருப்பான். ஆனால் அவள் கேட்ட பரிசு எளிமையானது. அவள் ஊரில் வைகை நீர் பாய்ந்து வருவதற்கு ஒரு கால்வாய். மறுப்பே சொல்லாமல் மன்னன் சம்மதித்தான். வேலையை வேகப்படுத்தினான் மன்னன். பல மாதங்கள் ஓடின. அதை விட வேகமாய் பாயத்துவங்கியது கால்வாய் நீர். குருவிநத்தம், விவசாய பூமியானது.
குருவிநத்தம் ஒரு எளிய கிராமம். அக்ரஹாரம் இல்லாத கிராமத்திற்கு முதன்முதலாக தண்ணீர் பாய்வதை பிராமணர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். பிராமணர்களின் பார்ப்பான் குளத்தை விட கூத்தியார்குண்டு கண்மாய் பெரிதாகவும் இருக்கின்றது. கொதித்துப்போன பிராமணர்கள் மன்னனிடம் பிரச்சனை செய்தார்கள். சாஸ்திரத்திற்கு எதிராக நடந்துள்ளதாகக் கொக்கரித்தார்கள். ராஜம்மாள், உலக அறிவால் பிராமணர்களின் குரல்வளையை நெறித்தாள். பார்ப்பான் குளத்திற்கு முன்பை விட அதிக நீர் கிடைக்குமென்ற சந்தோசம். ராஜம்மாவின் முடிவை பிராமணர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஒருநாள், மூன்று பொழுதாக பகுக்கப்பட்டது. இரண்டு பொழுது பார்ப்பான் குளக்கண்மாய்க்கு நீர்  திறந்து விடப்பட்டது. கண்மாய் நிறைந்தாலும் தொடர்ந்து பாய்ந்தது நீர். மற்ற ஏழு கண்மாய்க்கும் ஒரு பொழுது மட்டுமே நீர் பாய்கிறது. ராஜம்மாள் மட்டும் அறிந்த உண்மையை பார்ப்பான் குளம் உணர்ந்தது. பார்ப்பான் குளத்தின்  கண்மாய் நிறைந்ததும் தண்ணீர் கூத்தியார்குண்டு கண்மாய்க்கு ஓடியது. அதற்கு ஏற்றவாறு நிலவாகு அமைந்திருந்தது. பிராமணர்கள் வேறுவழியில்லாமல் சகித்துக்கொண்டார்கள். ஆனால், குஞ்சரத்தம்மாளோடு ராஜம்மாவையும் புதைத்து விடும் சதி நடந்தது. முன்னின்று நடத்தியவர் வக்கீல் சிவானந்தய்யர். இவர் ஒரு வில்லங்கமான மனிதர். ஆகம வேத சாஸ்திரங்களை நிலைநாட்ட கடவுள் எடுத்த அவதாரம் போல தன்னைக் காட்டிக் கொள்பவர்.
குஞ்சரத்தம்மாள் இறந்து மூன்று ஆண்டுகள் ஆயின. தாதுப் பஞ்சத்தால் நாதியற்ற மக்களுக்கு தெய்வமானாள். அவளை நினைக்காத மக்கள் இல்லை. விழாக்களில் நல்லதங்காள்  கதைப்பாடலும், குஞ்சரத்தம்மாள் கதைப்பாடலும் பாடப்பட்டது. ராஜம்மாளின் கதையைச் சொல்லுவது நல்லதங்காள் கதைப்பாடல். அல்லி அரசாணி, கோவலன் கதைப்பாடல்களைப் பாடுவதை விட நாதியற்றோர் தெய்வங்களின் பாடல்களையே மக்கள் விரும்பினார்கள். பாட்டுப்பாடும் பெண்களைச் சுற்றி உருகி உருகி அழுதார்கள், மக்கள். பாடகிகள் ஏராளமான தானியங்களைப் பெற்று சென்றார்கள். நகர செல்வந்தர்கள் பொருமிக்கொண்டு இருந்தார்கள்.
நகரின் கிழக்குப்பகுதியில் சிறு கோவில் கட்டப்பட்டது. கிழக்கில் நல்லதங்காளுக்கும், வடமேற்கில் குஞ்சரத்தம்மாளுக்கும் சிலை அமைக்கும் முடிவு. சிவானந்தய்யர் களத்தில் குதித்தார்.  தாசிக்குலத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயில் எடுப்பதை சாஸ்திரம் அனுமதிக்காது. நகருக்கே அழிவு ஏற்படுமென்று பூச்சாண்டி காட்டினார். யாரும் கண்டுகொள்வதாக இல்லை. நாதியற்றோர் தெய்வங்களுக்குக் கோயில் கட்ட முன்னின்ற ஒருவர் இறந்தார். அவரது இறப்பு சிவானந்தய்யரின் மிரட்டலுக்கு வலு சேர்த்தது. கோயில் எழுப்பும் பணியில் இருந்து மக்கள் பின்வாங்கினார்கள். சிவானந்தய்யரோடு சேர்ந்துள்ள செல்வர்களின் பலம் கூடியது.
சிற்பிகளுக்கு முன்பணம் கிடைத்தது. சிலை வடிப்பதற்கல்ல, நாதியற்றோர் தெய்வங்களைப் படைக்காமல் இருக்க. ஆண்டு தோறும் கதைப்பாடகிகள் ஏராளமான தானியங்களுடனும், பணத்துடனும் செல்கிறார்கள். பாடலில் மக்களை மகிழ்வித்ததற்காக அல்ல, நாதியற்றோர் தெய்வங்களைப் பாடாமல் இருப்பதற்காக. பிராமணியத் தத்துவ வெறி கொண்ட பார்ப்பனியர்களும், செல்வந்தர்களும் வெற்றிக் களிப்பை கொண்டாடினார்கள். நாதியற்றோர் தெய்வங்களைப் புதைத்து விட்டார்களாம். அவர்களுக்குத் தெரியாது, மக்களுக்காக வாழ்ந்தவர்கள் புதைவதில்லை, விதைகின்றார்கள்.
தெற்கு வெளி வீதியில் மிகப்பெரிய வண்டிப்பேட்டையை நாடார்கள் கட்டுகிறார்கள். வண்டிப்பேட்டையின் உள்ளீடாகக் கட்டப்படுகின்றது, நாடார்கள் மீதான மற்ற வணிகர்களின் பகை. பிராமணர்களின் பகையை ஏற்கனவே கட்டிக்கொண்டவர்கள் நாடார்கள் என்பதை மறக்க முடியாது. மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததற்காக மூப்பநாடார் மீது வழக்கு தொடரப்பட்டது. சாஸ்திர சம்பிரதாயங்களை நிலைநாட்டும் கொள்கை உடைய சிவானந்தய்யர் ஒரு வழக்கறிஞர். மூப்பநாடாருக்கு எதிராக வாதாடி தண்டணை பெற்றுத்தந்தார். கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் நாடார் பெண்கள் சம்பிரதாயங்களுக்கு எதிராக நடக்கிறார்களாம். குடத்தை தலையில் தூக்கிச்செல்லாமல் மேல் சாதிப் பெண்களுக்குச் சமமாக இடுப்பில் தூக்கிச் செல்வது ஆதிக்கச் சாதிக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். இந்த நிலையில், வண்டிப்பேட்டை கட்டிமுடிக்கப்பட்டால் வணிகத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் உடையவர்களாகவும் வந்து விடுவார்கள், நாடார்கள். ஆகவே, கோபம் கொண்டுள்ள ஆதிக்க சாதி வணிகர்கள் நாடார்கள் மீதான பிராமணர்களின் பகையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்துள்ளனர்.
நடுநிலையான படைப்பு என்று சொல்லப்படுவதில் விதவிதமாக முகம் காட்டியுள்ளது, சாதியம். குறிப்பிட்ட சாதியை உயர்த்திவிட்டு மற்றவற்றை ஒடுக்கும் சிந்தனை நாவலில் வெளிப்படவில்லை. அத்தகைய நோக்கமும் நாவலாசிரியருக்கு இல்லை. கதைநிகழும் காலக்கட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளை விவரித்துச் சொல்லியிருக்கிறார். இந்த விவரிப்புகளில் சாதியம் பற்றிய பதிவுகள் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் எழுத்துகளில் பிராமணிய எதிர்ப்பு மட்டுமே பிரகாசிக்கிறது.


  
இயல் 3
காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல்

          மதுரையை மேய்ந்து கொண்டிருந்தது மாலிக்காப்பூர்படை. யா அல்லா என்ற பெயரில் அட்டூழியம். காலம் 1328. மக்களின் இரத்தத்தால் மதுரை நனைந்திருந்தது. பெண்கள் அம்மணமாக இழுக்கப்பட்டார்கள். தாடிக்காரனின் குதிரையில் திமிறிக் கொண்டிருந்தார்கள் பெண்பிள்ளைகள். மக்களைப் போல மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. பலியாகும் மக்களுக்காக பாய்ந்து சண்டையிட்டான் கருப்பன். அட்டூழியக்காரர்கள் கர்ப்பினி என்ற காரணத்தால் சடச்சியை உசுரோடு விட்டார்கள். சடச்சியின் குரல் அவனது கொட்டும் இரத்தத்தில் கொந்தளித்தது. உசுரு இருக்குற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக் கூடாது.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-09). கருப்பன், சடச்சியின் துணைவன், மதுரையின் காவலன். இஸ்லாமிய  படையை எதிர்த்து போரிட்டான். இவனது சமயம் நாட்டுப்புறச் சமயம். இதற்கு நிறுவனங்கள் இல்லை என்பது அர்த்தம். இஸ்லாமியப் படையின் கண்களுக்குக் கருப்பனும் ஓர் இந்து. கருப்பன் போர் அறத்தை மீறவே இல்லை. எதிரியின் முன்னே பாய்ந்து வேல்கம்பை நெஞ்சில் பாய்ச்சினான். ஆனால், இஸ்லாமியப் படையின் வீரனோ முதுகில் இருந்து நெஞ்சுக்குழிக்கு ஈட்டியை இறக்கினான். சடச்சியின் வயிற்றில் மிச்சமிருந்தது கருப்பனின் உயிர். பகையை விதைத்;து விட்டது முகம்மதியப்படை. ஆயிரமாயிரம் சடச்சிகளும் கருப்பன்களும் கிளைப்பரப்பி வளர்ந்தார்கள். பகையை வேரறுக்க படையெடுத்தான் குமாரகம்பணன். முகம்மதியர் மூட்டிய தீயைத் தம் குலத்தின் இரத்தம் ஊற்றி அணைக்கத் துணிந்தாள், கங்கா. போருக்குத் தலைமையேற்ற இவள் கம்பணனின் துணைவி. இருவரின் சமயமும் சைவம். காலம்; 1371.
          அழகிற்குக் குறைவில்லாத அமணமலை. சிதைந்த சிற்பங்களான தீர்த்தங்கரர்கள் மலைக்கும் வெயிலுக்கும் பாறையில் பதுங்கி இருந்தார்கள்;. சமண சிற்பங்களை வணங்கினார்கள் சைவ ஜோடிகள். மதியத்திலிருந்து மாலைக்கு நடந்து கொண்டிருந்தான் சூரியன். செந்தாமரைக் குளத்தில் குளிக்க இறங்கினாள், கங்கா. ஆலமர நிழலில் காத்திருந்தான் கம்பணன். எத்தனையோ சமணர்கள் குளித்திருந்த குளமது. குளத்தில் குளிப்பவளுக்கு எழுந்திருந்த சிந்தனைகள் என்ன தெரியுமா? உலகையே ருசிக்க துடிக்கும் மனித ஆசையில் இருந்து சமணர்கள் விலகியது ஏன்? அவர்களின் தேடல் என்ன? அழிவின் முத்தம் அனைவரையும்  அரவணைக்கிறது. எவ்வழியில் போனவர்களுக்கும் அழிவே இறுதி. சிலைகளோ, கதைகளோ, எழுத்தோ எதுவும் மிஞ்சப் போவது இல்லை. வைகையோடு போன ஏடுகளும், கழுவேற்றத்தில் கருகிப்போன எண்ணாயிரம் சிந்தனைகளும் இதற்கு சாட்சி. எண்ணாயிரம் சமணர்களா! இருக்க முடியாது என்கிறீர்களா? ‘எண்பது பேரே ஆனாலும் அது கடவுளின் பேரால் நடந்தது. ஆட்சி அதிகாரத்தின் மமதையால் நடந்தது.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-18) கங்காவிடம் வெளிப்படும் இத்தகைய எண்ணங்கள் சமணர்களிடம் அக்கறையை, சைவர்களிடம் ஆதங்கத்தைச் சுமக்கிறது.
          போரில் வெற்றி. மதுரைச் சுல்தானின் கதையை முடித்தாள்  கங்கா. கம்பணனைச் சந்திக்க கோவில் பட்டர்கள் வந்தார்கள். சனாதன தர்மத்தைக் காக்க வித்யாரண்யர் ஸ்தாபித்தது, விஜயநகரம். அவர் சொற்படிதான் ஹரிஹர புக்கர்கள் அதை உருவாக்கினார்கள்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-31) என்று கூறி மிகையாக வாழ்த்தி சென்றுள்ளார்கள். ஹரிஹரரும், கம்பணனின் தந்தையாகிய புக்கரும் சைவர்கள். (உயிர் பிழைக்க மதம் மாறி இருந்தார்கள் என்பது வேறு கதை). ஒரு வை~;ணவனான வித்யாரண்யரின் சொற்படிதான் ஹரிஹரபுக்கர் விஜயநகரை உருவாக்கினர் என்று எப்படிச் சொல்லலாம். இதைக் கேட்டு கோபம் முட்டிய கம்பணன் பிறகு வேடிக்கையாக நினைத்துப்பார்த்தான். வெற்றிக்களிப்பில் கொஞ்சி குழைந்திருந்த போது கங்காவிடம் சொன்னான். கெட்டிக்காரர்கள்தான் இந்த வைதீகர்கள், வித்யாரண்யரைப் போல. அவர்கள் இன்று நிற்பதற்கு ஒரு தளம் இல்லை, விஜயநகரத்தைத்தவிர’(சு.வெங்கடேசன்: 2008,பக்-31) என்றாள் கங்கா. கங்காவின் சிரிப்பு கம்பணனுக்கு ஒத்தூதுவதாக அமைந்தது.
மீனாட்சி அம்மனின் கோவிலுக்குள் நுழைய விரும்பினாள், கங்கா. மீனாட்சியின் சிலை கோவிலுக்குள் இல்லை. முகம்மதிப் படைக்குப் பயந்து எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கம்பணன் சொன்னான். திருவிழா எடுத்து மீனாட்சியைக் கோவிலுக்குள் அரங்கேற்ற ஆணையிட்டாள் கங்கா. நல்ல வேளையாக முகம்மதியர்கள் கோவிலைப்பூட்டியதோடு விட்டுவிட்டார்கள். சமணக் கோவிலுக்குள் சைவர்கள் செய்ததைப் போல உள்நுழைந்து எதையும் சிதைக்கவில்லை’(சு.வெங்கடேசன்: 2008,பக்-30) இது நாவலாசிரியரின் பதிவு. தேடிக் கண்டுபிடித்த சிலையைக் கோவிலுள் அரங்கேற்றும் பெருநாள். மக்கள் பெருங்கடல் அலைமோதியது. மீனாட்சி தோணி போல மிதந்து வந்தாள். கோவிந்தன் காலெடுத்து வைக்க மீனாட்சி தன் குடிலுக்குள் புகுந்தாள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-35) அதோடு நாவலிலிருந்து விடைபெறுகிறார்கள் சைவ ஜோடிகள்.
          தஞ்சை மூன்று ஆண்டுகளாக மழையின்றி வாடியது. பஞ்ச சகதியில் காலெடுக்க முடியாமல் திணறினர் மக்கள். மழை வேண்டி யாகம் செய்தார், அரசர் விஜயராகவ நாயக்கர். இவர் ஸ்ரீவை~;ணவர். ஒரு நாளுக்கு இத்தனை முறை என்று கணக்கில்லை. ஆனால், உண்மையிலேயே ஸ்ரீரங்கனின் காதில் விழுந்திருக்கும் அளவிற்கு வாய்திறந்து கூப்பிடுவார் ஸ்ரீரங்கனை. யாகத்திற்கு நின்ற தங்கப்பசுவின் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்களுக்குள் புதைந்து நின்றான் மதுரைசொக்கன். சொக்கநாதன் மதுரையின்; அரசன். இவன் சமயம் சைவம்.  மக்களின் பட்டினியை நான்கு மாதத்திற்கு விரட்டியடிக்கும் செல்வத்தை இப்படியா கரியாக்குவது என்று வருந்தினான். இந்தக் கேலியை நேரில் பார்க்க வணிக நண்பனோடு மாறுவேடத்தில் வந்துள்ளான். வந்தவனின் கண்களைக் கொத்திக் கொண்டாள் மோகனாங்கி என்ற மங்கம்மாள். இவள் தஞ்சைக்கு இளவரசி, அரசனுக்குச் செல்ல மகள். மங்கம்மாளின் நினைவுகளோடு மதுரை திரும்பினான்.
சொக்கனுக்குத் திருமண ஆசை வந்து விட்ட மகிழ்ச்சியில் வேங்கடர் தயாரானார். பெண் கேட்கும் தோரணையில் தஞ்சைக்கு விரைந்தார். குதிரைப்படை தளபதியும் சொக்கனின் மெய்க்காப்பாளருமான இவர், வை~;ணவர். இவரது முழுப் பெயர் வேங்கடகிரு~;ணப்பர். தஞ்சை அரசரிடம் வந்த நோக்கத்தை விளக்கினார். விஜயராகவர் பண்பாளர், பலரிடமும் கருத்துக் கேட்டார். தபோநிதி சோமசுந்தர சுவாமிகளைத்தவிர மற்ற அனைவரும் எதிரான கருத்தையே சொன்னார்கள். சைவ மதாபிமானியான ராஜனோடு ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஸ்திரி எப்படி வாழ முடியும்?’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-166) மோகனாங்கி அதற்குள் விரும்ப ஆரம்பித்துவிட்டாள் சொக்கனை முழுவதுமாக. இவர்கள் திருமணம் மூலம் தஞ்சைக்கும் மதுரைக்கும் இடையிலான பகை முழுதாக உதிர்ந்து விடும். ஒற்றுமை மலரும். இரு அரசுகளின் பலத்தால் சுல்தான்களின் தொல்லையை முற்றிலும் ஒழித்து விடலாம். வேங்கடரின் இத்தகைய வார்த்தைகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. விஜயராகவநாயக்கர் உறுதியாக சொல்லியிருந்தார் அவையின் முன்பு. தஞ்சாவூர், மதுரை ராஜ்யங்கள் உருவான பின் சென்ற நூற்றைம்பது வருடங்களாக இருவருக்கும் இடையில் நல்லுறவு இல்லை. தொடர்ந்து போர்தான் எனவே பகையரசனுக்கு பெண் கொடுப்பதற்குச் சம்மதிக்க மாட்டேன்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-167)  தொடர்ந்து முயற்சித்த வேங்கடரை தளவாய் ரங்கப்ப நாயக்கன் இழிவுபடுத்தி அனுப்பினான்.
சொக்கனிடமிருந்து தஞ்சைக்கு விரைந்தது அரச ஓலை. திருமண வேண்டுகோளை ஏற்பதும் மறுப்பதும் தஞ்சாவூர் அரசரின் விருப்பம். ஆனால் மதுரைத்தூதுவர்களை அவமதித்தது ராஜதர்மமல்ல. தஞ்சாவூர் மீது மதுரைக்கு எந்த பகையும் இல்லை. நல்லுறவு தொடர வேண்டுமானால் அரசர் தன் அவையில் நடந்த அவமதிப்புக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-168). அரங்கனைத்தவிர யாருக்கும் தலைவணங்காத என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்வதா! என்ன தைரியமென்று சீறினார் விஜயராகவர். இதற்கிடையில் மோகனாங்கியின் விருப்பத்தைச் சொக்கன் அறிந்தான். தஞ்சையை வென்று ராஜ மரியாதையோடு மதுரையின் அரசியை அழைத்து வர உத்தரவிட்டான்.
தஞ்சை செய்த அவமானத்தை இரத்தத்தில் கழுவும் விருப்பத்துடன் படையுடன் விரைந்தார் வேங்கடர். அரண்மனைக்குள் பொதிந்திருக்கும்; மோகனாங்கியைப் பக்குவமாய்க் கைப்பற்ற தஞ்சையை முட்டிக்கொண்டிருந்தது மதுரை. நடுங்கிக் கொண்டிருந்த அரண்மனையில் ஸ்ரீரங்கனைக் கூப்பிட்டார் அரசர், இடையில் வேங்கடரையும் கூப்பிட்டுவிட்டார். தூதுவர்கள் வேங்கடகிரு~;ணரை அழைத்து வந்தனர். மரியாதை நிறைந்த  கண்களோடுப் பார்த்தார் வேங்கடர். தஞ்சை அரசர் உரிமையோடு பேசினார். வந்துவிட்டாயா? வா! என் வேளை வந்து விட்டது அப்பனே. ஸ்ரீரங்கன் கூப்பிடுகிறான். என்னை வைகுந்தத்திற்கு அனுப்பிவை. ஒரு வீரனோடுதான் போரிட்டு சாவான் விஜயராகவன். அறியாமையால் ஏதேதோ செய்துவிட்டேன். எல்லாம் எம்பிரான் சித்தம். என்னைக்கொன்று விட்டு மங்கம்மாவை அழைத்துக் கொண்டு போ’(சு.வெங்கடேசன்: 2008,பக்-187) அவ்வளவுதான் அடுத்த சில பொழுதுகளில் தஞ்சை தானாகவே சரிந்தது.
          மதுரையின் கோட்டைச் சுவருக்குள் ஏராளமான நடுகற்கள். சாரை சாரையாக வருகின்ற மக்கள் கோட்டையிலிருக்கும் முன்னோர்களின் சின்னங்களை எடுத்துச் செல்கிறார்கள். இதற்குக் காரணமான கலெக்டர் பிளாக்பெர்னால் இவர்களது செயலை முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐரோப்பாவில் நடுகற்களை நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கும் நாம் மதுரையின் கோட்டைச் சுவரை இடிக்கச் சொன்னது சரிதானா? மதுரையின்; கலெக்டருக்கு மனது உறுத்;தியது. குல வரலாற்றுப்பாடகனின் தலைமையில் நடுகற்களைத் தூக்கிச் செல்லும் மக்களைப்பற்றி முழுதாக அறிய விரும்பினார். கலெக்டரின் முடிவுப்படி இம்மிடி செட்டியார் இதற்கு சரியான ஆள்.
இம்மிடி செட்டியைத் தெரிகிறதா? கோட்டைச்சுவரைப் பாதுகாக்க மதராஸ் சென்று கவர்னரைச் சந்தித்து பிளாக்பெர்ன் மீது புகார் கொடுத்த குழுவின் தலைவர். தமிழ், தெலுங்கில் புலமை பெற்ற கல்வியாளர். இன்னும் இவருக்குக் கோபம் அடங்கவில்லை. கலெக்டரின் அழைப்பை உறுதியாக நிராகரித்தார். வேறுவழியில்லாமல் கலெக்டரே இறங்கி வந்தார். துபா~p செட்டியாரின் உதவியுடன் இம்மிடியைச் சந்திக்க புது மண்டபத்திற்கு கிளம்பினார். மாலை நேரம், மக்கள் மயங்கிக் கேட்டு;க் கொண்டிருந்தனர். வி~;வநாதராஜாவின் வீரகதைப்பாடலை ராகமிட்டு பாடிக் கொண்டிருந்தார், இம்மிடி.
கலெக்டரை திரும்பி பார்க்கும் மக்களின் கழுத்து கேள்விக்குறியைப் போல நெளிந்திருந்தது. கலெக்டரை கவனித்தார் இம்மிடி. இம்மிடியின் பார்வை கல்லெறிந்தவனை முறைத்துப்பார்க்கும் நாயைப் போல இருந்தது. கூட்டத்தை உடனே முடித்துக்கொண்டார் இம்மிடி. கோவிலுக்குள்; சென்று பேசலாமென்ற கலெக்டரின் விருப்பத்தை துபாஷி தெரிவித்ததும் இம்மிடி கிழக்குக் கோபுரம் நோக்கி நடந்தார். நந்தி சிலைக்குப்பின் நின்று கைகூப்பி வணங்கிய பிளாக்பெர்னை ஆச்சரியத்துடன் பார்த்தார் இம்மிடி. இரண்டாம் பிரகாரத்திற்குள் நுழைந்ததோடு நின்று கொள்ள வேண்டும், அதைத்தாண்டி உள்ளே அன்னியர்கள் நுழைய முடியாது என்பதை கலெக்டரின் கண்ணைப்பார்த்துச் சொன்னார், இம்மிடி.
பொற்றாமரைக் குளத்தின் ஒரு மூலையில் அமர்ந்து பேசத்துவங்கினர். நகரின்; விரிவாக்க நலனைக் கருதிதான் கோட்டைச் சுவரை இடிக்க முன்வந்துள்ளேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. நம்புங்கள், உங்கள் பண்பாட்டுச்சின்னங்களை நாங்கள் மதிக்கிறோம். நடுகற்கள் கோட்டைச்சுவருக்குள் இருப்பதும், வழிபடப்படுவதும் எனக்கு உண்மையாகவே தெரியாது. இப்பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது. மேலும் தெரிந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க விரும்பினேன் என்றார் கலெக்டர். இம்மிடி செட்டியார் நம்புகிறாரோ இல்லையோ கலெக்டரின் பேச்சில் துளியளவும் பொய்யில்லை என்பதையே நாவலாசிரியரின் எழுத்து உணர்த்துகிறது. 
நீங்கள் இடித்தாலும் நாங்கள் எங்கள் முன்னோர்களைக் கைவிட மாட்டோம்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-339) என்றார் இம்மிடி. இருவரின் பேச்சும் ஐந்து பக்க நீளத்திற்கு நீண்டு கொண்டிருந்தது. விஷ்வநாதரின் புகழ்பாடிக் கொண்டிருந்த இம்மிடியிடம் கலெக்டர் இவ்வாறு சொன்னார். தக்காண வரலாற்றில் முகமதியர்கள்தான் அதிக வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-341)  உடனே பாய்ந்தது இம்மிடியின் பதில். இருக்கலாம். ஆனால் நாங்கள் அழிந்து விடவில்லை. ஐநூறு வருசமாக யுத்தத்தில் இருந்திருக்கிறோம். அவ்வளவு பலி கொடுத்த பின்னும் ஒவ்வொரு வீடும் தலைமுறைதோறும் சந்ததிகளைப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொண்டேதான் இருந்தது. கடைசி வரை எங்களை அடக்கி ஆள முடியவில்லை. பெண்தெய்வங்கள் தம் மக்களை ஏவிக் கொண்டே இருந்தன. விடாது பழி தீர்த்துக்கொண்டே இருந்தன. அதனால்தான் அந்த யுத்தம் ஓயவே இல்லை.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-341)ஒரு கிறிஸ்தவ அதிகாரியிடம் இம்மிடி செட்டியின் இஸ்லாமிய வெறுப்பு கக்க வைக்கப்பட்டுள்ளது.
          மதுரை கோட்டைச்சுவர் இடிபட்டுக் கொண்டிருந்தது. நகரின் முக்கியஸ்தர்கள் ஆளாளுக்குக் கைவைத்தார்கள். அவர்களில் கணே~ முதலியும் ஒருவர். மேஸ்திரி பெருமாள் முதலி இவருக்கு பேரன். ஒரு இரவில் தாத்தா என்று அலறிய போது பாட்டனார் மீது அவர் வைத்திருந்த அன்பை அளவிடமுடிந்தது. அவரை அலற வைத்தது ஓரு கனவு. அவர் கண்ட கனவு இதுதான்.
பரவிக்கிடக்கும் சிற்பங்களால் பொழிவு பெற்றிருந்தது மதுரை. உளிகளின் நாக்கால் கற்களை ருசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் சிற்பாசிரியர்கள்.  சிற்பிகளுக்கெல்லாம் தலைமைச் சிற்பி சரிந்து கிடந்தார். மண்டபத்தின் மையத்தூண் சிற்பியின் பிடரியை அடித்து முதுகுத்தண்டில் தலை வைத்து படுத்திருந்தது. தலைமைச்சிற்பியின் மரண பயங்கரம் மதுரையை பயத்தில் உறைய வைத்தது. பாட்டனாரிடம் மரணச் செய்தியை சொல்வதற்கு ஓடுகிறார் பெருமாள் முதலி. கோட்டைச் சுவருக்குக் கீழே பேசிக் கொண்டிருந்தார் கணேசமுதலி. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறான் குதிரைலாயத் தலைவன். மேலே சுவரை இடித்துக் கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள். முக்கியஸ்தர்களில் ஒருவர்; சும்சுதீன்பாய் என்ற இஸ்லாமியர். இவ்வேலையை நடத்திக் கொண்டிருக்கும் மனிதர் இவர்தான். மேலே இடிப்பவர்கள் கீழே பார்க்கவில்லை. கீழே பேசுபவர்கள் மேலே பார்க்கவில்லை. அவர்கள்; வேலை அவர்கள் போக்கில் நடந்து கொண்டிருக்கிறது. தூரத்திலிருந்து கவனித்த பெருமாள் மேஸ்திரிக்குத்தான் விபரீதம் தெரிகிறது. தாத்தாவைக் கவனிக்காமல் இடிக்கிறார்களே என்ற கோபமும் பயமும் அவரைத்தூக்கிப் போட்டது. இடிக்காதீர்கள் என்று கதறிக் கொண்டு ஓடி வந்த போது கணேசமுதலி நசுங்கினார். முஸ்லீம்கள் தள்ளிவிட்ட பெருங்கல் மேலே விழுந்தது. மேஸ்திரியின் மூஞ்சியில் தெரித்தது தாத்தாவின் இரத்தம். ஒரே அலறலில் கனவு கலைந்தது. இரவு நடுங்கியது.
          அருட்தந்தை ஜேம்ஸ, அமெரிக்க மிஷினரிமார்களுள் ஒருவர். இவரது கடிதங்களுள் பதிவு பெற்றுள்ள செய்திகளிலிருந்து சில
          அமெரிக்க மிஷினரியில் அருட்தந்தை ஜேம்ஸ். உண்மையான கிறிஸ்துவராக வெளிப்படும் மனிதர். பசுமலையிலிருந்து கம்பத்தின் மேற்கிலுள்ள மலை உச்சிக்கு பயணம். அவர் பயணத்திற்குக் காவல் புரிந்தவன் மொக்கச்சாமி. இவன் தாதனூரைச் சேர்ந்த காவல்காரன். இருட்டுக்குப் பயப்படும் மனிதர்களுக்குள் தாதனூர் காவல்காரர்கள் மட்டும் விதிவிலக்கு. ஜேம்ஸின் பயம் கர்த்தரைப் போர்த்தியிருந்தது. வண்டியோட்டி வாய்திறந்து சொன்னான். வண்டிய கொஞ்சம் நிறுத்திட்டு வேற வண்டிக வந்த பெறகு சேந்து போவமே’(சு.வெங்கடேசன்: 2008,பக்-475)   சேர்ந்து போவது மொக்கையனுக்கு சிக்கல். புதிய வண்டிகளுக்கு காவல் கொடுக்கும் சிரமம் ஏற்படும். வண்டிய விடப்பா வேகம்மா’(சு.வெங்கடேசன்: 2008,பக்-475) என்றவன் இருட்டைக்கிழித்துக் கொண்டு நடந்தான். தண்ணீருக்குள் நீந்தும் மீனைப் போல இயல்பாக நீந்தினான் இருட்டில். அவனது கால்தடத்தை பற்றிக்கொண்டு உருண்டது, வண்டி.
திருமங்கலம், சிந்துப்பட்டி இரண்டு ஊர்களிலும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடவுளை வழிபட்டு வருகிறான், வண்டியோட்டி. சைவ வைணவக் கோயில் இரண்டும் இரண்டு ஊர்களிலும் இருக்கின்றன. ஜேம்ஸின் மண்டையைக்குழப்பிய விஷயம் இதுதான். மொக்கச்சாமி எந்தக் கோயிலையும் கண்டுகொள்ளவே இல்லை. வைதீக சமயங்களில் துளியும் ஒட்டிக் கொள்ளாவன் போல நடந்துகொண்டான். அதனால்தான் ஜேம்ஸ் தன் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார். அவனது இனத்தின் நம்பிக்கை வைதீக சமயத்திலிருந்து இவ்வளவு விலகி இருக்கிறது என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற் போல் நமது பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-481) இரண்டு இரவும் மூன்று பகலும் தாதனூர்க்காரனையே சுற்றி சுற்றி அளவிட்டன அருட்தந்தை ஜேம்ஸின் கண்கள். அவரது கடிதமே இதற்கு சாட்சி.
          அருட்தந்தை ஜேம்ஸின் நண்பர் சவுரிராயர். மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவராக வாழ்ந்திருக்கிறார். மூன்று தலைமுறைக்கு முன்பு வேறொரு மதம். இல்லையில்லை வேறொரு சாதி. சரியான வரையறை இந்து மதத்திற்குக் கிடையாதல்லவா. தேவாலயம் கட்டும் பணியில் பெருமளவில் பங்காற்றிய இவர் உண்மையான கிறிஸ்துவராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். உடல்நலமின்றி உயிரிழந்த சவுரிராயரைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய முயற்சி;த்துள்ளனர். இந்திய மண்ணில் இருக்கும் கிறிஸ்தவ இடுகாடு ஐரோப்பியர்களுக்கு மட்டுமே உரியதாம். சவுரிராயரை இந்தியர்களின் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள், இங்கு அனுமதிக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லி விட்டனர். அதாவது, சவுரிராயனை சாதியின் மரபிற்குள் தள்ளிவிட்டார்கள்.  அதனால்தான் கர்த்தரிடம் இவ்வாறு அழுது புலம்புகிறது அவரது கடிதம். ஒருகிறிஸ்துவனை கிறிஸ்தவ இடுகாட்டில் புதைப்பதைக் கூட அனுமதிக்க முடியாத அளவு இனப்பாகுபாடு இவர்களது கண்களைக் கட்டியிருக்கிறது. நான் என்ன செய்ய?’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-553)
          முல்லைப்பெரியாறு அணைகட்டும் பணியே ஒரேவழி. தாதுப் பஞ்சத்திலிருந்து லட்சக்கணக்கான மக்களை நிச்சயம் காப்பாற்றும். ஆனால், ஏராளமான லாபத்தை வழங்கும் பாம்பன் கடவு பணிக்காக அணைகட்டும் பணியைக் கைவிட்டது ஆங்கில அரசு. ராமநாத போலீஸ் ஸ்டேசனோ, பரமக்குடி நீதிமன்றமோ பார்த்திடாத அளவிற்கு மதுரைச் சிறையினும் பெரிய சிறைச்சாலையை பாம்பனில் உருவாக்கியது. எல்லாப்பகுதியிலிருந்தும் கைதி என்ற பெயரில் ஏராளமான மனித மந்தைகள் இழுத்து வரப்பட்டார்கள். போலீஸ் ஸ்டேசன், நீதிமன்றம் என்ற எந்த அடிப்படையும் இல்லாத பாம்பனில் சிறை அமைந்துள்ள நோக்கம் என்ன தெரியுமா? கைதிகளை பாம்பன் கடவு பணியில் ஈடுபடுத்துவதுதான். இந்த நோக்கம் எவ்வளவு கொடூரமானது தெரியுமா? கடலுக்கடியில் கால்வாய் தோண்ட வேண்டும். கால்வாயின் இரண்டு கரையிலும் பாதுகாப்பான அரண் அமைக்க வேண்டும். நீராவி தூர்வாரும் கருவிகளும், ராட்சத இயந்திரங்களும் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான இவ்வேலையை வெறும் மனிதர்களை இறக்கிவிட்டு செய்ய வைப்பது கொடூரம் இல்லையா! கைதி என்ற முறையில் இவ்வேலையில் கட்டாயப்படுத்தப்படுபவர்களின் நிலை என்ன தெரியுமா? தண்ணீரில் தலையை முக்கி மூச்சு முட்டி கொலை செய்யப்படுவதைவிட பலமடங்கு  கொடூரமானது. சாதாரண விசாரணைக் கைதிகளையும் இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் என்பது மேலும் கோரமான உண்மை. இருபத்தியொரு வயது இளைஞரான ராசையன் என்ற கிறிஸ்தவ இளைஞரின் மரணம் இதற்கு சாட்சி. இவர் ஏசுசபையில் மிகத்தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நூறில் அறுபது கைதிகளுக்கு திடீர் மரணம். ராசையன் இறந்த வாரத்தில் மட்டும் நாற்பத்தாறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களது தண்டணைக்கு காரணம் கடலில் முக்குளிக்கும் திறமையுடையவர்கள் என்பது மட்டுமே. அதனால்தான் அவரது கடிதம் கோபமும் வேதனையும் நிறைந்த வார்த்தைகளை கவர்னரின் மூஞ்சியில் துப்புகிறது. கடலை அறிந்தவன் கர்த்தரை அறிந்தவனாக இருந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை’(சு.வெங்கடேசன்: 2008,ப்க-630).
          களவுக்குப்  போனவர்கள் போலிசிடம் சிக்கிக் கொண்டால் தாதனூர்க்காரர்கள் உரிமையோடு தேடி வருவது நகர செல்வந்தருள் ஒருவரான நேமிநாத செட்டியைத்தான். இவர் தாதனூர்க்காரர்களுக்கு உதவியாக தகவலை அறிந்து சொல்லுவார். தாதனூர்க்காரர்களிடம் உண்மையான நேசம் கொண்டிருந்த இவரது சமயம் சமணம். இம்மனிதர் மட்டுமே தாதனூர்க்காரர்களின் முழுநம்பிக்கையைப் பெற்றிருந்தார். வேறு எந்த சமயத்தைச் சேர்ந்தவர்களும் தாதனூரிடம்  உண்மையானவர்களாக இல்லை. டேவிட் சாம்ராஜ் என்ற கிறிஸ்தவர் இருக்கிறார் என்கறீர்களா?
அவரது இரத்தமும், சதையும், நாடி நரம்புகளும் தாதனூர்காரர்களால் பின்னிப்பிணைந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். கழுவன் கூட்டத்தின் பனைமரத்தான் வகையறாவான கழுவாயி என்ற பெண்ணுக்கும், சாத்தங்குடிக்காரனுக்கும் பிறந்தவர் டேவிட் சாம்ராஜ் என்பதை மறந்து விட வேண்டாம.; இவரது பெயர் பொன்னாங்கன். தாது பஞ்சத்தில் தாய் தகப்பனை இழந்து கிறிஸ்தவ மிஷினரியால் எடுத்து வளர்க்கப்பட்டபோது டேவிட் சாம்ராஜ் என்று பெயர் மாறுகிறார். பசுமலை பள்ளியில் வேத பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற போது போதகராக புகழ்பெறுகிறார். தாதனூர்க்காரர்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கு ஆங்கில ஏகாதிபத்திய அரசு தன்னைக் கருவியாக பயன்படுத்திக் கொண்ட அயோக்கியத்தனத்தை நினைத்து ஆதங்கப்படுகிறார். பொன்னாங்கனுடைய இனத்தின் பலம், பலவீனம் முழுவதையும் அடக்குமுறை அரசுக்குக் காட்டிக் கொடுத்து விட்டேனே என்று தன்குற்றத்தை எண்ணியெண்ணி நொந்து கொள்கிறார். கர்த்தரின் பெயரால் கருப்பனைக் காட்டிக் கெடுத்தேன்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-1024)  என்று அவரது டைரிக் குறிப்பு தேம்பி அழுகிறது. டேவிட்சாம்ராஜாக வேசமிட்டிருந்தாலும், வாயில் கர்த்தரைப் பேசினாலும் அவரது இதயத் துடிப்பு சடச்சி, கருப்பனையே இசைத்திருக்கிறது.
பாதியில் கிறிஸ்துவான பொன்னாங்கன் என்ற டேவிட் சாம்ராஜ் இறுதியில் தாய் வழி சமயமான நாட்டுப்புறச் சமயத்திற்கே திரும்பி விடுகிறார். இறப்பதற்கு முன் இவர் எழுதியிருக்;கும் டைரிக்குறிப்புகள் பொன்னாங்கனையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் டைரியை வாசித்து முடித்த அவரது மனைவி ஆரோக்கியமேரி தாதனூர்க்காரியாக வெளிப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து கிறிஸ்தவராக மாறிய ஆரோக்கியமேரி கதறி அழுகிறாள். தாதனூர்க்காரி எவளோதான் கதறி அழுகிறாள் என்று சுற்றியிருந்த வீடுகளில் நினைக்கிறார்கள். ஒரு நிறுவன சமயத்தில் இருப்பவரை இன்னொரு சமயத்திற்கு மாற்ற முடியும். ஆனால் மூதாதையரை வழிபடும் மரபுடைய ஒருவரை  மதமாற்றம் செய்ய முடியாது என்பது நாவலாசிரியரின் கருத்து. 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கிறிஸ்தவ சமய நிறுவனமான அமெரிக்க மிஷினரியில் செயல்படுகின்ற அருட்தந்தை ஜேம்ஸ் எழுதியுள்ள கடிதங்கள் மற்றும் தாதனூர்க்காரரான பொன்னாங்கனும் ஆரோக்கியமேரியின் துணைவருமான டேவிட்சாம்ராஜின் டைரிக்குறிப்புகள். இவை இரண்டும் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.     
          உழைப்பை உறிஞ்சும் அதிகார வர்க்கத்தினுடைய அரச மாளிகைக்கும், உலகைப் படைத்த உழைக்கும் மக்களுக்கும் கடவுளைப் பற்றிய நோக்கம் ஒரே மாதிரி அல்ல. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
          பக்தி உணர்வை வெளிப்படுத்துவது, பிரச்சனைகளைச் சொல்லி அழுவது, வாழ்க்கை இலட்சியங்களுக்குத் துணை செய்ய வேண்டுவது இவ்வளவுதான்  நோக்கம், கடவுளை வழிபடும் மக்களுக்கு. ஆனால், அரச மாளிகையின் நோக்கம் என்ன தெரியுமா? தன் அதிகாரத்தைப் பாதுகாக்க கடவுளை ஆயுதமாகப் பயன்படுத்துவது. எப்படி தெரியுமா? அதன் செயல்பாட்டைக் கவனியுங்கள். மக்களின் தெய்வங்களைச் சமய நிறுவனங்களாக கட்டியிருக்கிறது. சமய நிறுவனங்களுள் தன் அதிகாரத்தைக் கொட்டியிருக்கிறது. சமய நிறுவனங்களும் அரச மாளிகையின் ஒருவகைக் கோட்டைகளாகவே செயல்படுகின்றன. சமயங்களின் வரலாறு இப்படித்தான் வளர்ந்திருக்கிறது. எந்தச் சமயக்கடவுளை வழிபட்டாலும் அந்தந்த சமய நிறுவனங்கள் மூலம் மக்களைத் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறது, அரச மாளிகை.  சமயம் என்பது ஆயுதம். தங்கள் அதிகார நலனைப் பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதை உணராத மக்களின் கருத்து இப்படி இருக்கிறது. சமயம் என்பது வெறும் பக்தியுணர்வை வெளிப்படுத்துகின்ற களம்
          இஸ்லாமியர்களின் ஈர உணர்வைச் சடச்சி விஷயத்தில் மட்டும் பதிவு செய்திருக்கிறார். கருப்பனை வீழ்த்தும் இஸ்லாமிய வீரனும், மக்களைச் சூறையாடும் இஸ்லாமியப் படையும், இம்மிடி செட்டியின் இஸ்லாமிய எதிர்ப்பும், பெருமாள் முதலியின் கனவு வெளிப்பாடும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது. இது இன்றைய இந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஒருவகையில் வலிமை சேர்க்கிறது. ஒரு மார்க்சிய படைப்பாளியின் இத்தகைய படைப்பு அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு சில இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, சமண சமயம். ஒப்பீட்டளவில் சமணத்திற்கு ஆதரவான ஆசிரியரின் குரல் மென்மையாக எதிரொலிக்கிறது. 


முடிவுரை

          காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டுஅரசியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தலைப்பின் கீழ் மூன்று இயல்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
          1. காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல்
          2. காவல்கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
          3. காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல்
முதல் இயலில் பாலினங்களுக்கு இடையிலான அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பெருந்தன்மையென்பது அதிகாரத்தின் உச்சியிலிருந்து வெளிப்படுகின்ற அரசியல். இத்தகைய பெருந்தன்மை ஆணாதிக்க வெளிப்பாடாக நாவலில் அமைந்த விதம் விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மூளைக்குள் ஆண்நலன் சார்ந்த சிந்தனை வெளிப்படுகின்ற விதமும், அதன் காரணமும் விளக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகரான வீரப்பெண்கள் என்ற போற்றுதலுக்கு உள்ளீடாக ஆண்களை முதன்மைப்படுத்தியிருக்கும் அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உலகம் ஆணுக்குள் அடங்கிவிடுகின்றது என்ற நாவலாசிரியரின் சிந்தனை வெளிப்பாடு விளக்கப்பட்டுள்ளது.
          இரண்டாம் இயலில் கதை நிகழும் காலக்கட்டத்தை விளக்க இயல்பாகப் பதிவு பெற்றிருக்கும் சாதிகளும் அவற்றுக்கு இடையிலான அரசியலும் விளக்கப்பட்டுள்ளன. நாயக்கர் சமூகத்திற்குள் அடங்குகின்ற கொல்லவாரு குலத்திற்கும், காப்புபலிஜர் குலத்திற்கும் இடையிலான மோதல்கள் விளக்கப்பட்டுள்ளன. போட்டிகளுக்கு இடையிலான சமரசத்தின் அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்வுகளுள் குறிப்பிட்ட சாதியினர் தன்னைத்தானே பலியிடுகின்ற செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த சாதியாகக் கருதப்படுபவருக்கு விதிவிலக்காக அதிகாரம் கிடைப்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு சாதி, சமயங்களின் கௌரவப் பிரச்சனையாக உருமாறுகின்ற நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. சாதியத்தின் மீது ஏகாதிபத்திய சூழல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. சாதிய இடர்பாடுகளுக்கு இடையில் அமெரிக்க மிஷினரியின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. மக்களால் தெய்வமாக்கப்பட்ட தாசி குலத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் சாதிய அரசியல் பிராமணிய எதிர்ப்பு மட்டுமே என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
          மூன்றாம் இயலில் சமயங்களுக்கு இடையிலான அரசியல் விளக்கப்பட்டுள்ளது.  அரச அதிகாரம் சமயத்தைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற விதமும், அதிகாரத்திற்கு உட்பட்ட மக்கள் சமயத்தை வெறும் கடவுளை வழிபடுவதற்கான களமாக மட்டுமே கருதுகின்ற விதமும் விளக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மற்றும் இந்து சமயத்திற்கு இடையிலான உறவு பற்றிய பதிவுகள் இன்றைய இந்துத்துவா பயங்கரவாதிகளின் கருத்தியலுக்குச் சாதகமாக அமைந்திருக்கும் விதம் விளக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் நாவலாசிரியரின் சமண சமய ஆதரவு விளக்கப்பட்டுள்ளது. இந்த அளவில் இம்மூன்று இயல்களையும் உள்ளடக்கியுள்ள காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு  அரசியல்’  என்ற தலைப்பிற்கான ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.


  

                                      துணைநூற்பட்டியல்

முதன்மை சான்றாதாரம்
1.      சு.வெங்கடேசன்,    காவல்கோட்டம், தமிழினி,
                                      67,பீட்டர்ஸ் சாலை,
                                      ராயப்பேட்டை, சென்னை-16, டிச.2008
துணைமை சான்றாதாரம்
2.      எஸ்.ராமகிருஷ்ணன் காவல்கோட்டம் எனும் ஆயிரம்
                                      பக்கஅபத்தம்
                                               
3.      மேலாண்மை பொன்னுச்சாமி காவல்கோட்டம்
                                      மீள்விசாரணை ஆயிரம்பக்க அதிசயம்,
                                     
4.      பரந்தாமனார்,.அ.கி., மதுரைநாயக்கர் வரலாறு
                                      பாரிநிலையம்,184,பிராட்வே         
                                      சென்னை 600001,1981

5. கோ.கேசவன்,          சாதியம்,                                                                                            சரவணபாலு பதிப்பகம்

6. உ.வாசுகி,                 பெண்ணியம் பேசலாம் வாங்க…,                                                                     பாரதிபுத்தகாலாயம்,                       

7. அ.வெண்ணிலா,                சு.வெங்கடேசன் நேர்காணல்,
                             புதிய புத்தகம் பேசுது,
                             மே.2009, ப.23-33

8. கோ.கேசவன்,      முனைவர் கோ.கேசவன் கட்டுரைகள்,
                                      பரங்கியரை எதிர்த்த பாளையக்காரன்,ப.71-74,
                                      தமிழில் சமயஞ்சாராத சிந்தனையின்
                                      வரலாறு- சில குறிப்புரைகள்,ப.111-125,
                                      தீண்டாமை ப:137-149 
                                      சரவணபாலு பதிப்பகம்,

9. அ.மங்கை                 பெண்ணிய அரசியல், பரிசல்,
                                      1,இந்தியன் வங்கி காலனி
                                      வள்ளலார் தெரு, பத்மநாபா நகர்,
                                      சூளைமேடு, சென்னை-94, 2005

10. ராஜ் கவுதமன்         தலித்திய அரசியல், பரிசல்,
                                      1,இந்தியன் வங்கி காலனி
                                      வள்ளலார் தெரு, பத்மநாபா நகர்,
                                      சூளைமேடு, சென்னை-94, 2005

11. செ.கணேசலிங்கம்         குந்தவிக்கு கடிதங்கள்,
                                                மான்வழிக்கு கடிதங்கள், குமரன் பப்ளிஸர்ஸ்,
                                     
12. செ.கணேசலிங்கம்,          குமரனுக்கு கடிதங்கள்,
                                      அறிவுக் கடிதங்கள்,
                                      குமரன் பப்ளிஸர்ஸ்,
                                     
13. எம்.இலியீன்,யா.ஸெகால், மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்,
(மொ.பெ.)நா.முகம்மது செரீபு,எம்.ஏ.
                             ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, யு.எஸ்.எஸ்.ஆர். 1987

14. ஜார்ஜ் தாம்சன்    மனிதசாரம் கலை, அறிவியல் ஆகியவற்றின் தோற்றுவாய்,
                                  (மொ.பெ)எஸ்.வி.ராஜதுரை,
                                      விடியல் பதிப்பகம்,
                                     
15. ஜார்ஜ் பொலிட்சர் மார்க்சிய மெய்ஞானம்
                                      (மொ.பெ)ஆர்.கே.கண்ணன்
                                      நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,

         
16. மாசேதுங்,         முரண்பாடுகள் பற்றி,
                   கீழைக்காற்று வெளியீட்டகம்,       



No comments:

அதிகம் படித்தவை