எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 5, 2017

உள்ளம் சுடும்

உள்ளம் சுடும்
புதியவன்

            நமது  நகர்தலுக்கு  நல்லதாக  அமைந்து வருகிறது  நமது பொறுப்பின்மை. நாம்  எவ்வளவு  பலசாலிகளாக  ஆகிவிட்டோம்.  கல்லைவிட,  இரும்பைவிட உறுதியாகிவிட்டன  நம்  உணர்வுகள்.

எதிரி எத்தனைமுறை  துப்பினாலும்
முகத்தை நாம் துடைத்துக்கொள்கிறோம்
எத்தனைபேர் நம்மில் துடித்தாலும்
முகத்தை நாம் திருப்பிக்கொள்கிறோம்

          ஒரு சகமனிதர் சுடப்பட்டாலும், கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டாலும் நம் உணர்வுகளை வெறும் புலம்பல்களாகப் புதைத்துக் கொள்ளவும் பழகிவிட்டோம்.
சகமனிதர்களின் கதறல்களைக் கேட்டும் கேட்காமல் இருப்பதற்கு நம்  காதுகள் பழகிவிட்டன. காதுகளுக்கு இளைத்தவையல்ல, நம் கண்கள். சகமனிதர்கள் எப்பேர்பட்ட துயரங்களில் துடித்தாலும் கண்டும் காணாமல் இருந்துவிடுவது கண்களுக்கு எளிமையாகிவிட்டது. இப்படி நன்றாகப் பக்குவப்படுத்தியிருக்கிறோம்  நம் புலன்களை.
          நம் மனம் கல்லைவிட கனமானதாக இல்லாவிட்டால் எப்படி முடியும் இப்படி?  நமக்கு இதயம் இரும்பைவிட இறுக்கம்.  இப்படிப்பட்ட வலிமைக்கு எப்படி நாம் ஆளானோம்?
இதன் பெருமையெல்லாம் நம் பொறுப்பின்மையைத்தான் சேரும்.  ஏனென்றால், நாம் சகமக்களிடம் அக்கறையற்றவர்களாக மாறிவிட்டோம்.  இந்த குற்றஉணர்விலிருந்து தற்காத்துக் கொள்வதிலும் கில்லாடிகளாகிவிட்டோம்.        சமூக அக்கறையுடன் இயங்கும் இதயங்களை அலட்சியப்படுத்தியும் அவமானப்படுத்தியும் அல்லது நான்கு சொட்டு கண்ணீர் விட்டும் இரண்டு சொட்டு கண்ணீர் துடைத்தும்  இதை சாதிக்கப் பழகிவிட்டோம். அதனால்தான், நமது வலிமை எத்தகைய அருவெறுப்பானது என்பதை எண்ண மறுக்கிறோம். ஆனால் இப்படியே எத்தனைக் காலம் இருக்க முடியும்?
          முகத்தைச் சுண்டிக்கொண்டு சிலர் விரைந்து கேட்கிறார்கள்.  'குற்ற உணர்விற்கு இதில் என்ன இருக்கிறது?  சமூகஅக்கறையுடன் வாழ்தல் ஒன்றும் கட்டாயம் இல்லையே. அது அவரவர் விருப்பம். உங்களுக்கு ஏன் இதயம் வெடிக்கிறது. நீங்கள் இல்லாமல் மற்றவர்கள் வாழ்கிறார்கள். யாரும் உங்கள் வருகையை எதிர்பார்க்கவில்லை. பிறகு ஏன் மற்றவர்களைப்பற்றி உங்களுக்கு கவலை. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். யாராலும் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை...' இப்படி அதிமேதைகளாகப் பேசுகிறார்கள்.
          நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். மனிதர்க்கு அடிப்படையான  அறிவியல் உணர்வே அற்றுப்போன இந்தப் பேச்சு, அக்கறையற்று வாழவும் அதற்கு வக்காலத்து வாங்கவும் பேசப்படுகிறது. நன்னீரற்ற வறண்ட பூமி எத்தகைய அச்சத்திற்குரியதோ அத்தகைய உச்சத்திற்குரியது இந்த பேச்சு. இதை சமூகவிஞ்ஞானிகளால் சகித்துக்கொள்ளவே முடியாது.
          இந்த உலகில் வரலாறின்றி ஏதுமில்லை. மக்கள் கடமையுணர்வுடன் வரலாற்றை வரைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் உழைப்பையும் உரமாக்கிக் கொண்டு வரலாறு வளர்ந்து வந்திருக்கிறது. வரலாற்றில் கடமையற்ற மனிதர்களே இல்லை. நாமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இன்றைய வரலாற்றுக் களத்தில் நம் கடமையை எப்படி நிகழ்த்தப் போகிறோம்? நமது வரலாற்றுக் கடமையைச் சரியாக நிகழ்த்த இன்று அறிவியல் உணர்வு அவசியப்படுகிறது.
          அன்பு, அக்கறை| இவற்றின் வரலாற்றுக் கடமையை அறிவியல் உணர்வோடு நினைத்துப் பார்ப்போம்.
          ஒரு காலத்தில் மனிதனின் மூதாதை குறுகிய காலம் வாழும் எளிய உயிரினமாக இருந்தது. அதாவது மனிதன் பிறக்கவே இல்லை. அப்போது மனித மூதாதையின் அன்பு தன்னைத்தவிர வேறு யாரிடமும் அக்கறை கொள்ளவில்லை. பிறப்பதற்கு முன்பிருந்த மனிதனை மிருகங்கள் அளவின்றி வேட்டையாடின. பலியாவதற்கு முன் சிதறி ஓடுவதைத்தவிர அவனுக்கு வேறெந்த வழியுமில்லை. மனிதனைப் பெற்றெடுக்க உழைப்பு என்றந்த சின்ன மகள் பிரசவவலியால் அலறித்துடித்தாள். அன்றெல்லாம் கல் அவன் கட்டைவிரலுக்குள் கருவியாக அடங்கவில்லை. ஒரு அதிசயம் நிகழ்ந்தது. என்ன ஆச்சரியம். கல் அவன் கைகளுக்குக் கச்சிதமாக அடங்கிவிட்டது. பல தலைமுறைகளாகக் கல்லோடு அவன் கண்ட தோல்வி அன்று வெற்றியில் முடிந்திருந்தது. அதாவது மனிதன் பிறந்துவிட்டான். உழைப்பின் அடிவயிற்றிலிருந்து சரிந்து வந்தவன் அவளிடம் பால் சப்பும் அழகை வேறெதிலும் அனுபவிக்க முடியாது!
வீரமும் நேசமும் அவர்களிடம் பிரகாசித்தன. தன்னை வேட்டையாட வந்த ஒரு மிருகத்தை வேட்டையாடி வீழ்த்தினான். விழுந்த மிருகத்தைக் கூட்டமாக உண்டான். அந்த கூட்டமே கல்பிடிக்க கற்றுவிட்டது. அன்றிலிருந்து மனிதன் தன்னை ஒரு கூட்டமாக உணர்ந்தான். உயிரைப் பேணவும், தேவையை ஆக்கவும் தன் கூட்டத்தையே சார்ந்திருந்தான். சகமனித கூட்டத்தின் நலனில்தான் தன் நலன் இருப்பதாக அறிந்துகொண்டான்.
ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் பொறுப்பும் கூட்டத்தின் அனைத்து நிகழ்வையும் பிணைத்திருந்தன. அவனது செயல்பாடுகள் கூட்டத்தின் உணர்வுகளுக்கு ஏற்பவே அமைய முடிந்தது. ஏனெனில்  கூட்டத்திலிருந்து தன்னை தனித்துப்பார்க்கும் சிந்தனை அன்று தோன்றவே இல்லை. அதாவது நான், எனக்கு, என்னுடையது போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அன்று அறவே இல்லை. அர்த்தமின்றி எந்த செயலிலும் மக்கள் ஈடுபட்டதாக வரலாறும் இல்லை. அந்த வரலாற்றுக் காலத்தில் ஒரு பெருங்கூட்டத்திடம் அன்பும் அக்கறையும் பரஸ்பரமாக பிரகாசித்தது இதுதான் முதல்முறை. மனிதன் மீது மனிதக்கூட்டமும், மனிதக்கூட்டத்தில் மனிதனும் ஏற்றத்தாழ்வற்ற அன்பைப் பொழிந்தார்கள். அக்கறையுடன் செயல்பட்டார்கள். உலக வரலாற்றில் இதைப்போல் அதுவரை  வேறெப்போதும் நிகழவில்லை.

          ஆனால் வரலாற்றின் இன்றையக் கட்டத்தில் நாம் எவ்வளவு அக்கறையற்றவர்களாக மாறிவிட்டோம். அன்பு நம்மிடம் எவ்வளவு வற்றிப்போய்விட்டது. சகமனிதர்களின் பெருங்கூட்டத்திலிருந்து சொற்ப மனிதர்களுக்குள் சுருங்கிப்போய்விட்டது. எல்லையற்ற மனித உறவுகள் எதனால் இப்படி துண்டிக்கப்பட்டன? இதற்கான விடையை உணர்வது மிகவும் இன்றியமையாதது.
                   
          குடும்பம் சார்ந்தே  இன்றைய மனிதன் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அதாவது, அம்மா, அப்பா, கணவன், மனைவி, மகன், மகள், சகோதரன், சகோதரி என்ற மனித உறவுகளுக்குள் அவனது தேவைகள் நிறைவடைகின்றன. உறவினர்கள், நண்பர்கள் என்பதெல்லாம் இதற்குப் பிறகுதான். அவனது வாழ்வின் மீது குடும்ப உறுப்பினர்களைத்தவிர  வேறு யாருக்கும் அக்கறை இல்லையாம். ஆனாலும் குடும்பம் கடந்த அவனது உணர்வுகளுக்கு உறவினர்களும் நண்பர்களுமே எல்லையாகிறார்கள். குடும்பத்தைப் பற்றிக்கொண்டே அவனது உழைப்பையும் முடித்துக்கொள்கிறான். வாழ்வின் முழுமை அவனுக்குக் குடும்பக்களத்திலேயே முடிந்துவிடுகிறது. இந்த நிறைவில்தான் குடும்பம் அவனது அன்பிற்கும் அக்கறைக்கும் உரிய களமாகிறது. ஆனால் இதற்கு நிகரான கடமையுணர்வு சமூகக்களத்திற்கும் உரியது. இந்த உண்மையை மட்டும் ஒப்புக்கொள்வதே இல்லை. அவனது பொருட்தேவைகளை விலை கொடுத்து எடுத்துக்கொள்வதுடன் சமூகஉறவை அறுத்துக்கொள்கிறான்.
இந்த நோக்கத்தில் வன்மம் இல்லையா? எவ்வளவு அயோக்கியத்தனமான எண்ணம்! இதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அறிவியல் உணர்வோடு நினைத்துப்பார்ப்போம்...          
சமூகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் பலவிதமான பொருட்களுக்கு நாம் செலுத்தும் பங்களிப்பு என்ன?  குடும்பத்தின் உள்ளிருந்து காசை நீட்டுகிறோம். இதுதான் இதற்கு ஈடா?

நாம் கைப்பற்றுகின்ற ஒவ்வொரு பொருட்களிலும்
நாம் அனுபவிக்கின்ற ஒவ்வொரு சுவைகளிலும்
நாம் சுவாசிக்கின்ற ஒவ்வொரு வாழ்க்கையிலும்

கோடிக்கணக்கானச் சகமக்களின் உழைப்பும் பொறுப்பும் இருக்கின்றன. இந்த உண்மையை நம்மால் உணர முடிகிறதா? அவர்களது அன்பும் அக்கறையும் அவற்றில் உறைந்திருக்கின்றன. இந்த உணர்வை நம்மால் அறிய முடிகிறதா?              
நாம் கல்நெஞ்சக்காரர்கள்!
மறுக்க முடியாத சகமக்களைச் சாதாரணமாக மறந்துவிட்டோம்.
மறதி நமக்கு எளிமையாகிவிட்டது.

          நீட்டவேண்டிய காசு இவ்வளவென்று தீர்மானிப்பவர்கள் வேறு. பொருட்களைப் படைக்கும் படைப்பாளர்கள் வேறு. இந்த உண்மை நமக்குத் தெரியாதா?
          இலாப வெறிபிடித்த இடைத்தரகர்களுக்கும், ஆன்லைன் வர்த்தகர்களுக்கும், இதுபோன்ற பணக்கொள்ளையர்களுக்கும் பலிபோகிறதே அல்லாமல் கைவிட்டு வெளியேறும் பணமெல்லாம் பொருட்களைப் படைக்கும் படைப்பாளர்களுக்கு நிகராவதில்லை. இது தொடர்கதைதானே. எப்படி நம்மால் மறக்க முடிந்தது?

பொருள் வாங்குவதைக் கொஞ்சம் நிறுத்துங்கள்.
கையில் எடுத்துள்ள பணத்தைப் பையில் போடுங்கள்.
பொருட்களைப் பயன்படுத்தும் ஆர்வத்தை அடக்குங்கள்.
பொருட்களின் படைப்பாளர்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

'யாராலும் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை...' இதை சகமக்களின் கண்ணைப் பார்த்து சொல்லிவிட முடியுமா?

நமக்கு நாளைக்கும் பசிக்கும்.
நாக்கு என்றைக்கும் ருசிக்கும்.
ஆசைகள் பலவிதம் வளரும்.
ஆயிரம் தேவைகள் மலரும்.
புதுப்புது மாற்றங்கள் தோன்றும்.
சூழல்கள் பலவிதம் மாறும்.

சூழல்கள் எதுவாயினும். தேவை பலவாயினும், மாற்றம் புதிதாயினும் இல்லாமை என்ற நோயால் நாம் செத்துவிடக் கூடாது. சகமக்கள் இதை மறந்துவிட்டால் எது கூடாதோ அது கூடிவிடும்.

          சகமக்களின் மனசு இறகைவிட லேசு. இதனாலேயே தனிமனிதனை நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் கடமையை மறக்காதவர்கள். இதுவரை நம்மை கைவிட்டதில்லை. விதவிதமான உணவுப்பண்டங்களை, இன்னும் பலவித பொருட்களை உழைப்பின் வேரிலிருந்து பூப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களது அக்கறைக்கு இதுவரை என்ன ஈடு செய்திருக்கிறோம்?
          உண்மை ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். நீயும் நானும் இல்லாமல் சகமக்கள் வாழ்ந்துவிடுவார்கள். நம் குடும்பத்தின் தேவை சமூகத்திற்கு அவசியமற்றது. ஆனால், சகமக்களைத் தவிர்த்துவிட்டு நம் வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
          தனிமனித அக்கறையுடன் சமூகம் வாழ்கிறது. சமூக அக்கறையுடன் தனிமனிதனும் வாழ வேண்டும். அப்படி வாழாதவர்கள் அரை மனிதர்களாகவே அழிந்து போகிறார்கள். தொடர்கதையாக நிகழும் இந்த அர்த்தமற்ற அழிவிற்கு முற்றுப்புள்ளியை யார் வைப்பது? அறிவியல் உணர்வாளர்கள் மட்டுமே இதை சாதிக்க முடியும். அறிவியல் உணர்வின்றி மனிதன் வந்திருக்க முடியாது. அறிவியல் உணர்வழிந்து மனிதன் வாழவும் முடியாது. நம்மை அறிவியல் உணர்வாளர்களாக மாற்றிக்கொள்வோம். இது தவிர்க்க முடியாத வரலாற்றுக்கட்டம். வாழ்வை மறுவிசாரணை செய்வோம்.
          தனிமனித வாழ்வில் குடும்பம் பற்றிய மதிப்புகள் சரியானது. ஆனால், குடும்பக் களத்தைக் காரணம் காட்டி சமூகக் களத்தை அலட்சியப்படுத்துவது எப்படி சரியாக முடியும்? ஆனால் நாம் அலட்சியப்படுத்துகிறோம். சமூகக் களத்தை அவமதிப்பதே நாகரிக மனிதர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
          தனிமனிதனின் சமூகக் கடமைகள் கடலைவிடப் பெரிது. குடும்பக் களத்திற்கு இணையாக அல்லது இதைவிட அதிகமாக சமூகக் களத்திலும் செயலாற்ற வேண்டும். இப்படி செயலாற்றுவது தனிமனிதரின் இன்றியமையாத கடமை. இக்கடமையைச் செய்வதற்கான அடிப்படை உணர்வுகள் மூன்று.
1.சகமக்கள் மீதான அன்பு,
2.சகமக்கள் பற்றிய அறிவு,
3.சகமக்களைப் பாதுகாப்பதில் ஆர்வம்.
ஆகவே ஒவ்வொரு மனிதனும் இத்தகைய உணர்வுகளால் புத்துயிர் பெறுவது அவசியம்.

குடும்ப அக்கறையோடு குறுகிப்போகும்;
அரைமனித வாழ்க்கை ஒருபுறம்;:
சமூக அக்கறைவரை விரிவு காணும்
முழுமனித வாழ்க்கை மறுபுறம்:
இரண்டையும் அறுத்து இரண்டுக்கும் இடையே
இன்னொரு மனிதனும் இருக்கின்றான்; :
சுயநலம் மட்டுமே இலக்காய் கொண்டு
அரைகுறை வாழ்க்கை வாழ்கின்றான்...
          சுருங்கிய அன்பு அரைகுறை மனிதனையும் படைத்துவிட்டது. இந்த பேராபத்திலிருந்து மனித குலத்தை எழுச்சி பெறச்செய்வது அவசியம். எழுச்சியின் வழியில்தான் அத்தனை ஆபத்துகளும் அழியப் போகின்றன.
          சகமக்கள் மீது  அக்கறையற்று இதுவரை இறந்தது போதும். அறியாமை நம்மைவிட்டு அற்றுப் போகட்டும். அறிவியல் உணர்வு நம்மில் பொங்கி எழட்டும். இனியும் நாம் அரைமனிதனாகவே அழிய நினைத்தால் சகமக்களால் களையெடுக்கப்படுவோம்: விஷமிகள் என்று ஏசப்படுவோம்: அருவெறுப்பானவர்களின் மாதிரிகளாக நாளைய தலைமுறைக்குக் கற்பிக்கப்படுவோம். இந்த இழிவிற்கு நாம் ஆளாக வேண்டாம். அன்பும் அக்கறையும் நம்மை அழகுபடுத்தட்டும். நாம் அழுக்காக வாழ அவசியமில்லை. நம் விருப்பமெல்லாம் அழகாவதிலேயே இருக்கட்டும்.

தாய்க்கும் குழந்தைக்கும் காட்டும் அன்பைச்
சகமக்கள் முழுமைக்கும் காட்டிடுவோம்...

          வரலாறு நமக்கு அழகாக வகுத்துள்ளது வழியை. அறுந்துபோன சகமக்கள் அன்பை மீண்டும் வளர்ப்பது அத்தனைக் கடினமல்ல. எந்த திசையில் சாய்ந்தாலும் மக்களின் துயரங்கள் ஈர்க்கும். தடுக்கி விழுந்த திசையிலும் சமூக அக்கறை பூக்கும்.
          நாம் சரியென்று கருதுவது தவறாகவும் இருக்கலாம். நாம் தவறென்று கருதுவது சரியாகவும் இருக்கலாம். இது எதார்த்தம். எனவே நான், நீ, அவர்கள் என்ற பேதமின்றி துணிச்சலுடன் செயல்படப் போகிறோம். தவறை விலக்கி சரியை நோக்கி பயணிக்கப் போகிறோம்.

எது சரியென்று எப்படி முடிவெடுப்பது?
தன்னையும் தன் களத்தையும் எப்படி சரி செய்வது?
சரியான களத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
முறையான களத்தை எப்படி உருவாக்குவது?
இத்தனை எப்படிக்கும் எப்படி விடைகாண்பது?
சமூகக் களத்தின் நம் செயலனுபவங்களே
இப்படி இப்படி என்று வழிகாட்டும்.

சமூகவிஞ்ஞானிகளின் இந்தக்களம் சமூக இலட்சியங்களுக்காகவே இயங்கும் களம். சிறிய குழுவாகவோ, அமைப்பாகவோ, இயக்கமாகவோ, கட்சியாகவோஇயங்கும் வலிமைக்குரியது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முழுமையை இந்தக் களங்களில்தான் பெற முடியும். ஏனெனில் சகமனிதனது சமூக அறிவும், சமூக அக்கறையும் சமூகக் களங்களில்தான் முழுமை பெறும். குடும்ப அக்கறையை வெளிப்படுத்த வீடு இருப்பதைப்போல, சகமக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்த இத்தகைய சமூகக் களங்கள் மட்டுமே வீடாகச் செயல்பட முடியும்.
சமூகக் களங்களில் சமூகவிஞ்ஞானமின்றி தெளிந்த சமூக அறிவோ, சமூக மாற்றமோ சாத்தியமில்லை. எனவே சமூக விஞ்ஞானக் களத்தில் நம்மை இணைத்துக் கொள்ளாவிட்டால் நமது சமூக அக்கறையால் சகமக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. நமக்கும் பாதுகாப்பில் உறுதி கிடைக்காது.  

'களமற்றவர்களின் அக்கறை
கடலில் கொட்டப்படும் சர்க்கரை'
எனவே இனியாவது குடும்பத்தின் இணை மதிப்பின் அளவிற்காவது  சமூகக் களத்திலும் நிற்போம். இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சமூகக் களமின்றி குடும்ப அளவில் மட்டும் நிற்பவர்கள் அரை மனிதர்களெனில்  சமூகக் களத்திற்காகக் குடும்பத்தையே துறந்தவர்களை என்னவென்பது? நிச்சயம் இவர்கள் அரை மனிதர்களல்ல. இந்திய மக்களின் பகத்சிங், ரஷ்ய மக்களின் லெனின், வியட்நாம் மக்களின் ஹோசிமின், கியூப மக்களின் சேகுவரா, சீன மக்களின் மாவோ இன்னும் இவர்களைப் போன்ற சமூகவிஞ்ஞானிகளையும், இன்றும் இவர்கள் வழியில் பயணிப்பவர்களையும் எப்படி நாம் அரைமனிதர்களாகக் கருத முடியும்!. முழுமனித வாழ்வின் வெற்றிக்கு இவர்களே முன்மாதிரிகளாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் பன்னீரைப் போன்றவர்கள். நாமும் பன்னீராக மணப்பதற்கு அவசியம் இருக்கிறது. ஆனால் நன்னீராக ஒழுங்கமைவது இதன் அடிப்படை என்பதை உணர வேண்டும். 
          குடும்பக் களத்தில் சமூக அக்கறை இருப்பதும், சமூகக் களத்தில் குடும்ப அக்கறை இருப்பதும் அவசியந்தான். ஆனால், 'காதலன் நோய்க்குக் காதலி மருந்துண்ட கதையாகிவிடக் கூடாது.' உரிய களத்தில் உணர்வுகளைப் பயிரிட்டால் மட்டுமே அதற்கான விளைச்சல்களைப்  பெற முடியும்.
          இந்த அளவில் இனி சந்திப்போர் முகம் பார்த்து முழுமனிதனாய் பேசலாம். குடும்பம் பற்றி... ஊரைப்பற்றி... தொழிலைப்பற்றி... சமூகஅக்கறை பற்றி... சமூக இலட்ச்சியத்திற்காகச் சார்ந்திருக்கும் களத்தைப் பற்றி... இப்படி, சகமனிதருடன் நானும் என்னுடன் அவரும் பேசித் தெரிந்து கொள்ள ஏராளம் இருக்கின்றன.
          என் குடும்பம் இது... என் ஊர் இது... என் தொழில் இது... இதையும் கடந்து, சமூகத்தில் எங்கள் நோக்கம் இது... எங்கள்  செயல்பாட்டிற்கானக் களம் இது... இப்படித்தான் இனி உறவாட வேண்டும்.

அக்கறையற்றவர்களிடம் இதை முன்மாதிரியாக சொல்லிக் கொள்கிறேன்...
அக்கறையுள்ளவர்களிடம் இதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்!

சகமக்கள் நலனிலேயே தனது நலனும்
சகமக்கள் வாழ்விலேயே தனது வாழ்வும்
சிறப்பு பெற முடியும் என்பதே
சமூகவிஞ்ஞானம் உணர்த்தும் பேருண்மை!

வெளிவந்த விபரம்



காக்கை சிறகினிலே, நவ.2012, (பக்.20 - 23)
புதிய ஆசிரியன், ஜுலை 2012, சுருக்கவடிவம் (பக் 10 - 15)
சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை
நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்

No comments:

அதிகம் படித்தவை