எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும்



ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும்                         நீ சகமக்களின் சிறு துளி
புதியவன்                                               நம் குடும்பம் ஒரு குட்டிச் சமூகம்
மானிட சமூகம் நம் மொத்த உருவம்

நமது ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் மக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டுடன் இணைய வேண்டிய தருணம். நமது பலம் பலவீனங்களையும், நிறை குறைகளையும், சரி தவறுகளையும் பற்றிய படிப்பினைகளை நாம் ஏற்காவிட்டால் மக்களின் ஒற்றுமையை துரோக சக்திகள் வழக்கம்போல அருவடை செய்துகொள்வார்கள்.
நமது போராட்டத்தின் முக்கியமான இரண்டு நல்ல அம்சங்கள் 1.சாதி மதம் இனம் பாலினம் பொருளாதாரம் போன்ற பாரபட்சங்களை துறந்துவிட்டு சகமனிதர்களாக சுயமரியாதையின் பொருட்டு ஒன்றுபட்டுள்ளோம், 2.பீட்டா என்ற அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஒரு சக்தியை எதிர்த்து நாம் வெல்ல வேண்டும் என்ற இலட்சியம். இதற்காக அனைத்து தரப்பினரின் ஆதரவும் பெருகியிருக்கின்றது. இதனால் நமக்கு கவனமும் எச்சரிக்கையும் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். திரை துறையினர், கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஐடி நிறுவனத்தார் என ஆதரவுகள் பல. ஊடகங்கள் நம் போராட்டத்தை முழுநேர செய்திகளாகவே வெளியிடுகின்றன. இவை நமக்கான சாதகங்கள்.
நமது நண்பர்களுடன் போராடுவதற்கானக் காரணங்களை விளக்கச்சொல்லி கேட்கின்றபோது பலர் பொத்தாம்பொதுவான பதிலைச் சொல்கிறார்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், வீரத்தின் அடையாளம் என்பதாக விளக்குகிறார்கள். பாரம்பரியம் என்பது பண்பாட்டின் மற்றொரு சொல்லாகும். பண்பாடு என்பது மனிதர்கள் தங்களது வாழ்வியலை எவ்வகையிலெல்லாம் பண்படுத்தியிருக்கிறார்கள் என்பதாகும். பண்பாடு என்பதில் சமூக வாழ்வியல், கருத்தியல், உள்ளத்தியல், கருத்து நிலைப்பாடு, உலகப்பார்வை, தத்துவ அடிப்படை ஆகிய சமூக உள்ளடக்கங்கள் இருக்கின்றன. நமது வரலாற்றுத் தொடர்ச்சியில் பாரம்பரியம் என்பதற்காகவே கடைபிடிக்கின்ற பண்பை நாம் களைய வேண்டும். பாரம்பரியத்திலிருந்து எவற்றை கடைபிடிப்பது, எவற்றை கைவிடுவது, எவற்றை மீட்டெடுப்பது, எவற்றை புதுப்பிப்பது போன்றவற்றை சமூக இலட்சியங்களின் அடிப்டையிலானத் தேவைகளிலிருந்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருப்பதாக சமூகவிஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.
நமது ஒற்றுமை பாரம்பரியத்திற்காக மட்டுமல்ல, மாட்டிடம் வீரத்தைக் காட்டுவதற்காக மட்டுமல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கடமையானது போராட்டக்களத்திற்கு இருக்கின்றது. நம் மீது அதிகாரம் செய்யக்கூடிய இலாபவெறிபிடித்த நிறுவனங்களும் பாராளுமன்ற எடுபிடிகளும் தொடர்ந்து செய்கின்ற ஒரு தந்திரத்தை நாம் நினைவுகொள்ள வேண்டும். அதாவது, நமது மக்களின் முக்கியமான பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காகவும் மறக்கச் செய்வதற்காகவும் சில புதிய பிரச்சனைகளை உருவாக்குவார்கள் அல்லது முதன்மையற்ற பிரச்சனைகளை மிக முக்கியமான சமூகப்பிரச்சனையாக ஊதிப்பெருக்குவார்கள். இது அவர்களது செயல்திட்டத்தின் இன்றியமையாத அணுகுமுறையாகும். நமது ஒற்றுமையும் போராட்டமும் அவர்களது அத்தகையத் திட்டத்தில் இடம்பெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உலக மக்களுக்கு உணவு செய்யும் விவசாயிகள் வறட்சியால் இறந்துவருகிறார்கள். இந்த வறட்சி இயற்கையாக உருவானதல்ல. நமது அரசின் மக்கள் துரோக கொள்கையால் உருவெடுத்த விபரீதமாகும். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கொள்கை உலகிலுள்ள இலாபவெறிபிடித்த நிறுவனங்களை நம் மண்ணில் அனுமதித்ததால் வந்த விளைவாகும். இன்றைய வறட்சியிலும்கூட ஒரு கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் நன்னீரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது. இந்தக் கார்கள் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாகிய வாகனப்புகைகளில் முக்கியத்துவமுடையதாகும். பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் நாள்தோறும் இலட்சக்கணக்கான லிட்டர் நீரை இலாபமாக்குகின்றன. கார் கோக் பெப்சி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து இலட்சக்கணக்கான லிட்டர் கழிவுகளை நீர்நிலைகளிலும் விளைச்சல் நிலங்களிலும் கலந்துவிடுகின்றன. இதுபோல இலாபவெறிபிடித்த நிறுவனங்கள் நம் மண்ணில் எத்தகைய விசமத்தனமான உற்பத்திகளை செய்கின்றன என்பதை பட்டியலிட்டுப் பார்ப்பது நம் அனைவரின் கடமையாக இருக்கின்றது. அரசு துணையுடன் நிறுவனங்களின் அபகரிப்பினால் நிலங்களின்றியும் நீரின்றியும் விவசாயிகளும் விவசாயமும் இறுதிமூச்சுடன் ஏங்குகின்ற இழவு நிலையில் நமது ஒற்றுமை கூடியிருக்கின்றது.
இழவு நேரத்தில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கின்ற அணுகுமுறை வெற்றியை நல்கும் சரியான பாதையைக் காட்டாது. மேலும் இத்தகைய அணுகுமுறையில் சிறுத்தைக்கு பயந்தோடி முதலையிடம் சாகும் விபரீதம் இருக்கின்றது. சமூக நிலைமைகளின் ஊடாக சமூகத் தேவைகளின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பற்றிய தெளிவான சமூகஅறிவை திட்டமிட்டு உருவாக்கிக்கொள்வது நமது போராட்டக்களத்தின் கடமையாகும்.
இன்னும் நம் மக்கள் கருப்புப்பண நாடகத்தில் அடிபட்டு மீண்டெழவில்லை, இலாபவெறிபிடித்த ஏகாதிபத்திய நிறுவனங்களால் நிகழ்த்தப்படும் இயற்கை பேரழிவுகளால் இயற்கைப் பேரிடர்களை சந்திக்கும் அபாயத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறோம். சுனாமி, நிலநடுக்கம் போன்ற மிகப் பயங்கரமான பேரிடர்கள் நம்மை நோக்கி பதுங்கிக்கொண்டிருக்கின்றன. குடிநீருக்காகவும் மீத்தேன், கெய்ல் போன்ற பல்வேறு பின்னணிகளின் காரணமாகவும் உலக இராணுவங்களையும் உள்ளூர் போலீசுகளையும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இத்தகையச் சூழலில் நமது உணர்ச்சி பொங்குகின்ற ஒற்றுமை மட்டும் போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்காது.
ஜல்லிக்கட்டுக்காகப் போராடுகின்ற நமது ஒற்றுமை சமூக விடுதலைக்கான ஒற்றுமையாக உருமாற வேண்டும். நமது போராட்டத் திட்டங்கள் சமூக விடுதலைக்கான வேலைத்திட்டங்களாக விரிவுபெற வேண்டும். இந்தத் தருணம் நம்மை சமூகவிஞ்ஞானிகளாகப் புதுப்பித்துக்கொள்வதற்கான தருணம். சமூக நிலைமைகளை அறிவியல் தத்துவ அடிப்படையில் புரியச் செய்து சவால்களை சரியாக எதிர்கொண்டு சமூகத்தை மேன்மையடையச் செய்கின்ற சமூகவிஞ்ஞானிகளாக உருமாறவேண்டிய தருணம். தன்னகங்காரத்திற்கும் தான்தோன்றித்தனத்திற்கும் தாழ்வுமனப்பான்மைக்கும் வழி மறித்து சரியானப் பாதையில் கரம் சேர்வதற்கான தருணம். அனைத்து சமூகவிஞ்ஞானிகளுடனும் பாரபட்சமின்றி கற்பதற்கான தருணம். அனைத்து சமூகவிஞ்ஞானக் களங்ளையும் பாரபட்சமின்றி பரிசீலிக்க வேண்டிய தருணம். தெளிவற்றக் கூட்டத்திற்கும் தெளிவுள்ள களத்திற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்.
நம் முன்னுள்ள சமூகவிஞ்ஞானிகளில் மக்கள் அதிகாரத்தின் குரல் நம்மை சமூக இலக்கு நோக்கி வளர்த்தெடுக்கும் நம்பிக்கையைத் தருகின்றது. நான் மக்கள் அதிகாரம் என்றச் சமூகவிஞ்ஞானக் களத்தை நமது ஒற்றுமைக்குப் பரிந்துரை செய்கின்றேன். அவர்களின் ஜல்லிக்கட்டு ஒற்றை இலக்காக அமையவில்லை என்பதற்கு ஓர் உதாரணம். அவர்கள் நிகழ்த்திய ஜல்லிக்கட்டு டெல்லிக்கட்டாக விளக்கப்படுவதில் சமூகவிடுதலையின் மேன்மை பிரதிபலிக்கின்றது. நாம் அனைவரும் மக்கள் அதிகாரத்தின் குரலுக்கு செவிசாய்ப்பதும், பரிசீலிப்பதும், செயல்திட்டத்திற்கு கரம் சேர்ப்பதும் நம்மை சமூகவிஞ்ஞானிகளாகப் புத்துயிர் பெறச் செய்யும் என நம்புகிறேன். எனது பரிந்துரையைப் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் புதியவன்.
           



No comments:

அதிகம் படித்தவை