எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

அறிவெனும் பெரும் பசி



அறிவெனும் பெரும் பசி

புதியவன்
Puthiyavansiva.blogspot.in

சமூக அறிவைப் பற்றிய ஒரு கதை. கதையைப் பிறகுச் சொல்வேன். சமூக அறிவைப் பற்றிய சில கேள்விகளுக்கு விடை தேடி பயணிப்போம்.
          அறிவியல் தத்துவ உலகப்பார்வையில் சமூகத்தைச் சரிசெய்ய முயல்கின்ற சமூகவிஞ்ஞானிகளைக் கவனிக்கின்றோமா? இவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு கதையை, ஒரு கவிதையை, ஒரு கட்டுரையை, ஒரு புத்தகத்தை, ஒரு திரைப்படத்தை, ஒரு நிகழ்ச்சியைத் தன்னோடு இணைத்துக் கொள்வதற்காக ஏதேனும் முயற்சி செய்திருக்கிறோமா? இத்தகைய முயற்சிக்காக 24 மணிநேரத்தில் 30 நிமிடமாவது ஒதுக்கியிருக்கிறோமா? சமூகவிஞ்ஞானிகளுடன் பேசுவதற்குக் கொஞ்சமாவது முன்வந்திருக்கிறோமா? சமூக அக்கறையுடைய சமூகவிஞ்ஞானக் களங்களில் இணைய முயலாமல் தெளிந்த சமூக அறிவை எட்ட இயலாது என்பதை எந்தளவிற்கு உணர்ந்திருக்கிறோம்? திரைப்பட நாயகர்களுக்காக முதல் காட்சிக்கு முந்தியடிக்கிறோம். இந்த முயற்சியின் சிறு பங்காவது சமூக அறிவிற்காக முயன்றிருக்கிறோமா?
          சமூகவிஞ்ஞான உலகப் பார்வையில் (social scientism) அறிவு என்பது செயலைப் பக்குவப்படுத்துவதற்குத்தானேசினிமா, சின்னத்திரைகளின் அறிவு சமூகச் செயல்களைப் பக்குவப்படுத்துவதில் ஏதேனும் சாதித்ததுண்டா? சமூக அறிவையே முடமாக்கிவிட்டது. இது எப்படிச் சாதனையாகும்! எத்தனை அயோக்கியத்தனம் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
          பாடப் புத்தகத்தைப் படிக்கவே நேரம் போதவில்லை என்கிறோம். இதில் மற்றப் புத்தகத்தை எப்படிப் படிப்பதாம் என்று அலட்டிக்கொள்கிறோம். ஆனால் மஞ்சள் புத்தகங்கள், சினிமாப் பாடல்கள், கிரிக்கெட் செய்திகளைச் சிலாகித்துப் படிக்கிறோம். இவை எந்தப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன? சினிமா, சின்னத்திரை, வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், டாஸ்மாக் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க நமக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது? நமது வேலைத்திட்டங்களில் இவற்றிற்காக எப்போது நேரம் ஒதுக்கினோம்? நமக்கே தெரியாமல் நமது நேரங்கள் களவாடப்படுகின்றனவே! எப்படி இவற்றை அனுமதித்தோம்? ஆனால், நேரம் போதவில்லை என்று காரணம் சொல்கிறோமே.
         
நமது சமூக அறிவின் தேடல்கள் தகவலறிவுக் களஞ்சியங்களைத் தாண்டுவதே இல்லை. துறைசார்ந்த அறிவின் ஆழத்தை எட்ட இயலவில்லை. சமூக அறிவு என்றாலே பொது அறிவுப் புத்தகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. சமூக அறிவு என்பது சமூக வாழ்க்கை முறையின் முழுதளாவிய மதிப்பீடு அல்லவா! இதை எப்படி ஒரு மதிப்பெண்ணுக்கான வினாவிடைப் புத்தகமாகச் சுருக்கிக்கொள்ள முடிந்தது? சமூக அறிவிற்கானத் துல்லியமானக் கேள்விகளுக்கு விடைகளை உணர்த்த வேண்டுமல்லவா! இதை உணர்த்தாமல் சுயமரியாதை உடையவர்களாக எப்படி வாழ முடியும்?
          காலங்காலமாக அறிவெதிர் தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து பழகியவர்கள் நாம். இன்று அறிவியல் தத்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதத் தகுதியை எட்டி விட்டது. அறிவெதிர் தத்துவத்தால் கட்டிக் காக்கப்பட்ட அறியாமைக் கோட்டைகள் இடிந்துவருகின்றன. இத்தகைய அறிவியல் தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டாமா? அறிவியல் தத்துவ உலகப் பார்வையில் பயிற்சி பெற வேண்டாமா? நமக்கான அறிவியல் கோட்டைகள் உருவெடுக்க வேண்டும். இவற்றிற்கான முயற்சிகள் நிகழாமல் சமூக அறிவு உடையவர்களாக வாழவே முடியாது.
          நாம் சமூக அறிவைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியாக வேண்டும். இல்லாவிட்டால், சமூக அறிவற்ற குருடர்களாகவே நமது காலம் முடிந்துவிடும். நமது பிள்ளைகளின் நாளைய துன்பங்களுக்காக இன்றே முளைத்திருக்கின்ற அத்தனை அநீதிகளும் வென்றுவிடும். நமது பிள்ளைகளின் நல்வாழ்விற்காக நாம் காரணமாகலாம். ஆனால், செத்து மடிவதற்கு காரணமாகலாமா! நமது பிள்ளைகள் நம்மால் செத்து மடிவார்கள். நமது சமூக அக்கறையற்ற வாழ்க்கை முறையும், சமூக அறிவிற்கான முயற்சியின்மையும் இத்தகைய ஆபத்துக்களைச் சுமந்திருக்கின்றன. பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்குப் பெற்றவர்களே கொல்லி வைக்கின்ற விபரீதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
          கொல்லிக் கட்டைகளா வாழ்க்கை? முற்றி விளையும் பயிர்களல்லவா வாழ்க்கை! நாம் பயிர்களைப்போல வாழ்வோம். பசுமை பொங்கும் இயற்கையைப்போல வாழ்வோம். உயிரினங்களின் மூச்சாக அடர்ந்திருக்கின்ற பிரமாண்டமான காட்டைப்போல வாழ்வோம். அரவணைக்கின்ற தோழர்களாக வாழ்வோம். மனிதரின் உழைப்பு இயற்கையைப் அழித்துத் தோன்றியதாகத் தெரியவில்லை. மாறாக, இயற்கையின் அங்கமாகத் தோழமை பாராட்டியது. சமூகத்தின் உற்பத்தியும் தோழமையைக் காப்பாற்ற வேண்டும். பகைமையைப் பாராட்டினால் அழிவு மனித இனத்திற்கு மட்டுமல்ல. நம்மைப் பரிணமித்த அத்தனை மூதாதையர்களுக்கும்தான். இன்று இலாப வெறிபிடித்தவர்களின் உற்பத்திமுறை நிகழ்கிறது. அழிவுக்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நமது சமூக அறிவு இதனைச் சரிசெய்தாக வேண்டும். கண்டுங்காணாமல் போவது சமூக அக்கறையற்றச் செயலாகும். நாம் சமூக அக்கறை உடையவர்களாக வாழ முயல்வோம்.
          நாம் நேர்மையற்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது கயவர்களால் அதிகாரம் செலுத்தப்படும் உலகம். சமூக அறிவிற்கானத் துல்லியமானக் கேள்விகளுக்கு விடையறியாதக் குருடர்களாக வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். நாம் குருடர்களாக உலவுவதால் கயவர்களின் பிழைப்பு பிரகாசமாக நிகழ்கின்றது. அறிவியல் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டன. இருட்டு மடிந்து பேரொளி பெருகிற்று. நாம் வெளிச்சமான வாழ்வைப் பெற்றுவிட்டதாக நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால் இருட்டைவிடப் பலமடங்காகப் பார்வையை இழந்துவிட்டோம். பேரொளியால் பார்வை விழுங்கப்பட்டுவிட்டது. அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த அளவிற்கு அறிவியல் உலகப்பார்வை வளரவில்லை. பார்வை கூசும் வெளிச்சத்தால் விபத்துக்களே வாழ்க்கையாகிவிட்டன. விபத்துக்களைப் பற்றிய அச்சங்களே வாழ்க்கையாக விரிந்திருக்கின்றன.
          அச்சம் புகுந்த மூளையில் அறிவிற்கு ஏது வளர்ச்சி. சமூக அறிவின் சுதந்திர வளர்ச்சி ஊனமாகிவிட்டது. அறியாமையின் திறந்த சிறையில் முடங்கிக் கிடக்கின்றது வாழ்க்கை. நாம் சுதந்திரமாக டீவி பார்க்கலாம். விருப்பப்படும் நாயக நாயகிகளின் திரைப்படங்களில் அலைமோதலாம். வீடியோ கேம்களில் நம் கண்களையும் விரல்களையும் புதைத்துக் கொள்ளலாம். பேரொளியின் பளீரென்ற வெளிச்சத்தில் கண்களைப் பொத்திக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாகக் கனவு காணலாம். ஆனந்தக் கண்ணீர் பொங்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும். நமக்கான எல்லைகளைக் கயவர்கள் திட்டமிட்டுவிட்டார்கள். நம் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாம் நடமாடுவதற்கான எல்லைகள் குறிக்கப்பட்டுவிட்டன.
          நாம் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்... நாம் எவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும்... நாம் எத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டும்... எல்லாமும் அதிகாரமிக்கக் கயவர்களால் தீர்மானிக்கப்பட்டதாக இருக்கின்றன. இவற்றின் பின்னணியில் அதிர்ச்சிமிக்க உண்மைகள் உறைந்திருக்கின்றன. அதாவது, நாம் எவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது... நாம் எவற்றையெல்லாம் சிந்திக்கக் கூடாது... நாம் எத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது... எல்லாவற்றையும் அவர்கள் முடிவு செய்துக் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். நமது எண்ணங்கள், விருப்பங்கள், சிந்தனைகள், முடிவுகள், செயல்கள் அனைத்தும் நமக்கானதாக இல்லை என்பதே உண்மை. நமது வாழ்க்கை கயவர்களின் பிழைப்பிற்காக நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. அவர்களின் நவீன  தொழில்நுட்பக் கருவிகளால் பராமரிக்கப்படுகின்ற மந்தைக் கூட்டங்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உண்மையை நம்மால் நம்ப முடிகின்றதா? சமூக அறிவின் பரிதாப நிலையைப் புரிந்துகொள்ள முடிகின்றதா? நான் சொல்ல வந்தக் கதையைச் சொல்கிறேன். ஒப்பிட்டுப் பாருங்கள்.

சிதம்பரம் பக்கா கேடியான மனிதன். மனைவி வீட்டில் இல்லை. செவ்வாய் நோன்பிற்குத் தாய்வீடு போய்விட்டாள். திரும்புவதற்கு நாளை மதியமாகும். ஒரே மகன். நான்காம் வகுப்பு படிக்கின்றான். பள்ளியிலிருந்து திரும்ப நான்கு மணியாகும். மாடி வீட்டு ஆயாவிற்குக் காது செவிடு. வேலைக்காரச் சிறுமி இறங்கி வருகிறாள். வீடு செல்லும் நேரம். மாடிப்படி வாசலிலேயே சிறைபிடிக்கிறான் சிதம்பரம். சின்னப் பெண். ஒள்ளியான உருவம். கருத்த மேனி. கரங்கள் பாத்திரம் தேய்த்தே காய்த்திருந்தன. அச்சமே உருவமாய் நின்றாள். மேனி அழகைச் சோகக் கண்கள் முழுங்கியிருந்தன. அவளை வீட்டிற்குள் கடத்தினான். கட்டிலில் வன்புணர்ந்தான். இவனது மிரட்டல் வார்த்தைகளில் ஒடுங்கிக் கிடந்தாள் அவள்.
அவனுக்கு எதிர்பாராத விபரீதம். வெளியில் ஆட்டோ வந்துவிட்டது. சத்தம் கேட்டு வேகமாக எழுந்தான். வழக்கத்திற்கு மாறாக 2.30 மணிக்கே பையன் வந்துவிட்டான். மிரட்டலுக்குக் கட்டுப்பட்டவள் பிணம் போலக் கிடந்தாள். கதவைத் திறந்துவிட அவசியமில்லை. குறுக்குப் பாதை வழக்கம் போல இருக்கின்றது. சிறுவன் நிச்சயம் நுழைந்துவிடுவான். மகன் நுழைவதற்குள் செய்வதறியாது படபடத்தான். இவளுக்கு உள் மனதில் நிம்மதி பிறந்தது. காமுகனிடமிருந்துத் தப்பிவிட முடியும் என்று நம்பினாள். சிறுவன் பை மூட்டையை இறக்கி வைக்கும் இடத்தில் அவள் கிடந்தாள். தப்பிக்க முடியாதச் சூழலில் சிதம்பரம் சிக்கினான்.
அந்தக் கேடி சாமர்த்தியமாகச் சூழ்ச்சி செய்தான். சிக்கலானச் சூழலில் இருக்க வேண்டிய சாமர்த்தியம் அவனிடம் இருந்தது. சிறுவன் வாசல் நுழைவதற்குள் இனிப்புப் பண்டங்களைத் தரையில் பரப்பி வைத்தான். பீரோவின் உச்சியிலிருந்த விளையாட்டுத் துப்பாக்கியைப் பாதையில் படுக்க வைத்தான். அந்தத் துப்பாக்கியில் தண்ணீர் நிரப்ப வேண்டும். விசையை அழுத்தினால் புல்லட் சத்தத்துடன் நீரைப் பீய்ச்சும். இதன் கவர்ச்சி குழந்தைகளிடம் அலாதியான ஆசையை ஏற்படுத்தும்.
சிறுவன் வீடு நுழைந்தான். இனிப்புகளைக் கண்டதும் கிளர்ச்சியடைந்தான். புத்தக மூட்டையை முன் அறையிலேயே இறக்கி வைத்தான். இனிப்பு உமில் நீரில் கரைந்து கொண்டிருந்தது. விரல்களின் பிடியில் இரண்டு இனிப்பு காத்திருந்தது. இலாவகமாகத் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டான். சந்து போன்ற ஒரு பாதையில் தண்ணீர் நிரப்ப ஓடினான். அந்தப் பாதை அறையிலிருந்து விலகிச் சென்றது. சந்திலிருந்து வாசலையோ வாசலிலிருந்து சந்தையோ பார்க்க முடியாது. பூஜை அறையைக் கடந்தான். அவள் நிர்வாணப்படுத்தப்பட்ட அறையையும் கடந்தான். அடுப்படிக்கு எதிரில் ஒரு பாதை. குளியலறையும் கழிப்பறையும் இணைந்திருந்தன. தண்ணீர் நிரப்பும் ஆர்வத்துடன் உள் நுழைந்தான்.
சிதம்பரம் தப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவளை அள்ளிக்கொண்டு வாசலில் போய் விட்டான். எதையோ சொல்லி மிரட்டினான். அவள் கலவரமடைந்தாள். கண்கள் அச்சத்தில் கலங்கின. ஐம்பது ரூபாயைக் கையில் திணித்து அனுப்பினான். அவள் உதடு அழுவது போலப் பிதுங்கியது. தொடையிலிருந்துப் பாதம்வரை இரத்தம் வடிந்தது. அவள் நடந்தாள்...
          இந்தச் சம்பவத்தை யோசித்துப் பாருங்கள். அப்பனின் அயோக்கியத்தனத்தையும், வேலைக்கார அக்காளின் அவல வாழ்வையும் அறிந்துக் கொள்வதற்கான வாய்ப்பைச் சிறுவன் இழந்துவிட்டான். கேடி சிதம்பரமும் இதைத்தானே எதிர்பார்த்தான். இந்த நிகழ்வைப் பற்றிய நம் மனநிலை என்ன?
          சிறுவனுக்கு இனிப்பு கிடைத்தது. விளையாடத் துப்பாக்கிப் பொம்மைக் கிடைத்தது. இதற்காகச் சந்தோசப்படலாமா?
           கேடி சிதம்பரம் தப்பிப்பதற்காகச் சூழ்ச்சிகள் செய்தான். சிறுவனும் சூழ்ச்சியில் விழுந்தான். இவனும் திட்டமிட்டபடித் தப்பித்துக்கொண்டான். இதற்காக ஆதங்கப்படலாமா?
          நம் மனசாட்சி என்ன செய்யும்? நேர்மையின் பக்கமென்றால் ஆதங்கமும் கோபமுமே எட்டிப்பார்க்கும். நாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். இந்தக் கதையை நம் சமூகஅறிவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு உண்மையை உணர முடியும்.
          இந்தக் கதையில் வரும் சிறுவனது நிலையில்தான் நமது சமூகஅறிவு இருக்கின்றது. கேடி சிதம்பரத்தைப் போலவே சமூக நிறுவனங்களும் சூழ்ச்சிகள் செய்கின்றன. சமூக உண்மைகளை நாம் உணரக்கூடாது என்பதற்காகப் பல கோடி முதலீடுகளில் கவர்ச்சிகரமான சூழ்ச்சிகளைத் தொடர்ந்து உருவாக்குகின்றன.
          நாம் வளர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம். எத்தனைக் காலம் வளராமல் சிறுவனாகவே காலம் கடத்துவது. நாம் சிறுவனாகவே இருந்துவிடக் கூடாது. நம் வளர்ச்சிக்கு சமூகஅறிவு இன்றியமையாதது. இனியாவது சமூகஅறிவுடன் வாழ முன்வருவோம்.
          சமூக அறிவிற்கானத் துல்லியமானக் கேள்விகளை நினைத்துப் பாருங்கள். அவற்றின் விடைகளை விளங்கிக்கொள்ள முயல்வோம். இந்த முயற்சி சிறிய அறிமுகம் மட்டுமே. ஏனெனில் சமூக அறிவை எழுத்தில் எட்ட இயலாது. சமூக அக்கறையுடைய செயலனுபவங்களில் மட்டுமே எட்ட முடியும்சமூக அறிவின் தேர்ச்சியும், தெளிந்த சமூக அறிவும் சமூகவிஞ்ஞானச் செயல்பாடுகளில் மட்டுமே சாத்தியம். சமூக விஞ்ஞானக் களங்களில் இணைகின்ற முயற்சியிலிருந்து சமூக அறிவு  தொடங்குகிறது. நல்லத் தொடக்கத்திற்காக இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். மற்றபடி எனது சிற்றறிவிலிருந்து நான் சொல்ல முயல்கிறேன். நீங்கள் புரிந்துகொள்ள இரண்டு மடங்கு முயல வேண்டும். இந்த ஒத்துழைப்பிலிருந்து சமூக அறிவை நோக்கிப் பயணிப்போம்.
          சமூக அறிவு பற்றிய பொதுவானப் புரிதலை உருவாக்கிக்கொண்டு துல்லியமான விடைகளுக்குச் செல்வோம். சமூகத்தின் அமைப்பைச் சமூகவிஞ்ஞானிகள் எப்படி விளக்குகிறார்கள்? நமக்குக் கற்பனை செய்யத் திறமை இருக்கின்றதா? பூவைப் போன்ற குழந்தையின் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவிற்குக் கற்பனை செய்ய முயல்வோம். நம் நெஞ்சுக்குள் மழை பொழியட்டும். மழைக்கால மண்ணின் சிற்றுயிர்களைப்போல எண்ணங்கள் உயிர்த்தெழட்டும்.
          சமூகம் ஒரு வீட்டின் அமைப்பைப்போல இருக்கின்றது. குழந்தைகள் கடல் மண்ணில் விளையாட்டாகக் கட்டுவார்களே, அந்த வீடல்ல. ஒரு காலத்தில் ஆற்று மணலைக் குவித்து விளையாடினார்கள். இன்று மணலும் இல்லை நீரும் இல்லை. எஞ்சியது சாக்கடைதான். மணல் கொள்ளையர்களால் குழந்தைகளின் ஆறுகள் களவாடப்பட்டுவிட்டன. மண் குவித்து விளையாடுபவர்களைக் கடற்கரையில்தான் காண முடிகின்றது.
          சமூக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்ற வீடு மண்பொம்மை அல்ல, அடித்தளமுள்ள வீடு. அடித்தளமுள்ள வீட்டைக் கற்பனை செய்ய முடிகின்றதா? வரவேற்பறை, பூஜையறை, சமையலறை, கழிப்பறை, படுக்கையறை அனைத்துமுள்ள வீட்டைக் கற்பனை செய்ய முடிகின்றது. ஆனால், அடித்தளமுள்ள வீட்டை எப்படிக் கற்பனை செய்வது?
          நம் கண்களுக்கு வீடுகள் தெரிகின்றன. ஆனால் வீட்டின் அடித்தளங்கள் தெரிவதில்லை. எளிய குடும்பத்துத் தாய் வாழ்க்கைத் துயரங்களைப் பிள்ளைகளுக்காகச் சுமக்கிறாள். பிள்ளைகளின் பிரகாசமான வாழ்வைச் சுமந்து தன்னை இருட்டில் புதைத்துக் கொள்கிறாள். இவளைப் போன்றது வீட்டின் அடித்தளம். வீட்டின் அழகும் உறுதியும் வெளிப்படுவதற்காக மண்ணில் புதைந்திருக்கின்றது. வீட்டின் சுமை முழுதும் அடித்தளத்தில் நிற்கின்றது.
          நமது கற்பனையில் வீட்டை அடித்தளத்துடன் கட்ட வேண்டும். அப்படியென்றால் வீட்டை எந்த வடிவத்தில் கட்டுவது? உழைப்பின் கலைஞர்கள் குழுவாக இணைந்து பலவிதங்களில் வீடுகளைக் கட்டுகிறார்கள். நிலத்தின் தன்மைக்கும் வீட்டின் அமைப்பிற்கும் ஏற்றபடி அடித்தளம் அமைக்கிறார்கள். மணல் பகுதியான நிலத்தில் குழிகளை உருவாக்கி அடித்தளம் அமைக்கிறார்கள். களிமண் பூமியில் ஆழ்துளைகள் உருவாக்கி அடித்தளம் இடுகிறார்கள். மலை பகுதியில் பாறை நிலங்களின் அடித்தளம், மேட்டில் சிறிதாகவும் பள்ளத்தில் பெரிதாகவும் இணைந்து வீட்டைச் சுமக்கின்றது. சேறு தேங்குகின்ற சமவெளிப் பகுதியில் வேறுவிதமாக அமைக்கப்படுகின்றது. வீட்டையும் அடித்தளத்தையும் தொழிற்பேட்டைகள் கட்டி முடிக்கின்றன. பிறகு ராட்சச வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். அடித்தளத்தையும் வீட்டையும் சமவெளி நிலத்தில் பொருத்தமாக நிறுத்தி, இரும்புக் கருவிகளால் முடுக்கிவிட்டு, வேலையை முடிக்கிறார்கள். இப்படி வீடுகள் அமைப்பதில் பலவிதம்.
          நாம் ஐந்து மாடி வீட்டைக் கற்பனை செய்துகொள்வோம். கட்டிட விதிப்படி நான்கில் ஒரு பகுதி உயரம் அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும். எனவே நமது ஐந்து மாடி வீட்டின் அடித்தளம் இரண்டு மாடி உயரத்திற்கு அமைந்திருக்கின்றது. இந்த வீட்டின் அமைப்பிலிருந்து சமூகவிஞ்ஞானிகளின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
          சமூகத்தின் அமைப்பு வீட்டின் அமைப்பைப்போல இருக்கின்றது. வீட்டின் அடித்தளம் போல சமூகத்திற்கும் அடித்தளம் இருக்கின்றது. இதனை அடிக்கட்டுமானம் என்கிறார்கள். அடித்தளத்திலிருந்து மேல்நோக்கியதாக ஐந்து மாடி வீடு கட்டப்பட்டுள்ளது. அதுபோலவே அடிக்கட்டுமானத்திலிருந்து சமூகமும் மேல்நோக்கியதாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை மேல்கட்டுமானம் என்கிறார்கள்.
          சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்பது சமூகப் பொருளாதார உற்பத்தி. அதாவது, சமூகத்திற்குத் தேவையானப் பொருள்களை உழைத்து உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகள் ஆகும். இதனை உற்பத்தி முறை என்கிறார்கள். உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என இரண்டாகப் பிரித்து விளக்குகிறார்கள்.
          சமூகப்பொருள் உற்பத்தியல்லாத மற்ற எல்லா அமைப்புகளும் சமூகத்தின் மேல்கட்டுமானம் ஆகும். குடும்பம், சமயம், சடங்கு, கல்வி, சட்டம், தத்துவம். அரசு, சிறை, தண்டனை, சாதியக் கட்டுப்பாடுகள், கலை, விளையாட்டு, இலக்கியம் என பட்டியல் நீண்டு செல்லும். இவை அனைத்தும் மேல்கட்டுமானம் என்று விளக்குகிறார்கள். சமூக அமைப்பு பற்றிய பொதுவான அறிமுகத்தை இந்த அளவில் நிறுத்திக்கொள்வோம்.
          இப்பொழுது பொதுவான அறிமுகத்திலிருந்து துல்லியமான எட்டுக் கேள்விகளைக் கவனிப்போம். இவற்றின் விடைகளை அறிமுகமாக முயல்வோம். நாம் கற்பனையில் கட்டியுள்ள ஐந்து மாடி வீட்டிற்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியையும் வீட்டின் அமைப்பிற்கு உரிய பெயராகப் பொருத்துவோம்.
          நம் வீட்டிற்கு இரண்டு மாடி உயரம் அடித்தளமாக இருக்கின்றது. இந்த அடித்தளத்திற்கு “சமூக உற்பத்தி முறையியல்” என்று பெயரிடலாம்.
          அடித்தளத்திற்கும் ஐந்து மாடிகளுக்கும் இடையில் அடி வீடு இருக்கின்றது. இந்தக் அடி வீட்டிற்குச் “சமூக வாழ்வியல்” என்று பெயரிடலாம்.
         
          மாடி வீடுகளுக்குச் செல்வோம். முதல் மாடி வீட்டிற்குச் “சமூக உள்ளத்தியல்”  என்று பெயரிடலாம்.     
          இரண்டாம் மாடி வீட்டிற்குச் “சமூகக் கருத்தியல்” என்று பெயரிடலாம்.
          மூன்றாம் மாடி வீட்டிற்குத் “தனிமனிதக் கருத்து நிலைப்பாடு” என்று பெயரிடலாம்.                  
          நான்காம் மாடி வீட்டிற்குத் “தனிமனித உலகப்பார்வை” என்று பெயரிடலாம்.        
          ஐந்தாம் மாடி வீட்டிற்குத் “தத்துவ அடிப்படை” என்று பெயரிடலாம்.   
          இப்பொழுது படி இறங்கி வீடடிற்கு வெளியே வாருங்கள். முழுதளாவிய வடிவில் வீட்டைப் பார்க்கிறோம். அடி வீட்டிலிருந்து ஐந்தாம் மாடி வரை முழு வீடும் பிரமாண்டமாகத் தெரிகின்றது. இதற்குச் “சமூகப் பண்பாட்டியல்” என்று பெயரிடலாம்.
          இப்பொழுது துல்லியமான எட்டுக் கேள்விகளும் வீட்டிற்குப் பெயர்களாகப் பொருந்திவிட்டன. இந்தப் பெயர்களுக்கு விளக்கம் அறிய முயல்வோம்.

சமூக உற்பத்தி முறையியல்
முதலில் வீட்டின் அடித்தளத்திற்குச் செல்வோம். இதற்குச் சமூக உற்பத்தி முறையியல் என்று பெயரிட்டுள்ளோம். உழைப்பில் இருந்து மனிதன் தோன்றினான். உற்பத்தியில் இருந்து சமூகம் தோன்றியது. பொருளாதார உற்பத்தியே சமூகத்தின் இதயத்துடிப்பு. சமூகம் உயிர் வாழ உற்பத்தி தொடர்ந்து நிகழ வேண்டும். உற்பத்தி நின்றுவிட்டால் சமூகம் இறந்துவிடும். எனவேசமூகப் பொருளாதார உற்பத்தி எப்படி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றதுஒரு சமூகம் எத்தகைய மனிதக் கூட்டத்தால் உற்பத்தியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறதுஎத்தகைய அறிவும்ஆற்றலும்அனுபவமும் நிறைந்த மனிதர்களால் உற்பத்தி நிகழ்கிறதுஎத்தகைய இயற்கை வளங்களைக் கொண்டு உற்பத்தி நிகழ்த்தப்படுகிறதுஎத்தகையக் கருவிகளும் அறிவியல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றனஉழைப்பாளர்கள் உற்பத்திப் பொருட்களை எத்தகைய முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்உற்பத்திச் சாதனங்கள் மீதும்உற்பத்திப் பொருட்கள் மீதும் உழைப்பவர்களுக்கு எத்தகைய உரிமை நிலவுகிறதுசமூக உற்பத்தியில் நிகழ்கின்ற உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகைய விளைவுகளை உருவாக்கப் போகின்றனஇவற்றைப் பற்றிய அறிவே சமூக உற்பத்தி முறையியல் ஆகும் (Social Production Methodology) இவற்றின் அடிப்படையிலேயே மனித சமூகத்தின் முழுமையான வரலாறு கட்டமைந்துள்ளது. சமூக உற்பத்தி முறையியலின் வளர்ச்சி மனிதகுல வரலாற்றை எட்டு நிலைகளாகக் கட்டமைத்துள்ளது.
1.      காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.      வேட்டை நாகரிகம்
3.      கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.      விவசாய நாகரிகம்
5.      உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.      வணிகத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.      நிதி மூலதன கும்பல் தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
8.      மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்

 இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் இவற்றில் அடங்கும். சமூக உற்பத்திமுறையியலின் இயக்கத்திற்கு சமூகக் கட்டமைப்பின் அனைத்து அம்சங்களும்  அழுத்தம் தருகின்றன. ஆனால் சமூகக் கட்டமைப்புகளைத் தீர்மானிக்கின்ற ஆற்றலாக சமூக உற்பத்திமுறையியலே இயங்குகின்றது.
சமூக வாழ்வியல்
          வீட்டின் அடித்தளத்திலிருந்து அடி வீட்டிற்கு வருவோம். இதற்குச் சமூக வாழ்வியல் என்று பெயரிட்டுள்ளோம். சமூக வாழ்வியல் என்பது மனிதர்கள் இணைந்து வாழ்கின்ற செயலமைப்புகள் ஆகும். மனிதர்கள் இணைந்து வாழ்வதற்கு மூளையே முக்கியக் காரணம் என்கிறார்கள். இயற்கையுடன் இணைந்து எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ முயன்றிருக்கின்றன. உயிரினங்களின் உடலமைப்பில் ஏதேனும் சிறப்புநிலை ஆற்றல் முக்கிய ஆயுதமாகச் செயல்பட்டுள்ளது. இத்தகைய ஆற்றல் இல்லாதவை உயிரின வரலாற்றில் மறைந்து போயுள்ளன. ஆற்றலுள்ளவை மட்டுமே தலைமுறை தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. கூரிய நகங்கள், பற்கள், கொம்புகள், ஓட்டத்தில் வேகம், பாய்ச்சலில் வீரம் என்பதாகச் சிறப்பு நிலை ஆற்றல்களைப் பட்டியலிட முடியும். ஆனால் மனித இனத்தின் சிறப்பாற்றலாக எதைக் குறிப்பிடுவது?
          மனித மூளையே மனித இனத்திற்குச் சிறப்பாற்றலாக உருவெடுத்தது. வாழ்க்கைச் சூழல்களை ஆராய்ந்து, அவற்றைப் பற்றியக் கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு, கருத்துக்களின் அடிப்படையில் செயல்படும் ஆற்றல் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தியது. ஆயினும் மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதச் சூழ்நிலைகளே நீடித்தன. இவற்றை எதிர்கொண்டு மனித இனம் சமாளிப்பதற்கு ஒற்றை மூளை போதவில்லை. மனிதக் கூட்டத்தின் மூளைகள் ஒன்றுபட்ட ஆயுதமாகச் செயல்பட வேண்டியத் தேவை இருந்தது. இந்தத் தேவையை வரலாறு நிறைவேற்றத் தொடங்கியது. மனிதர்கள் சகமனிதக் கூட்டங்களாக வாழத் தொடங்கினார்கள். இவற்றைச் சமூக விஞ்ஞானிகள் விவரித்து விளக்குகிறார்கள். இத்தகைய சமூக வாழ்க்கை பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. வாழ்க்கை முறையில் பல்வேறு அமைப்புகளும் வடிவங்களும் உருவாகியுள்ளன. பாலுறவு உரிமையின் வரையறை, குடும்பம், திருமணம், சடங்கு, சாதியக் கட்டுப்பாடுகள், சமயம், கல்வி, அரசு, இராணுவம், சட்டம், நீதி, காவல், சிறை, சுற்றுச்சூழல், இலக்கியம், கலை, அறிவியல், தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், விளையாட்டு, வர்க்கப்பிரிவு, இயற்கை விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம் என்பதாகப் பட்டியல் நீண்டு செல்கிறது. இவற்றைப் பற்றிய அறிவே சமூக வாழ்வியல் ஆகும் (Social Life). இவற்றில் அரசு என்பதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரு சமூகம் புரட்சி நிலை மாற்றம் அடைகின்ற தருணத்தில் மட்டும் அரசு தன் வரையறையை மீறுகிறது. அதாவது சமூக உற்பத்திமுறையில் அழுத்தம் செலுத்தும் பண்பிலிருந்து மாறி தீர்மானிக்கும் பண்புடன் இயங்குகிறது.

சமூக உள்ளத்தியல்
          அடி வீட்டிலிருந்து முதல் மாடிக்குச் செல்வோம். இதற்குச் சமூக உள்ளத்தியல் என்று பெயரிட்டுள்ளோம். இது சமூகத்தின் ஆழ்மனக்குழி பற்றிய அறிவியலாகும். இந்த இடத்தில் மனித மூளையைப் பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்வோம். மனித மூளைக்கு இரண்டு பண்புண்டு. 1. எண்ணங்களின் உருவாக்கங்களைப் பாதுகாத்தல். இது ஆழ்மனதில் அளவிட முடியாதக் கருங்குழியாகச் செயல்படுகின்றது. இதனை உள்ளம், மனது போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம், 2. சிந்தித்துக் கருத்துக்களை உருவாக்குதல். இதனை அறிவு என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். மனிதர்கள் சிந்தித்து உருவாக்கியக் கருத்துக்களைவிட, சிந்திக்கப்படாமல் ஆழ்மனக்குழியில் தொகுத்திருக்கின்ற எண்ணங்கள் அதிகம். மனித மூளையில் கவனித்துச் செய்கின்ற பதிவுகளைவிட கவனிக்காமல் செய்கின்ற பதிவுகள் ஏராளம். ஒரு எழுத்தை எழுதுகின்ற நேரத்தில் கடந்து செல்கின்ற வாகனச் சத்தம், மின்னல் வேகத்தில் பறக்கின்ற ஈ, மின்விசிறியின் சுழல் சத்தம், காற்றில் பறக்கும் நாள்காட்டிச் சத்தம், நாற்காலியின் அதிர்வு, கண்ணாடிக் கதவின் அசைவு ஆகிய அனைத்தும் மூளையின் ஆழ்மனக்குழியில் எண்ணங்களாகப் பதிவாகின்றன. ஆர்ப்பரிக்கின்ற பெருங்கடலாக எண்ணங்கள் இருக்கின்றன. சிந்தனைக் கப்பலில் நிதானமாகப் பயணிக்கின்றன கருத்துக்கள். ஆனால், மூளையில் பதிவாகும் எண்ணங்களுக்கும் சிந்தனையின் கருத்துக்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் எவை? வாழ்வியல் சூழலும் உலகளாவிய நிகழ்வுகளுமே காரணங்களாக அமைகின்றன. எனவே, உலகம் முழுதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது வாழ்க்கைச் சூழலில் எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? உலகளாவிய நிகழ்வுகளும் மனிதர்களது பங்கேற்பும் எத்தகைய எண்ணங்களை உருவாக்குகின்றன? இவற்றால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும், மனித எண்ணங்களுக்கும் இடையிலான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூக உள்ளத்தியல் ஆகும் (Social Psychology). சமூக உள்ளத்தியலின் அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதரின் தனித்துவமான உள்ளத்தியலையும் விளங்கிக்கொள்ள முடியும். தனிமனிதரின் பிறப்பு, வளர்ச்சி, வாழிட சூழல், பல்வேறு வாழ்வியல் சந்தர்ப்பங்கள் எனப் பன்முகப் படிநிலையில் தனிமனித உள்ளத்தியல் கட்டமைகின்றது. இதனை விவரிக்கும் திட்டமின்றி  சமூகத்தின் ஆழ்மனக்குழி பற்றிய அறிவியலோடு சுருங்கிக்கொள்வது பெருங்குறைதான். எனினும் சமூக அறிவு பற்றிய சமூகவிஞ்ஞான முயற்சியில் சமூக உள்ளத்தியல் பற்றிய விவரிப்பிலேயே தனிமனித உள்ளத்தியலை விளங்கிக்கொள்தல் போதுமானதாக உணர்றோம். எனவே இப்பெருங் குறையைக் கடந்துவர முயலவும்.

சமூகக் கருத்தியல்
          முதல் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வோம். இதற்குச் சமூகக் கருத்தியல் என்று பெயரிட்டுள்ளோம். சமூகக் கருத்தியல் என்பது மனிதர்களின் அறிவாக்க இயக்கங்களின் தொகுப்புகளாகும். மனிதர்களின் ஒவ்வொரு செயலும் அறிவைத் தூண்டுகின்றன. எல்லா அறிவும் செயலைச் செதுக்குகின்றன. இத்தகைய  அறிவும் செயலும் மனிதர்களின் கருத்துக்களால் கட்டமைகின்றன. உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது செயல்களிலிருந்தும், பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் எத்தகையக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? எத்தகையக் கருத்துக்களுடன் தொடர்ந்து செயல்படுகிறார்கள்? சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கின்ற பல்வேறு கருத்துக்களால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும் உலகளாவியக் கருத்துக்களுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூகக் கருத்தியல் ஆகும் (Social Ideology)
 .

தனிமனிதக் கருத்து நிலைப்பாடு
          இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்குச் செல்வோம். இதற்குத் தனிமனிதக் கருத்து நிலைப்பாடு என்று பெயரிட்டுள்ளோம். தனிமனிதக் கருத்துநிலைப்பாடு என்பது சமூகளாவிய நிலையில் ஒரு தனிமனிதரை மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். அதாவதுதன்னையோ அல்லது ஒரு சகமனிதரையோ மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். ஒரு மனிதர் தனது செயலை எத்தகையக் கருத்துக்களைப் பற்றிக்கொண்டுச் செய்கிறார்சமூகத்தின் பல்வேறு கருத்துக்களில் அவர் எத்தகையக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கின்றார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனிதக் கருத்து நிலைப்பாடு ஆகும் (Individual Concept Stage). ஒரு நபர் நேர்மையாகப் பேசுபவரைப்போலத் தோன்றலாம். தான் இத்தகையக் கருத்து நிலைப்பாடு கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஆனால், அவரது உணர்வுப் பூர்வமானச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அவரது செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் மதிப்பிடுவதன் மூலமாகவே அவரது கருத்து நிலைப்பாட்டை உறுதி செய்ய முடியும்.

தனிமனித உலகப்பார்வை
          மூன்றாம் மாடியிலிருந்து நான்காம் மாடிக்குச் செல்வோம். இதற்குத் தனிமனித உலகப்பார்வை என்று பெயரிட்டுள்ளோம். தனிமனித உலகப்பார்வை என்பது கருத்துக்களை உருவாக்குகின்ற மனித நடவடிக்கைகளாகும். எல்லா உயிரினங்களும் உலகைப் பார்க்கின்றன. ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் கருத்துக்கள் உதிப்பதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே கருத்துக்கள் உருவாகின்றன. மனித உலகப்பார்வைக்கு தத்துவம் அடிப்படையாக இருப்பதால் மட்டுமே கருத்துக்கள் உருவெடுக்கின்றன. எனவே எல்லா உயிரினங்களின் உலகப்பார்வையிலிருந்தும் மனித உலகப்பார்வைக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. தான் அல்லது ஒரு சகமனிதர் தன்னையும் இந்த உலகத்தையும் எத்தகையப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? சிறிய நடவடிக்கை முதல் பிரபஞ்ச மாற்றங்கள் வரையிலான அவரது பார்வையின் புரிதல்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? உள்ளூர் பிரச்சனை முதல் உலகளாவிய நிகழ்வுகள் வரை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனித உலகப் பார்வையாகும் (Individual outlook). 

தத்துவ அடிப்படை
          நான்காம் மாடியிலிருந்து ஐந்தாம் மாடிக்குச் செல்வோம். இதற்குத் தத்துவ அடிப்படை என்று பெயரிட்டுள்ளோம். தத்துவ அடிப்படை என்பதற்கு மனித உலகப்பார்வையின் அடிப்படை என்பது பொருள். ஏனெனில் மனிதர்களது உலகப்பார்வைக்கு தத்துவங்களே அடிப்படையாக இருக்கின்றன. அதாவது மனித உலகப்பார்வையின் புரிதல்கள் தத்துவத்திலிருந்தே தொடங்குகின்றன. இதனையேத் தத்துவ அடிப்படை என்கிறோம் (Philosophical Basis). உலகளாவியத் தத்துவங்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடிகின்றன. 1. அறிவெதிர் தத்துவம் (Nescience philosophy), 2. அறிவியல் தத்துவம் (Science philosophy). ஒரு மனிதரின் பல்வேறு கருத்துக்கள் ஏதேனும் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. அல்லது, இரண்டும் கலந்ததாகக் குழம்பியிருக்கின்றன. அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்து முதல் வாதமும். அறிவியல் தத்துவம் என்பது இயங்கியலும் பொருள் முதல் வாதமும். இவற்றைப் பற்றிய அறிவே தத்துவ அடிப்படை ஆகும். இங்கு நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலின் ஐந்து வழிமுறைகளை நினைவில் கொள்க. தம் வாழ்வின் சமூக வசதிகளுக்காக மனிதர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். அறிவெதிர் நுட்பங்களைப் புறக்கணிக்கிறார்கள். அதுபோல வாழ்வின் சமூக உணர்வுகளின் மேன்மைக்காக அறிவியல் தத்துவத்தைச் சார்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அறிவெதிர் தத்துவ உணர்வுகளை ஆழ்மனக்குழியில் எட்டும் தூரம்வரை அறுத்தெறிய வேண்டும். இதற்காக இந்நூலில் ஆரம்பநிலை முயற்சியாளர்களுக்கு அறிவியல் தத்துவத்தை அறிமுகம் செய்ய முயன்றுள்ளோம்.  சமூகவிஞ்ஞானத் தத்துவம் என்ற பெயரில் ஐந்து வழிமுறைகளாக அறிமுகம் செய்துள்ளோம். 1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல், 2.பொருளையும் கருத்தையும் உணர்தல், 3.வரலாற்றை உணர்தல், 4.பொதத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல் ஆகியனவாகும். இத்தகைய அறிமுகத்தை சமூக அறிவாக மாற்றிக்கொள்வது அவரவரது சமூக முயற்சியால் மட்டுமே சாத்தியப்பட முடியும்.

சமூகப் பண்பாட்டியல்
          ஐந்தாம் மாடியிலிருந்து கீழிறங்குங்கள். வீட்டிற்கு வெளியே நின்று வீட்டை முழுமையாகப் பாருங்கள். அடிவீட்டிலிருந்து ஐந்தாம் மாடிவரை முழுமையாக உணர முடிகிறதல்லவா. இதற்குச் சமூகப்பண்பாட்டியல் என்று பெயரிட்டோம். பண்பாட்டியல் என்பது பண்பாடு ஆகும். பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும். மனித மூதாதையர்களிடமிருந்துத் தோன்றிய மனிதர்கள் இயற்கையைத் திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். இத்தகைய முயற்சியிலிருந்து மனித வரலாறு தொடங்குகிறது. மனித இனம் தன்னையும் தன் சமூகத்தையும் பண்படுத்துகின்ற முயற்சியே மனிதப் பண்பாடாகும். இத்தகையப் பண்படுத்துதல்கள் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எனவே சமூகப் பண்பாட்டியல் என்பது சமூக மேல்கட்டுமானத்தின் ஒட்டுமொத்தமாகும். சமூக மேல்கட்டுமானம் முழுமையும் சமூக உற்பத்திமுறையியல் என்ற அடிக் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்டவைகள். அடிக்கட்டுமானத்தை முதன்மையாகக் கொண்டு சமூகப் பண்பாடு இயங்குகிறது. இந்த அடிப்படையில் சமூகவிஞ்ஞான எழுத்தாளர் கார்த்திகேசு சிவத்தம்பியின் வார்த்தைகள் நினைவு கூறத்தக்கவை. ”பண்பாடு என்பது நமது வாழ்க்கை முறைமையில் ஒட்டு மொத்தமான ஒருமித்த நிலையை, மிகமிகச் சாதாரணமான விசயங்களிலிருந்து மிகமிக உயர்ந்தது என்று சொல்கின்ற விசயங்கள் வரையிலான எல்லாவற்றையும் ஒருங்கு தரித்தவை” எனவே உச்சத்திலுள்ள தத்துவ அடிப்படையிலிருந்து அடிவீடாகிய சமூக வாழ்வியல் வரையிலான முழுதளாவிய நிலையே சமூகப் பண்பாட்டியல் ஆகும் (Social culturalism).
                       (Social knowledge approach of Social Scientism) 

(சமூக அறிவின் கட்டமைப்பு - structure of social knowledge)

         இந்த அளவில் நிற்க. சமூக அறிவின் துல்லியமான எட்டுக் கேள்விகளின் விடைகளை அறிமுகமாகியுள்ளோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் சமூக அறிவு பற்றியத் தகவல்களைத் தொகுத்துள்ளோம். நமது தகவலறிவு சமூக அறிவாக மலர்ச்சியடைய வேண்டும். மற்றபடி இந்த அறிமுகம் தேர்ச்சியின் பயிற்சியை விரும்புகின்ற சிறிய முயற்சியே.
          இந்த முயற்சி தெளிந்த நீரோடையா? அல்லது தேங்கிப்போன குட்டையா? இந்தக் கேள்விகள் நம்மில் எழுந்துகொண்டே இருக்கலாம். தெளிந்த நீரோடை என்பதாக எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.  சமூகவிஞ்ஞானக் களங்களில் செயலாற்றினால் இந்த உண்மையை உணர முடியும்.
குழம்பியக் குட்டைதான் தெளிவைப் பெற முடியும். எனவே கீழ்காணும் குழப்பங்களை பெற்றிருப்பதும் நலமே..
சமூக மேல்கட்டுமானத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பண்பாடு இருக்கின்றது. மேல் கட்டுமானத்தின் முழுமையையும் பண்பாடாகச் சொல்ல முடியாது என்று சிலர் விளக்குகிறார்கள்.
பண்பாடு என்பது மேல்கட்டுமானம் மட்டுமல்ல, அடிக்கட்டுமானமாகவும் இருக்கின்றது என்று சிலர் விளக்குகிறார்கள்.
பண்பாடு என்பது சமூக அடிக்கட்டுமானத்தில் இருப்பதல்ல. ஆனால் அடிக்கட்டுமானத்தின் மீது அழுத்தம் செலுத்துகின்றது. அதற்காக அடிக்கட்டுமானமாகவும் பண்பாடு இருக்கின்றது என்பதாகக் கருதக்கூடாது என்று சிலர் விளக்குகிறார்கள்.
இன்னும் என் கவனத்திற்கு எட்டாத விளக்கங்களும் இருக்கலாம்.
          இந்தக் குழப்பங்களுக்கு இடையில் சமூகத்தை நகர்த்திச் செல்கின்ற சகமக்களின் பங்கேற்பு அவசியம் என்பதாக உணர்கிறோம். இந்த உணர்விலிருந்தே சமூக அறிவு பற்றிய இத்தகைய அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளோம்.
          சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கான சமூக அறிவுப் பயணங்கள் தொடர்ந்து நிகழ்கினறன. சமூகவிஞ்ஞானிகளின் மலர்ச்சிகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன. எது சரி என்ற தேடல் நம் எல்லோருக்குமானது. சமூகமாற்றச் செயலனுபவங்களே சரியைக் கற்றுத் தருகின்றன. எனவே சரியை நோக்கி சகமக்களை அழைக்க ஓர் அறிமுகம் தேவையல்லவா. அதற்காக இந்த அறிமுகத்தை உருவாக்கியுள்ளோம். ஆரம்பநிலை உரையாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு கருவியாக இதனை உருவாக்கியுள்ளோம்.
சந்தேகத்திற்கு இடமின்றி இது எமது சக்திக்கு எட்டாத ஒரு முயற்சியே. சிலருக்கு இது சிறுபிள்ளைத்தனமாகவும் தோன்றலாம். இருப்பினும் இந்த முயற்சிக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. உழைக்கும் மக்களே வரலாற்று நாயகர்கள். அவர்களே சமூகத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். சமூக அறிவை அவர்களிடம் கடத்துவதற்கும், சமூக அறிவு பயணத்தில் அவர்களை பங்கேற்க அழைப்பதற்கும் நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம் என்ற நம்பிக்கை!
2. சகமக்கள் அனைவரும் சமூகவிஞ்ஞானிகளாக மலர்ந்துவிட வேண்டும் என்ற மிகப்பெரிய பேராசை!
          இனியும் நம் மூளைகள் தனித்தனி தீவாகத் திரிதல் வேண்டாம். ஒருங்கிணைந்தச் சமூக ஆயுதமாகச் செயலாற்றுவோம். சமூக அக்கறையுடையச் செயலனுபவங்களிலேயே இது சாத்தியம். எனவே சமூக விஞ்ஞானக் களங்களில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.
          ஒரு சமூகவிஞ்ஞான அமைப்பில் நிகழ்ந்த  வரலாறு பற்றிய ஒரு வகுப்பைக் கவனித்துள்ளேன். மனுவேல் என்பவர் விளக்கமாகப் பேசினார். சமூகத்தின் அமைப்பு மட்டுமல்ல, சமூகம் எப்படித் தோன்றியது? எப்படிக் காலந்தோறும் இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றது? சமகாலச் சமூகத்தின் நிலைமை என்ன? சமூக வளர்ச்சியின் எதிர்காலம் என்ன? எல்லாவற்றையும் கலந்துரையாடினார்கள். இத்தனை ஆண்டுகளில் எந்தக் கல்வி நிறுவனங்களிலும் இது போன்ற வகுப்பைக் கண்டதில்லை. மிகவும் சுவாரசியமான வகுப்பு. பலதரப்பட்ட நபர்கள் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கல்லூரியில் படிப்பவர்கள், பள்ளியில் படிப்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர், தையல் தொழிலாளர், வீட்டுப் பெண்கள், குழந்தையின் அழுகுரலைச் சமாளித்துக்கொண்டிருந்த ஒரு தாய். பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், வழக்கறிஞர் இப்படியாக இருப்பத்தைந்து நபர்கள் கலந்திருந்தார்கள். எல்லோரும் உணரும் விதமாகப் பேசினார். அவர் சொல்லிச் செல்பவராக மட்டும் இல்லை. மற்றவர்களுக்கு எதுவரைத் தெரிந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதிலிருந்து வகுப்பைத் தொடங்கினார். வகுப்பு முழுவதும் பலவிதமானக் குரல்கள். கேள்விகளும் கலந்துரையாடல்களும் பெருக்கெடுத்தன. ஒற்றைக் குரல் ஆக்கிரமிக்கின்ற வழக்கம் சிறிதும் எட்டிப்பார்க்கவில்லை. இத்தகைய வகுப்பில் நமக்கும் இடம் கிடைத்தால் எத்தனைக் கொண்டாட்டமாக இருக்கும். விரைவில் கொண்டாடுவோம். வாய்ப்புகளை உருவாக்குவோம்.
           நம் கவனங்கள் எமது சமூக விஞ்ஞானிகளை நோக்கி அமையட்டும். சமூக அக்கறையுடையவர்களாக வாழப் பழகுவோம். தனிமனித வாழ்வை விட்டொழிப்போம். சமூகமாற்றக் கூட்டத்தின் சகமனிதராக உருமாறுவோம். சமூக அறிவை விரிவுபடுத்துவோம். சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
          பொருத்தம் இல்லாத சமூக நிலைமைகளைப் புரிந்துகொள்வதிலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தொடக்கம்தான் பொருத்தமானச் சிறந்தச் சமூகத்தை உருவாக்கப் போகின்றது.

வெளிவந்த விபரம்

ஊடாட்டம் 
(சமூக பண்பாடு-அரசியல்-பொருளாதாம்-ஆய்விதழ்)
மார்ச் 2015 (பக்கம் 40 - 49) புதுப்பிக்கப்படாத வடிவம்

புதிய கோடாங்கி, மார்ச் 2015,
(பக்கம் 40 - 47) புதுப்பிக்கப்படாத வடிவம்

புதிய கோடாங்கி, ஜுன் 2015,
(பக்கம் 30 - 37) புதுப்பிக்கப்பட்ட வடிவம்


.... 

துணை செய்த நூல்கள்





மேலும் காண்க



          

No comments:

அதிகம் படித்தவை