Monday, January 19, 2026

பழந்தமிழர் உணவுப் பண்பாட்டின் படிநிலை

 

 

பழந்தமிழர் உணவுப் பண்பாட்டின் படிநிலை

 

 

முன்னுரை

       மனிதர்களின் உணவென்பது உடல் சார்ந்த இயங்கியலாக கருத இயலாது. மாறாக, சமூகவியல் சார்ந்த இயங்கியலாகவே காலந்தோறும் படிமலர்ந்திருக்கின்றது. குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் படிமலர்ந்து வாழத்தொடங்கிய தொல்குடி வாழ்வியலிலிருந்து உணவென்பது போர் நிலையிலிருந்து பண்பாட்டு நிலைக்கு உயர்ந்திருக்கின்றது. தொடக்ககால மனிதஇனம் சொத்துடைமை அறிந்திராத இயற்கை வழி தாய்தலைமை சமூகமாக இயங்கியது.  அக்காலம் தொட்டு நிகழும் உணவு சார்ந்த வரலாற்றை சங்க இலக்கிங்களின் வாயிலாக  அறிய முடிகின்றது.

 

தொழில்நுட்பத்திறன் எனும் மானுடசக்தி

       மனித வரலாற்றில் எந்தக் கருவிகளும் கண்டறிந்திராத காலத்தில் மனிதத்திறன் என்பது காடு சார்ந்த பொருட்களை சேகரித்து பகிர்ந்துண்ணுதல் என்பதாக மட்டுமே திகழ்ந்தது. இலை, புல், காய், கனி, கொட்டை, தேன், கிழங்கு, சிற்றுயிர்களான ஈசல், விலங்குகள் உண்டெஞ்சிய இறைச்சி, காட்டுத்தீயில் எரிந்து வெந்த இறைச்சி, கருவியின் பயன்பாடு குறித்த தற்காலிக அறிவுடன் கல்லடித்து உண்ணும் நீர்நிலை கிழிஞ்சல்கள் போன்றவைகள் தொடக்க கால உணவுகளாகத் திகழ்ந்துள்ளன.

மனிதத்திறன் என்பது தொழில்நுட்பத்திறன் சார்ந்தது. தொழில்நுட்பம் என்பது திட்டமிட்ட மாற்றங்களை உற்பத்தி செய்வதாகும். அதாவது, திட்டமிட்ட மாற்றங்களுக்காக பயன்படுத்தப்படும் மனித அனுபவம், புறநிலை எதார்த்தம் பற்றிய மனித அறிவு, இயற்கை வளங்கள் மற்றும் கருவிகள் ஆயுதங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கமாகும்.

உணவு உற்பத்தி என்பது கருவிகளைக் கையாளுகின்ற திட்டமிட்ட உழைப்பாக உருப்பெற்றப் பின்பு உணவிற்காக இயற்கையோடு போரிடுதல் என்ற நிலையிலிருந்து உணவைப் பண்படுத்துதல் என்ற முதல்கட்ட நிலைக்கு உண்ணும் நிலை உயர்ந்தது. மனிதர்களின் உணவு தொழில்நுட்ப நிலையிலிருந்து பண்பாட்டு நிலைக்கு உயர்தல் என்பது பாய்ச்சல் வகை மாற்றமாகும்.

தொழில்நுட்பத்தினால் விளைந்த பண்பாடு

பண்பாடு என்பது மனிதர்களால் திட்டமிட்டு பண்படுத்தப்பட்டவைகள் அனைத்தையும் உள்ளடக்குவதாகும். அல்லது சமூகப் பொருளுற்பத்தி அல்லாத அனைத்தையும் பண்பாடு என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது.

 

குறிஞ்சித்திணை உணவுப் பண்பாடு

சேகரிப்புக் கருவிகள், வேட்டைக் கருவிகள், சிறிய அளவிளான கால்நடை வளர்ப்பு, சிறிய அளவிலான வன்புல விவசாயம் போன்றன மனிதர்களின் உணவு முறையை பாதீடு என்ற பகிர்ந்துண்ணும் பண்பாட்டு நிலைக்கு உயர்த்தியிருந்தன. மனித இன உணவுகளின் வரலாறானது தொடக்க நிலையிலிருந்து தொழில்நுட்பத் திறனுக்கேற்ப முதல்கட்ட பண்பாட்டு நிலைக்கு உயர்ந்திருப்பதை சங்க இலக்கியத்தின் குறிஞ்சித்திணை பாடல்களால் அறிய முடிகின்றது.

 

முல்லைத்திணை உணவுப் பண்பாடு

       உணவு வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் எருமை, பசு, ஆடு, காளை போன்ற கால்நடைகளை மந்தைகளாக வளர்க்கும் முறை முதன்மை பெறுகின்றது. வேட்டையாடுதல், காடு சார்ந்த பொருள் சேகரிப்பு, வன்புல விவசாயம் ஆகியன முதன்மையற்றதாகின்றன. கால்நடைகளால் பெறப்படும் இறைச்சி, பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதும், எஞ்சிய இறைச்சியை உப்புக்கண்டம் செய்வதும், பண்டமாற்றில்  ஈடுபட்டு வேண்டியவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்து அதற்கீடாக உப்பு, நெல், பொன் போன்ற பிற பொருட்களைப் பெறுகின்ற தொழில்நுட்ப  நிலைமைகளுக்கேற்ப உணவுப்பண்பாட்டில் மாற்றம் நிகழ்ந்திருப்பதை முல்லைத்திணை பாடல்களால் அறிய முடிகின்றது.

மருதத்திணை உணவுப் பண்பாடு

உணவு வரலாற்றின் மூன்றாம் கட்டத்தில் வேளாண்மை தொழில் முதன்மை பெறுகின்றது. கால்நடை வளர்ப்பு சார்ந்த பொருளாதாரமும், சந்தைபடு பண்டங்கள் என்ற புதிய பொருளாதாரமும் துணை பொருளாதார நிலையை அடைகின்றன. வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உணவுப் பண்பாடு ஆக்கம் பெற்றிருப்பதை மருதத்திணை பாடல்களால் அறிய முடிகின்றது. செந்நெல் சோறு, வெண்ணெல், அவல், மாங்கனி பிசைந்த புளிக்குழம்பு, வயலில் விளைந்த வள்ளை கீரை, வயல் நண்டு, வயல் நீரில் ஆரல் மற்றும் வாளை மீன், ஆமை பிற இறைச்சிகள், அவரை, பீர்க்கங்காய், தேன் கலந்த பால், களி சோறு, கள், வெல்லப்பாகு, கருப்பஞ்சாறு மேலும் அவித்த பொரித்த அறுசுவை உணவுகள் மருத நில மக்களின் உணவுப் பண்பாடாக அமைந்துள்ளன.

நெய்தல் திணை உணவுப் பண்பாடு

கடல் சார்ந்த உணவு பண்பாட்டை நெய்தல் திணை பாடல்களில் அறிய முடிகின்றது. கடலில் மீன் பிடித்தல், மீன்களை காயவைத்து கருவாடு செய்தல், மீன் எண்ணெய் செய்தல், உப்பு விளைவித்தல், சங்கு பவளம் முத்துக் குளித்தல், பண்டமாற்று மற்றும் கடல் வணிகத்தில் ஈடுபடுதல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உணவுப் பண்பாடு ஆக்கம் பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.

பாலைத்திணை உணவுப் பண்பாடு

பொருளாதார வளங்கள் குன்றி வறட்சியில் ஊடாடும் மக்கள் வழிப்பறி செய்தல், கொள்ளையிடுதல், கொலை செய்து பொருள்களைக் கவர்தல், ஆநிரைகளைக் கவர்தல், வேட்டையாடுதல், எறும்பு புற்றழித்து மூங்கிலரிசி சேகரித்தல் போன்ற தொழில்நுட்ப நிலைமைகளுக்கேற்ப போதாமைகளின் துயர்களுக்கேற்ற உணவு பண்பாட்டை பாலைத்திணை  பாடல்களில் அறிய முடிகின்றது.

உணவுப் பண்பாட்டின் சாரம்

மனித வரலாற்றில் இறைச்சி உண்ணுதல் என்பது நெருப்பையும் வேட்டை கருவிகளையும் கண்டடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. குறிப்பாக காடுசார்ந்த பொருள் சேகரிப்பு வாழ்க்கையில் விலங்குகள் உண்டெஞ்சிய இறைச்சியை உண்ணும் வழக்கம் உண்டு. சமைக்காத பச்சைக்கறியை உண்ணும் வழக்கத்தை சங்க இலக்கியம் பச்சூண் உணவாக பதிவு செய்துள்ளது.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் வழியாக அறியலாகும் மனிதர்கள் இறைச்சி அல்லாத தாவர உணவுகளையும் அதனினும் மிகுதியாக இறைச்சி உணவுகளையும் பலவகையான மது வகைகளையும் பருகுநீர் வகைகளையும் உணவுப் பண்பாட்டில் கொண்டிருந்தமையை அறிய முடிகின்றது. மேலும், உணவை பகிர்ந்துண்டு வாழும் வழக்கத்தையும், இல்லாதவர்களுக்கு கொடுத்துண்டு வாழும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.

              இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய உணவு வகைகளில் சில பின்வருமாறு.

இறைச்சியிட்ட பாலுடை அடிசில்

கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில் அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால் எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம் என்று குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.

பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 204 – 207

திற்றி

மென்று தின்னக்கூடிய தசை திற்றி எனப்படுகிறது. எனவே வேகவைத்த இளம் தசையே திற்றி எனலாம். ஊருக்கு வெளியில் வெகுதொலைவில் மாடுமேய்ப்பவர்கள் இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டு மாடுகளைக் கிடைபோட்டிருப்பர். அப்போது வில்லேந்திய கள்வர்கள் அவர்களைக் கொன்று, ஆநிரைகளைக் கவர்ந்து, அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அவற்றுள் நல்ல கன்றை அடித்துப் பாறை முடுக்கில் சுட்டுச் சாப்பிடுவர் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது.

இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் – அகம் 97:4-6

புழுக்கல்

புழுங்கல் என்பதே புழுக்கல் எனப்படுகிறது. புழுங்கல் என்பது பண்படுத்துதலின் குறியீடு. அரிசியை பச்சையரிசி புழுங்கல் அரிசி என்கிறோம். பச்சை அரிசி என்பது பண்படுத்தப்படாதது. நெல்லை உடைத்தெடுத்த அரிசி. புழுங்கல் அரிசி என்பது அவித்து பண்படுத்தப்பட்ட அரிசியாகும். அவித்து பண்டுத்தப்படும் உணவே புழுக்கல் ஆகும்.

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10

போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16

ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்

மிதவை

பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340:14,15

வெண்ணெல் மாவைச் சமைத்துக் களியாக்கி, அதனுடன் தயிர் சேர்த்துப் பிசைந்து கூழாக்கி உண்டிருக்கிறார்கள். புளித்த நீரில் உருண்டைகளாக களி உருண்டைகளை மிதக்க வைத்து பசித்தபோது கரைத்து குடிப்பதும் வழக்கம்.

முடிவுரை

பழந்தமிழரின் உணவுப் பண்பாடானது பகுத்துண்ணுதல், கலந்துண்ணுதல், சமைக்காது உண்ணுதல், நெருப்பில் சுட்டு உண்ணுதல், கலயங்களில் சேமித்து உண்ணுதல், உணவிற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து உண்ணுதல், பண்டமாற்றில் ஈடுபட்டு பொருளீட்டி உண்ணுதல் இவ்வாறாக உணவை ஈட்டுதல் தொடர்பான அனுபவத் தொகுப்பாலும், அறிவு முதிர்ச்சியாலும், கருவிகளையும் ஆயுதங்களையும் கையாளும் ஆளுமையாளும்  திறன் மிக்க தொழில்நுட்பச் செயல்களாலும் பழந்தமிழரின் உணவுப் பண்பாடு கட்டமைந்துள்ளதை அறியலாம்.

 வெளிவந்த விவரம்

தமிழரின் உணவுத்திருவிழாவின் நூல் வெளியீடு

அனுக்கிரகா சமூகஅறிவியல் கல்லூரி

10.10.2025



No comments:

Post a Comment